கட்டுரைச் சுட்டு

அத்தியாயம் ஒன்று: 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" [ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு  முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]

நியூயார்க் மாநகரத்தின் புரூக்லின் நகரின்கண் ஃப்ளஷிங் வீதியில் அமைந்திருந்த சீர்திருத்தப் பள்ளியாகவும், அவ்வப்போது சட்டவிரோதக் குடிகாரர்களின் தடுப்புமுகாமாகவும் விளங்கிய அந்த யுத்தகாலத்துக் கடற்படைக்கட்டடத்தின் ஐந்தாவது மாடியின் பொழுதுபோக்குக் கூடமொன்றிலிருந்து இருள் கவிந்திருக்குமிந்த முன்னிரவுப் பொழுதில் எதிரே தெரியும் 'எக்ஸ்பிரஸ்' பாதையை நோக்கிக் கொண்டிருக்குமிந்த அந்தக் கணத்தில் இளங்கோவின் நெஞ்சில் பல்வேறு எண்ணங்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரு மாதங்களாக அவன் வாழ்வினோர் அங்கமாக விளங்கிக் கொண்டிருந்த இந்தத் தடுப்புமுகாம் வாழ்க்கைக்கோர் விடிவு. நாளை முதல் அவனோர் சுதந்திரப் பறவை. சட்டவிரோதக் குடியாக அச்சிறையினுள் அடைபட்டிருந்த அவனைப் பிணையில் வெளியில் செல்ல அனுமதித்துள்ளது அமெரிக்க அரசின் நீதித்துறை. அவனது அகதி அந்தஸ்துக் கோரிக்கைக்கானதொரு தீர்வு கிடைக்கும் அவன் வெளியில் தாராளமாகத் தங்கித் தனது வாழ்வின் சவால்களை எதிர்நோக்கலாம். அவனைப் பற்றிச் சிறிது இவ்விடத்தில் கூறுவது வாசகருக்கு உதவியாகவிருக்கலாம்.

இளங்கோ: இவனொரு இலங்கைத்தீவின் தமிழ்க் குடிமகன். இளைஞன். 1983 இனக்கலவரத்தைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகளிலொருவன். இலங்கையின் பிரதான இரு சமூகங்களான தமிழ் மற்றும் சிங்களச் சமூகங்களுககிடையிலான இனரீதியிலான புகைச்சல்களுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமானதொரு சமூக, அரசியல் ரீதியிலானதொரு வரலாறுண்டு.  இறுதியாக இலங்கையை ஆண்ட விதேசியர்களான ஆங்கிலேயர் 1948இல் இலங்கையைவிட்டு வெளியேறிய காலகட்டத்திலிருந்து ஆரம்பித்தது அண்மைய இனரீதியிலான மோதல்கள். ஆயினும் இவ்விதமானதொரு நிலையுருவாவதற்குக் காரணங்களாக இத்தீவின் கடந்தகால வரலாற்று நிகழ்வுகள் இருந்தன. துட்டகாமினி / எல்லாளன் தொடக்கம், முதலாம் இராசராசன் / இராஜேந்திரன் பின் சிங்கைப் பரராசசேகரன் எனத் தொடர்ந்து , கடைசிக் கண்டி மன்னன் ஸ்ரீஇராசசிங்கன் என முடிந்த நீண்டகாலத்து வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் அவ்வளவு இலகுவாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. இரு பிரதான சமூகங்களுக்குமிடையில் நிலவிய பரஸ்பர அவநம்பிக்கையும், இனரீதியிலான குரோதங்களும் 1948இலிருந்து மீண்டும் சிறிது சிறிதாகப் பற்றியெறிந்து இன்று சுவாலை விட்டெரிய ஆரம்பித்துள்ளன. இனரீதியிலான திட்டமிட்ட குடியேற்றங்கள், கல்வியில் தரப்படுத்தல், மொழி மற்றும் மதரீயிலான அரசியல் முன்னெடுப்புகள் இவையெல்லாம பிரச்சினையை மேலும் சுவாலை விட்டெரிய வைத்தன. இவையெல்லாம் மேலோட்டமான காரணங்கள். ஆழமான அடிப்படைக் காரணங்களாக நாட்டு மக்களிடையே நிலவிய சமூக, அரசியல், பொருளாதாரரீதியிலான குணாம்சங்கள்,  பிரச்சினைகளிருந்தன.

எதிரே விண்ணில் நிலவு பவனி வந்து கொண்டிருந்தது. அருகில் ஒரு சில சுடர்கள். நகரத்து வான். நகரத்து நிலவு. நகரத்துச் சுடர்கள். நகரத்து ஆடம்பரமும், கேளிக்கை உல்லாசங்களும், செயற்கையொளியும் மண்ணை மட்டுமல்ல விண்ணையும் பாதிப்பதன் விளைவு. கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு; வறிய நாடுகளிலிருந்து செல்வந்த நாடுகளுக்கு என்றெல்லாம் எப்பொழுதுமே புலம்பெயர்ந்து கொண்டுதானிருக்கின்றார்கள். புலம்பெயர்தல் பல்வேறு வழிகளில், பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்பொழுது நடைபெறுகின்றன. புதையல்கள் நாடிய புலம்பெயர்வுகள்; மண்ணை அடைதற்கான புலம்பெயர்வுகள்; பெண் / பொன்னிற்கான புலம்பெயர்வுகள்; வர்த்தகத்திற்கான புலம்பெயர்வுகள்; வாழ்வைத் தப்பவைத்துக் கொள்வதற்கான புலம்பெயர்வுகள்; யுத்தங்களிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான புலம்பெயர்வுகள். புலம்பெயர்ந்த நெஞ்சங்களுக்கு அவ்வப்போது அதிகமாக ஆறுதலளிப்பவை இந்த வானும், மதியும், சுடரும்தான். வெண்ணிலவை ஆறுதளிக்க நாடிய கவி நெஞ்சங்கள்தான் எத்தனை எத்தனை.

மீண்டும் இளங்கோவின் சிந்தனை எதிர்காலத்தை நோக்கித் திரும்பியது. அவன் நாட்டை விட்டுப் புறப்பட்டதற்கு அரசியல் மற்றும் பொருளாதாரரீதியிலான காரணங்களிருந்தன. உயிர்தப்பிப் பிழைத்தலொரு முக்கியமான காரணமென்றால் அடுத்தது பொருளியல்ரீதியில் அவனையும் அவன் குடும்பத்தவரையும் முன்னேற்றுவது இன்னுமொரு காரணம். வெளியில் சென்றதும் அவன் எதிர் நோக்க வேண்டிய பல பிரச்சினைகள் அவனை நோக்கிக் காத்துக் கிடக்கின்றன. புதிய மண். புதிய சூழல். புதிய கலாச்சாரம். வேற்று மனிதர்கள். தப்பிப் பிழைத்தலுக்கான போராட்டம். இவற்றுக்கிடையில், இவர்களுக்கிடையில் இருத்தலுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கையில் இருநூறு அமெரிக்க டாலர்களேயிருந்தன. இதனையே முதலாக வைத்து அவன் தன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். "என்ன ஒரே யோசனை?" எதிரில் அருள்ராசா. இவனுமொரு இலங்கைத் தமிழ் அகதியாகப் புலம்பெயர்ந்தவன். அவர்களுடன் தங்கியிருந்த ஏனைய தமிழ் அகதிகளெல்லாரும் ஒருவரொருவராக வெளியில் சென்றுவிட இவனும் இளங்கோவும் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். அவர்களிருவருக்கும் இங்கு தெரிந்தவர்களென்று யாருமிருக்கவில்லை. மற்றவர்களுக்கு 'பாஸ்டன்', 'நியூஜேர்சி', 'கனக்டிகட்', 'லாங் ஐலண்ட்' என்று பல்வேறிடங்களில் பலரிருந்தார்கள். இவர்களுக்கு யாருமில்லை. இருவரும் சேர்ந்தே நியூயார்க்கில் வாழ்வை முன்னெடுப்பதாக முடிவு செய்திருந்தார்கள். அருள்ராசா, ஊரில் இவனொரு கணக்காளனாகப் பிரபல நிறுவனமொன்றிற்காகப் பணியாற்றியவன்.

"நாளைக்கு வெளியிலை சென்றதும் எங்கை போய் தங்குவதாக பிளான்?" இளங்கோ கேட்டான்.

கையிலிருந்த 'இந்தியா எப்ரோட்' ( India Abroad) பத்திரிகையின் வரி விளம்பரப் பகுதியினைக் காட்டினான். அத்துடன் கூறினான்: "இங்கை ரூம் வாடகைக்கு வாரத்துக்கு முப்பது டொலர்களென்று போட்டிருக்கு. முதலிலை அங்கு போய்க் கொஞ்ச காலத்துக்குத் தங்கியிருப்பம். அங்கிருந்து கொண்டு ஏதாவது வேலைக்கு முயற்சி செய்வம். என்னட்டையும் ஒரு முந்நூறு நானூறு டொலர்கள்தானிருக்கு. உன்னிடமும் இருநூறுதானிருக்கு. இது போதும் வாழ்க்கையை ஆரம்பிக்க. நான் மத்தியானம் போன் பண்ணிப் பார்த்தனான். மராட்டியக் குடும்பமொன்றின் வீடு. அங்கை பலர் அறைகளை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்களாம். முதலிலை அங்கை போவம். நாளைக்கு வருகிறோமென்று சொல்லிப் போட்டன். நீயென்ன சொல்லுறாய்??"

"நீ சொல்லுறதும் சரியாய்த்தானிருக்கு. அங்கை இருக்கிறவர்களிடமும் ஏதாவது யோசனைகளைக் கேட்கவும் வாய்ப்பாகவுமிருக்கும்.  எதுக்கும் முதலிலை அங்கை போவம். பிறகு எல்லாவற்றையும் பார்ப்பம். முதலிலை இந்தச் சிறையிலிருந்து விடுபட்டால் அதுபோதுமெனக்கு."

அதன்பின் சிறிதுநேரம் கூடத்திலிருந்த தொலைக்காட்சியில் ஏனைய கைதிகளுடன் சேர்ந்து ஓடிக்கொண்டிருந்த பழைய திரைப்படமொன்றைப் பார்த்தார்கள். சிறிது நேரம் 'டேபிள் டென்னிஷ்' விளையாடினார்கள். அதுவும் சிறிது நேரத்தில் சலித்துப் போய்விடவே படுக்கும் கூடத்திற்கு வந்து தத்தமது 'பங்பெட்ஸ்'ஸில் படுத்துக் கொண்டார்கள். அப்பொழுது நேரம் நள்ளீரவை நெருங்கிக் கொண்டிருந்தது. கூடங்களை இணைக்கும் நடைபாதைகளில் கறுப்பினக் காவலர்கள் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். கைதிகளை அவ்வப்போது வந்து எண்ணிச் சரிபார்க்கும் அதிகாரியும் வந்துபோய் நீண்டநேரமாகி விட்டிருந்தது. ஆப்கானியர்கள், மத்திய அமெரிக்கர்கள், கரிபியன் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்தவர்களென்று கைதிகள் பலர். பல்வேறு விதமான கைதிகள். சட்டவிரோதக் குடிகள். சிறு குற்றங்கள் செய்து தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். நாடு கடத்தலை எதிர் நோக்கியிருப்பவர்கள். இவர்களைனவரும் பெரும்பாலும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அருள்ராசா கூடச் சிறுது நேரத்தில் உறங்கிப் போய் விட்டான். இளங்கோவுக்கு மட்டும் உறக்கமே வரவில்லை. இவ்விதமான சமயங்களில் அவனுக்குக் குறிப்பேடு எழுதும் பழக்கமுண்டு. தலைமாட்டில் தலையணைக்கடியிலிருந்த குறிப்பேட்டினை வெளியில் எடுத்தான். அதிலிருந்தவற்றைச் சிறிது நேரம் வாசித்தான். நெஞ்சில் மீண்டும் உற்சாகம் சிறிது சிறிதாகக் குமிழியிட்டது. அதிலிவ்விதம் மேலும் எழுதினான்: 'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'. மனம் இலேசானது. அருகில் உறங்கிக் கொண்டிருந்த மானிடப் பூச்சிகளைப் பார்த்தான். 'யானெதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே!' என்று மனம் கூவியது. புதிய கனவுகளுடன், புதிய நம்பிக்கைகளுடன், உற்சாகம் பொங்க இளங்கோ மறுகணமே ஆழ்ந்த தூக்கத்திலாழ்ந்து விட்டான்.

[பதிவுகள் - ஜனவரி 2007; இதழ் 85]


அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்...

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்த இளங்கோ திடீரென விழித்துக் கொண்டான்.. அருகில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில், ஒரே ஒருவனைத் தவிர , மூழ்கிக் கிடந்தார்கள். பகல் முழுவதும் கற்பனைகளும், எதிர்காலக் கனவுகளும், சலிப்பும், விரக்தியுமாகக் காலத்தையோட்டியவர்களின் சிந்தைகளை எத்தனையெத்தனை கனவுகளும், கற்பனைகளும் ஆக்கிரமித்துக் கிடக்குமோ? அருகில் தூங்காமல் படுக்கையில் விழித்திருந்தான் ரஞ்சிற்சிங. சில நாட்களுக்கு முன்னர் ஜேர்மனியிலிருந்து வந்திருந்தான். அங்கு அவனுக்குச் சட்டரீதியான குடியுரிமை ஆவணங்களிருந்தன. இங்கு சட்டவிரோதமாக வந்து அகதி அந்தஸ்து கோரியிருந்தான். பிடித்து உள்ளே போட்டு விட்டார்கள். அதன்பின்தான் அவனுக்கு அமெரிக்கரின் அகதிக் கோரிக்கைபற்றிய சட்டதிட்டங்கள் ஓரளவுக்கு விளங்கின.

"நண்பனே. என்ன யோசனை?" என்றான் ஆங்கிலத்தில்.

இளங்கோவின் கேள்வியால் ரஞ்சிற்சிங்கின் சிந்தனை சிறிது கலைந்தது. "உனக்கென்ன நீ கொடுத்து வைத்தவன். நாளைக்கே வெளியில் போய் விடுவாய்? என் நிலையைப் பார்த்தாயா?. இவர்களுடைய சட்டநுணுக்கங்களை அறியாமல் புறப்பட்டதால் வந்தவினையிது."

"உன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனையென்னவாம்?"

"உனக்குத் தெரிந்ததுதானே. அகதிக்கோரிக்கை பற்றிய வழக்கு முடியும் மட்டும் உள்ளுக்குள்தான் இருக்க வேண்டுமாம். எல்லாம் நாட்டுக்குள் அடியெடுத்த வைக்கமுதல் பிடிபட்டதால் வந்த நிலைதான்."

"உன்னுடைய திட்டமென்ன?"

"யார் உள்ளுக்குள் இருந்து தொலைப்பது. என்னை அனுப்புவதென்றாலும் ஜேர்மனிக்குத்தான் அனுப்புவார்கள். அங்கு திரும்பிப் போவதுதான் சரியான ஒரே வழி. தேவையில்லாமல் பணத்தை முகவர் பேச்சைக்கேட்டுக் கொட்டித் தொலைத்ததுதான் கண்ட பலன். எல்லாம் ஆசையால் வந்த வினை"

"உனக்காவது பரவாயில்லை. ஜேர்மனிக்குத் திரும்பிப் போகலாம். அங்கு உனக்கு உரிய குடியுரிமைப் பத்திரங்களாவது இருக்கு. இங்கிருப்பவர்களின் நிலையைப் பார்த்தாயா? இவர்களின் வழக்குகள் முடியும் மட்டும் உள்ளுக்குள் இருந்தே உலைய வேண்டியதுதான். அதற்குப்பின்னும் அநேகமானவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படும். நாடு கடத்தப்படுவார்கள். அதுவரையில் கற்பனைகளுடன், நம்பிக்கைகளுடனும், எதிர்காலக் கனவுகளுடனும் இருக்க வேண்டியதுதான். இவர்களது சட்டதிட்டங்களை நினைத்தால் ஒரு சமயம் சிரிப்பாகவிருக்கிறது"

"சட்டவிரோதமாக எப்படியாவது நாட்டுக்குள் நுழைந்து விட்டால், பிணையிலாவது வெளியில் வரலாம். ஆனால் நாட்டுக்குள் நுழையமுதல் நீரில் வைத்து அல்லது விமான நிலையங்களில் பிடிபட்டு விட்டாலோ அதோ கதிதான். அவர்கள் சட்டவிரோதமாகக் கூட நாட்டினுள் அனுமதிக்கப்ப படாதவர்கள். அவர்களுக்கு வழக்குகள் முடியும்வரையில் பிணை கூட இல்லை. இந்த விசயம் முன்பே தெரிந்திருந்தால் உல்லாசப் பிரயாணியாகவாவது உள்ளுக்குள் நுழைந்த பின் அகதிக் கோரிக்கைக்கு விண்ணப்பித்திருக்கலாமே. அந்த முகவன் மட்டும் இந்நேரம் என் முன்னால் நின்றால் அவன் குரல்வளையினைப் பிடித்து நெரித்து விடுவேன். அவ்வளவு ஆத்திரம் ஆத்திரமாய் வருகிறது."

