- 18 - 06 - 2015 ஆம் ஆண்டில் இந்த விமர்சனம் என்னால் எழுதப்பட்டது. தன்னுடைய " வன்னி " நாவலை திரு. கே. எஸ் . சுதாகர் மூலமாக எனக்கு அனுப்பி , விமர்சனம் எழுதுமாறு எம்மை விட்டுப் பிரிந்த ஆளுமை பெரியவர் திரு. கதிர் பாலசிங்கம் தொலைபேசி வாயிலாகக் கேட்டுக் கொண்டார். அவரின் அன்பான வேண்டுகோளினை ஏற்று எழுதியதே இந்த விமர்சனம் என்று அவர் இல்லா நிலை யில் இரங்கல் செய்தியாய் பகிர்ந்து கொள்ளுகின்றேன். அவரின் பிரிவினால் வாடும் பிள்ளைகள் , மருமக்கள் , பேரர்கள் , உற்றார் , உறவினர் அனைவருக்கும் ஆறுதலையும் , தேறுதலையும் , தெரிவித்தும் கொள்ளுகின்றேன். அவரின் நூல்களை அனைவரும் படிக்கும் வண்ணம் அவரின் பிள்ளைகள் செய்வதே அவரின் ஆன்ம ஈடேற்றத்துக்குச் சாந்தியை அளிக்கும். -
வன்னி நாவல் ஒரு வரலாற்றுப் பதிவு என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. பொதுவாகக் கதைகள் எழுதப்படும்பொழுது அது சுவைக்காக மட்டுமே எழுதப் படுவதையே காண்கின்றோம்.அந்தச்சுவையா னது ஒரு குறிப்பிட்ட நிலையுடன் நின்று விடும். பின்னர் அது பற்றி யாருமே பேசமாட்டார்கள். ஆனால் 'வன்னி ' நாவல் அப்படியானதன்று. தமிழன் உள்ளகாலம் வரை பேசப்படும் நாவலாக இருக்கும் என் பது எனது எண்ணமாகும்.
மஹாவம்சத்தை தூக்கிப் பிடிக்கிறார்கள். அது வரலாறு அல்ல. அது ஒரு இனத்தின் சுயபுராணக் கதையாகும். அதில் பல புனைவுகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அதில் சொல்லப்படும் சம்பவங்கள் ஒருப க்கச் சார்பானதாகும். வன்னி நாவலையும் தமிழரின் மஹாவம்சமாகவே நான் பார்க்கின்றேன். ஆனால் பழைய மஹாவ ம்சத்துக்கும் இதற்கும் பாரியவேறுபாடு. வன்னி நாவல் உண்மையை சொல்லி நிற்கிறது. ஊத்தைகளையும் காட்டுகிறது. உலுத்தர்களையும் காட்டுகிறது. எல்லாவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறது. இது இந்த நாவலின் சிறப்பு எனலாம்.
நாவலின் முக்கிய பாத்திரம் மேஜர் சிவகாமி. அந்தச் சிவகாமியே எம்மை எல்லாம் காடு, மேடு,போர்க்களம் , கொழும்பு , என்று கூட்டிச்செல்வதோடு குடும்பம் , மகிழ்ச்சி , இன்பம் , துன்பம் ,பிரிவு , வஞ்சகம் , சூழ்ச்சி , நட்பு , நம்பிக்கைத் துரோகம் , மிருகத்தனம் , மனிதத்தன்மை , இவற்றையெல்லாம் விளக்கிச் சொல்லுகின்றார்.