அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்...
ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த இளங்கோ திடீரென விழித்துக் கொண்டான்.. அருகில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில், ஒரே ஒருவனைத் தவிர , மூழ்கிக் கிடந்தார்கள். பகல் முழுவதும் கற்பனைகளும், எதிர்காலக் கனவுகளும், சலிப்பும், விரக்தியுமாகக் காலத்தையோட்டியவர்களின் சிந்தைகளை எத்தனையெத்தனை கனவுகளும், கற்பனைகளும் ஆக்கிரமித்துக் கிடக்குமோ? அருகில் தூங்காமல் படுக்கையில் விழித்திருந்தான் ரஞ்சிற்சிங. சில நாட்களுக்கு முன்னர் ஜேர்மனியிலிருந்து வந்திருந்தான். அங்கு அவனுக்குச் சட்டரீதியான குடியுரிமை ஆவணங்களிருந்தன. இங்கு சட்டவிரோதமாக வந்து அகதி அந்தஸ்து கோரியிருந்தான். பிடித்து உள்ளே போட்டு விட்டார்கள். அதன்பின்தான் அவனுக்கு அமெரிக்கரின் அகதிக் கோரிக்கைபற்றிய சட்டதிட்டங்கள் ஓரளவுக்கு விளங்கின.
"நண்பனே. என்ன யோசனை?" என்றான் ஆங்கிலத்தில்.
இளங்கோவின் கேள்வியால் ரஞ்சிற்சிங்கின் சிந்தனை சிறிது கலைந்தது. "உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன். நாளைக்கே வெளியில் போய் விடுவாய்? என் நிலையைப் பார்த்தாயா?. இவர்களுடைய சட்டநுணுக்கங்களை அறியாமல் புறப்பட்டதால் வந்தவினையிது."
"உன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனையென்னவாம்?"
"உனக்குத் தெரிந்ததுதானே. அகதிக்கோரிக்கை பற்றிய வழக்கு முடியும் மட்டும் உள்ளுக்குள்தான் இருக்க வேண்டுமாம். எல்லாம் நாட்டுக்குள் அடியெடுத்த வைக்கமுதல் பிடிபட்டதால் வந்த நிலைதான்."
"உன்னுடைய திட்டமென்ன?"
"யார் உள்ளுக்குள் இருந்து தொலைப்பது. என்னை அனுப்புவதென்றாலும் ஜேர்மனிக்குத்தான் அனுப்புவார்கள். அங்கு திரும்பிப் போவதுதான் சரியான ஒரே வழி. தேவையில்லாமல் பணத்தை முகவர் பேச்சைக்கேட்டுக் கொட்டித் தொலைத்ததுதான் கண்ட பலன். எல்லாம் ஆசையால் வந்த வினை"
"உனக்காவது பரவாயில்லை. ஜேர்மனிக்குத் திரும்பிப் போகலாம். அங்கு உனக்கு உரிய குடியுரிமைப் பத்திரங்களாவது இருக்கு. இங்கிருப்பவர்களின் நிலையைப் பார்த்தாயா? இவர்களின் வழக்குகள் முடியும் மட்டும் உள்ளுக்குள் இருந்தே உலைய வேண்டியதுதான். அதற்குப்பின்னும் அநேகமானவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படும். நாடு கடத்தப்படுவார்கள். அதுவரையில் கற்பனைகளுடன், நம்பிக்கைகளுடனும், எதிர்காலக் கனவுகளுடனும் இருக்க வேண்டியதுதான். இவர்களது சட்டதிட்டங்களை நினைத்தால் ஒரு சமயம் சிரிப்பாகவிருக்கிறது"
"சட்டவிரோதமாக எப்படியாவது நாட்டுக்குள் நுழைந்து விட்டால், பிணையிலாவது வெளியில் வரலாம். ஆனால் நாட்டுக்குள் நுழையமுதல் நீரில் வைத்து அல்லது விமான நிலையங்களில் பிடிபட்டு விட்டாலோ அதோ கதிதான். அவர்கள் சட்டவிரோதமாகக் கூட நாட்டினுள் அனுமதிக்கப்ப படாதவர்கள். அவர்களுக்கு வழக்குகள் முடியும்வரையில் பிணை கூட இல்லை. இந்த விசயம் முன்பே தெரிந்திருந்தால் உல்லாசப் பிரயாணியாகவாவது உள்ளுக்குள் நுழைந்த பின் அகதிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்திருக்கலாமே. அந்த முகவன் மட்டும் இந்நேரம் என் முன்னால் நின்றால் அவன் குரல்வளையினைப் பிடித்து நெரித்து விடுவேன். அவ்வளவு ஆத்திரம் ஆத்திரமாய் வருகிறது."