"அமெரிக்கரின் சட்டதிட்டங்கள் தெரியாத புது முகவன் போலும். மற்ற நாடுகளைப் போல் அகதிக் கோரிக்கை கோரியதும் தவறாக நினைத்து விட்டான் போலும். கனடாவில் அகதி அந்தஸ்த கோரியதுமே வெளியில் விட்டு விடுவார்களாம். அவ்விதம் எண்ணி விட்டான் போலும். நாங்களும் திட்டமிட்டபடியே கனடாவுக்குப் போயிருந்தால் இவ்வளவு பிரச்சினைகளுக்குள் அகப்பட்டிருக்கத் தேவையில்லை. என்னவோ தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனதுமாதிரி தப்பிவிட்டோம். இல்லாவிட்டால் திரும்பிப் போவதற்கும் வழியில்லை. உள்ளுக்குள்ளேயே கிடந்திருக்க வேண்டியதுதான்"

ரஞ்சித்சிங் சிறிது சிந்தனை வயப்பட்டான். பின் கூறினான்: " நீ சொல்வது உண்மைதான். ஒரு விதத்தில் என் நிலை பரவாயில்லை. இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் விளங்குகிறது"

"ஒரு திரைப்படப்பாடல்தான் இந்தச் சமயத்தில் நினைவுக்கு வருகிறது. தமிழ்த் திரைப்படக்கவிஞனின் திரையிசைப்பாடலது. ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவன். தமிழில் நல்ல புலமை வாய்ந்தவன். அந்தப் புலமையே அவனுக்குத் திரையிசைப்பாடல்கள் எழுதுவதற்கு நன்கு கைகொடுத்தது. வாழ்க்கையைப் பற்றியதொரு நல்லதொரு பாடல். 'வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும். வாசல் தோறும் வேதனையிருக்கும். வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை... உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு. .. மயக்கமா தயக்கமா. மனதிலே குழப்பமா?.. இவ்விதம் செல்லுமொரு பாடலது. வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை."

"நல்ல பாடல்தான். வாழ்க்கையில் நன்கு அடிபட்ட ஆத்மா போலும். நம்மைப் போல. அந்த அனுபவமே இத்தகைய நல்ல பாடல்களின் மூலாதாரம்." என்று கூறிவிட்டு மெதுவாகச் சிரித்தான் ரஞ்சித்சிங். பின் தொடர்ந்தான்: "அது சரி உன் கதையென்ன? ஜேர்மனியில் பல சிறிலங்கன் நண்பர்கள் எனக்கிருக்கிறார்கள். அவர்கள் கதை கதையாகக் கூறுவார்கள்"

"அதை மீண்டும் ஞாபகமூட்டாதே. இதற்கு முன்பு நான் சிறுவனாகயிருந்தபோது இது போன்ற கலவரங்களிலிருந்து தப்பி வந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கிறேன். 1977இல் ஒரு கலவரம் நடந்தது. முதன்முறையாக தனிநாட்டுக் கோரிக்கையை வைத்து பிரதான தமிழர் கூட்டணிக் கட்சி தேர்தலில் வென்றிருந்தது. ஆனால் இம்முறை நடந்த கலவரம் மிகப்பெரியது. அரசாங்கத்தின் ஆதரவுடன் திட்டமிட்டு நடாத்தப்பட்ட கலவரம். ஈழத்தமிழர்களின் போராட்டத்தைப் பற்றிக் கூற வேண்டுமானால் அது மிகப்பெரியதொரு நீண்ட கதை"

"சின்னதொரு இருப்பு. சிறியதொரு கோள். எவ்வளவு அழகிய கோளிது. இநத நீலவானும், இரவும், மதியும், சுடரும்தான் எவ்வளவு அழகு."

ரஞ்சித்சிங்கின் கூற்று இளங்கோவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. "என்ன கவிஞனைப் போல் பேசுகிறாய்?" என்றான்.

அதற்கவன் கூறினான்: "எழுத்தும், வாசிப்பும் என் இரு கண்கள்; என்னிரு நுரையீரல்கள்; என்னிரு இருதய அறைகள். அவையில்லாமல் என்னால் ஒருபோதுமே இருக்க முடியாது. நீ கூறுவது சரிதான். நானொரு எழுத்தாளன்தான். எப்பொழுதுமே என்னை இந்தப் பிரபஞ்சம் இதன் படைப்பின் நேர்த்தி, பிரமிக்க வைத்து விடுகின்றன. விரிந்து கிடக்கும் இந்த இரவு வானத்தைப் போல் என்னை ஆகர்சித்ததென்று எதுவுமேயில்லை. எப்பொழுதுமே என் சிந்தையைத் தூண்டி விடும் வல்லமை மிக்கது இந்த இரவு வான். இந்தப் போர், இரத்தக் களரிகளெல்லாம் அழகான இதன் சூழலை எவ்விதம் சிதைத்து விடுகின்றன. இந்த இருப்பை, இதன் நேர்த்தியை இரசித்தபடி வாழ்நாளெல்லாம் இதனைப் புரிவதற்கு, அறிவதற்கு முயன்று கொண்டிருந்தால் அதுவே இனியதுதான்."

இளங்கோவுக்கு அந்தக் கணம் சிரிப்பையும், ஒரு வித வியப்புடன் கூடிய வேடிக்கை உணர்வினையும் தந்தது. பூமிப்பந்தின் ஒரு கோடியில் அவதரித்து, அதன் இன்னொரு கோடியிலுள்ள சிறையொன்றில், ஊரெல்லாம் தூங்கும் நள்யாமப் பொழுதொன்றில், இன்னுமொரு கோடியில் அவதரித்து, இன்னுமொரு கோடியில் சஞ்சரித்த ஜீவனொன்றுடன் எவ்விதமாக உரையாடல் தொடருகிறது!

"என்ன சிரிக்கிறாய் நண்பனே! என்னைப் பார்த்தால் பைத்தியக்காரனைப் போலிருக்கிறதா? இப்படித்தான் பைத்தியக்காரர்களாக அன்றைய சமுதாயம் எண்ணிய பலர் பின்னர் சரித்திரத்தையே மாற்றியமைத்திருக்கின்றார்கள். இதுதான் வாழ்க்கை."

"நீ என்னைப் போலவே சிந்திக்கிறாய். இந்தக் கணத்தில் நான் தூக்கத்திலிருந்தும் எழும்பாவிட்டால், நீயும் இவ்விதமாகக் கொட்டக் கொட்ட விழிப்புடனிருக்காதிருந்தால் இவ்விதமானதொரு அரியதொரு உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை இழந்திருப்போம். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் எம்மினத்துக் கவியொருவன் பாடி வைத்துச் சென்றுள்ளான்: 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்" என்று. இந்தச் சிறியதொரு கோள் இதில்வாழும் மனிதர் அனைவருக்கும் உரியதாக இருக்க வேண்டும்."

"அப்படியே இருந்திருந்தால் நானும் அல்லது நீயும் அல்லது இங்கு தூங்கிக் கிடக்கின்றார்களே இவர்கள் அனைவருக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்காதில்லையா?" என்று விட்டு இலேசாகச் சிரித்தான் ரஞ்சித்சிங். தொடர்ந்தும் கூறினான்: "உன் நாட்டுக் கவிக்குத் தெரிந்தது மட்டும் இந்த அமெரிக்கர்களுக்குத் தெரிந்திருந்தால்..."

அதற்கு இளங்கோ இவ்விதம் பதிலிறுத்தான்: "யார் சொன்னது அமெரிக்கர்களுக்குத் தெரியவில்லையென்று. இவர்களைப் பொறுத்தவரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர்தான். இவர்கள் நுழையாத இடமென்று இந்தக் கோளின் எந்த மூலையிலாவதிருக்கிறதா? அவ்விதம் நுழைவதற்குத்தான் இவர்களுக்கு ஏதாவது பிரச்சினையேதாவதுண்டா? பிரச்சினையெல்லாம் நம்மைப் போன்ற மூன்றாம் உலகத்து வாசிகளுக்குத்தான்."

இதற்கிடையில் இவ்விதமிருவரும் உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட அதுவரையில் தூங்கி வழிந்து கொண்டிருந்த கறுப்பினத்துச் சிறையதிகாரி "எல்லோரும் தூங்குமிந்த நேரத்திலென்ன கதை வேண்டிக் கிடக்கிறது. நித்திரை வராவிட்டால் பொழுதுபோக்குக் கூடத்திற்குச் சென்று பேசுங்கள்" என்று கூறிவிட்டுச் சென்றான்.

"நண்பனே! கவலையை விடு. நாளை நல்லதாக விடியட்டும். நல்லிரவு உனக்கு உரித்தாகட்டும்" என்று மீண்டும் படுக்கையில் சாய்ந்தான் இளங்கோ.

ரஞ்சித்சிங்கும் பதிலுக்கு "உனக்கும் நல்லிரவு உரித்தாகட்டும்" என்று கூறிவிட்டுத் தன் படுக்கையில் சாய்ந்தான்.

எவ்வளவு முயன்றும் இளங்கோவுக்குத் தூக்கம் வரவே மாட்டேனென்றது. யன்னலினூடு விரிந்திருந்த இரவு வானினைச் சிறிது நேரம் நோக்கினான். ஆங்காங்கே சிரித்துக் கொண்டிருந்த சுடர்க் கன்னிகளை நோக்கினான். சிறிது நேரத்தின் முன் ரஞ்சித்சிங் கூறிய வார்த்தைகள் காதிலொலித்தன: 'எழுத்தும், வாசிப்பும் என் இரு கண்கள்; என்னிரு நுரையீரல்கள்; என்னிரு இருதய அறைகள். அவையில்லாமல் என்னால் ஒருபோதுமே இருக்க முடியாது. நீ கூறுவது சரிதான். நானொரு எழுத்தாளன்தான். எப்பொழுதுமே என்னை இந்தப் பிரபஞ்சம் இதன் படைப்பின் நேர்த்தி, பிரமிக்க வைத்து விடுகின்றன. விரிந்து கிடக்கும் இந்த இரவு வானத்தைப் போல் என்னை ஆகர்சிப்பத்தென்று எதுவுமேயில்லை. எப்பொழுதுமே என் சிந்தையைத் தூண்டி விடும் வல்ல்மை மிக்கது இந்த இரவு வான். இந்தப் போர், இரத்தக் களரிகளெல்லாம் அழகான இதன் சூழலை எவ்விதம் சிதைத்து விடுகின்றன. இந்த இருப்பை, இதன் நேர்த்தியை இரசித்தபடி வாழ்நாளெல்லாம் இதனைப் புரிவதற்கு, அறிவதற்கு முயன்று கொண்டிருந்தால் அதுவே இனியதுதான்.' இளங்கோவுக்கு மீண்டும் பிரமிப்பாகவேயிருந்தது. ரஞ்சித்சிங் அவனைப் போலவே சிந்திக்கின்றான். அவனைப் போலவே அவனுமொரு எழுத்தாளன். இவனுக்கும் அப்படித்தான். நூலும் எழுத்துமில்லாமல் இருக்க முடியாது. எழுதும் போது கிடைக்கும் களிப்பே களிப்புத்தான். நூல்களை வாசிக்கும் போது அவை எவ்விதம் அவனது சிந்தனையை விரிவு படுத்தித் தெளிவினைத் தருகின்றனவோ அவ்விதமே எழுதும்போதும் அவன் சிந்தனை கொடி கட்டிப் பறக்கிறது. சிந்திக்கச் சிந்திக்க ஏற்படும் தெளிவு இந்தப் பிரபஞ்சத்துப் புதிர்களை அறியும் ஆவலை மேலும் மேலும் தூண்டி விடுகின்றது. பொதுவாக இயற்கை நிகழ்வுகளெல்லாம் எழுத்தாளர்களது சிந்தனைக் குதிரைகளைப் பல்வேறு வழிகளில் தட்டி விடத்தான் செய்கின்றன.

குறிப்பேட்டினையெடுத்துப் பக்கங்களைப் புரட்டுகின்றான். முன்பு எப்பொழுதோ எழுதி வைத்திருந்த பக்கங்களைப் பார்வை மேய்கிறது:

- 'சாளரத்தின் ஊடாக சகமெல்லாம் ஆழ உறங்கும் அர்த்த ராத்திரி வேளையில் வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க, மோனத்தை வெட்டியிடிக்கும் இடியும், பொத்துக் கொண்டு பெய்யும் பெருமாரியும், நரியின் ஊளையினையொத்தப் பெருங்காற்றும் கோலோச்சுமொரு இரவுவானில் ஒளிவிளக்கந் தாங்கிவந்த காயும் மின்னலொன்றின் கணநேரத்து இருப்பும், வான் வனிதையாக கொட்டுமிடித்தாளத்திற்கிசைய நடம் செய்யும் அதன் வனப்பும்' கவியொருவனின் சிந்தனையினத் தட்டியெழுப்பி விடுகின்றன. அதன்

விளைவாக விளைந்தது அற்புதமானதொரு கவிதை. 'இவ் வொளிமின்னல் செயல் என்னே? வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ? சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ? ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும் சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே! சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன் ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே! என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன். மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும். வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்' எனச் சிந்தையினையோட்டுமவன் 'என்னுடைய சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?' என்கின்றான்.

இன்னொரு கவியோ 'எட்டுத் திக்கும் பறந்து திரிந்து, காற்றில் நீந்தி, கொட்டிக் கிடக்கும் வானொளி மதுவுண்டு, பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்று, குஞ்சு காத்து, வைகறையாகும் முன் பாடி விழிப்புறும்' சிட்டுக் குருவியின் இருப்பு கண்டு 'விட்டு விடுதலையாகி நிற்போமிந்த சிட்டுக் குருவியைப் போலே' என்கின்றான்.

மற்றுமொரு கவிஞனோ ' புலவன் எவனோ செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல' எழுதி வைத்த புத்தகத்தில் வரியொன்றின் புள்ளியைப் போல் கருதி பூச்சியொன்றைப் 'புறங்கையால் தட்டி' விடுகின்றான். புள்ளியெனத் தென்பட்டது புள்ளியல்ல பூச்சியே என்பதை உணர்ந்ததும் 'நீ இறந்து விட்டாய்! நெருக்கென்ற தென்நெஞ்சு! வாய் திறந்தாய், காணேன், வலியால் உலைவுற்றுத் 'தாயே!' என அழுத சத்தமும் கேட்கவில்லை. கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு ஓர் கீறாகத் தேய்ந்து கிடந்தாய். அக்கீறுமே ஓரங்குலம் கூட ஓடி இருக்கவில்லை. காட்டெருமை காலடியிற் பட்ட தளிர்போல, நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்தது போல், பூட்டாநம் வீட்டிற் பொருள்போல் நீ மறைந்தாய். மீதியின்றி நின்னுடையமெய் பொய்யேஆயிற்று. நீதியன்று நின்சா, நினையாமல் நேர்ந்ததிது. தீதை மறந்துவிட மாட்டாயோ சிற்றுயிரே!' என்று வேதனையால் புலம்புகின்றான். -

வாசிக்க வாசிக்க நெஞ்சிலொருவித இன்பம் பரவ இரண்டாவது முறையாக அன்றைய இரவு தூக்கத்தைத் தழுவினான் இளங்கோ.

[பதிவுகள் - மார்ச் 2007; இதழ் 87]


அத்தியாயம் மூன்று: சூறாவளி!...

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" ஆழ்ந்த தூக்கத்திலுருந்த இளங்கோ மீண்டும் கண் விழித்தபோது இன்னும் பொழுது புலர்ந்திருக்கவில்லை. எல்லோரும் இன்னும் தத்தமது படுக்கைகளில் தூக்கத்திலாழ்ந்து கிடந்தார்கள். அவனுக்குச் சிறிது வியப்பாகவிருந்தது: 'இதுவென்ன வழக்கத்திற்கு மாறாக.. நித்திரையே ஒழுங்காக வர மாட்டேனென்று முரண்டு பிடிக்கிறது...' அன்று நண்பகல் அவனுக்கு அத்தடுப்பு முகாம் சிறைவாசத்திலிருந்து விடுதலை. அந்த விடுதலை அவன் ஆழ்மனதிலேற்படுத்திய பாதிப்புகளின் விளைவா அவனது தூக்கமின்மைக்குக் காரணம்? இருக்கலாம். சுதந்திரத்தின் ஆனந்தமே அற்புதம்தான். கட்டுக்களை மீறுவதிலிருக்கும் இன்பமே தனி. மீண்டுமொருமுறை அவனது பார்வை அனைத்துப் பக்கங்களையும் ஒருகணம் நோக்கித் திரும்பியது. விடிவுக்கு முன் தோன்றுமொரு அமைதியில் அப் பொழுது ஆழ்ந்திருப்பதாகப் பட்டது.

