அத்தியாயம் 20 : நீதிமன்றம்
கணவரின் முகம் கவலையால் மேலும் வாடிப்போகிறது. வாய்ப்பேசமுடியாத ஊமையாய்த் திகிலுடன் அமர்ந்திருக்கிறார். மிகுந்த பணச்செலவில் அமர்த்தப் பட்ட நாட்டிலுன் பிரபல வழக்கறிஞர்களின் வாதத்திறமையால் மகன் தப்பினால்தான் ஆச்சு. அமர்த்திய வழக்கறிஞரின் வாதத் திறமைகளைத் தினகரன் மிகவும் உண்ணிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார். பத்து நாட்கள் கோட்டுக்கும் வீட்டுக்குமாய் நடந்து நடந்து உடலும் உள்ளமும் தினகரனுக்கு அலுத்து போயிருந்தது. அம்பிகை ஒரு மன நோயாளியாகவே மாறிவிட்டிருந்தார். நீதிமன்றம் வழக்கத்திற்கும் மாறாகப் பார்வையாளர்கள் நிறைந்து காணப்படுகின்றனர். கடந்த பத்து நாட்களாக நடந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் நாள் இன்று! அதிகாலையிலேயே அம்பிகை கொயிலுக்குச் சென்று மகன் விடுதலையாக இறைவனிடம் வேண்டிக் கொண்டு முழு நம்பிக்கையுடன் தீர்ப்பைக் கேட்க கணவருடன் வந்திருந்தார். பார்த்திபன் நீதிபதி முன் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறான்.நீதிபதி சில வினாடிகளில் சொல்லப் போகும் தீர்ப்பைக் கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சந்தேகத்திற்கு இடமின்றி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் பார்த்திபன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்ததால், இறுதியில் பார்த்திபன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது.
போதைப் பொருள் கடத்தலில் பார்த்திபனுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் அந்தக் கும்பலோடுத் தொடர்புக் கொண்டிருந்ததாலும், போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகிப் போனதாலும், இதற்கு முன் எந்தவிதமானக் குற்றச்செயல்களிலும் ஈடுபடாததாலும்,குறைந்தபச்சத் தண்டனையாகப் பார்த்திபனுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது!
தான் அமர்த்திய வழக்கறிஞர் குழுவின் வாதத் திறமையால் மகனுக்குக் குறைந்த கால தண்டனைக் கிடைத்துள்ள உண்மை தினகரனுக்குச் சிறு ஆறுதலாக இருந்தது; ஆனால் மனைவிக்கு........!
தன் கண் முன்னாடியே மகன் பார்த்திபனின் இருகைகளிலும் விலங்கிட்டு காவலர்கள் புடைசூழ ஒரு பெரும் குற்றவாளியைப் போல் வாகனத்தில் கொண்டு சென்ற காட்சியைப் பார்த்த அம்பிகை மயங்கிக் கீழே விழப்போனவரை நல்லவேளையாக அருகிலிருந்த கணவர் அவரைத் தாங்கிப்பிடித்துக் கொள்கிறார்!
அருகிலிருந்த நல்லுள்ளம் கொண்ட சிலர் விரைந்து முதலுதவி கொடுக்கின்றனர்.எனினும் சுயநினைவு திரும்பாமல் மயக்க நிலையிலேயே இருந்த அம்பிகையை அருகிலிருந்த பொது மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்கிறார் தினகரன்.
அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்ட அம்பிகைக்குத் தீவிரச் சிகிட்சை அளிக்கப்படுகிறது. அதர்ச்சியினால் மயக்கம் ஏற்பட்டதாகச் சிகிட்சை வழங்கிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.சிலமணி நேர ஓய்வுக்குப் பிறகு அம்பிகா சுயநினைவுக்குத் திரும்புகிறார். மனைவியின் அருகே அமர்ந்த தினகரன் அவரதுக் கேசத்தைப் பாசமுடன் தடவிக்கொடுக்கிறார். அம்பிகை சற்றும் எதிர்பாராத நிலையில் மயக்கமடைந்து போது தினகரன் அதர்ச்சியடைந்து விடுகிறார்.மகனின் போக்கால் சிறிது காலமாகவே மனக்கவலை அடைந்திருந்த மனைவி தன்னைவிட்டுப் போய்விடுவாரோ என்று பயந்துவிடுகிறார்! குடும்பத்தை எப்படியெல்லாமோ கொண்டு போகநினைத்த தன் குடும்பத்தில் இப்படியிரு குழப்பம் ஏற்படுமென்று அவர் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை!
