புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும். இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம், ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.
இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத் தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.
கதைக்களங்கள் வெறும் புறவய சித்தரிப்புகள்தானே என மேலோட்டமாகக் கடந்துவிட முடியாதபடி, அவற்றால் உருவாகும் தாக்கமே கேள்விகளின் திறவுகோலாக அமைவதால், குறையாக உறுத்துவதில்லை. மாறாக வாசகரின் சிந்தனையைத் தூண்டி அகத்தேடலுக்கும், புறத்தேடலுக்கும் களம் அமைக்கும் வழி காட்டியாகவே அமைகிறது. வாசிப்பின் முடிவில், வாசகர் தமது உணர்வு வெளிப்பாட்டை தானாகச் சென்றடைதலே ‘ஆசி’யின் எழுத்தின் சிறப்பம்சம் எனவும் உணரப்படும். அதுவே படைப்பாளியின் வெற்றி.
அவ்வாறான சிறப்புப் பெற்ற புனைவுகளில் உலகளாவிய ரீதியில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், இனபேதத்தின் வடிவங்களையும், இனமதமொழி சார்ந்த மனிதப் படுகொலைகளையும் மூலச்சரடாகக் கொண்ட அவரது படைப்புகள் பலவற்றை இனம் காணலாம். தலைமுறை தாண்டிய காயங்கள், கையதுகொண்டு மெய்யது பொத்தி, விலாங்குமீன்கள், எதிரியுடன் படுத்தவள், தூதர்கள், அசைல், நரசிம்மம், கிழக்கும்மேற்கும், யாவரும் கேளிர், மைனாக்கள், சூக்குமம் ஆகியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.