‘சொற்கள் வனையும் உலகம்’, ‘தடங்களில் அலைதல்’ நடராசா சுசிந்திரனின் கட்டுரைத்தொகுப்பு நூல்கள் வாசிக்கக் கிடைத்தமை மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இரு நூல்களும் ‘சுவடு வெளியீடாக’ 2023 டிசம்பரில் வெளிவந்துள்ளன. இரண்டு நூல்களுமே கட்டுரை வடிவத்தைக் கொண்டிருப்பது என்பது அவற்றினை வகைப்படுத்திப் பலவிடயங்களை திரும்பிப்பார்த்து அசை போடுவதற்கும், பலவற்றை அறிந்து கொள்வதற்கும் மிகச் சுவையாக இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
சொற்கள் வனையும் உலகம் : புகலிட செயற்பாடுகளின் சில முக்கியமான தடயங்களையும், ஜேர்மன் மொழியுடனான தனது ஆளுமையையும் புலப்படுத்தும் வகையில் கட்டுரைகளை வெளிப்படுத்தியிருப்பது மிகச்சிறப்பான விடயம். தமிழ் மக்கள் அறிந்திராத பல விடயங்களை அனுபவச் செறிவோடும் குறிப்புகளோடும் கட்டுரைகளாக்கி வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும். இக்கட்டுரைத் தொகுதியை ‘தன் பலத்தின் பாதியாயிருந்த அவரது அப்பா சின்னத்தம்பி நடராசாவுக்கே’ சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
‘கோதேயின் ‘பவுஸ்ட்’’, ‘எதுவரை தொடரும் மனிதரின் கதை’, ‘மக்ஸ் ஃபிறிஷ்ஷின் ‘ஹோமோஃபாபர்’, ‘செ. வே.காசிநாதனின் ‘விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்’, ஜாக்லண்டனின் ‘கானகத்தின் குரல்’, செல்லத்தம்பி சிறீகந்தராசாவின் ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’, அப்துல்றசாக் குர்நாவின்; ‘சொர்க்கம்’, ‘பேராசிரியர் கைலாசபதியும் பாரதி ஆய்வுகளும்’, ‘கே.கணேஷின் மொழியாக்கத்தில் லாஓ ஷேயின் ‘கூனற்பிறை’, ‘அவலங்களின் காட்சியறை குந்தவையின் சிறுகதைகள்’, ‘உறைபனி இடுக்கில் அடம்பன் கொடி வேர் பின்னும் தாயகம் கடந்த தமிழ் இலக்கியத்தில் தமிழ்மனம்’, ‘பாரதிதாசனின் ‘ஓ..கனடா’, ‘வாசுதேவனின் ‘தொலைவில்’ கவிதைத் தொகுப்பு’, ‘விமல் குழந்தைவேலின் ‘கசகறணம்’ நாவல்’, ‘பிராங்போர்ட்’ றஞ்சனியின் ;றஞ்சினி கவிதைகள்’, ‘சி.சிறீறங்கனின் ‘சிவப்புக்கோடு’, ‘என். சரவணனின் ‘பண்டாரநாயக்க கொலை’, ‘இரா. றஜீன்;குமாரின் ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு’, ‘எவ்வகையில் அமையலாம் பொறுப்புக் கூறுதல் ஜப்பானிய அட்மிரல் தக்கிஜீரோ ஒனிஷி (1891-1945)யின் பதில்’, ‘நிக்கொலாய் கோகோலின் மேலங்கி’, மரணமுகாமிங்கு நேரம் தவறாது ரயில் அனுப்பிய அடொல்வ் ஜஸ்மான்’, ஓய்.பி.சத்தியநாராயணனின் ‘என் தந்தை பாலய்யா’, ‘ஸ்யூஸ்டன், டெக்சாஸ் சட்டத்தரணி ஜார்ஜ் வில்லி அவர்களின் வரவேற்புரை’ போன்ற இருபத்திமூன்று கட்டுரைகள் 168பக்கங்களை உள்ளடக்கியமைந்துள்ளன.