மகனை ஒரு மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்று மனைவி ஆசைப்பட்டு பல முயற்சிகளில் ஈடுபட்டார்.மகனுக்குப் பொருளாதாரத்தில் படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான்.மனைவியிடம் பக்குவமாக உண்மையை எடுத்துச் சொல்லி மகன் விருப்பப்படிப் படிக்கச் சம்மதிக்க வைத்தார். எனினும் மனைவி மகனுக்குக் கணவர் அதிகம் இடம் கொடுப்பதாகக்கூறி எச்சரிக்கைச் செய்தார்.
மகன் விருப்படியே எல்லாம் நடைபெறவேண்டும் என்ற கூற்று அம்பிகை விரும்பவில்லை! மகன் விசியத்தில் அம்பிகை கவனமுடனே நடந்து கொள்வார்.ஆனால்,கணவர் ஒரே பிள்ளை அவன் விருப்பப்படி இருந்துவிட்டுப் போகட்டுமே என்பார்.
கணவரின் முகம் கவலையினால் வாடியிருப்பதை பார்க்க அம்பிகைக்கு மேலும் கவலை அடைகிறார்! அம்பிகையின் கண்களில் கண்ணீர்.....! “அழாதே....அம்பிகை!”
அத்தியாயம் 21: தண்டனை
“நம்ப பிள்ளைச் செஞ்சக் காரியத்துக்கு.....அழாம பின்ன என்ன செய்யச் சொல்றீங்க....!”
“அழுது....இனி எதுவும் நடக்கப் போறதில்லை.....!”
“நம்ம குடும்பத்திலையா இப்படி நடக்கனும்...?”
“இது நம்ம தலைவிதி எல்லாத்தையும் அனுபவித்துதான் ஆகனும்....!”
மனைவிக்கு ஆறுதல் கூறி தேற்ற முயன்றார்.
குடும்பத்தின் மானம் மரியாதை எல்லாம் தவமிருந்துப் பெற்ற ஒரே மகன் தீய நண்பர்களின் சேர்க்கையால் வாழ்க்கையை அழித்துக்கொண்டானே! கணவனும் மனைவியும் பார்த்திபனைப் பெற்றதற்காக வேதனையுறுகின்றனர். வேலி தாண்டிய வெள்ளாடாகக் குடும்பத்தின் கட்டுப்பாட்டை எல்லாம் உடைத்தெரிந்துவிட்ட மகனைப் பெற்றதற்காகக் கண்களில் நீர் வற்றும் வரைக் கண்ணீர் வடித்தார்! தினகரன் தன் வேதனைகளை வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள் புழுங்கிக் கண்ணீர் வடிக்கிறார்! குடும்பத்தலைவர் என்ற வகையில் தன் குடும்பம் இப்படி ஆனதற்குத் தானே பொறுப்பேற்று அமைதிக் காக்கிறார்! ஆண்மகன் எதையும் வெளியில் காட்டிக் கொள்ள முடியாதல்லவா?
“என்னங்க…… நம்பப் பையன் இப்படி செஞ்சிட்டுப் போயிட்டானே?” பெரும் கவலையுடன் கணவரைக் கேட்கிறார்.
“ அம்பிகை……. மனதைத் தேற்றிக்க….. நம்ப பிள்ளைத் தீய நண்பர்களின் சகவாசத்தால்தான் கெட்டுப் போயிட்டான்…..!”
“நாம என்னங்கச் செய்யுறது? ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாகத்தான் பழகினார்கள். நம்ப பிள்ளைதாங்கக் கவனமாக இருந்திருக்கனும். அவன் கொஞ்சம் கவனமுடன் இருந்திருந்தா இப்படி கெட்டுப்போயிடுப்பானா..?” அம்பிகை அங்கலாய்த்துக் கொள்கிறார் !