"அமெரிக்கரின் சட்டதிட்டங்கள் தெரியாத புது முகவன் போலும். மற்ற நாடுகளைப் போல் அகதிக் கோரிக்கை கோரியதும் தவறாக நினைத்து விட்டான் போலும். கனடாவில் அகதி அந்தஸ்த கோரியதுமே வெளியில் விட்டு விடுவார்களாம். அவ்விதம் எண்ணி விட்டான் போலும். நாங்களும் திட்டமிட்டபடியே கனடாவுக்குப் போயிருந்தால் இவ்வளவு பிரச்சினைகளுக்குள் அகப்பட்டிருக்கத் தேவையில்லை. என்னவோ தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனதுமாதிரி தப்பிவிட்டோம். இல்லாவிட்டால் திரும்பிப் போவதற்கும் வழியில்லை. உள்ளுக்குள்ளேயே கிடந்திருக்க வேண்டியதுதான்"
ரஞ்சித்சிங் சிறிது சிந்தனை வயப்பட்டான். பின் கூறினான்: " நீ சொல்வது உண்மைதான். ஒரு விதத்தில் என் நிலை பரவாயில்லை. இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் விளங்குகிறது"
"ஒரு திரைப்படப்பாடல்தான் இந்தச் சமயத்தில் நினைவுக்கு வருகிறது. தமிழ்த் திரைப்படக்கவிஞனின் திரையிசைப்பாடலது. ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவன். தமிழில் நல்ல புலமை வாய்ந்தவன். அந்தப் புலமையே அவனுக்குத் திரையிசைப்பாடல்கள் எழுதுவதற்கு நன்கு கைகொடுத்தது. வாழ்க்கையைப் பற்றியதொரு நல்லதொரு பாடல். 'வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனையிருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை... உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு. .. மயக்கமா தயக்கமா. மனதிலே குழப்பமா?.. இவ்விதம் செல்லுமொரு பாடலது. வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை."
"நல்ல பாடல்தான். வாழ்க்கையில் நன்கு அடிபட்ட ஆத்மா போலும். நம்மைப் போல. அந்த அனுபவமே இத்தகைய நல்ல பாடல்களின் மூலாதாரம்." என்று கூறிவிட்டு மெதுவாகச் சிரித்தான் ரஞ்சித்சிங். பின் தொடர்ந்தான்: "அது சரி உன் கதையென்ன? ஜேர்மனியில் பல சிறிலங்கன் நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள். அவர்கள் கதை கதையாகக் கூறுவார்கள்"
"அதை மீண்டும் ஞாபகமூட்டாதே. இதற்கு முன்பு நான் சிறுவனாகயிருந்தபோது இது போன்ற கலவரங்களிலிருந்து தப்பி வந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கிறேன். 1977இல் ஒரு கலவரம் நடந்தது. முதன்முறையாக தனிநாட்டுக் கோரிக்கையை வைத்து பிரதான தமிழர் கூட்டணிக் கட்சி தேர்தலில் வென்றிருந்தது. ஆனால் இம்முறை நடந்த கலவரம் மிகப்பெரியது. அரசாங்கத்தின் ஆதரவுடன் திட்டமிட்டு நடாத்தப்பட்ட கலவரம். ஈழத்தமிழர்களின் போராட்டத்தைப் பற்றிக் கூற வேண்டுமானால் அது மிகப்பெரியதொரு நீண்ட கதை"
"சின்னதொரு இருப்பு. சிறியதொரு கோள். எவ்வளவு அழகிய கோளிது. இநத நீலவானும், இரவும், மதியும், சுடரும்தான் எவ்வளவு அழகு."
