தமிழக அரசியல் ஒரு பார்வை! - நந்திவர்மப் பல்லவன் -
எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல என்னும் வகையில் தன் திரைப்படங்களில் திமுகவுக்காக எம்ஜிஆர் பிர்ச்சாரம் செய்து வ்ந்தார். திமுகவின் சின்னமான உதயசூரியன், அதன் கொடி வர்ணங்களை மிகவும் திறமையாக அவர் தன் படங்களில் உள்ளடக்கியதன் மூலம் பட்டிதொட்டியெங்கும் திமுகவை எடுத்துச் சென்றார். தவிர அவரது வசீகரம் மிக்க ஆளுமை, திரைப்படக்கதாபாத்திரத்தின் ஆளுமைப்பண்பு, அவரது ஈகைச் செயற்பாடுகள், ஆரோக்கியமான கருத்துகளை விதைக்கும் பாடல்கள், இவை தவிர தமிழர் வரலாற்றுடன் , கலைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காதல், வீரம், அறம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அவரது திரைப்படங்கள் இவையெல்லாம் எம்ஜிரை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்தன.
இவ்வாறானதொரு நிலையில் எம்ஜிஆர் சுடப்பட்டபோது மக்கள் அதிர்ச்சி அடைந்ததைப்போல், எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலக்கப்பட்டபோதும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏனென்றால் மக்களைப்பொறுத்தவரையில் எம்ஜிஆர் வேறு திமுக வேறு அல்ல. எம்ஜிஆரை விலக்கியதானது அவருக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி என்றே மக்கள் கருதினார்கள். அதனால் எம்ஜிஆர் மீது அநுதாபம் பொங்கியெழுந்தது. அந்த அநுதாபமும், அவர் மீதான தனிப்பட்ட விருப்பமும் இணையவே அவருக்கு வெற்றி இலகுவானது. அவர் இருந்தவரை மக்கள் அவரையே ஆட்சிக்கட்டில் இருத்தினார்கள்.