“நாம….. பிள்ளையோடு அணுக்கமாக இல்லாமப் போயிட்டோம் அம்பிகை, வேலை வேலைன்னு அவன் தேவைகளைத் தெரிந்து கொள்ளாமல் நமது வேலையிலேயே மூழ்கிப் போயிட்டோம் . இப்ப அவனது வாழ்வே மூழ்கிப் போயிடுச்சு! ” தினகரன் தன் மனக்குறையைச் சொல்லி நொந்து கொள்கிறார்!
“ஒரே பிள்ளை, எல்லா வசதிகளையும் செஞ்சிதானே கொடுத்தோம், எந்தக் குறையும் வைக்கலையே? அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அவன் கேட்கும் முன்னே வேண்டியதைச் செஞ்சிக் கொடுத்தோமே, இன்னும் என்ன செய்யனும்…?” அம்பிகை தன் மனதிலுள்ளதைக் கொட்டிவிடுகிறார்.
“அம்பிகை…நாம நினைத்துக் கொள்கிறோம், பிள்ளைக்கு எல்லாத்தையும் செஞ்சிட்டோம், அவனுக்கு எந்தவொரு மனக்குறையும் இல்லாம வாழ்றான்னு……இது நாமாகக் கற்பனைச் செஞ்சிக் கிட்டது!” தினகரன் உண்மையை மறைவின்றி ஒப்புக்கொள்கிறார்.
“இந்த ஊர்ல, இனி நாம தலைக்காட்ட முடியாதே!” மிகுந்த கவலையோடு கூறுகிறார். “அம்பிகை…வீட்டுக்கு வீடு வாசற்படி. எல்லா வீடுகளிலும் வெளியில் சொல்ல முடியாதப் பிரச்னை ஏதாவது ஒன்னு இருக்கத்தான் செய்யும். கிட்டப் போய்ப் பார்க்காத வரைக்கும் எந்தவிதப் பிரச்னையும் யாருக்கும் தெரியாது!”
“ஊறு உலகத்துக்குப் பயந்து வாழ்ற நமக்குப்போயி.....இப்படியா?”
“பெற்ற நாம உலகத்துக்குப் பயந்து வாழ்றோம்,நம்பப் பிள்ளை ஊர் உலகத்தை நினைச்சுப் பார்க்கலையே....?”
“நல்ல பெற்றோர்களுக்குப் பிறந்தப் பிள்ளை நல்லவனாகத்தானே இருக்கனும்.....இப்ப உலகம் நம்பலைப் பற்றி என்ன பேசும்?”
“மற்றவங்க நம்மைப் பற்றி என்ன நினைப்பாங்கன்னு வீணாக மண்டையைப் போட்டு உடைத்துக் கொள்ளாம, இனி நாம என்ன செய்யலாம் என்பதைப் பற்றி யோசிப்போம். மற்றவர்களுக்காக நாம ஒன்றும் வாழல” தினகரன் தெளிவாகக் கூறுகிறார்.
“எப்படி யெல்லாமோ மகனை வாழ வைக்கலாமுனு கற்பனை செஞ்சு வைச்சிருந்தேன்......இப்ப எல்லாமே கானல் நீராயிடுச்சே....!”
“அம்பிகை....நம்பிக்கையை விடாதே....! நடக்க வேண்டியது காரியம் நடக்க வேண்டிய நேரத்தில கண்டிப்பா நடந்தே தீரும்....!”
“காலா காலத்திலே கண்ணுக்கு அழகா மகனுக்குக் கல்யாணத்தச் செஞ்சிப் பார்க்கலாம்,வீட்டுக்குப் பொறுப்பான மருமகளைக் கொண்டு வந்துட்டா, நம்ம சந்ததியைப் பெருக்க அழகழகானப் பேரக் குழந்தைகள் பிறப்பார்கள்.
அவர்களை ஆசைத்தீரத் தூக்கிக் கொஞ்சி மகிழலாம். வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும் என்று திட்டம் போட்டேனே…..! என் திட்டமெல்லாம் தவிடு பொடியாகிவிட்டதே!” தன் ஏமாற்றத்தை வெளிப் படுத்துகிறார்.
“அம்பிகை…..! ஏன் இதற்குள் மனம் தளர்ந்து பேசுறே? ஆறுதல் படுத்தி மனைவியை அணைத்து கொள்கிறார்.