ரஞ்சித்சிங்கின் கூற்று இளங்கோவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. "என்ன கவிஞனைப் போல் பேசுகிறாய்?" என்றான்.
அதற்கவன் கூறினான்: "எழுத்தும், வாசிப்பும் என் இரு கண்கள்; என்னிரு நுரையீரல்கள்; என்னிரு இருதய அறைகள். அவையில்லாமல் என்னால் ஒருபோதுமே இருக்க முடியாது. நீ கூறுவது சரிதான். நானொரு எழுத்தாளன்தான். எப்பொழுதுமே என்னை இந்தப் பிரபஞ்சம் இதன் படைப்பின் நேர்த்தி, பிரமிக்க வைத்து விடுகின்றன. விரிந்து கிடக்கும் இந்த இரவு வானத்தைப் போல் என்னை ஆகர்சித்ததென்று எதுவுமேயில்லை. எப்பொழுதுமே என் சிந்தையைத் தூண்டி விடும் வல்லமை மிக்கது இந்த இரவு வான். இந்தப் போர், இரத்தக் களரிகளெல்லாம் அழகான இதன் சூழலை எவ்விதம் சிதைத்து விடுகின்றன. இந்த இருப்பை, இதன் நேர்த்தியை இரசித்தபடி வாழ்நாளெல்லாம் இதனைப் புரிவதற்கு, அறிவதற்கு முயன்று கொண்டிருந்தால் அதுவே இனியதுதான்."
இளங்கோவுக்கு அந்தக் கணம் சிரிப்பையும், ஒரு வித வியப்புடன் கூடிய வேடிக்கை உணர்வினையும் தந்தது. பூமிப்பந்தின் ஒரு கோடியில் அவதரித்து, அதன் இன்னொரு கோடியிலுள்ள சிறையொன்றில், ஊரெல்லாம் தூங்கும் நள்யாமப் பொழுதொன்றில், இன்னுமொரு கோடியில் அவதரித்து, இன்னுமொரு கோடியில் சஞ்சரித்த ஜீவனொன்றுடன் எவ்விதமாக உரையாடல் தொடருகிறது!
"என்ன சிரிக்கிறாய் நண்பனே! என்னைப் பார்த்தால் பைத்தியக்காரனைப் போலிருக்கிறதா? இப்படித்தான் பைத்தியக்காரர்களாக அன்றைய சமுதாயம் எண்ணிய பலர் பின்னர் சரித்திரத்தையே மாற்றியமைத்திருக்கின்றார்கள். இதுதான் வாழ்க்கை."
"நீ என்னைப் போலவே சிந்திக்கிறாய். இந்தக் கணத்தில் நான் தூக்கத்திலிருந்தும் எழும்பாவிட்டால், நீயும் இவ்விதமாகக் கொட்டக் கொட்ட விழிப்புடனிருக்காதிருந்தால் இவ்விதமானதொரு அரியதொரு உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை இழந்திருப்போம். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் எம்மினத்துக் கவியொருவன் பாடி வைத்துச் சென்றுள்ளான்: 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்" என்று. இந்தச் சிறியதொரு கோள் இதில்வாழும் மனிதர் அனைவருக்கும் உரியதாக இருக்க வேண்டும்."
"அப்படியே இருந்திருந்தால் நானும் அல்லது நீயும் அல்லது இங்கு தூங்கிக் கிடக்கின்றார்களே இவர்கள் அனைவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காதில்லையா?" என்று விட்டு இலேசாகச் சிரித்தான் ரஞ்சித்சிங். தொடர்ந்தும் கூறினான்: "உன் நாட்டுக் கவிக்குத் தெரிந்தது மட்டும் இந்த அமெரிக்கர்களுக்குத் தெரிந்திருந்தால்..."
அதற்கு இளங்கோ இவ்விதம் பதிலிறுத்தான்: "யார் சொன்னது அமெரிக்கர்களுக்குத் தெரியவில்லையென்று. இவர்களைப் பொறுத்தவரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர்தான். இவர்கள் நுழையாத இடமென்று இந்தக் கோளின் எந்த மூலையிலாவதிருக்கிறதா? அவ்விதம் நுழைவதற்குத்தான் இவர்களுக்கு ஏதாவது பிரச்சினையேதாவதுண்டா? பிரச்சினையெல்லாம் நம்மைப் போன்ற மூன்றாம் உலகத்து வாசிகளுக்குத்தான்."
இதற்கிடையில் இவ்விதமிருவரும் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட அதுவரையில் தூங்கி வழிந்து கொண்டிருந்த கறுப்பினத்துச் சிறையதிகாரி "எல்லோரும் தூங்குமிந்த நேரத்திலென்ன கதை வேண்டிக் கிடக்கிறது. நித்திரை வராவிட்டால் பொழுதுபோக்குக் கூடத்திற்குச் சென்று பேசுங்கள்" என்று கூறிவிட்டுச் சென்றான்.
"நண்பனே! கவலையை விடு. நாளை நல்லதாக விடியட்டும். நல்லிரவு உனக்கு உரித்தாகட்டும்" என்று மீண்டும் படுக்கையில் சாய்ந்தான் இளங்கோ.
ரஞ்சித்சிங்கும் பதிலுக்கு "உனக்கும் நல்லிரவு உரித்தாகட்டும்" என்று கூறிவிட்டுத் தன் படுக்கையில் சாய்ந்தான்.
எவ்வளவு முயன்றும் இளங்கோவுக்குத் தூக்கம் வரவே மாட்டேனென்றது. யன்னலினூடு விரிந்திருந்த இரவு வானினைச் சிறிது நேரம் நோக்கினான். ஆங்காங்கே சிரித்துக் கொண்டிருந்த சுடர்க் கன்னிகளை நோக்கினான். சிறிது நேரத்தின் முன் ரஞ்சித்சிங் கூறிய வார்த்தைகள் காதிலொலித்தன: 'எழுத்தும், வாசிப்பும் என் இரு கண்கள்; என்னிரு நுரையீரல்கள்; என்னிரு இருதய அறைகள். அவையில்லாமல் என்னால் ஒருபோதுமே இருக்க முடியாது. நீ கூறுவது சரிதான். நானொரு எழுத்தாளன்தான். எப்பொழுதுமே என்னை இந்தப் பிரபஞ்சம் இதன் படைப்பின் நேர்த்தி, பிரமிக்க வைத்து விடுகின்றன. விரிந்து கிடக்கும் இந்த இரவு வானத்தைப் போல் என்னை ஆகர்சிப்பத்தென்று எதுவுமேயில்லை. எப்பொழுதுமே என் சிந்தையைத் தூண்டி விடும் வல்ல்மை மிக்கது இந்த இரவு வான். இந்தப் போர், இரத்தக் களரிகளெல்லாம் அழகான இதன் சூழலை எவ்விதம் சிதைத்து விடுகின்றன. இந்த இருப்பை, இதன் நேர்த்தியை இரசித்தபடி வாழ்நாளெல்லாம் இதனைப் புரிவதற்கு, அறிவதற்கு முயன்று கொண்டிருந்தால் அதுவே இனியதுதான்.' இளங்கோவுக்கு மீண்டும் பிரமிப்பாகவேயிருந்தது. ரஞ்சித்சிங் அவனைப் போலவே சிந்திக்கின்றான். அவனைப் போலவே அவனுமொரு எழுத்தாளன். இவனுக்கும் அப்படித்தான். நூலும் எழுத்துமில்லாமல் இருக்க முடியாது. எழுதும் போது கிடைக்கும் களிப்பே களிப்புத்தான். நூல்களை வாசிக்கும் போது அவை எவ்விதம் அவனது சிந்தனையை விரிவு படுத்தித் தெளிவினைத் தருகின்றனவோ அவ்விதமே எழுதும்போதும் அவன் சிந்தனை கொடி கட்டிப் பறக்கிறது. சிந்திக்கச் சிந்திக்க ஏற்படும் தெளிவு இந்தப் பிரபஞ்சத்துப் புதிர்களை அறியும் ஆவலை மேலும் மேலும் தூண்டி விடுகின்றது. பொதுவாக இயற்கை நிகழ்வுகளெல்லாம் எழுத்தாளர்களது சிந்தனைக் குதிரைகளைப் பல்வேறு வழிகளில் தட்டி விடத்தான் செய்கின்றன.
குறிப்பேட்டினையெடுத்துப் பக்கங்களைப் புரட்டுகின்றான். முன்பு எப்பொழுதோ எழுதி வைத்திருந்த பக்கங்களைப் பார்வை மேய்கிறது:
- 'சாளரத்தின் ஊடாக சகமெல்லாம் ஆழ உறங்கும் அர்த்த ராத்திரி வேளையில் வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க, மோனத்தை வெட்டியிடிக்கும் இடியும், பொத்துக் கொண்டு பெய்யும் பெருமாரியும், நரியின் ஊளையினையொத்தப் பெருங்காற்றும் கோலோச்சுமொரு இரவுவானில் ஒளிவிளக்கந் தாங்கிவந்த காயும் மின்னலொன்றின் கணநேரத்து இருப்பும், வான் வனிதையாக கொட்டுமிடித்தாளத்திற்கிசைய நடம் செய்யும் அதன் வனப்பும்' கவியொருவனின் சிந்தனையினத் தட்டியெழுப்பி விடுகின்றன. அதன்
விளைவாக விளைந்தது அற்புதமானதொரு கவிதை. 'இவ் வொளிமின்னல் செயல் என்னே? வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ? சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ? ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும் சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே! சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன் ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே! என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன். மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும். வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்' எனச் சிந்தையினையோட்டுமவன் 'என்னுடைய சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?' என்கின்றான்.
இன்னொரு கவியோ 'எட்டுத் திக்கும் பறந்து திரிந்து, காற்றில் நீந்தி, கொட்டிக் கிடக்கும் வானொளி மதுவுண்டு, பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்று, குஞ்சு காத்து, வைகறையாகும் முன் பாடி விழிப்புறும்' சிட்டுக் குருவியின் இருப்பு கண்டு 'விட்டு விடுதலையாகி நிற்போமிந்த சிட்டுக் குருவியைப் போலே' என்கின்றான்.
மற்றுமொரு கவிஞனோ ' புலவன் எவனோ செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல' எழுதி வைத்த புத்தகத்தில் வரியொன்றின் புள்ளியைப் போல் கருதி பூச்சியொன்றைப் 'புறங்கையால் தட்டி' விடுகின்றான். புள்ளியெனத் தென்பட்டது புள்ளியல்ல பூச்சியே என்பதை உணர்ந்ததும் 'நீ இறந்து விட்டாய்! நெருக்கென்ற தென்நெஞ்சு! வாய் திறந்தாய், காணேன், வலியால் உலைவுற்றுத் 'தாயே!' என அழுத சத்தமும் கேட்கவில்லை. கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு ஓர் கீறாகத் தேய்ந்து கிடந்தாய். அக்கீறுமே ஓரங்குலம் கூட ஓடி இருக்கவில்லை. காட்டெருமை காலடியிற் பட்ட தளிர்போல, நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்தது போல், பூட்டாநம் வீட்டிற் பொருள்போல் நீ மறைந்தாய். மீதியின்றி நின்னுடையமெய் பொய்யேஆயிற்று. நீதியன்று நின்சா, நினையாமல் நேர்ந்ததிது. தீதை மறந்துவிட மாட்டாயோ சிற்றுயிரே!' என்று வேதனையால் புலம்புகின்றான். -
வாசிக்க வாசிக்க நெஞ்சிலொருவித இன்பம் பரவ இரண்டாவது முறையாக அன்றைய இரவு தூக்கத்தைத் தழுவினான் இளங்கோ.
[பதிவுகள் - மார்ச் 2007; இதழ் 87]