
(* புகைப்படம் - நன்றி - தாயகம்)
எழுத்தாளர், கலை,இலக்கிய ஆர்வலர், நூல் வெளியீட்டாளர், நூல் சேகரிப்பாளர், நூல் ஆவணச் செயற்பாட்டாளர் எனப் பன்முக இலக்கியப்பங்களிப்பைச் செய்து வருபவர் பத்மநாப ஐயர் அவர்கள். அவரது பிறநத நாள் ஆகஸ்ட் 24. அதனையொட்டிக் கலாநிதி சுதர்சன் செல்லத்துரை எழுதிய கட்டுரை. அவருக்கும் பதிவுகள் இணைய இதழின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
“தன் தந்தை கொல்லப்பட்டதைத் தனயன் மறந்துபோவான். ஆனால், தன் பூட்டனின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதை, அவன் ஒருபோதும் மறந்துபோகமாட்டான்.” - மாக்கியவல்லி.
பண்பாட்டு விடுதலைக்கான தேசியப் போராட்டங்கள் உலகில் நடைபெறும்போதெல்லாம் பண்பாட்டழிப்பே ஆதிக்கவாதிகளின் ஒரேகுறியாக இருந்துவந்துள்ளது. அழிக்கப்பட்டதும் அழிக்கப்பட்டுக்கொண்டிருப்பதுமான பண்பாட்டை மீள நிலைநிறுத்துவதற்காக உலகெங்கிலும் நிகழும் போராட்டங்கள் இருவகை. ஒன்று, ஆயுதத்தால் நிகழ்வது. மற்றையது, எழுத்தினால் நிகழ்வது. முன்னையதை ஆயுத அரசியல் என்றும் பின்னையதை எழுத்து அரசியல் என்றும் குறிக்கலாம். பண்பாட்டு அழிப்புக்கு எதிரான போராட்டங்களில் ஆயுத அரசியலைவிடவும் எழுத்து அரசியலுக்கு அதிக முதன்மை உள்ளது. எழுத்து என்பது அர்த்தம் நிறைந்த அரசியல் சமூக பண்பாட்டு இயக்கியாக, வலுவுள்ள பேசும் சாதனமாக, சுடுகுழலைவிடவும் வன்மையான ஆயுதமாக எல்லாம் விடுதலைக்காகப் போராடும் நிலத்தில் முக்கியமான பாத்திரமேற்றலை நிகழ்த்துகிறது. காலனித்துவம், பேரரசுவாதம் என்பவற்றுக்கெதிரான வரலாற்றுரீதியான பண்பாட்டுப் போராட்டங்கள் வெற்றிபெற்றனவோ, இல்லையோ அப்போராட்டங்களில் இடம்பெற்ற எழுத்து அரசியலுக்கு, அப்போராட்டங்களை இயக்கின என்பதிலும் பதிவாக்கின என்பதிலும் முக்கிய பங்குண்டு.
எழுத்து அரசியல் என்பது வெறுமனே மலினமானதும் பொதுவானதுமான கட்சி அரசியல் பற்றியதல்ல. அது ஓர் இனத்தின் அனைத்துப் பண்பாட்டுக்கூறுகளையும் முதன்மைப்படுத்திய, கவிதையிலிருந்து விமர்சனம்வரையும், சடங்கிலிருந்து நவீன ஆற்றுகைக்கலைகள்வரையும், துண்டுப்பிரசுரத்திலிருந்து சுவரொட்டிவரையும், இனவரலாற்றிலிருந்து இலக்கிய வரலாறுவரையும், பதிப்பிலிருந்து விநியோகம்வரையும் நீண்டு விரிந்த அர்த்தப்பரப்பைக் கொண்டது. முக்கியமாக, காலந்தோறும் வரலாறு சுமந்த பண்பாட்டு ஆவணங்களைக்கொண்டு உரையாடுவதாக அது அமைந்திருக்கும். ஓர் இனத்தின் உரிமை, அழிவுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகும்போது, அந்த இனம் தனது பண்பாட்டு முதுசொத்திலிருந்து தனக்கான அரசியலை வடிவமைத்துக்கொள்ளும்.
பண்பாட்டு அழிப்புக்கு எதிரான கலாசார எதிர்ப்புமுகமாக மட்டுமன்றி, புவியியல்சார் எல்லைகளால் வரையறுத்துக்கொள்ளப்படும் தேசத்துக்கு அப்பால் அரசியல், சமூக, பண்பாட்டுக் கருத்துநிலைகள் நிர்ணயிக்கும் தேசத்தை, அறிவுநிலையில் கட்டியெழுப்புவதும் நிலைநிறுத்துவதும் எழுத்து அரசியலே. ஆயுதப் போராட்ட அரசியல் வரலாற்றினை அதிகம் பேசியும் எழுதியும் விவாதித்தும்வரும் சூழலில், அதைவிடவும் முக்கியமான, ஆயுதப் போராட்டத்திற்கும் அடிப்படையான, ஆயுதப் போராட்டம் முடிவுற்ற பின்னரும் வலிமையோடு விளங்குவதும் இயங்குவதுமான எழுத்துவழி நிகழ்ந்த பண்பாட்டழிப்புக்கு எதிரான போராட்டங்களைப் பேசுவதும் எழுதுவதும் விவாதிப்பதும் அரிது என்றே கூறலாம்.