மீள்பிரசுரம்: வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள். தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர்
எதிரி மிகப் பெரியவன்.. பலம் வாய்ந்தவன்.. உலகின் பெரு ராணுவங்களில் ஒன்று.. அரசாங்கமே இராணுவ ஆட்சி.. உலகெங்கும் நண்பர்கள்.. அமெரிக்காவுடன் இராணுவ உதவி ஒப்பந்தம்.. இயற்கை வளங்களுக்காய் மேற்குலகம் நெருக்கமாய்...
அங்கே ஒரு சிறுதீவின் பாதிப்பகுதி... சனத்தொகை ஒரு மில்லியன் கூட இல்லை. விடுதலைக்காகப் போராடுகிறது. ஆயுதப் போராட்டம் தான்.. மக்களின் ஆதரவைத் தேடிக் கொண்டு.. உள்நாட்டில் ஒரு தலைவன் மக்களைத் திரட்டிப் போரிட. இன்னொரு தலைவன் சர்வதேச ரீதியாக தன் மக்களின் பிரச்சனையை உலக அரங்கிற்கு தெரியப்படுத்த.. வீரம் போதாது, விவேகம் வேண்டும் என்று போராட்டம் சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஐ.நா உதவியுடன் நாடு பிறக்கிறது. தலைமைப்பதவி வேண்டாம் என்கிறார் உள்நாட்டுத் தலைவர். அவர் ஜனாதிபதியாய் பதவி ஏற்காவிட்டால் நான் அரசில் பங்கேற்க மாட்டேன் என்கிறார் சர்வதேசத் தலைவர். பதவி வெறி இல்லாமல், மற்றவர்களைப் பதவிக்காக அழிக்காமல் ஒற்றுமையாக சுதந்திரம் காண்கிறது. உலகின் இளைய சுதந்திர நாடு.. கிழக்குத் திமோர்.
இலங்கையைப் போலவே போர்த்துக்கேயரின் குடியேற்ற நாடாக இருந்தது திமோர். 1505ல் இலங்கையை போர்த்துக்கேயர் கைப்பற்றிய பின்னர் 1520ல் திமோர் தீவு போர்த்துக்கேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மீண்டும் இலங்கையைப் போலவே, சூழவுள்ள தீவுகள் டச்சுக்காரர் களின் கைக்கு வந்ததும் திமோரின் மேற்குப் பகுதியையும் 1613ல் அவர்கள் தமதாக்கிக் கொண்டார் கள். முழுமையான தீவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வர போர்த்துக்கேயரும் டச்சுக்காரரும் நடத்திய தொடர்ந்த யுத்தம் 1860ல் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஒப்பந்தப்படி கிழக்குப் பகுதியும் மேற்கில் ஒக்குஸ்ஸி (Oecussi)என்ற போர்த்துக்கேயர் முதலில் குடியேறிய பகுதியும் போர்த்துக் கேயருக்கு வழங்கப்பட்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது அவுஸ்திரேலியரும் ஜப்பானியரும் திமோரில் சண்டையிட்டு, ஜப்பானின் வெற்றியின் பின்னான ஆக்கிரமிப்பில் சுமார் 50 ஆயிரம் திமோரியர்கள் கொல்லப்பட்டனர். 1942 முதல் 1945 வரையில் இருந்த ஜப்பானின் ஆதிக்கம் இரண்டாம் உலக யுத்த முடிவின் பின்னர் அகன்ற பின்னர் மீண்டும் போர்த்துக்கேயர்கள் தங்கள் ஆட்சியைத் தொடர்ந்தனர்.