அத்தியாயம் 22: இறைவா
“எல்லா தாய்மார்களும் நினைப்பதைத்தானே நானும் நினைத்தேன்.என்னை மட்டும் கடவுள் ஏன் இப்படிச் சோதிக்கனும் ?” கண்ணீர் சிந்துகிறார்.
“நம்மைப் படைத்தக் கடவுள் நமக்கு வேண்டுமென்றே சிரமத்தைக் கொடுத்து, நம்மை அழவைப்பதில்லை. முற்பிறப்பில நாம் செய்த கர்ம வினைப்படிதான் எதுவும் நடக்கும். நம்பிக்கையோடு இறைவனை வணங்குவோம். நல்லதே நமக்கு நடக்கும் இதை நீ நம்பு அம்பிகை ” மனைவிக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.
“இரண்டு ஆண்டுகள் . . . எப்படி மகனைப் பிரிந்து வாழ்வது? அது என்னால முடியாதுங்க…..! என்னால முடியாதுங்க......! கண்ணீர் விட்டுக் குலுங்கிக் குலுங்கி அழுகிறார்.ஆற்று வெள்ளம் போல் கண்கள் கண்ணீரைச் சிந்துகின்றன.
“இறைபக்தி நிறைந்தவர்களுக்குத் துன்பத்தைத் தாங்கும் சக்தி தானா வந்திடும்.மனமுறுகி இறைவனிடம் பிராத்தனைச் செய். மிக விரைவிலேயே மகன் வீடு திரும்புவான்,” துயருற்றிருக்கும் மனவிக்கு நம்பிக்கையூட்டுகிறார்.
“எப்படிங்க முடியுங்க ? இரண்டு ஆண்டுகள் அல்லவா தண்டனை கொடுத்திருக்காங்க......அந்தக் காலம் முடியும் வரையில் மகனைப் பார்க்க முடியாதே..!” ஆச்சரியத்துடன் வினவுகிறார்.
“அம்பிகை … நீங்க சொல்றதும் உண்மைதான்……!”
சிறைக் காலத்தின் போது நல்லபடியாக யாதொருக் குற்றமும் இல்லாமல் நடந்து கொள்பவர்களுக்குத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை வழங்க நாட்டுச் சட்டத்தில் இடமிருக்குதே!
“அப்படியா.....!” ஆச்சரியப்படுகிறார் அம்பிகை!
“இறைவன் அருளால,பார்த்திபன் சீக்கிரமா விடுதலையாகி,வீடு வந்து சேருவான் பாரு....! நீ தைரியத்தை மட்டும் விட்டுடாதே!” மனைவிக்கு நம்பிக்கை ஊட்டுகிறார்.
“இறைவா….! என் பிள்ளையைக் கூடியச் சீக்கிரத்தில் என்னிடம் சேர்த்து விடு,” என்று இறைவனிடம் இருகரம் கூப்பி வணங்குகிறார். “முன் பிறவியில நல்லது ஏதும் செஞ்சிருப்போம்னு நினைக்கிறேன்!” “என்ன சொல்றீங்க......?”
“நம்ம….மகனோடு ஒரே கார்லப் பிரயாணம் செய்த நான்கு பேர்ல, காவல் துறையினர் சுட்டதில மூனு பேரு அங்கேயே இறந்து போனார்கள். ஆனால்,நம்ம மகன் மட்டும் சொற்பக் காயங்களோடு உயிர் தப்பியதை மறந்திட்டியா அம்பிகை…..!”
“ஆமாங்க...! கடவுள்தான் நம்ப பிள்ளை உயிரைக் காப்பாத்திட்டாரு!”
கடவுளைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.
“இறைவன் மகனைக் காப்பாற்றியதிலிருந்து, மகன் நம்முடன் சேர்ந்து வாழ்வதற்குக் கடவுள் நமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தைத் தந்திருக்கிறார் என்பதை அதை எண்ணி ஆறுதல்படு அம்பிகை,”கணவரின் ஆறுதல் பேச்சு அம்பிகைக்கு மேலும் நம்பிக்கையைத் தந்திருக்க வேண்டும்!