சிறைப் பாதுகாவலர்களும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிறிது நேரம்தான் பொழுது விடிந்து விடும். நகரின் பரபரப்பில் இன்னுமொரு நாள்மலர் முகிழ்த்து விடும். அதன்பின் அவனது வாழ்க்கையும் இன்னுமொரு தளத்துக்குத் தள்ளப்பட்டு விடும். அத்தளத்தில் அவனை எதிர்பார்த்து இன்னும் எத்தனையெத்தனை சம்பவங்கள், சூழல்கள் காத்துக் கிடக்கின்றனவோ? இருப்பை எப்பொழுதும் உற்சாகத்துடனும், உறுதியுடனும் ஏற்கும் உள உறுதியிருக்கும் வரையில் அவன் எதற்குமே அஞ்சத் தேவையில்லை. மிதிபட மிதிபட மீண்டும் மீண்டும் மிடுக்குடனெழும் புல்லினிதழாக அவன் எப்பொழுதும் எழுந்து கொண்டேயிருப்பான். விடிவை வரவேற்பதில் எப்பொழுதுமே தயங்காத புள்ளினம் போல விடிவுப் பண் பாடிக்கொண்டேயிருப்பான். ஒரு சில மாதங்களில்தான் அவனது இருப்பு எவ்விதம் தலைகீழாக மாறி விட்டது? அரசத் திணைக்களமொன்றில் உயர் பதவி வகித்துக் கொண்டிருந்தவனைச் சூழல் இன்று அந்நிய மண்ணின் சிறைக் கைதியாகத் தள்ளி விட்டிருந்தது. அவனது சிந்தனையில் 1983 கலவர நினைவுகள் சிறிது நேரம் நிழலாடின.

அவனும், அவனது நண்பனும் அன்று தப்பியதை இன்று நினைக்கும் பொழுதும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது. அவனும் நண்பனும் அன்று நீர்கொழும்பு நகருக்கு வேலைநிமித்தம் செல்ல வேண்டியிருந்தது. அவனிருந்தது கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில். அவனது நண்பனிருந்தது கல்கிசைப் பகுதியில். அதிகாலையெழுந்து ஆர்மர் வீதிக்குச் சென்று பஸ் எடுத்துச் சென்றபொழுதுகூட அவனுக்கு ஏற்கனவே கலவரம் ஆரம்பித்திருந்த விடயம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் செல்லும் வழியில் குறிப்பாக மருதானைப் பகுதியில் கடைகள் சில எரிக்கப்பட்டிருந்ததை அவதானித்தான். அப்பொழுதும் அவனுக்குச் சூழலின் யதார்த்தம் உறைக்கவில்லை. அருகிலிருந்த சிங்கள இனததுப் பெண்ணொருத்தி எரிந்திருந்த கடைகளைக் காட்டி ஏதோ சொல்லியபோதும் கூட , அவனுக்குத் தெரிந்திருந்த சிங்கள அறிவின் காரணமாக, அவனுக்கு அதனர்த்தம் புரிந்திருக்கவில்லை. அவனைப் பார்த்தாலும் பார்வைக்குச் சிங்கள இளைஞனொருவனைப் போல்தானிருந்தான். மீசையில்லாமல் தாடி மட்டும் வைத்திருப்பது சிங்கள இளைஞர்கள் மத்தியில் சாதாரண்தொரு விடயம். அத்தகையதொரு தோற்றத்திலிருந்த அவனை அப்பெண்ணும் சிங்கள் ஆடவனென்று நினைத்து ஏதோ கூறியிருக்க வேண்டும். அதன்பின் அவன் கல்கிசை சென்று நண்பனின் இருப்பிடம் நோக்கிச் சென்றபொழுது செல்லும் வழியில் நின்ற சில சிங்களவர்களின் கூட்டமொன்று அவனை நோக்கி ஒருவிதமாகப் பார்த்தபொழுதும் கூட அவனுக்கு எதுவுமே உறைக்கவில்லை. பின் நண்பனும், அவனுமாக மீண்டும் பஸ்ஸேறி புறக்கோட்டை பஸ் நிலையம் சென்று நீர்கொழும் பஸ்ஸினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பொழுதுதான் நண்பனின் கவனத்தை அருகிலிருந்த சிங்களவர்களுக்கிடையிலான உரையாடல் ஈர்த்தது. அவனுக்குச் சிங்களம் நன்கு தெரியும். அப்பொழுதுதான் சூழலின் இறுக்கமே முதன் முறையாக விளங்கியது.

நண்பன் கூறினான்: "பிரச்சினை பெரிதுபோல் தெரிகிறது".

"என்ன? கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லேன்" என்றான் இளங்கோ. அதற்கு நண்பன் இவ்விதம் பதிலிறுத்தான்:

"இவர்களின் கதையின்படி கலவரம் ஏற்கனவே தொடங்கி விட்டது. நிமிடத்துக்கு நிமிடம் பெரிதாகிக் கொண்டேயிருக்கிறது சூறாவளியைப் போல. நாங்கள் இன்றைக்கு நீர்கொழும்பு போக முடியாது. உடனடியாக 'ஆபிசுக்கு'ப் போவம். அதுதான் நல்லது. இப்பொழுதுதான் எல்லாமே விளங்குகிறது. நீ மருதானையில் பார்த்த எரிந்த கடைகள், எங்களது வீட்டுக்கண்மையிலிருந்த சிங்களவர்களின் பார்வை,.. இவை எல்லாவற்றுக்கும் காரணம் இப்பத்தான் விளங்குது... எவ்வளவு கெதியாக 'ஆபிசுக்கு' போக முடியுமோ அவ்வளவு நல்லது. இப்ப இங்கிருக்கிறவர்கள் கதைக்கிறதைப் பார்த்தால் இங்கை கலவரம் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் போலத்தானிருக்கு".

இளங்கோவுக்கும் நண்பன் கூறியது சரியாகவே பட்டது. உடனடியாகவே பஸ்ஸேறி அவர்கள் பணிபுரிந்த காரியாலயம் சென்றார்கள். அங்கு சென்றதும் எல்லோரும் அவர்களிருவரையும் புதினமாகப் பார்த்தார்கள். அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த முஸ்லீம் பணியாள் இவர்களிடம் வந்து நாட்டில் இனக்கலவரம் ஆங்காங்கே ஆரம்பமாகி விட்டதாகவும், அவர்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கூறினான. அவன் கொழும்பிலேயே கிராண்ட்பாஸ் பகுதியில் பிறந்து வளர்ந்த முஸ்லீம். சிங்களமும், தமிழும் நன்கு சரளமாகப் பேசும் ஆற்றல் வாய்த்தவன். அங்கு நடக்கும் நடப்புகளை அவ்வப்போது அவர்களுடன் பகிர்ந்து கொள்பவன். அவர்களிருவரும் அவ்வரசத் திணைக்களத்தில் பொறியியலாளர்களாக உயர்பதவியில் இருந்தபோதும் அவனுடன் மிகவும் இயல்பாகப் பழகுவார்கள். அவனும் அவர்களுடன் அன்புடன் பழகுவான். அதன் காரணமாகத்தான் அப்பொழுது வந்து எச்சரித்திருந்தான். அவர்களும் அவனுக்கு நன்றி கூறிவிட்டு என்ன செய்யலாமென்று சிறிதுநேரம் சிந்தனையிலாழ்ந்தார்கள்.

"இந்தச் சமயத்தில் மீண்டும் எங்களுடைய இருப்பிடத்திற்குச் செல்வது நல்லதாகப் படவில்லை. எங்கு போகலாம்..?" என்றான் நண்பன்.

இளங்கோ அதற்கு இவ்விதம் கூறினான்: "சென்றமுறைக் கலவரத்திலெல்லாம் இராமகிருஷ்ண மிசன் நன்கு உதவியதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். அங்கு செல்வதுதான் நல்லதுபோல் படுகிறது. நீ என்ன சொல்லுகிறாய்?"

"நீ சொல்வதும்சரி. ஆனால் அங்கை எப்படிப் போவது..?" என்றான்: நண்பன்.

இளங்கோ: " 'பார்க்கிங் லொட்டைப்' பார். எத்தனை 'கம்பனி' வாகனங்கள். வேண்டுமானால் இயக்குநரிடம் சென்று கேட்டுப் பார்க்கலாமா.."

நண்பன்: "இந்தச சமயத்தில் இயக்குநர் என்ன செய்வானோ.. ஏற்கனவே கடந்த மூன்று வருடங்களாக உத்தியோகத்தை நிரந்தரமாக்குவதற்காக அவனுடன் எவ்வளவு மோத வேண்டியிருந்தது. அதனாலேற்பட்ட பிரச்சினைகளையெல்லாம் இப்பொழுது தூக்கிப் பார்த்து உதவாமல் விட்டால்..."

இளங்கோ: "எதற்கும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே... சரி வந்தால் சரி. இல்லாவிட்டால் பிறகு யோசிப்போம்..."

இவ்விதம் முடிவெடுத்தவர்களாக இருவரும் இயக்குநரின் அறைக்குச் சென்றார்கள். இயக்குநர் சைமன் முகத்தில் அப்பொழுது கூடப் புன்னகையினைக் காணவில்லை.

இயக்குநர் சைமன் (ஆங்கிலத்தில்): "காலை வந்தனங்கள். வாருங்கள். என்ன விடயம்.."

இளங்கோ: "காலை வந்தனங்கள். உங்களுக்குத் தற்போது எழுந்துள்ள சூழல் தெரிந்திருக்குமென்று நினைக்கின்றோம்..."

இயக்குநர் சைமன்: "ஆம். மிகவும் துரதிருஷ்ட்டமானது. உங்களுக்கு என்னால் ஏதாவது உதவிகள் செய்ய முடியுமாவென்று பார்க்கின்றேன்."

இளங்கோவும், நண்பனும்" "மிகவும் நன்றி".

இளங்கோ தொடர்ந்தான்: "உங்களது வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி. இந்தச் சமயத்தில் வெள்ளவதையிலுள்ள இராமகிருஷ்ண மடத்துக்குச் செல்வது நல்லதுபோல் எனக்குப் படுகிறது. நீங்கள் மட்டும் கொஞ்சம் இந்த விடயத்தில் உதவினால்.."

இயக்குநர் சைமன்: "சொல்லுங்கள். இந்த விடயத்தில் நானெப்படி உதவிட முடியுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?"

இளங்கோ" "சேர். நீங்கள் மனது வைத்தால்.. அங்கிருக்கும் வாகனமொன்றினை எங்களுக்குக் கொடுத்துதவலாம்.."

இயக்குநர் சைமன் சிறிது நேரம் சிந்தித்தான்; பின் இவ்விதம் கூறினான்: " மன்னிக்க வேண்டும். இந்த விடயத்தில் என்னால் எதுவும் செய்வதற்கில்லை. நகரில் கலவரம் வெடித்திருக்கிற சூழலில் எந்த வாகனச் சாரதியும் இதற்குச் சம்மதிக்க மாட்டான். இந்தச் சமயத்தில் நீங்கள் இங்கிருப்பதுதான் நல்லது"

இருவரும் இயக்குநருக்கு நன்றி கூறிவிட்டுத் தம்மிருப்பிடம் திரும்பினார்கள். அதே சமயம் தமக்குள் பின்வருமாறும் உரையாடிக் கொண்டார்கள்.

இளங்கோ: "இயக்குநர் நினைத்திருந்தால் மிகவும் இலகுவாக உதவியிருக்க முடியும். சிங்கள வாகனச் சாரதியோட்டும் அரச திணைக்கள வாகனத்திற்கு ஆபத்தெதுவும் ஏற்படுமென்று நான் நினைக்கவில்லை.."

நண்பன்: "அவனும் பழைய கறளை நினைவில் வைத்துத்தான் இவ்விதம் நடக்கின்றான் போலும்."

இளங்கோ: "அவன் இவ்விதம்தான் செயற்படுவான் என்று எதிர்பார்த்தேன். அதன்படியே நடக்கின்றான். இந்தக் கணத்தில் நானொரு முடிவு எடுத்திருக்கிறேன்."

நண்பன்: "என்ன..."

இளங்கோ: "ஒருவேளை இந்தக் கலவரத்தில் தப்பிப் பிழைத்தால் இந்தக் காரியாலயத்தின் வாசற்படியைக் கூட மிதிக்க மாட்டேன். இங்கு நாம் பட்ட அவமானமாக, இறுதி அனுபவமாக இச்சம்பவமிருக்கட்டும்."

நண்பன்: "உன்னுடைய பலவீனமே இதுதான். எதற்கும் வளைந்து கொடுக்காமல் உடனடியாக முடிவுகளை எடுத்துச் செயற்படுத்துவது.. சில சமயங்களில் வளைந்தும் கொடுக்கத்தான் வேண்டும். காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கத்தான் வேண்டும்.."

இச்சமயத்தில் அந்த முஸ்லீம் பணியாள் வந்தான். அவனது முகத்தில் சிறிது பரபரப்பு தென்பட்டது.

இளங்கோ: "என்ன விசயம். என் பதட்டமாயிருக்கிறாய்?"

அதற்கந்த பணியாள் கூறினான்: "எவ்வளவு விரைவாக நீங்கள் இங்கிருந்து செல்ல முடியுமோ அவ்வளவுகு நல்லது.."

நண்பன் சிறிது பயந்து போனான்: "என்ன சொல்லுறாய்.. ஏன?"

அதற்கந்த பணியாள் இவ்விதம் கூறிச் சென்றான்: "இங்கு வேலை செய்கிற தமிழர்களை அடிப்பதற்குத் திட்டம் போடுகிறார்கள்.அதற்கு முதல் நீங்கள் போவது நல்லது."

நண்பன்: "இவனென்ன இவ்விதம் குண்டைத் தூக்கிப் போட்டு ஓடுகிறான்.."

இளங்கோ: "அவன் உண்மையைத்தானே கூறினான். நாங்கள் எவ்வளவு விரைவாக இங்கிருந்து செல்ல முடியுமோ அவ்வளவு நல்லது"

இச்சமயத்தில் காரியாலயத்திற்கு வெளியில் சிறிது களேபரச் சூழல் ஏற்படவே அனைவரும் வெளியில் சென்றார்கள். இளங்கோவும் அவர்களுடன் கும்பலுடன் கோவிந்தாவாக வெளியில் சென்றான். மருதானை வீதியிலிருந்த அரச, தனியார் திணைக்களங்களில் பணிபுரிந்தவர்களெல்லாரும் வீதிக்கு வந்து விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எதனை அவ்விதம் விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்?

கப்பித்தாவத்தைப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாதையில் லொறியொன்று ஆயுதம் தரித்த கூண்டர்களுடன் சென்று கொண்டிருந்தது. 'லோங்சும்' 'சேர்ட்டும்' அணிந்திருந்த குண்டர்கள். கைகளில் பொல்லுகளைப் பலர் வைத்திருந்தார்கள். அவர்கள் அப்பாதையால் சென்ற சிறிது நேரத்தில் கப்பித்தாவைத்தைப் பிள்ளையார் ஆலயம் பக்கமிருந்து புகை சிறிதாகக் கிளம்பியது. பிரதமர் பிரேமதாசாவின் மதிப்புக்குரிய , பக்திக்குரிய கப்பித்தாவத்தப் பிள்ளையாருக்கே இந்தக் கதியா? இச்சமயம் கப்பித்தாவத்த ஆலயமிருந்த பகுதியிலிருந்து தடித்த தமிழனொருவன் காதில் சிறிது வெட்டுக் காயங்களுடன் விஜேவர்த்தனா மாவத்தை வீதியை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். அச்சமயம் சனத்திரளுடன் விரைந்து கொண்டிருந்த பஸ் வண்டிகளை மறிப்பதற்கு முயன்றான். ஒன்றுமே நிற்கவில்லை. அச்சமயத்தில் அவனைத் துரத்தியபடி சிறு கும்பலொன்று கைகளில் பொல்லுகளுடன் ஓடி வந்து கொண்டிருந்தது.

அவ்விதம் துரத்தி வந்தவர்களிலொருவன் வீதியோரமாக விடுப்புப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பக்கம் வந்தான். ஒவ்வொருவராக மேலும் கீழும் பார்த்தபடி வந்தான். இளங்கோவின் பக்கம் வந்தவுடன் ஒருகணம் நின்றான்: "தெமிளதா சிங்களதா' என்றான்.

அவ்விதம்தான் கேட்டதாக அவனுக்குப் பட்டது. 'சிங்கள; என்று மட்டும் பட்டும் படாமல் கூறிவிட்டுப் பேசாமல் நின்றான் இளங்கோ.

இன்னுமொரு வார்த்தை அவன் வாயிலிருந்து வந்து விட்டால்போதும் அவன் அசல் தமிழனென்பதை அந்தக் காடையன் கண்டு பிடித்து விடுவான். நிலைமை எல்லை மீறுவதை அவன் உணர்ந்தான். இதற்கிடையில் காயத்துடன் ஓடி வந்து கொண்டிருந்த தமிழனைக் காணவில்லை. பஸ்ஸொன்றில் ஏறி விட்டிருக்க வேண்டுமென்று பட்டது. இளங்கோ மெதுவாக காரியாலயத்தினுள் நுழைந்தான்.

நண்பன்: "என்ன? எப்படி வெளியிலை இருக்கு?"

இளங்கோ: "நிலைமை எல்லை மீறும் போலைத்தான் தெரிகிறது. நான் தப்பியது அருந்தப்பு."

இச்சமயத்தில் அத்திணைக்களத்து நிதிநிர்வாக உயர் அதிகாரியான கந்தரட்ணமும், தமிழக்த்திலிருந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் ஸ்தாபனச் சிவில் பொறியியல் ஆலோசகராக வந்து பணிபுரிந்து கொண்டிருந்த பாலகிருஷ்ணனும் அவசர அவசரமாக வாசலை நோக்ககி விரைந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் 'பேர்கர்' இனத்துப் பெண்ணான கந்தரட்ணத்தின் காரியதரிசிப் பெண் இமெல்டாவும் விரைந்து கொண்டிருந்தாள். அவர்கள் எங்கே அவ்விதம் விரைந்து கொண்டிருந்தார்கள்?

இளங்கோ நண்னுக்கு: "நாங்களும் இவர்களுடன் வெளியில் போவோம். இவர்களும் வெளியில் போய் விட்டால் நாங்கள் இங்கு தனியாக அகப்பட்டு விடுவோம்."

இருவரும் கந்தரட்ணத்தப் பின் தொடர்ந்தார்கள். வெளியில் சென்ற அவர்கள் தயாராக நின்று கொண்டிருந்த அரச வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களின் அனுமதி எதனையும் எதிர்பார்க்காமலே இளங்கோவும் நண்பனும் விரைவாக அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டார்கள். அவர்களை ஏற்றிக் கொண்ட அந்த வாகனத்தைச் சாரதி மருதானைப் பக்கமாகச் செலுத்தினான். இதற்கிடையில் யாரோ தமிழர்கள் வாகனத்தில் தப்பியோடுவதை வீதியில் அப்பொழுதும் நடமாடிக் கொண்டிருந்த குண்டர்கள் சிலருக்குக் கூறியிருக்க வேண்டும். அவர்களில் சிலர் வாகனத்தை நோக்கிக் கைகளில் பொல்லுகளுடன் விரைவாக ஓடி வந்தார்கள். அவர்கள் கைகளில் மட்டும் சிக்கியிருந்தால் அன்று அவர்களின் கதை முடிந்து விட்டிருக்கலாம். இதற்கிடையில் மருதானைச் சந்தி காமினி திரையர்ங்உ வரையில்தான் வாகனத்தைச் சாரதியால் ஓட்ட முடிந்தது. அதற்கப்பால் போக முடியாதபடி கலவரச் சூழல் நிலவியது. வாகனத்தை விரைவாகத் திருப்பிய சாரதி மீண்டும் விஜயவர்த்தனா மாவத்தை வழியாக லேக் ஹவுஸ் பக்கம் செலுத்தினான்.

கந்தரட்ணமும், பாலகிருஷ்ணனும் சிறிது கவலையுடன் காணப்பட்டார்கள். இமெல்டாவோ அழுது விடுவாள் போல் காணப்பட்டாள்.

தமிழர்களுடன் சேர்த்து அவளையும் சேர்த்து வாகனத்துடன் தாக்கி விட்டாலென்ற கவலையில் அவளுக்கு அழுகைமேல் அழுகையாக வரவே இலேசாக அழவும் தொடங்கினாள். அவ்விதமாகக் கொழும்பு வீதிகளினூடாகச் சென்று கொண்டிருக்கையில்தான் கலவரச் சூறாவளியினை அதன் வேகத்தினை இளங்கோ முதன்முறையாக உணர்ந்தான். எவ்வளவு வேகமாக வீசியடிக்கத் தொடங்கி விடுகிறது?

வழியெங்கும் தமிழர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் வீதிகளில் எரிந்து கொண்டிருந்தன. யாராவது உள்ளே இருந்தார்களாவென்பது தெரியவில்லை? வீதிகள் பலவற்றில் கடைகள் பல எரிந்து கொண்டிருந்தன. இளங்கோ கந்தரட்ணத்திடம் ஆங்கிலத்தில் கேட்டான்: "நீங்கள் எங்கு செல்வதாக உத்தேசம்?"

அதற்கவர் கூறினார்: " நாங்களிருவரும் ஓட்டல் ஒபராய் செல்லுகிறோம். இமெல்டா தெகிவளையிலுள்ள தன் வீடு செல்கிறாள். நீங்கள் எங்கு செல்வதாகத் திட்டம்?"

இளங்கோ: "நல்லதாகப் போய் விட்டது. உங்களை ஓட்டல் ஒபராயில் இறக்கி விட்டு எங்களை இராமகிருஷ்ண மடத்தில் இறக்கி விடலாம். இமெல்டா செல்லும் வழிதானே.."

இமெல்டா இன்னும் அழுது கொண்டிருந்தாள்.

ஒரு வழியாக உயர் அதிகாரிகளிருவரையும் ஓட்டல் ஒபராயில் இறக்கி விட்டு வாகனச் சாரதி வாகனத்தைக் காலி வீதி வழியாகச் செலுத்தினான். சிறிது வயதான அந்தச் சிங்களச் சாரதி இவர்களிருவரையும் பார்த்துக் கேட்டான்: "நீங்கள் எங்கு செல்ல் வேண்டும்"

நண்பன்: "எங்களை இராமகிருஷ்ண மடத்தில் இறக்கி விட்டால் நல்லது.."

அதற்கந்தச் சாரதி கூறினான்: "என்னால் இராமகிருஷ்ண மடம் மட்டும் வர முடியாது. உங்களை இராமகிருஷ்ண வீதியும், காலி வீதியும் சந்திக்கும் சந்திப்பில் இறக்கி விடுகிறேன். இறங்கிச் செல்லுங்கள்"

இளங்கோ: "அது போதுமெங்களுக்கு. மிக்க நன்றி"

வழியெங்கும் காடையர் கூட்டம் ஆர்ப்பரித்தபடி, கடைகள் எரிந்தபடி, வாகனங்கள் தலை குப்புற வீழ்ந்து எரிந்தபடி, ஆண்களும், பெண்களுமாகத் தமிழர்கள் அவசர அவசரமாக விரைந்தபடி, ஓடியபடி,... சூழலின் அகோரம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தபடியிருந்தது.

இதுபற்றிய எந்தவிதக் கவலைகளுமற்று விண்ணில் சிறகடித்துக் கொண்டிருந்த பறவைகள் சிலவற்றை ஒருவிதப் பொறாமையுடன் பார்த்தான் இளங்கோ. இத்தகைய சமயங்களில் எவ்வளவு சுதந்திரமாக அவை விண்ணில் சிறகடிக்கின்றன.

வாகனச் சாரதி காலி வீதியும், இராமகிருஷ்ண வீதியும் சந்திக்குமிடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கும்படி கூறினான். உயர் அதிகாரிகள் இருந்தபோது அவன் காட்டிய பணிவு, மரியாதையெல்லாம் இப்பொழுது அடியோடு அகன்று விட்டன. இளங்கோ நண்பனை நோக்கினான்.

"என்ன இறங்கி நடப்போமா?"

நண்பன் பதிலுக்குத் தலையசைக்கவே இருவரும் அவசரமாக இறங்கினார்கள். அப்பொழுதுதான் தெகிவளைக் காலவாயை அண்டியிருந்த சேரியிலிருந்து காடையர் கும்பலொன்று கைகளில் கத்திகள், பொல்லுகளென்று ஆரவாரித்தபடி, சிங்களத்தில் ஏதோ கத்தியபடி இவர்களளிருந்த திக்கை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். சிந்திப்பதற்கு நேரமில்லை. மீண்டும் இருவரும் சொல்லி வைத்த மாதிரி மீண்டும் வாகனத்திற்குள் பாய்ந்தேறினார்கள். ஓரளவு ஆசுவாசப்பட்ட இமெல்டா மீண்டும் அழத் தொடங்கி விட்டாள். இளங்கோ சாரதியிடம் தெகிவளையில் இறக்கி விடும்படி கூறினான். வேண்டா வெறுப்பாகச் சாரதி வாகனத்தை மீண்டும் செலுத்தத் தொடங்கினான். நல்லவேளை கும்பல் வாகனத்தை நிறுத்தித் தொல்லை தரவில்லை. தெகிவளை அண்மித்ததும், கொழும்பு மிருக காட்சிச் சாலைக்குச் செல்லும் வீதியுடனான சந்திப்பில் மீண்டும் வாகனத்தை நிறுத்தி விட்டான் சாரதி. சந்தியில் இரு சிங்களக் காவற்துறையினர் ஒரு சில குண்டர்களைப் போன்ற தோற்றத்தில் காணப்பட்ட சிங்களவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்ததை அப்பொழுது இளங்கோ அவதானித்தான். அத்துடன் சாரதியிடம் கேட்டான்:

"எதற்காக வாகனத்தை நிறுத்தி விட்டாய். இமெல்டாவை விட்டு விட்டு வரும் வழியில் எங்களிருவரையும் இராமகிருஷ்ண மண்டபத்தில் கொண்டு சென்று விட முடியுமா?"

அதற்கு அந்த வாகனச் சாரதி சிறிது உரத்த குரலில் பதிலிறுத்தான்: "என்னுடைய உயிருக்கு யார் உத்தரவாதம்?"

இளங்கோ (நண்பனை நோக்கி): "இஅவன் இப்படியே உரக்கக் கதைத்து அந்தக் குண்டர்களுக்கு எங்களைக் காட்டிக் கொடுத்தாலும் கொடுத்து விடுவான். அதற்குள் இறங்குவதே புத்திசாலித்தனம். சே. நாங்களும் கந்தரட்ணத்துடன் ஓட்டல் ஒபராயிலேயே இறங்கி விட்டிருக்கலாம்."

வாகனச் சாரதிக்கும், இமெல்டாவுக்கும் நன்றி கூறிவிட்டு எதிர்ப்புறம் கடற்புறமாகவிருந்த வீதியை நோக்கி நடக்கத் தொடங்கினான் இளங்கோ. அத்துடன் நண்பனுக்கு இவ்விதம் கூறினான்: "என்னுடன் ஒன்றுமே கதைக்காதே. அபப்டியே என்னைப் பின் தொடர்ந்து வா எந்தவிதப் பதட்டமுமில்லாத தோற்றத்துடன். நான் இப்படியே தெகிவ்லை நூலக வீதியால் கடற்கரைக்குச் சென்று கடற்கரை வழியாக அப்படியே இராமகிருஷ்ண மண்டபத்துக்குச் சென்று விடலாம். கடற்கரை வழியால் செல்லும் போது நான் கடலை, அலையையெல்லாம் இரசித்து வந்தால் ஆச்சரியப்பட்டு விடாதே. புகையிரதக் கடவை வழியாகக் கூண்டர்கள் யாரும் வந்தால் சந்தேகப் படமாட்டார்கள். ஆக உச்சக் கட்டமாகக் கடலில் குளித்தாலும் குளிப்பேன்." இவ்விதம் கூறிவிட்டுக் கடற்கரையை நோக்கிச் சென்ற இளங்கோவைச் சிறிது தொலைவில் பின் தொடர்ந்தான் நண்பன்.

[ பதிவுகள் - ஏப்ரில் ; இதழ் 88]


அத்தியாயம் நான்கு: மதகுருவின் துணிவு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" அந்தக் காலை நேரத்திலும் கடலில் சில ஐரோப்பிய உல்லாசப் பயணிகள் சிலர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். 'விதேசிகள் ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இங்கு நான் சுதேசியோ உயிரைத் தப்ப வைப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றேன். அவர்களுக்கு இருக்கின்ற உரிமைகள் கூட எனக்கில்லையே' இவ்விதமாக அந்தக் கணத்திலும் இளங்கோவின் சிந்தையிலொரு எண்ணம் கோடு கிழித்தது. கொழும்பிலிருந்து காலிக்குச் செல்லும் புகையிரதக் கடவைகள் வழியாகக் குண்டர்களின் நடமாட்டம் சிறிது அதிகமாகவிருந்ததை அவதானித்தவன் கடற்கரை மணலினுள் இறங்கியவனாகக் கடலையும், அதன் வனப்பையும், அங்கு நீராடிக் கொண்டிருந்தவர்களையும் பார்த்தவனாக இராமகிருஷ்ண மடமிருந்த திக்கை நோக்கி நடந்தான். அடிக்கொருதரம் திரும்பி நண்பன் பின்தொடர்வதை உறுதி செய்து கொண்டான். நண்பனைப் பொறுத்தவரையில் பார்வைக்குக் கிராமத்துச் சிங்கள இளைஞனைப் போன்று சிறிது வெண்ணிறமான தோற்றத்தில் சுருண்ட தலைமயிருடனிருந்தான்.  சிங்களம் வேறு மிகவும் இயல்பாகக் கதைக்குமாற்றல்

பெற்றவன். தப்பி விடுவான். இவனைப் பொறுத்தவரையில் நிலமை வேறு. 'ஒயாகே நம மொக்கத?', 'டிக்கக் டிக்கக் தன்னவா' போன்ற ஒரு சில ஆரம்பச் சிங்கள வார்த்தைகளைத் தவிர சுட்டுப் போட்டாலும் இவனுக்குச் சிங்களம் வராது. ஒரு முறை இவனது பல்கலைக் கழக வாழ்க்கையில் நிகழ்ந்ததொரு சம்பவம் இவனது சிங்கள மேதமையினை வெளிப்படுத்தவல்லது. ஒருமுறை இவனை பகிடிவதை செய்த மாணவர்கள் சிலர் இவனிடம் அரை இறாத்தல் சீனி வாங்கி வரும்படி கூறியிருந்தனர். அப்பொழுது பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலிருந்த சிங்கள்வரொருவரின் பலசரக்குக் கடைக்குச் சென்றவன் 'எக்கா மாறா'வென்று ஒன்றரை இறாத்தல் பாணுக்குக் கூறுவது நினைவுக்கு வரவே அரை இறாத்தல் சீனிக்கு 'சீனி மாறா'வென்று ('சீனி பாகயா' என்றுதான் கூறவேண்டும்) கேட்டு அங்கிருந்தவர்களின் சிரிப்புக்காளானான். மேலுமின்னுமொரு சம்பவம் அவனது இரயில் பயணத்தில் நடைபெற்றிருந்தது. ஒரு முறை யாழ்தேவியில் கொழும்புக் கோட்டையிலிருந்து யாழ்நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்தவனுக்கு அங்கிருந்த உணவகத்தில் 'மட்டன் ரோ'லொன்று வாங்கியுண்ணவேண்டுமென்று விருப்பம் வந்தது. அந்த உணவகமோ சிங்களவரொருவரால் நடாத்தப்பட்டதுணவகம். அவரிடம் 'ரோல் கீயத'வென்று தனக்குத் தெரிந்த சிங்களத்தில் வினாத்தொடுத்தான். அதற்கவர் 'எக்கா விசிப்பகா' என்றார். உடனேயே இவனுக்கோ ஆனந்தம் தலைவிரித்தாடியது. ஊரில் கூட ஒரு 'ரோல்' ஒரு ரூபா இருபத்தியைந்து சதத்திற்கு விற்பனயாகும்போது இங்கு எவ்வளவு குறைந்த விலையில் ஒன்று இருபத்தியைந்துக்கு விற்கிறானே என்று சந்தோசப்பட்டவனாக இரண்டு ரோல்களை வாங்கி ஆசை தீர உண்டு விட்டு அதற்குரிய பணமாக ஐம்பது சதத்தை எடுத்துக் கொடுத்தான். அதற்குப் பதிலாக வெளிப்பட்ட அந்தச் சிங்களவரின் முறைப்பிற்குப் பின்னர்தான் ரோலின் விலை 'ஒரு ரோல் இருபத்தியைந்து சதமல்ல ஒரு ரோல் ஒரு ரூபா இருபத்தியைந்து சதமென்பதே' அவனுக்கு விளங்கியது. இந்த நிலையில் நாட்டில் நிலவிய அரசியற் சூழல் காரணமாகச் சிங்களம் படிப்பதிலேயே அவனுக்கு ஆர்வமற்றுப் போயிற்று. சிங்கள மொழியில் இவ்விதமானதொரு பாண்டித்தியம் பெற்றவனின் மொழியறிவினை இந்தச் சமயம் பார்த்து யாராவது சிங்களக் காடையன் வந்து பரீட்சித்துப் பார்த்தால் அவனது கதி அதோ கதிதான். அவனது எண்ணமெல்லாம் எப்படியாவது இராமகிருஷ்ண மடத்தினுள் சென்று விட்டால் போதுமென்பதாகத்தான் அச்சமயத்திலிருந்தது. காடையர்கள் கடந்த கலவரத்தில் விட்டு வைத்ததைப் போல் இம்முறையும் இராமகிருஷ்ண மடத்தை விட்டு வைப்பார்களென்று அவனது மனம் ஏனோ அச்சமயத்தில் நம்பியது. ஒரு வழியாக அவனும் நண்பனும் இராமகிருஷ்ண மண்டபத்தை அடைந்து விட்டார்கள். ஆனால் கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலைதான். இராமகிருஷ்ண மண்டபத்தின் முன்புற வாசற் கதவு பூட்டப் பட்டிருந்தது. வாசலின் முன்புறமாக இராமகிருஷ்ண வீதியில் காடையர் கும்பலொன்று நின்று மண்டபத்தையே வேடிக்கை பார்த்தபடியிருந்தது. அவனும் நண்பனும் அவர்களோடு அவர்களாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தார்கள். அடிக்கொருதரம் கொழும்புத் தமிழர்கள் சிலர் வாகனங்களில் வந்து மடத்தின் முன்னால் இறங்கிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் வந்தவர்களை உள்ளிருந்து வந்த பாதுகாவல் அதிகாரி அடிக்கொருதரம் வாசற் கதவினைத் திறந்து உள்ளே விட்டு விட்டு மீண்டும் மூடிக் கொண்டிருந்தான். அத்தகையதொரு சமயததில் அவனும் நண்பனும் அபயம் தேடி வந்த பாதிக்கப்பட்ட தமிழர்களுடன் சேர்ந்து உள்ளே நுழைந்து விட்டார்கள். மண்டபத்தினுள் மேலும் பல தமிழர்கள் என்ன நடக்குமோ ஏது நடக்குமோவென்ற பயப்பிராந்தியிருந்தார்கள். வெளியில் இன்னும் காடையர்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தபடியேயிருந்தது. வரவர அவர்களது கூட்டமும் அதிகரித்தபடியேயிருந்தது. உள்ளிருந்த தமிழர்களில் தமது தேன்நிலவினைக் கொண்டாட வந்து அங்கு தங்கியிருந்த இளந்தம்பதியொன்றுமிருந்தது. பார்க்கப் பாவமாகவிருந்தது.

இத்தகையதொரு சூழலில் அங்கிருந்தவர்களில் சிறிது உயரமாகத் திடகாத்திரமாகவிருந்த தமிழ் இளைஞனொருவன் அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினான்:

"இன்னும் கொஞ்ச நேரத்திலை வெளியிலை வேடிக்கை பார்க்கிற குண்டர்கள் உள்ளுக்குள் வந்து விடுவான்கள். நாங்கள் பயப்படக் கூடாது. எதிர்த்து நிற்க வேண்டும்." நடைமுறைச் சாத்தியமற்ற துணிச்சலாக அது அவனுக்குப் பட்டது. இத்தகைய சமயங்களில் ஆத்திரப்படாமல், சமயயோசிதமாக, நிதானத்துடன் சிந்தித்துப் பிரச்சினையை அணுக வேண்டும். அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்து விடக் கூடாதென்று இவனுக்குப் பட்டது. அவ்விதம் கூறிய அந்த இளைஞன் உள்ளே சென்று எங்கிருந்தோ 'அலவாங்கு' அளவிலிருந்த இரும்புத் துண்டங்களைக் கொண்டு வந்து அங்கிருந்த இளைஞர்கள் கைகளில் கொடுத்தான்.

வெளியில் காடையர்களின் அட்டகாசம் வினாடிக்கு வினாடி அதிகரித்தபடியேயிருந்தது. அதனை அடிக்கொருதரம் ஜீப்புகளில் வந்து 'ஜெயவீவா' கோசமிட்டுச் சென்ற சிறிலங்கா இராணுவத்தினரின் உற்சாகமும் அதிகரிக்க வைப்பதாகவிருந்தது. இராமகிருஷ்ண மண்டபத்தின் முன்னால் நின்று ஸ்ரீலங்காக் காவற்படையினர் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இவற்றால் மேலும் உற்சாகமுற்ற காடையர் கூட்டம் மண்டபத்தினுள் நுழைய முற்பட்டது. பாதுகாவல் அதிகாரிகளும் நிலைமை கட்டு மீறவே ஓடிப்போய் விட்டார்கள். காடையர்கள் உள்ளே வரமுற்படுவதைக் கண்டதும் மண்டபத்தினுள்ளிருந்த தமிழர்கள் ஆளுக்கொன்றாய் பிரிபட்டு மண்டபத்தின் ஒவ்வொரு பக்கமாய் ஓடினார்கள். அதுவரையில் இளைஞர்களுக்கு எதிர்த்து நிற்கும்படி ஆலோசனை வழங்கிய இளைஞன்தான் முதலில் ஓடி மறைந்தவன். மற்றவர்களும் கைகளிலிருந்தவற்றை அப்படி அப்படியே போட்டு விட்டு ஆளுக்கொருபக்கம் ஓடி விட்டார்கள். இவ்விதமாக ஓடியதில் நண்பனும் இவனும் பிரிபட்டுப் போனார்கள். பெண்களெல்லாரும் படிகள் வழியாக மொட்டை மாடிக்கு ஏறிச் சென்றார்கள். அவ்விதம் சென்றவர்கள் ஒளிவதற்கு இடமில்லாத நிலையில் தண்ணீர்த் தாங்கிக்கும் மொட்டை மாடித்தரைக்குமிடையிலிருந்த சிறிய இடத்தில் நெருக்கியடித்து குடங்கிக் கொண்டார்கள்.

இளங்கோ மொட்டை மாடிக்கு வந்தபோது மொட்டை மாடியில் நீட்டிக் கொண்டடிருந்த தூண்களைத் தவிர ஒளிவதற்கென்று ஏதுமில்லை. தண்ணீர்த்தாங்கிக்கடியில் குடங்கிக் கிடந்த பெண்களின் நிலை பரிதாபமாகவிருந்தது. வயது முதிர்ந்த தமிழரொருவர் வருவது வரட்டுமென்ற நிலையில் மொட்டை மாடிக்குள் நீட்டிக் கொண்டிருந்த தூணொன்றின் பின்னால் சாய்ந்தவராக வானத்தையே பார்த்தபடியிருந்தார். அகதிகளாக விண்ணில் மேகங்கள் அலைந்து கொண்டிருப்பபதுபோல் பட்டது. அப்பொழுதுதான் அவன் ஆரம்பத்தில் ஆயுதம் தந்து விரைந்து மறைந்து போன இளைஞன் நீர்த்தாங்கியின் மேல் மல்லாந்து படுத்து ஆகாயத்தையே நோக்கியபடியிருந்ததை
அவதானித்தான். அவ்விதம் அவன் படுத்திருப்பதைக் கீழிருப்பவர்கள் யாரும் இலேசில் பார்த்து விடமுடியாது.

இச்சமயம் நகரில் கலவரம் சுவாலை விட்டு எரியத் தொடங்கியிருப்பதை வெள்ளவத்தைப் பக்கமிருந்து வந்த புகைப் படலம் தெரியப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து புகையிரத்தப் பாதைகள் வழியாகத் தமிழர்கள் தெகிவளைப் பக்கம் நோக்கி ஓடிக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. வயது முதிர்ந்த பெண்கள் சேலைகளை முழங்கால்கள் வரையில் தூக்கியபடி ஓட முடியாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள். எதிரிலிருந்த 'ஓட்டல் பிரைட்டனி'ல் தங்கியிருந்த உல்லாசப்பயணிகள் சிலர் அருகில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் பல்வேறு விதமான புகைப்படக் கருவிகள் மூலம் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதே சமயம் இராமகிருஷ்ண மடத்தின் முன்பாக அதன் வளாகத்தில் தரித்து நின்ற யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் விலாசுக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றைக் காடையர்கள் எரியூட்டினார்கள். இன்னுமொரு ஜீப் வண்டியை மண்டபத்தின் கீழ்த்தளக் கண்ணாடிச் சுவரொன்றுடன் மோதினார்கள். அத்துடன் மண்டபத்தினுள் காடையர்கள் நுழைந்து விட்டார்கள். அவர்களொருவன் மொட்டை மாடிக்கு வந்து எட்டிப் பார்த்தான். பார்த்தவன் "உத்தா இன்னவா" என்று கத்தி சென்றான். மீண்டும் வந்து மொட்டை மாடியிலிருந்து கீழ்ச் செல்லும் படிகளுக்கண்மையில் நின்றவனாக அனைவரையும் இறங்கும்படி சைகை காட்டினான். அவ்விதம் இறங்கியவர்களின் கைகளிலிருந்தவற்றை பிடுங்கி விட்டுத்தான் இறங்க அனுமதித்தான். பலர் அவசர அவசரமாகத் தப்பி வந்தபொழுது கொண்டுவந்திருந்தநகைகள், பணம் போன்ற பலதையும் இழந்தார்கள். உயிருக்கே உத்தரவாதமில்லா நிலையில் யாருக்கு வேண்டும் உடமை? இவ்விதமாக இறங்கியவர்களை மீண்டும் மேலே கலைத்தது கீழிருந்து வந்த காடையர்களின் கூச்சல். மீண்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்காக ஓடினார்கள். பலர் ஒவ்வொரு தளங்களிலுமிருந்த கழிவறைகளில், குளியலறைகளிலெல்லாம் ஓடி ஒளிந்து நின்றார்கள். அவ்விதமாகக் கழிவறையொன்றினுள் அவனும் அந்தப் புதுமணத்தம்பதியினரும் சிறிதுநேரம் அகப்பட்டுக் கொண்டார்கள். பயத்தால் கதி கலங்கிப் போயிருந்தனர் அந்தப் புதுமணத் தம்பதியினர்.

காடையர்களில் சிலர் இராமகிருஷ்ண மண்டபத்தையும் எரியூட்ட முனைந்தார்கள். அதுவரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவற்துறையினரில் சிலர் அப்பொழுதுதான் உள்ளே நுழைந்தார்கள். அத்துடன் அம்முயற்சியினைக் கைவிட்ட காடையர்கள் வளாகத்துக்கு வெளியில் நின்று மீண்டும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அச்சமயத்தில் அருகிலிருந்த தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையெல்லாம் உடைத்து அங்கிருந்த பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு ஆண்களும், பெண்களும் சிறுவர்களும் வீதி வழியாக ஓடிக் கொண்டிருந்தார்கள். அவ்விதம் ஓடிக் கொண்டிருந்தவர்களை உற்சாகப் படுத்தும் வகையில் அடிக்கொருதரம் இராணுவச்
சிப்பாய்கள் 'ஜெயவீவா' கோசமிட்டபடி ஜீப்புகளில் விரைந்து கொண்டிருந்தார்கள்.

அதன் பின்னர் உள் நுழைந்த காவற்துறையினர் அனைவரையும் அங்கிருந்து செல்லும்படி பணித்தார்கள். வெளியில் காடையர்களின் அட்டகாசமிருக்கையில் எங்கு போவது? அனைவரும் அருகிலிருந்த இராமகிருஷ்ண மடத்துத் தலைவரான துறவியின் வீட்டினுள் நுழைந்து கொண்டார்கள். இதே சமயம் ஆரம்பத்தில் இராமகிருஷ்ண மடத்திலிருந்து தப்பியோடுகையில் பலர் அருகிலிருந்த தென்னைகளைப் பிடித்து வெளிப்புறமாகத் தப்பியோடினார்கள். அவ்விதம் ஓடியவர்களில் ஒருவனாகத்தான் அவனது நண்பனுமிருக்க வேண்டும். இராமகிருஷ்ண மடத் துறவியின் வீட்டினுள் அடைக்கலம் புகுந்தவர்களில் அவனைக் காணவில்லை.

பிரச்சினை அத்துடன் ஓயவில்லை. மீண்டும் தமிழர்கள் துறவியில் இல்லத்திலிருப்பதை அவதானித்து வைத்த காடையர்கள் சிலர் துறவியின் இல்லத்தைச் சுற்றிச் சுற்றியெ வந்து கொண்டிருந்தார்கள். உள்ளே அகப்பட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் கொழும்பில் செல்வாக்கான தமிழர்கள். அவர்கள் தங்கள் செல்வாக்கினைப் பாவித்து மேலிடங்கள் பலவற்றுடன் தொடர்பு கொள்ள முயன்று களைத்துப் போனார்கள். எந்தச் சமயத்திலும் காடையர்கள் உள் நுழைந்து விடலாமென்ற நிலை.... எதிர்காலம் நிச்சயமற்றிருந்த நிலையில் அனைவருமிருந்தார்கள். ஒரு சில காடையர்கள் ஆயுதங்களுடன் துறவியின் வீட்டினுள் நுழைய முற்பட்டார்கள். உள்ளிருந்து வெளியில் நடப்பதை அனைவரும் அவதானித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தத் துறவி உயர்ந்த ஆகிருதி படைத்தவர். கம்பீரமான தோற்றம் மிக்கவர். மிகுந்த துணிவும் நெஞ்சுரமும் மிக்கவரென்பதை அப்பொழுதுதான் அவன் அவதானித்தான். நீண்டதொரு சாய்வு நாற்காலியினை இல்லத்துக் கதவின் முன்னால் இழுத்துப் போட்டு விட்டுக் காடையர்கள் யாரும் உள் நுழைய முடியாத வகையில் மிகவும் சாவதானமாக அந்நாற்காலியில் சாய்ந்து கொண்டார். அந்தக் காடையர்களைப் பார்த்து என்னை வெட்டிப் போட்டு விட்டு வேண்டுமானால் உள்ளே செல்லுங்கள் என்னும் தோரணையில் அவ்விதமாக அவர் நடுவில் மறித்து நின்றது உள்ளே நுழைய முற்பட்ட காடையர்களை ஏதோ விததில் கட்டிப் போட்டு விட்டது. அந்த மதகுரு மட்டும் அன்று அவ்விதம் தடுத்திரா விட்டால் என்ன நிகழ்ந்திருக்குமோ? அன்று மாலை வரை இந்நிலை நீடித்தது. இதே சமயம் இராமகிருஷ்ண மண்டபத்தினுள் அகப்பட்டிருந்தவர்கள் ஓரளவு நிலைமை சீராகத் தொடங்கியதும் அங்கிருந்த வசதிகளைப் பாவித்துத் தேநீர் போட்டுக் கொண்டு துறவியின் இல்லத்தில் தங்கியிருந்தவர்களுக்குக் கொண்டு வந்து தந்தார்கள். அப்பொழுதுதான் அவனது பிரிந்து போன் நண்பனை அவன் மீண்டும் சந்தித்தான். 'என்ன நடந்தது?' என்றவனுக்கு அவன்
'அதுவொரு பெருங் கதை. தப்பிப் பிழைத்ததே அருந்தப்புத்தான். பிறகு விபரமாகச் சொல்லுகிறேன்' என்றான். அதன் பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து அனைவருக்கும் உணவு தயாரித்துப் பகிர்ந்துண்டார்கள். இரவாகி விட்டது. அன்றிரவே லொறிகளில் ஆடுமாடுகளைப் போல் அனைவரையும் திணித்து பம்பலப்பிட்டியிலுள்ள சரஸ்வதி மண்டபத்தினுள் கொண்டுவந்து இறக்கி விட்டார்கள்.

[பதிவுகள் - ஏப்ரில் 2007; இதழ் 88]


அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து......

இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து......


வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" சரஸ்வதி முகாமிற்கு வந்தபோது அகதிகளுக்கு எந்தவித வ்சதிகளும் அங்கிருக்கவில்லை. நான் என் பல்கலைக் கழகத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய தமிழ இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து தொண்டர்கள் குழுவொன்றை ஏற்படுத்திக் கொண்டோம். அதன் பின் அனைவரும் தமிழக அரசினால் அகதிகளை யாழ்ப்பாணம் கொண்டு செல்ல அனுப்பபட்ட சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும்வரையில் அம்முகாமிலேயே தங்கியிருந்து தொண்டர்களாகப் பணிபுரிந்தோம். சிதம்பரம் கப்பலில் யாழ்ப்பாணம் செல்லும் வரையில் வீட்டாருக்கு நான் உயிருடனிருக்கும் விடயமே தெரிந்திருக்கவில்லை. அகதி முகாமிலிருந்து ஏற்கனவே இலங்கை அரசின் 'லங்காரத்னா' சரக்குக் கப்பலில் ஊர் திரும்பியிருந்த ஊரவனொருவனிடம் என் நிலைமையினை வீட்டாருக்குத் தெரியப்படுத்தும்படி கூறியிருந்ததேன். யாழ்ப்பாணம் திரும்பிய அவன் அவனது உறவினருடன் கைதடியிலேயே நின்று விட்டதால் உடனடியாக விடயத்தை வீட்டாருக்குத் தெரியப்படுத்த முடியவில்லை. நான் சிதம்பரம் கப்பலில் திரும்பிய பின்னரே அவன் ஊர் திரும்பி விடயத்தை என் வீட்டாருக்குத் தெரியப்படுத்துவதற்காக வந்திருந்தான்.

முதன் முதலாகச் சொந்த நாட்டிலேயே அகதியான அனுபவம் மனோரீதியீல் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே என் மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வந்ததொரு வாழ்வுதான். சொந்தமாக அனுபவித்தலென்பது பெரிதும் வித்தியாசமானது. உண்மையிலேயே இந்தக் கலவரத்தில் நானும், நண்பனும் தப்பியது மயிரிழையில்தானென்பது சரஸ்வதி முகாமில் பின்னர் சந்தித்த அகதிகள், சர்வதேச பத்திரிகை, வானொலிச் செய்திகள் போன்றவற்றிலிருந்து நன்கு புரிந்தது. வழக்கமாகக் கலவரங்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் பெருமளவுக்குப் பற்றியெரியும். தலைநகர் அநேகமாகத் தப்பிவிடும். ஆனால் இம்முறை.. தலைநகரான கொழும்பே பற்றியெரிந்தது.

நாங்கள் அரச வாகனத்தில், இந்தியப் பொறியியலாளரின் புண்ணியத்தில் தப்பிச் சென்று கொண்டிருந்தபொழுது கொழும்பில் மினிவானொன்றினுள் தமிழர்களை ஒட்டுமொத்தமாகப் பெற்றோலூற்றித் துடிதுடிக்கக் கொழுத்தியிருக்கின்றார்கள். துவிச்சக்கர வண்டியொன்றில் வந்து கொண்டிருந்த தமிழனொருவனையிழுத்து அடித்துக் கொன்றிருக்கின்றார்கள். இன்னுமொருவனை நிர்வாணமாக்கி, அவமானப்படுத்தி எரியூட்டியிருக்கின்றார்கள். கிருலப்பனையில் இளம் பெண்ணொருத்தியின் கண் முன்னாலேயே அவளது பிஞ்சுச் சகோதரியைக் கொன்று, சித்தப்பிரமையாக்கிப் பலர் பாலியல் வல்லுறவு செய்து கொன்றிருக்கின்றார்கள். வழக்கம்போல் மலையகத்தில் இம்முறையும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களான தமிழர்கள்மேல் பரந்த அளவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது.

இவற்றிற்கெல்லாம் காரணமாக ஜூலை 23இல் யாழ் திண்ணைவேலியில் நடந்த பதின்மூன்று இராணுவத்தினரின் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலேயென்று ஜே.ஆர். தலைமையிலான அரசு பழி கூறியது. அதனையொரு சாட்டாக வைத்துக் கலவரத்தை ஏற்கனவே திட்டமிட்ட வகையில் ஊதிப் பெரிதாக்கியது சிறில் மைத்தியூ, காமினி திசாநாயக்க போன்ற அமைச்சர்களின் அரவணைப்பிலியங்கிய காடையர் கும்பலே. இத்தகைய சூழலிலும் எத்தனையோ சிங்கள மக்கள் தம் அயலில் வசித்த தமிழர்களைக் காடையர்களிலிருந்து காப்பாற்றியிருக்கத்தான் செய்திருக்கின்றார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனே இலங்கைப் பிரதமராக 1977இல் பதவியேற்றதுமே மிகப்பெரிய இனக்கலவரமொன்று நடைபெற்றது. அதனைத் தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கூட்டணிக்கு வாக்களித்ததற்காக 'போரென்றால் போர். சமாதானமென்றால் சமாதானம்' என்று ஊதிப் பெரிதாக்கினார் இன்றைய ஜனாதிபதி. அரசியலில் பழுத்த தந்திரம் மிக்க குள்ளநரியென்று ஜே.ஆரைக் கூறுவது நன்கு பொருத்தமானதே. அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்துக்குமிடையிலேற்பட்ட ஒப்பந்தத்தைக் கண்டிக்குப் பாதயாத்திரை சென்று கிழித்தெறிய வைத்தவரிவர்.அதிகாரத்தை வைத்து அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதில் சமர்த்தர். முன்னாள் பிரதமர் சிறிமா அம்மையாரின் அரசியலுரிமையையே பறித்தவரிவர். இம்முறை இவரது அரச அமைச்சர்கள் தலைமையிலேயே திட்டமிட்ட வகையில் தமிழர்களுக்கெதிரான இனக்கலவரங்கள் அவ்வப்போது கட்டவிழ்த்து விடப்பட்டன. 1981இல் யாழ் நாச்சிமார் கோவில் முன்றலில் நடந்த தேர்தல் கூட்டத்தில் பொலிசார் சுட்டுக் கொல்லப்பட்டதைச் சாக்காக வைத்து அமைச்சர்களான காமினி திசாநாயாக்கா போன்றவர்கள் யாழ் கோட்டையிலிருக்கையிலேயே யாழ்நகரில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் தீக்கிரையானது. இம்முறையும் கலவரத்தைத் தணிப்பதற்குப் பதில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அதனை நியாயப் படுத்தியிருக்கின்றார்.  திண்ணைவேலியில் இராணுவத்தினர் கொல்லப்படுவதற்கு முன்னரே இன்னுமொரு இனக்கலவரம் பெரிய அளவில் நடைபெறுவதற்கான சூழல் நாட்டில் தோன்றி விட்டது. இக்கலவரத்தைச் சாக்காக வைத்துத் தமிழ் அரசியற் கைதிகளைக் கொல்லுவதற்கும், தமிழரின் பொருளாதாரத்தை உடைப்பதற்கும் அதே சமயம் ஜே.வி.பி. போன்ற தனது அரசியல் எதிரிகளைப் பழி வாங்குவதற்கும் ஜே.ஆர். அரசு திட்டமிட்டுச் செயற்பட்டது போல்தான் தெரிகின்றது. அத்துடன் இன்னுமொரு திட்டத்தையும் இக்கலவரத்தைச் சாக்காக வைத்து நிறைவேற்றியது. அது.. 1977இல் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து வடகிழக்கின் எல்லைப் பிரதேசங்களில் குடியேறியிருந்த மலையகத்தமிழர்களின் குடியேற்றத் திட்டங்களைச் சீர்குலைப்பது. அதனால்தான் இக்கலவரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இவ்வகையான குடியேற்றத் திட்டங்களில் வாழ்ந்து வந்த மலையகத் தமிழ்க் குடும்பங்கள் பலவற்றை சிறிலங்கா இராணுவம் பலவந்தமாக மீண்டும் மலையகத்துக் கொண்டுவந்து பற்றியெரிந்து கொண்டிருந்த கலவரத்தின் நடுவில் தத்தளிக்க விட்டது போலும். அதனால்தான் இத்தகைய குடியேற்றங்களை நடாத்திய 'காந்தியம்' போன்ற அமைப்புகளின் நிர்வாகத்தர்கள் பலரைக் கலவரம் தொடங்குவதற்கு முன்னரே அரசு கைது செய்து சிறைகளில் அடைத்ததுச் சித்திரவதை செய்தது போலும்.

இம்முறை கலவரத்தின் தன்மையும், தலைநகரிலேயே அது சுவாலை விட்டெரிந்ததும், செய்மதித் தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம் தகவல்கள் உடனுக்குடன் உலகம் முழுவதும் பரவியதும் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை முக்கியமானதொரு சர்வதேசப் பிரச்சினையாக்கி விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் சகல அரசியற் கட்சிகளும் ஒருமித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இம்முறை ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் மிகவும் ஈடுபாடு காட்டினார். அதனால்தான் ஜூலை 15இல் 'டெய்லி டெலிகிறாப்' என்ற பிரித்தானியப் பத்திரிகையில் தனக்கு யாழ்ப்பாண மக்களைப் பற்றியோ அவர்களது உயிர்களைப் பற்றியோ கவலையில்லை. அது பற்றித் தான் சிந்திப்பதற்கில்லையென்று ஜே.ஆர். நேர்காணலொன்றில் கூறியதைத் தொடர்ந்து பாரதப் பிரமர் இந்திரா காந்தி சீர்கெட்டுவரும் ஈழத்து நிலைமைகளையிட்டு இந்தியாவின் கவலையினை வெளிப்படுத்தினார்.

அதனையும் 'டெய்லி டெலிகிறாப்' ஜூலைக் கலவரம் ஆரம்பமாவதற்குச் சில நாட்களின் முன்னர் வெளியிட்டிருந்தது. நாம் அகதிகளாக சரஸ்வதி முகாமில் இருந்த காலகட்டத்தில் இந்திரா காந்தி தனது வெளியுறவுத்துறை அமைச்சரான நரசிம்மராவை உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பினார். தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர்களுக்காதரவாக ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதப் போராட்டங்களும் நடைபெற்றன. சாஜகான் என்னுமொரு இஸ்லாமியத் தமிழரொருவர் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காதரவாகத் தீக்குளித்தார். எம்.ஜி.ஆர் தலையிலான தமிழக அரசு தனது சிதம்பரம் கப்பலை அனுப்பி உதவியது. இக்கலவரத்தில் ஈழத்துக் சுற்றுலாப் பயணியாக வந்திருந்த தனபதி என்னுமொரு தமிழகத் தமிழரைக் கதிர்காமத்தில் சிங்கள சிகை அலங்கரிப்பாளரொருவர் கழுத்தை வெட்டிக் கொலை செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து எம்ஜீஆர் அரசு ஜெயவர்த்தனே அரசிடம் நஷ்ட்ட ஈடு கோரியது.

சரஸ்வதி அகதி முகாம் வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டேன். ஆரம்பத்தில் சில நாட்கள் அகதிகள் அனைவரும் உண்பதற்கெதுவுமில்லாமல் பட்டினி கிடந்தார்கள். அந்தச் சமயத்தில் அருகிலிருந்த பம்பலபிட்டிக் கதிரேசன் ஆலயத்துக் குருக்கள் தன்னால் முடிந்த அளவுக்கு உணவு தயாரித்து வந்தவர்களுக்கு வழங்கினார். அதனைப் பெறுவதற்காகத் தள்ளாத வயதிலிருந்த தமிழ் மூதாட்டிகள் கூட சரஸ்வதி அகதி முகாமிலிருந்து மதிலேறிக் கதிரேசன் குருக்கள் வீட்டிற்குச் சென்றார்கள். ஏனையவர்கள் வளவிலிருந்த தென்னை போன்றவற்றிலிருந்து தேங்காய், இளநீர் ஆகிய கிடைத்தவற்றையெல்லாம் உண்டு வயிறாறினார்கள். நாங்கள் அகதி முகாமில் இருந்த சமயத்தில் ஜூலை 27இல் மீண்டும் வெலிக்கடைச் சிறையில் மேலும் பல தமிழக் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏற்கனவே குட்டிமணி, தங்கத்துரையுட்படப் பலர் ஜூலை 25இல் வெலிக்கடைச் சிறையில் கொல்லப்பட்டிருந்தார்கள்.

கலவரம் சிறிது தணிந்திருந்த சமயம் நானும், நண்பனும் அகதி முகாமில் தங்கியிருப்பதை அறிந்த எம் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த சில சிங்கள நண்பர்கள் பார்ப்பதற்கு வந்திருந்தனர். அவர்ளை வாசலியேயே வைத்துச் சந்தித்தோம். நடைபெற்ற சம்பவங்களுக்காக வருத்தம் தெரிவித்தார்கள். தங்களுடன் வந்து தங்கியிருக்க விரும்பினால் வரலாமென அழைப்பும் விடுத்தார்கள். நாங்கள் அவர்களது வருகைக்கும், அழைப்புக்கும் நன்றி தெரிவித்தோம். முகாமில் இருப்பதே எங்களுக்கும் அவர்களுக்கும் நல்லதெனக் கூறினோம். நாம் அவர்களுடன் தங்கியிருந்தால் காடையர்களினால் அவர்களுக்கும் ஆபத்து வரலாமென்றும் கூறினோம். நாங்கள் அவ்விதம் அவர்களது அழைப்பினையேற்றுச் செல்லாதது நல்லதென்பதைப் பின்னர் உணர்ந்தோம். அடுத்தநாளே, வெள்ளிக்கிழமையென்று நினைக்கின்றேன், கொழும்பில் 'கொட்டியா வந்திட்டுது' என்ற வதந்தி பரவியது. 'கொட்டியா' என்பது புலிக்குரிய சிங்களச் சொல். நகரில் சிங்கள மக்கள அவ் வதந்தியால் அன்று தப்பியோடினார்கள். வெள்ளவத்தையிலோ தெகிவளையிலோர் வசித்த தமிழரொருவரின் அயலில் வசித்த சிங்களக் குடும்பமொன்று அவரது வீட்டிற்கு அடைக்கலம் தேடி ஓடி வந்த அதிசயமும் நடந்தது. முதலிரு நாட்களில் நடைபெற்ற கலவரத்தில் அவரை சிங்களக் காடையரிலிருந்து அந்தச் சிங்களக் குடும்பம் காப்பாற்றியிருந்தது. இந்த வதந்தியைத் தொடர்ந்து மீண்டும் கலவரம் பலமாக வெடித்தது. ஓரளவுக்குச் சீரடைந்து கொண்டிருந்த நிலைமை மீண்டும் 'கொட்டியா' வதந்தியால் சீர்கெட்டது. சீரடைந்திருந்த நிலைமையை நம்பி நண்பன் கிருலப்பனையிலிருந்த வீடொன்றிற்குக் குளிப்பதற்குச் சென்றிருந்தவன் தலை தப்பினால் புண்ணியமென்று குடல் தெறிக்க ஓடி வந்தான். வந்தவன் தான் தப்பி வந்த பாட்டையெல்லாம் கதைகதையாக விபரித்தான். ஏற்கனவே தப்பியிருந்த தமிழர்கள் பலர் , சீரடைந்து கொண்டிருந்த நிலைமையினைச் சாக்காக வைத்து மீண்டும் தத்தமது இல்லங்களின் நிலையறிவதற்காகத் திரும்பியபோது மேற்படி வதந்தி ஏற்படுத்திய கலவரச் சூழலில் சிக்கி உயிரிழந்தார்கள். 'கொட்டியா' என்ற சொல் எவ்வளவு தூரத்திற்குச் சிங்கள மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியது என்பதையும் மேற்படிச் சம்பவம் எடுத்துக் காட்டியது.

இது இன்னுமொரு உளவியல் உண்மையினையும் எடுத்துக் காட்டியது. இலங்கைத் தீவில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருந்தபோதும் அவர்களுக்கொரு சிறுபான்மை உணர்வு இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அருகிலிருக்கும் நாலரைக் கோடித் தமிழகத் தமிழர்கள். எங்கே ஈழத்துத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து தங்களைச் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையாக்கி விடுவார்களோவென்றதொரு தேவையற்ற அச்ச உணர்வு. கடந்த காலத்து ஈழத்து வரலாறும், அடிக்கடி ஈழத்தின் மேலேற்பட்ட தமிழக மன்னர்களின் படையெடுப்புகளும் அவர்களது இந்த அச்சத்தினை அதிகரிக்க வைத்தன போலும். 'புலி' உருவம் அவர்களது உள்ளத்தில் அச்சத்தினை ஏற்படுத்துவதற்குக் காரணகார்த்தாக்கள் அன்றைய சோழர்கள். சோழர்களின் புலிக்கொடி ஒரு காலத்தில் ஈழம் முழுவதும் பறந்தது. முதலாம் இராஜஇராஜ சோழன் காலத்தில் இலங்கை சோழர்களிடம் சோழ மன்னனான எல்லாலனுக்குப் பின்னர் அடிமைப்பட்டது. அதன் பின் அவனது மைந்தன் முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் ஒளிந்தோடிய சிங்கள மன்னன் மகிந்தனிடமிருந்து மணிமுடி கைப்பற்றப்பட்டு நாடு முற்றாக அடிமைப்படுத்தப் பட்டது. சோழர்கள் காலத்திலேற்பட்ட நிகழ்வுகளை மகாவம்சம் போன்ற சிங்கள நூல்கள் விபரிக்கும். தமிழ் மன்னர்களில் சோழர்கள் காலத்தில்தான் இலங்கை முழுவதும் முற்றாக, நூறாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் கைகளிலிருந்தது. சோழர்களின் இலங்கை மீதான ஆட்சிக் காலகட்டத்தைத்தான் பெளத்த மதமும், சிங்கள மொழியும் முற்றாக முடங்கிக் கிடந்ததொரு காலகட்டமாகச் சிங்களவர்கள் கருதுகின்றார்கள் போலும். சிறுவயதில் படுத்திருக்கும்போது சிறுவனான துட்டகைமுனு குடங்கிப் படுத்திருப்பானாம். அதற்கு அவன் கூறும் காரணம் வடக்கில் தமிழரசும், தெற்கில் கடலுமிருக்கையில் எவ்விதம் குடங்காமல் படுப்பது என்பானாம். அதனால்தான் சோழ மன்னனான எல்லாளனை அவன் வென்ற வரலாறு மிகப்பெரிய சிங்கள வெற்றியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் போலும் புலிக்கொடியுடன் கூடிய சோழர்களைக் கண்டு அஞ்சிய , வெறுத்த சிங்களவர்கள் மீன் கொடியுடன் கூடிய பாண்டியர்களைக் கண்டு அஞ்சவில்லை போலும். உண்மையில் பாண்டிய மன்னர்கள் சிலர் ஈழத்தின்மேல் படைபெடுத்திருந்தபோதிலும் கூட அவர்களுடன் நட்பு பாராட்டுவதற்கும், அவர்களிடத்தில் பெண்ணெடுப்பதற்கும் சிங்களவர்கள் மத்தியில் எதிர்ப்போ , அச்சமோ எற்பட்டதில்லை. இன்றைய நிலையில் இவையெல்லாம் தேவையற்ற அச்சங்கள்.

இவ்வகையான அச்சங்கள் சுவாலை விட்டு எரிவதற்கு அடிப்படைக் காரணிகள் சமூக, அரசியல், பொருளாதாரக் காரணங்களே. ஆயினும் சாதாரண மக்கள் இதனைப் புரிந்து கொள்வதில்லை. மக்களின் உணர்வுகளை வைத்துப் பிழைப்பினை நடாத்தும் அரசியல்வாதிகள் மட்டும் நன்கு புரிந்து கொண்டு, அவ்வுணர்வுகளை ஊதிப் பூதாகாரப்படுத்தி, அதிலவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவற்றால் தூண்டப்படுவதும், பாதிக்கப்படுவதும் சாதாரண மக்களே. இந்த அழகான தீவில் மீண்டும் அமைதியெப்போது வரும்? மக்கள் ஒருவருகொருவர் மீண்டும், சகஜமாக, அன்பாகப் பழகும் நாளென்று வரும்? சேர்ந்தோ, பிரிந்தோ ஒருவருக்கொருவர் நட்புடன், சகல உரிமைகளுடனும், ஒற்றுமையுடனும் வாழுமொரு சூழல் மீண்டுமெப்போது வரும்? வருமா?

***** **** **** **** ***** **** **** **** ***** ****

"என்ன கொட்டக் கொட்ட முழித்திருக்கிறாய்? நித்திரை வரவில்லையா?" அருகிலிருந்த இருதட்டுப் படுக்கையின் மேற்தட்டில் படுத்திருந்த நண்பன் அருள்ராசாதான் இவ்விதம் கேட்டவன்.

"இன்று விடிய வெளியிலைப் போக இருக்கிறமல்லவா? அதுதான் மனசு கிடந்து அலைபாயிது போலை. இரவு முழுக்க நித்திரையே ஒழுங்காக வரவேயில்லை. நீ குடுத்து வைத்தவன். உன்னாலையெப்படி நித்திரை கொள்ள முடிந்தது.?"

"எல்லாத்துக்கும் காரணம் மனசுதான். இது உனக்குப் பெரியதொரு விசயமாகப் படுகுது. அதுதான் மனசும் கிடந்து இப்படி அலை பாயுது. அது சரி வெளியிலை போனதும் என்ன பிளான்? உனக்கு யாரைவாது சந்திக்க வேண்டிய தேவையிருக்கா?"

"நேற்றே இது பற்றிக் கதைத்திருக்கிறம். முதலிலை அந்த இந்திய வீட்டு அறையெப்படியென்று போய்ப் பார்ப்பம். பிடிச்சிருந்தால் அங்கேயே இருந்து கொண்டு ஒரு வேலையொன்று தேடுவம். அதுதான் முதல் வேலை. அதுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்.?

"அது சரி. எங்களுக்கோ வேலை செய்வதற்குரிய சட்டரீதியான ஆவணங்கள் ஒன்றுமில்லை. முதலிலை வெளியிலை போனதும், 'சமூகக் காப்புறுதி நம்பர்' எடுக்க முடியுமாவென்று பார்க்க வேண்டும். அதிருந்தால்தான் வேலை பார்க்கலாம். இல்லாவிட்டால் நல்ல வேலையெதுவும் எடுக்க முடியாது. உணவகங்களில் கள்ளமாக வேலை செய்ய வேண்டியதுதான். எனக்கென்றால் எந்த வேலையும் சமாளிக்கலாம். உன்னாலை முடியுமாவென்றுதான் யோசிக்கிறன்."

"என்ன பகிடியா விடுறாய். எந்த வேலையென்றாலும் என்னாலை செய்ய முடியும். இதுக்கெல்லாம் வெட்கம் பார்க்கிற ஆளில்லை நான். செய்யும் தொழிலே தெய்வம். இதுதான் அடியேனின்ற தாரக மந்திரம். இவ்விதமாக நண்பர்களிருவரும் பல்வேறு விடயங்களைக் குறிப்பாக வெளியில் சென்றதும் , புதிய சூழலை எவ்விதம் வெற்றிகரமாக எதிர்கொள்வது, இருப்பினை எவ்விதம் உறுதியாகத் தப்ப வைத்துக் கொள்வது, வாழ்வின் எதிர்காலத் திட்டங்களை எவ்விதம் வெற்றிகரமாகச் செயற்படுத்துவது?, அவ்வப்போது சோர்ந்து, தளர்ந்து போய் விடும் மனதினையெவ்விதம் மீண்டும் மீண்டும் துள்ளியெழ வைப்பது,.. இவ்விதம் பல்வேறு விடயங்களை நண்பர்களிருவரும் பரிமாறி, ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில் நகரத்துப் பொழுதும் தனக்கேயுரிய ஆரவாரங்களுடன் விடிந்தது. ஊரிலென்றால் இந்நேரம் சேவல்களின் சங்கீதக் கச்சேரியால் ஊரே கலங்கி விட்டிருக்கும். புள்ளினத்தின் காலைப் பண்ணிசையில் நெஞ்சமெல்லாம் களி பொங்கி வழிந்திருக்கும். இருந்தாலும் விடிவு எப்பொழுதுமே மகிழ்ச்சியினைத் தந்து விடுவதாகத்தானிருந்து விடுகிறது.

[பதிவுகள் - ஏப்ரில் 2007; இதழ் 88]


அத்தியாயம் ஆறு: மழையில் மயங்கும் மனது!......

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா II" அன்று காலை தடுப்பு முகாம் வாசிகள் தமது காலை உணவை முடிக்கும் வேளையில் வானமிருண்டு சிறிது நேரத்திலேயே மழை பொழிய ஆரம்பித்து விட்டது. காலை பத்து மணிக்கெல்லாம் குடிவரவு அதிகாரிகள் உரிய பத்திரங்களுடன் வந்து அவற்றை நிரப்பியதும் இளங்கோவையும், அருள்ராசாவையும் வெளியில் செல்ல அனுமதித்து விட்டார்கள். தடுப்பு முகாமிலிருந்த அனைவருடனும் பிரியாவிடை பெற்றுக் கொண்டு வெளியில் வந்த போது ஏனோ அவர்களிருவரினதும் நெஞ்சங்களும் கனத்துக் கிடந்தன. தடுப்பு முகாமினுள் தொடர்ந்தும் கனவுகளுடனும், கற்பனைகளுடனும், சலிப்புடனும், இயலாமையுடனும் வாழப்போகும் அவர்களை நினைக்கையில் ஒருவித சோகம் கவிந்தது. அவர்களும் வெளியில் சென்றதும் தங்களை மறந்து விடாமல் அடிக்கடி வந்து பார்த்துச் செல்லுமாறு வேண்டிக் கொண்டார்கள். அதற்கு இவர்கள் கட்டாயம் வந்து பார்ப்பதாகவும், அவர்களுக்குத் தேவையானவற்றை அவ்வபோது அறியத் தந்தால் வாங்கிக் கொண்டு வந்து தருவதாகவும், வெளியில் அவர்களுக்கு ஆக வேண்டியவற்றை தம்மால் முடிந்த அளவுக்குச் செய்து தருவதாகவும் கூறி ஆறுதலளித்தார்கள். இவ்விதமாக அவர்களிருவரும் வெளியில் வந்தபோது சரியாக மணி பன்னிரண்டு. கைகளில் குடிவரவு அதிகாரிகள் தந்த பிணையில் அவர்களை விடுவிக்கும் அறிவிப்புடன் கூடிய பத்திரங்கள் மட்டுமே அவர்களது சட்டரீதியான அறிமுக ஆவணங்களாகவிருந்தன. அத்துடன் தடுப்பு முகாமில் அனுமதிக்கும்போது சிறை அதிகாரிகளிடம் கொடுத்து வைந்த்திருந்த இருநூறு டாலர்களுமிருந்தன. இவற்றுடன் புதிய மண்ணில், புதிய சுழலைத் துணிவுடனும், நம்பிக்கையுடனும், ஆர்வத்துடனும் எதிர்த்து நின்று எதிர்நீச்சலிடுவதற்குரிய மனப்பக்குவமும் நிறையவேயிருந்தன. பொழிந்து கொண்டிருந்த வானம் நிற்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. ஊரில் மழைக்காலங்களில் இலைகள் கூம்பிக் கிடக்கும் உயர்ந்த தென்னைகளாக இங்கு பார்க்குந் திசையெல்லாம் உயர்ந்து கிடந்தன காங்ரீட் விருட்சங்கள்.. மழைகளில் நனைந்தபடி அமைதியாகச் சென்றுகொண்டிருந்தனர் நகரத்துவாசிகள். நூற்றுக் கணக்கில் நகரத்து நதிகளாக விரைந்து கொண்டிருந்தன வாகன அணிகள். அவ்வப்போது ஒருசில நகரத்துப் புறாக்கள் தமது மழைநீரில் நனைந்து கூம்பி கிடந்த சிறகுகளை அடிக்கடி சிலிர்த்து விட்டுத் தமது உணவு வேட்டையினைச் சோடிகளாகத் தொடர்ந்து கொண்டிருந்தன. 'புதிய வானம்! புதிய பூமி'! எஙகும் பொழிந்து கொண்டிருக்கும் மழை! அதுவரை நான்கு சுவர்களுக்குள் வளைய வந்துவிட்டுப் பரந்த உலகினுள் சுதந்திரக் காற்றினைத் தரிசித்தபடி அடியெடுத்து வைத்தபொழுது மனதுக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. 'லாங் ஐலண்ட்'இல் வசிக்கும் அந்த இந்தியத் தம்பதிகளைத் தொலைபேசியில் அழைத்து தங்களது வருகையினை உறுதி செய்து விட்டு நண்பர்களிருவரும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். பாதாள ரயில் நிலையத்தை அடைவதற்கு முன்னர் அருகிலிருந்த உணவகமொன்று சென்று தேநீரோ காப்பியோ அருந்தினால் நல்லது போல் படவே நுழைந்து கொண்டனர். சிறியதொரு உணவகம். கூட்டமில்லை. ஒரு சிலரே மழைக்கு ஒதுங்கியிருந்தனர் போல் பட்டது. வீதியை அண்மித்திருந்த யன்னலோரம் அமர்ந்து தேநீர் அருந்தியபடி வீதியில் விரைந்து கொண்டிருந்த மானுடர்கள் மேல் தம் கவனத்தைத் திருப்பினர். எத்தனை விதமான நிறங்களில் மனிதர்கள்! பெரும்பாலும் வந்தேறு குடிகள். எதற்காக இந்த விரைவு! எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, இங்கு வந்து எதற்காக இவ்விதம் ஆலாய்ப்பறக்கின்றார்கள்?

இளங்கோவின் சிந்தையில் தடுப்பு முகாம் வாசிகள் பற்றிய சிந்தனைகள் மெல்லப் படர்ந்தன. இதற்காகத் தானே அங்கே , அந்தச் சுவர்களுக்குள் அவர்கள் கனவுகளுடன் காத்துக் கிடக்கின்றார்கள். ஊரிழந்து, உற்றார் உறவிழந்து, மண்ணிழந்து, நாடு தாண்டி, கடல் தாண்டி வந்து இவ்விதம் அகப்பட்டு அந்தச் சுவர்களுக்குள் வளைய வரவேண்டுமென்று அவர்களுக்குக் காலமிருக்கிறது.

மழை இன்னும் விட்டபாடில்லை. பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தது. உணவகத்தின் யன்னற் கண்ணாடியினூடு பார்க்கையில் ஊமைப் படமொன்றாக நகரத்துப் புறக்காட்சி விரிந்து கிடந்தது. மழை பொழிவதும், மனிதர்கள் நனைந்தபடியதில் விரைவதும், பின்னணியில் விரிந்து கிடந்த நகரத்துக் கட்டட வனப் பரப்பும்.. எல்லாமே ஒருவித அமைதியில் விரைந்து கொண்டிருக்கும் சலனப் படக்காட்சியாக காலநதியில் மிதந்தோடிக் கொண்டிருந்தன. சாலையோரம் இரு ஆபிரிக்க இளைஞர்கள் மழைக்குள் விரையும் மனிதர்களுக்குக் குடைகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். மீண்டும் அவனது கவனம் மழைக்காட்சியில் படிந்தது. மழைக்காலமும், காட்சியும் அவனுக்குப் பிடித்தமான இயற்கை நிகழ்வுகள். அவனது பால்ய காலத்தில் வன்னி மண்ணில், வவுனியாவில், கழிந்த அவனது காலத்தில் ஆரம்பமான அந்த இரசிப்பு அவனது வாழ்வு முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்பொழுது வன்னியினொரு பகுதியான வவுனியாவின் பெரும்பகுதி விருட்சங்களால் நிறைந்திருந்தது. கருங்காலி, முதிரை, பாலை, வீரை, தேக்கு எனப் பல்வேறு விருட்சங்கள். மூலைக்கு மூலை குளங்களும், ஆங்காங்கே வயல்களும் நிறைந்து இயற்கையின் தாலாட்டில் தூங்கிக் கிடந்த அம்மண்ணின் வனப்பே வனப்பு. அத்தகைய மண்ணில் குருவிகளுக்கும், பல்வேறு காட்டு உயிரினங்களுக்குமா பஞ்சம்? பாம்புகளின் வகைகளை எண்ண முடியா? கண்ணாடி விரியன் வெங்கணாந்தி,மலைப்பாம்பு தொடக்கம், நல்லப்பாம்பு வரையில் பல்வேறு அளவில் அரவங்கள் அக்கானகங்களில் வலம் வந்தன. மர அணில்கள் கொப்புகளில் ஒளிந்து திரிந்தன. செங்குரங்குகள் தொடக்கம் கரு மூஞ்சிக் குரங்குகளென அவ்வனங்களில் வானரங்கள் ஆட்சி செய்தன. பச்சைக் கிளிகள், கொண்டை விரிச்சான் குருவிகள், மாம்பழத்திகள், குக்குறுபான்கள், அடைக்கலான் குருவிகள், தேன் சிட்டுகள், காட்டுப் புறாக்கள், நீர்க்காகங்கள், ஆலாக்கள், ஆட்காட்டிகள், ஊர் உலாத்திகள், மைனாக்கள், காடைகள், கெளதாரிகள், ஆந்தைகள், நத்துகள், காட்டுக் கோழிகள், தோகை விரித்தாடும் மயில்கள்.. நூற்றுக் கணக்கில் புள்ளினங்கள் நிறைந்திருந்தன. இரவென்றால் வன்னி மண்ணின் அழகே தனிதான். நட்சத்திரப் படுதாவாக விரிந்து கிடக்கும் இரவு வானும், ஆங்காங்கே படர்திருக்கும் கானகங்களும், அவற்றில் ஓங்கி ஒன்றுபட்டு நிற்கும் விருட்சங்களும், படையெடுக்கும் மின்மினிப் பூச்சிகளும் நெஞ்சினைக் கொள்ளை கொள்ளுவன. மழைக்காலமென்றாலே வன்னி மண்ணின் அழகே தனிதான். பூரித்துக் கிடப்பாள் நிலமடந்தை. இலைகள் தாங்கி அவ்வப்போது சொட்டும் மழைத்துளிகளின் எழிலில் நெஞ்சிழகும். குளங்கள் பொங்கிக் கரைமீறிப் பாயுமொலி காற்றில் வந்து பரவுகையில் உள்ளத்தே களி பெருகும். குளங்கள் முட்டி வழிகையில் ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் சிறிய மதகுகளைத் திறந்து விடுவார்கள். அச்சமயங்களில் மதகுகளின் மேலாக வழியும் நீரினூடு விரையும் விரால்களைப் பிடிப்பதற்காக மனிதர்களுடன், வெங்கணாந்திப் பாம்புகளும் இரவிரவாகக் காத்துக் கிடக்கும் வன்னி மண்ணின் மாண்பே மாண்பு. முல்லையும் மருதமும் பின்னிப் பிணைந்து கிடந்த வன்னி மண்ணின் மழையழகு ஒருவிதமென்றால், நெய்தலும், மருதமும் பின்னிக் கலந்திருந்த யாழ் மண்ணின் கரையோரக் கிராமங்களின் மழையழகு இன்னுமொரு விதம். 'சட்டசடவென்று' ஓட்டுக் கூரைகள் தடதடக்க இடியும், மின்னலுமாய்ப் பெய்யும் பேய் மழையினை, இரவுகளின் தனிமைகளில் படுத்திருந்தபடி ,வயற்புறத் தவளைகளின் ஆலாபனையினைச் செவிமடுத்தபடி, பாரதியின் மழைக்கவிதையினைப் படித்தபடியிருப்பதிலுமொரு சுகமிருக்கத்தான் செய்கிறது.

திக்குக ளெட்டுஞ் சிதறி தக்கத்
தீம்கரிட.. தீம்கரிட.. தீம்கரிட.. தீம்கரிட..
பக்க மலைக ளுடைந்து வெள்ளம்
பாயுது பாயுது பாயுது - தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம் - அண்டம்
சாயுது சாயுது சாயுது பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று - தக்கத்
தாம்தரிகிட. தாம்தரிகிட.. தாம்தரிகிட.. தாம்தரிகிட..

வெட்டியடிக்குது மின்னல் - கடல்
வீரத்திரை கொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்; - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையு மிடிய - மழை
எங்ங னம்வந்தத டா, தம்பி வீரா!

அண்டங் குலுங்குது , தம்பி! - தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;- திசை
வெற்புக் குதிக்குது; வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடுகின்றார்; - என்ன
தெய்விகக் காட்சியைக் கண்முன்பு கண்டோம்!
கண்டோம்! கண்டோம்! கண்டோம்! - இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்!

சொற்களுக்குள்ள வலிமையினை, சிறப்பினைப் பாரதியின் கவிதைகளில் காணலாம். 'இன்று புதிதாய்ப்ப் பிறந்தோம்' என்றதும் நம்பிக்கையும், உற்சாகமும் கொப்பளிக்கத் துடித்தெழுந்து விடும் மனது திக்குகளெட்டுஞ் சிதறி, பக்க மலைகளுடைத்து, வெட்டியடிக்கும் மின்னலுடன், கொட்டியிடிக்கும் மேகத்துடன், கூவிட்டு விண்ணைக் குடையும் காற்றுடன் பாயும் மழையில் மூழ்கி விடுகிறது. மழைக்காட்சியினை மிகவும் அற்புதமாக வரித்துவிடுமொரு இன்னுமொரு கவிதை ஈழத்துக் கவிஞன் கவீந்திரனின் (அ.ந.கந்தசாமி)

கவிதை. பாரதியின் கவிதை மழைக்காட்சியினைத் தத்ரூபமாக விளக்கி நின்றால் கவீந்திரனின் 'சிந்தனையும், மின்னொளியு'மோ

அக்காட்சியினூடு இருப்பிற்கோர் அர்த்தத்தையும் விளக்கி நிற்கும்.

'சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?'

ஊரெல்லாம் உறங்கும் அர்த்த ராத்திரியில் பொத்துக் கொண்டு பெய்யும் மாரி வானம்! ஊளையிடும் நரியாகப் பெருங்காற்று! பேய்க்காற்று! கொட்டுமிடித்தாள இசையில் வான் வனிதையென மின்னல்! அவளின் கணநேரத்து நடனம் கவிஞனிடமோர் சிந்தனைப் பொறியினைத் தட்டியெழுப்பி விடுகிறது. மண்ணின் மக்களுக்கு அம் மின்னல் ஒரு சேதி சொல்வாள். அதுவென்ன? அவளின் வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ? வாழுமச்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதந்து சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு ஓடி மறைகிறாள் அவ்வான் வனிதை. வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்துவிட்டு ஆவிபிரிந்து விடும் அவளின் இருப்பில்தான் எத்துணை சிறப்பு! மழையை எத்தனை முறை இரசித்தாலும் அவனுக்கு அலுப்பதில்லை. அத்தகைய சமயங்களிலெல்லாம் அவனது சிந்தையில் மேற்படி கவிதைகள் வந்து நர்த்தனமாடுகின்றன. மழையினை இரசித்தலுக்கு அவையும் கூட நின்று துணை புரிகின்றன. மழைக்காட்சியும், அதன் விளைவாகப் படம் விரித்த பால்யகாலத்து நினைவுகளும், பிடித்த கவிகள், கவிதைகளும் ஓரளவுக்குச் சோர்ந்திருந்த மனதுக்கு மீண்டும் உற்சாகத்தினைத் தந்தன. ஒரு கண வாழ்விலும் ஒளி தருமொரு மின்னல்! மின்னலாயிருப்போம், எதிர்ப்படும் இன்னலெலாந் தகர்த்தெறிவோமென்று மனது குதியாட்டம் போடுகிறது.

[பதிவுகள் - மே 2007; இதழ் 89]


அத்தியாயம் ஏழு: திருமதி பத்மா அஜித்.

நண்பர்களிருவரும் 'லாங் ஐலண்ட்' நகரை அடைந்தபொழுது மாலை நான்கு மணியாகிவிட்டது. மாநகர் மாலை நேரப் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது. இந்தியத் தம்பதியினரின் வீடு நகரத்துப் பாதாள இரயில் 36வது தெருச் சந்திப்பிற்கண்மையிலிருந்தது.' மான்ஹட்டன்'னில் 'லெக்ஸிங்க்டன் 59வதுத் தெருச் சந்திப்பில் பச்சை நிற அடையாளத்துடனான பாதாள இரயில் G எடுக்க வேண்டும். முதன்முறையாக இளங்கோ பாதாள இரயிலில் பிரயாணம் செய்கின்றான். நிலத்திற்கடியில் பல்வேறு அடுக்குகளில் விரையும் பாதாள இரயில்களும், மாநகரின் காங்ரீட் வனமும் பிரமிப்பினைத் தந்தன. பாதாள இரயிற் சந்திப்பிலிருந்து மிக அண்மையில்தான் அந்த இந்தியத் தம்பதியினரின் வீடும் இருந்தது. அருகிலேயே உணவுப் பொருட்கள் விற்கும் பெரியதொரு பல்பொருள் அங்காடியொன்றும் வீட்டுக்கு அண்மையிலிருந்தது. அழைப்பு மணியினை அழுத்தியதுமே அவர்களை எதிர்பார்த்திருந்த வீட்டுக்காரி பத்மா அஜீத் கதவினைத் திறந்து "நீங்கள்தானே இளங்கோ. சற்று முன்னர் அழைத்தது இருப்பிடத்திற்காக" என்று வரவேற்றாள்.

அதற்கு இளங்கோ "நானேதான். இவன் என் நண்பன் அருள். இருவரும்தான் சிலகாலம் இங்கு தங்கவுள்ளோம்" என்று நண்பன் அருள்ராசாவை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். அவள் அருள்ராசாவின் பக்கம் திரும்பி "ஹாய்" என்றாள். அத்துடன். அவர்களிருவரையும் பத்மா அஜீற் உள்ளே வரும்படி அழைத்தாள். அத்துடன் "ஏன் வெளியிலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள். உள்ளே வாருங்கள். அறைகளைக் காட்டுகின்றேன். பிடித்திருக்கிறதாவென்று பாருங்கள்." என்றும் கூறினாள்.

முதற்தளத்துடன் மேலதிகமாக இரு தளங்களை உள்ளடக்கிய அழகான சிறியதொரு இல்லம். முதற் தளத்தில் பத்மா அஜித்தும், அவளது கணவர் அஜித்தும் வசித்து வந்தனர். இதற்குள் பத்மா அஜித்தின் கணவர் அஜிற்றும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். இவர்களைப் பார்த்து "ஹாய்" என்றார். அத்துடன் "நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களா?" என்றும் கேட்டார்.

அத்ற்கு இளங்கோ " நாங்கள் தமிழர்கள். இலங்கைத் தமிழர்கள் " என்றான். இனக்கலவரத்தைத் தொடர்ந்து உலகெங்கும் செய்தி ஊடகங்களில் இலங்ககைத் தமிழர்களின் பிரச்சினை அடிபட்டுக் கொண்டிருநத சமயம்.

"ஓ ஸ்ரீலங்காவா.. அங்கு நடப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம். உங்களது குடும்பத்தவர்களெல்லோரும் இன்னும் அங்குதான் வசிக்கிறார்களா?" என்று அஜித் கூறவும் அவருடன் சேர்ந்து பத்மா அஜித் "மிகவும் துயரகரமான நிகழ்வு. நானும் அறிந்திருக்கிறேன். அங்கு பிரச்சினைகள் விரைவிலேயே முடிந்து அமைதி பிறக்கட்டும்" என்று ஆறுதல் கூறினாள். இவ்விதமாக அளவளாவியபடி அவர்களை திருமதி பத்மா அஜித் முதலாவது தளத்திற்குக் கூட்டிச் சென்றாள். திரு. அஜித் கீழேயே நின்று விட்டார். முதலாவது தளத்தில் மூன்று அறைகளிருந்தன. பொதுவாகக் குளியலறையும், சமையலறையும் இருந்தன. அறைகள், ஒவ்வொன்றும் நன்கு விசாலமான, அறைகள். முதலாவது அறையில் மெல்லிய, வெளிர்நிறத்தில் , நன்கு அழகாகக் கத்தரித்து விடப்பட்ட நிலையிலான மீசையுடன், மெல்லியதொரு சிரிப்புடன் கூடிய வதனத்துடன் காணப்பட்ட வாலிபனொருவன் தரையில் விரித்திருந்த படுக்கையில் படுத்திருந்தவன் இவர்களைக் கண்டதும் எழுந்தான்.அவ்வாலிபனை நோக்கிய திருமதி அஜித் இவர்களிடம் "இவர்தான் கோஷ். மேற்கு வங்காலத்தைச் சேர்ந்தவர். இங்கு உங்களைப் போல்தான் அண்மையில் வந்திருக்கிறார். இவரிடம் நீங்கள் நல்ல தகவல்கள், ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்" என்று கூறிவிட்டு கோஷ் என்று அழைக்கப்பட்ட அந்த மேற்கு வங்க வாலிபனிடம் "கோஷ். இவர்கள் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள். இப்பொழுதுதான் அமெரிக்கா வந்திருக்கிறார்கள். தஙகுவதற்காக இடம் தேடி வந்திருக்கிறார்கள்" என்றாள். அவனும் பதிலுக்கு "ஹாய். உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் இங்கு தங்கும் சமயத்தில் என்னால் முடிந்த உதவிகளைச் செய்யக் காத்திருக்கிறேன்" என்றான். அவனது இளமையான, களையான சிரித்த முகமும், பேச்சும் நண்பர்களிருவரையும் கவர்ந்தன. அவனுக்குப் பதிலுக்கு நன்றி கூறினார்கள். திருமதி பத்மா அஜித் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு நண்பர்களிருவரையும் அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றாள். அத்துடன் பின்வருமாறு கூறினாள்:

"கோஷ் நல்ல பையன. எல்லோருக்கும் நன்கு உதவக் கூடியவன். உங்களுக்கு ஆரம்பத்தில் வேலைகள் தேடும் விடயத்தில் மிகவும் பயனுள்ளவனாக அவன் விளங்கக் கூடும். தற்பொழுது அந்த அறையில் அவன் மட்டும்தான் இருக்கிறான். அதிகபட்சமாக மூவரைத் தங்க அனுமதிப்போம். கட்டிலில்லை. தரைதான். விருப்பமானால் நீங்கள் கட்டில் வேண்டிப் போடலாம. ஆட்சேபணையில்லை. கடிதங்கள் எழுதவதற்கு நீங்கள் சமையலறையிலுள்ள மேசையினையும், கதிரையினையும் பாவித்துக் கொள்ளலாம். நீங்கள் தங்க விரும்பினால் இங்கு கோஷுடன் உங்கள் இருப்பிடத்தினைப் பகிர்ந்து கொள்ளலாம."

அடுத்த அறையில் உயர்ந்த ஆகிருதியுடன், மீசையும் தாடியுமாக ஒருவன் படுத்திருந்தான். பார்வைக்கு பஞ்சாப் இனத்தைச் சேர்ந்தவன் போலிருந்தான். அவன் இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான். திருமதி பத்மா அஜித் மெல்லிய குரலில் "மான்சிங் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனது துக்கத்தை நாம் கெடுக்க வேண்டாம். தறபொழுது இந்த அறையில் அவன் மட்டும்தான் இருக்கிறான். மான்சிங் இங்கு பிரபலமான நிறுவனமொன்றுக்கு 'ட்றக்' சாரதியாக இருக்கிறான். கலிபோர்னியாவில் வசிப்பவன். இங்கு வரும் சமயங்களில் இங்குதான் அவன் தங்குவது வழக்கம். எங்களது நீண்டகாலத்து வாடிக்கையாளன் " என்று கூற்சி சிரித்தவள் மேலும் கூறினாள்:" நல்லவன். ஆனால் சிறிது முரடன். அவதானமாக அவனுடன் பேச வேண்டும்.".

அடுத்த அறை மூடிக் கிடந்தது. அவ்வறையினைச் சுட்டிக் காட்டிய திருமதி பத்மா அஜித் "அந்த அறையில் ஒருவர் நிரந்தரமாக மாத வாடகை கொடுத்துத் தங்கியிருக்கின்றார். அவர் ஒரு பிராமணர். யாருக்கும் தொந்தரவு செய்ய மாட்டார். தானும் தன்பாடுமாகவிருப்பவர். இங்குள்ள ஆஸ்பத்திரியொன்றில் ஆண் தாதியாக வேலை பார்க்கின்றார். மருத்துவராக வரவேண்டுமென்பது அவ்ரது இலட்சியம். அதற்காக அவர் பல வருடங்களாக முயன்று கொண்டிருக்கின்றார். அதற்காக எந்த நேரமும் படித்துக் கொண்டிருப்பார்" என்றார்.

அதன்பின் அவர்களைத் திருமதி பத்மா அஜித் குளியளறைக்குக் கூட்டிச் சென்று காட்டினார். நண்பர்களிருவருக்கும் அவ்விடமும், மனிதர்களும் பிடித்துப் போய் விட்டது. திருமதி பத்மா அஜித் கேட்டாள்: "அடுத்த தளத்திலும் இதுபோல் மூன்று அறைகளுள்ளன. தனியாகச் சமையலறையும், குளிப்பிட வசதிகளுமுள்ளன. பார்க்க வேண்டுமா? தற்பொழுது அங்கு யாருமே வாடகைக்கில்லை. வெறுமையாகத்தானிருக்கிறது" என்றாள்.

நண்பர்களிருவரும் தமக்குள் தமிழில் கூடிக் கதைத்தார்கள். இளங்கோ அருள்ராசாவிடம் இவ்விடம் கூறினான்: "எனக்கு இந்த இடம் பிடித்து விட்டது. வீட்டுக்காரியும், இங்கிருப்பவர்களும் நல்லவர்களாகப் படுகிறார்கள். என்ன சொல்லுகிறாய்". அதற்கு அருள்ராசா " எனக்கும் பிடித்து விட்டது. பேசாமல் இங்கேயே தங்கி விடுவோம். இங்கிருந்துகொண்டே வேலைகளைத் தேடலாம்" என்று பதிலிறுத்தான். அவர்களிருவரும் பேசி முடிக்கும்வரையில் காத்திருந்த திருமதி பத்மா அஜித் கேட்டாள்: "என்ன சொல்லுகிறீர்கள். இடம் பிடித்திருக்கிறதா?"

இளங்கோ கூறினான்: "எங்களுக்குப் பிடித்திருக்கிறது. நாங்கள் இங்கேயே தங்கேயே முடிவு செய்திருக்கிறோம். எவ்வளவு வாடகை கேட்கிறீர்கள்?"

அதற்கு திருமதி பத்மா அஜித் கூறினாள்: "வாடகை கிழமைக்கு முப்பத்தைந்து டாலர்கள். உங்களுக்கு நான் முப்பது டாலர்களுக்குத் தருகிறேன். உங்கள் நாட்டு நிலைமை கவலைக்குரியது. உங்களையும் எனக்குப் பிடித்துவிட்டது. தொந்தரவு தராத குடியிருப்பாளர்களென்று பார்த்தாலே தெரிகிறது".

அதற்கு இளங்கோ" திருமதி பத்மா ஆஜித் அவர்களே. உங்களது பெருந்தன்மைக்கும் தயாள குணத்துக்கும் நன்றி பல" என்றான். அவளிடம் முதல் வாரத்திற்குரிய வாடகைப் பணமாக அறுபது டாலர்களைக் கொடுத்துவிட்டுத் தமது பிரயாணப் பைகளை அறைகளில் வைத்துவிட்டு வீட்டுத் திறப்புகளையும் வாங்கிக் கொண்டார்கள். அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்று அவ்வாரத்துக்குத் தேவையான அவசியமான உணவுப் பொருட்களை வாங்கி வந்தால் நல்லதென்று பட்டது. அதற்கு முன் சிறிது நேரம் கோஷுடன் அளவளாவுவது நல்லதாகப் பட்டது. கோஷுக்கும் அவர்களைப் பிடித்துப் போய் விட்டது. அவனுடன் பல்வேறு விடயங்களைப் பற்றியும் சம்பாஷித்தார்கள். விடயம் இலக்கியத்தில் வந்து நின்றது. இளங்கோ கூறினான்: "வங்க இலக்கியத்தின் அற்புதமான பல நூல்களை நான் வாசித்திருக்கிறேன். தமிழில் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, த.நா.குமாரஸ்வாமி போன்ற பலர் வங்க நூல்களை அற்புதமாக மொழிபெயர்த்திருக்கின்றார்கள். தாகூர், சரத்சந்திரர் என்று பலரின் நாவல்களைப் படித்திருக்கின்றேன். எனக்கு மிகவும் பிடித்த நாவல் அதீன் பந்த்யோபாத்யாயவின் 'நீலகண்டப் பறவையத் தேடி..' . எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் அற்புதமான மொழிபெயர்ப்பில் இந்திய தேசிய நூலகப் பிரிவினரால் வெளியிடப்பட்டிருந்தது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்து நிகழ்வுகளை, இந்து, முஸ்லீம் பிளவுகளை, பெண்கள், விதவைகளின் நிலைமைகளையெல்லாம் விபரிக்கும் நாவல். அற்புதமான இயற்கை வர்ணனைகளையுள்ளடக்கிய நாவலது."

டாகுர் வீட்டுத் தனபாபுவுக்குப் பிள்ளை பிறந்த சேதியினை அறிவிப்பதற்காகச் செல்லும் ஈசம் ஷேக்கை விபரிப்பதுடன் ஆரம்பமாகும் நாவல் ஷோனாலி பாலி ஆறு பற்றியும், வானத்தை நோக்கி அண்ணாந்திருக்கும் தர்முஜ் கொடிகள் பற்றியும், அங்கு வாழும் மனிதர்கள், பூச்சிகள், காற்றில் வரும் தானியத்தின் மணம், பள்ளம் நோக்கி வீழும் நீரொலி பற்றியெல்லாம் ஆறுதலாக விபரித்துக் கொண்டே மெல்ல மெல்ல விரியும். அதில்வரும் இயற்கை வர்ணனைகளை மட்டும் படித்துக் கொண்டே சுகத்திலாழ்ந்து விடலாம்.

இளங்கோவின் வங்க இலக்கிய அறிவு கண்டு கோஷ் மிகவும் மகிழ்ந்து போனான். அவனும் இயற்கையிலேயே இலக்கியத்தில் மிகவும் நாட்டமுள்ளவன். "நீங்கள் முதலில் கடைக்குச் சென்று வாருங்கள். ஆறுதலாகக் கதைப்போம்" என்று உண்மையான திருப்திகரமானதொரு மகிழ்ச்சி கலந்த உணர்வுடன் அவர்களை வழியனுப்பி வைத்தான்

[தொடரும்]

[பதிவுகள் - மே 2007; இதழ் 89]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2

விளம்பரம் செய்ய

வ.ந.கிரிதரனின் பாடல்கள்
பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here