மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் - ஶ்ரீரஞ்சனி -
மார்ச் 8ம் திகதி சர்வதேச மகளிர் தினமாகும். ஒரு நூற்றாண்டுக்கும் மேலான காலத்துக்கூடாக, சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கலாசாரரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பெண்கள் அடைந்திருக்கும் முன்னேற்றங்களை உலகளாவியரீதியில் கொண்டாடும் ஒரு கொண்டாட்டமாக இது இருப்பதுடன், பாலின சமத்துவத்துவத்துக்கான செயல்பாடுகளுக்குரிய ஓர் அறைகூவலாகவும் அமைந்திருக்கிறது.
முதலாவது மகளிர் தினம், மார்ச் 19, 1911 அன்று ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிற்சிலாந்து ஆகிய நாடுகளில் கொண்டாடப்பட்டிருந்தது. அன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்களும் ஆண்களும் தங்கள் ஆதரவைக் காட்டுவதற்காக பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர். பின்னர், மார்ச் 8ம் திகதியைச் சர்வதேச மகளிர் தினமாக, 1975 இல் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தது. தற்போது கியூபா, உக்ரேயன், ரஷ்யா, போன்ற 20 நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வாக்களிக்கும் உரிமை, கற்கும் உரிமை என்பன உள்ளடங்கலான பெண்களின் உரிமைகளுக்காக பெண்ணியவாதிகள் பலர் போராடிய போராட்டங்களின் விளைவாகவே பெண்கள் இன்று ஆண்களின் தங்கியிராமல் தங்களின் காலில் நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் பெண்கள் செல்லவேண்டிய தூரமும், கடக்கவேண்டிய தடைகளும் இன்னும் அதிகமாகவே உள்ளன. அதற்கான மாற்றங்களை உலகளாவியரீதியில் தூண்டுவதும், சமத்துவக் கருத்துக்களைப் பரவலாகத் தெரியப்படுத்துவதும், பாலின சமத்துவத்திற்கான அவசரத் தேவையை முன்னிலைப்படுத்துவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதின் இன்னுமொரு முக்கிய நோக்கமாகும்.
இவ்வருடச் சர்வதேச மகளிர் தினத்துக்கான கருப்பொருள் 'Accelerate Action/ செயலைத் துரிதப்படுத்தல்' ஆகும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தலைமைத்துவத்தில் பெண்களின் முன்னேற்றத்தைத் தூண்டுவதற்கான உத்திகளில் இது கவனம் செலுத்துகிறது. அமைப்புரீதியான தடைகளை அகற்றல், வகைமாதிரிகளைச் சவாலுக்கு உள்ளாக்கல், பாலின சமத்துவத்தை நோக்கி விரைவாக முன்னேறல் ஆகியவற்றுக்கான அவசரத்தை, ‘செயலைத் துரிதப்படுத்தல்’ வலியுறுத்துகிறது. உலகம்பூராவுமுள்ள பெண்களுக்கு உறுதியான, நீடித்த நல்விளைவுகளை வழங்கக்கூடிய உத்தி முறைகளை விரிவுபடுத்துதல், வளங்களை ஒதுக்குதல் மற்றும் முன்முயற்சிகளை ஆதரித்தல் ஆகியவற்றுக்கான உலகளாவிய அழைப்பாக இது உள்ளது. அதேவேளையில் Strength in every story என்பதே இந்த வருடத்துக்குரிய எங்கள் நாட்டின் கருப்பொருளாகும். இது, ஒவ்வொரு பெண்ணினதும் வாழ்க்கைக் கதையும் மீண்டெழும் தன்மைக்கான, தைரியத்துக்கான, மனவுறுதிக்கான சாட்சியமாக இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது.