அகநானூற்றில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் - மு. சாந்தி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் -624 302. -
முன்னுரைபண்டைத் தமிழர்களின் வாழ்வில் காதலும் கொடையும் நீதியும் பின்னிப் பிணைந்திருந்தன. பண்டைத் தமிழ்ப்புலவர்களும் காதலையும் வீரத்தினையும் இயற்கையுடன் இணைந்தே காட்சிப்படுத்தியுள்ளனர். தமிழ் மக்கள் இயற்கையுடன் இயைந்த வாழ்வினை இயல்பாக ஏற்றுக்கொண்டனர். சுற்றுச்சூழல் பண்டையத் தமிழர்களால் பொலிவு பெற்றது. சங்ககால மக்கள் நிலங்களை ஐவகையாகப் பிரித்து அவற்றின் தன்மைக்கேற்ப விலங்குகள், பறவைகள், மரம், செடி, கொடி, பொழுது முதலியவற்றைப் பாகுபடுத்தி அவற்றின் வழியே வாழத்தலைப்பட்டனர். இயற்கை நெறிக்காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு நிறைந்த இன்றைய சூழலில் சுற்றுச்சூழல் பற்றிய ஆய்வானது மிகவும் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகின்றது. அகநானூற்றில் காணப்படும் சூழல் சார்ந்த சிந்தனைகளை ஆய்வதாகக் கட்டுரை அமைகின்றது.
அகநானூற்றில் சூழலியல்
இன்று மானுடம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சனைகளுள் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு சிந்தனைகளுக்கு அடித்தளமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூற்றில் சுற்றுச்சூழல் சார்ந்த சிந்தனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. அகநானூற்றில் குறிஞ்சி, பாலை நிலச்சூழலியல் பற்றியச் செய்திகளும், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த செய்திகளும் ஆங்காங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன.