காலமும் கணங்களும்: மூத்த இலக்கியவாதி கே. கணேஷ் (1920 - 2004) நினைவுகள்! - முருகபூபதி -
மூத்த எழுத்தாளர் கே. கணேஷ் நூற்றாண்டு
இலங்கையின் மூத்த படைப்பிலக்கியவாதியும், மொழிபெயர்ப்பாளரும், பாரதி இலக்கிய இதழை முன்னர் வெளியிட்டவருமான தலாத்து ஓயா கே. கணேஷ் ( 1920 – 2004 ) அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அன்னாரின் புதல்வி திருமதி ஜெயந்தி சங்கர் சிறப்பு மலர் வெளியிடவிருக்கிறார். ( அமரர் ) கே. கணேஷ் அவர்களுடன் இலக்கிய நட்புறவிலிருந்த எழுத்தாளர்களிடமிருந்தும் கே. கணேஷ் அவர்களின் வாழ்வையும் பணிகளையும் பற்றி அறிந்தவர்களிடமிருந்தும் ஆக்கங்கள் கோரப்படுகின்றன. அன்னாரின் படைப்புகள் குறித்தும் இம்மலருக்கு எழுதலாம். நூற்றாண்டு மலருக்கு ஆக்கங்கள் அனுப்பவிரும்பும் அன்பர்கள் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
மின்னஞ்சல் யுகம் வந்த பின்னர் காகிதமும் பேனையும் எடுத்து கடிதம் எழுதி தபாலில் அனுப்பும் வழக்கம் அரிதாகிவிட்டது. தொலைபேசி, கைப்பேசி, ஸ்கைப், டுவிட்டர், வாட்ஸ்அப் , முகநூல், மெய்நிகர் முதலான சாதனங்கள் விஞ்ஞானம் எமக்களித்த வரப்பிரசாதமாகியிருந்தபோதிலும் , அந்நாட்களில் பேனையால் எழுதப்பட்ட கடிதங்கள் தொடர்பாடலை ஆரோக்கியமாக வளர்த்து, மனித நெஞ்சங்களிடையே உணர்வுபூர்வமான நெருக்கத்தை வழங்கின. உலகம் கிராமமாகச் சுருங்கிவரும் அதே சமயம், மனித மனங்களும் இந்த அவசர யுகத்தில் சுருங்கி வருகின்றன. இலக்கியங்கள் மனிதர்களை செம்மைப்படுத்தி மேன்மையுறச்செய்துள்ளன. அவ்வாறே கடித இலக்கியங்களும் படைப்பாளிகளிடத்தே அறிவுபூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் நெருக்கத்தையும் தேடலையும் வளர்த்து வந்துள்ளன.
இலங்கையில் மலையகம் தலாத்துஓயாவில் வாழ்ந்து மறைந்த எமது இனிய இலக்கிய நண்பர் கே.கணேஷ் அவர்கள் சுவாமி விபுலானந்தர், சிங்கள இலக்கிய மேதை மார்டின் விக்கிரமசிங்கா ஆகியோருடன் இணைந்து ஒருகாலத்தில் அகில இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஸ்தாபித்தவர். பின்னர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1950 களில் உருவாக்கியவர். அப்பொழுது நான் இந்த உலகத்தையே எட்டிப்பார்க்கவில்லை.