கணவரின் இருகைகளையும் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டுக் கண்ணீர் விடுகிறார்! பத்து மாதம் சுமந்து பெற்றப் பிள்ளையல்லவா? மனைவியை ஆறுதல் படுத்துவதில் ஓரளவு வெற்றி கண்ட தினகரன் உள்ளூர மனதில் ஆறுதல் கொள்கிறார்!
மனைவியின் கண்களில் கண்ணீரைக் காண அவர் சிறிதும் விரும்புவதில்லை. மனைவியின் மகிழ்ச்சிக்காக அவர் எதையும் செய்யத் தயாராக இருந்தார்! மனைவியைத் திருமணம் செய்துக் கொண்ட நாள் முதல் இன்றுவரை மனைவியின் மகிழ்ச்சிக்காகத் தன் விருப்பங்களைக் கூட விட்டுக் கொடுத்துள்ளார்!
காலம் வேகமாக விரைகிறது.கண் மூடி கண் திறப்பதற்குக்குள் மனிதன் வாழவில் என்னென்னவோ நடக்கிறது.அம்பிகை தன் மகனைப் பிரிந்திருந்த காலம் மிகவும் துயரம் நிறைந்ததாக இருக்கிறது.அறியாமல் செய்த தவற்றினால் தன் உயிருடன் கலந்த அன்பு மகனைப் பிரிந்து வாழும் பரிதாப நிலை ஏற்பட்டுவிட்டதே! வாழ்வில் இழக்கக்கூடாத அரிய பொக்கிஷத்தை இழந்து வாழ்வே முடிந்து போனது போல் எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்.
பிரிட்டிஷார் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து குறிப்பாகத் தென்னிந்தியாவிலிருந்து ‘சஞ்சிக்கூலிகளாக’ இந்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்கள் பெருங் காடுகாளை அழித்து, இந்த நாட்டை உருவாக்கினர்.
காடுகளை அழித்த வேளையில் கொசுக்கடிகளுக்கும், விஷப்பாம்புகளுக்கும், மலேரியக் காய்ச்சலுக்கும் பல்லாயிரக் கணக்கில் பலியாகிப் போனார்கள்.இந்தியர்கள் இரப்பர் மரக்காடுகளில் சிந்திய இரத்த வியர்வையினால் நாட்டின் பொருளாதாரம் தலைநிமிர்ந்தது.
அத்தியாயம் 23: மறுவாழ்வு
பிரிட்டிஷார் 31ஆகஸ்டு1957 இல் மலாயாவுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள். அவர்கள் இந்நாட்டைவிட்டு வெளியேறியபோது, அவர்களால் மலாயாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் உரிய அரசியல் பொருளாதார,சமூக,கல்வி, சமய,மற்றும் இதர உரிமைகளைப் புதிய மலாயா அரசியலமைப்புச் சாசனத்தில் முழுமையாக உறுதிப்படுத்தாமல் சென்றுவிட்டதால் இந்தியர்கள் இன்று பல துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைத் தந்த இந்தியர்கள் இந்நாட்டின் சிறப்புச் சலுகைகள் பெறும் பிரஜையாக ஆக்காமல் தமிழர்களைச் ‘சப்பி எறியப்பட்ட மாங்கொட்டையாக’ ஆக்கிவிட்டு பொறுப்பற்ற முறையில் பிரிட்டிஷார் தங்கள் தாயகம் புறப்பட்டுவிட்டார்கள்.
இதன் விளைவு, பல தலைமுறைகளைக் கடந்தும்,தமிழர்கள் அடிப்படைப் பிரச்னையானப் பிராஜாஉரிமைப் பிரச்னை,சிவப்புப் பாஸ்போட்,பிரச்னைத் தொடங்கி,தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தும்,நமது பிள்ளைகள் அரசாங்க உயர்கல்விக்கூடங்களில் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப் பட்டு,அரசாங்கத்திடம் கையேந்தியும் கல்வி கற்க வாய்ப்புகள் கிடைக்காமல் நமது குழந்தைகளின் எதிர்காலம் இன்று கண்ணீர் கடலில் மிதந்து கொண்டிருக்கிறது!
இந்நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கொண்டு,இந்நாட்டு அரசாங்கம், முறையாகக் கொடுக்க வேண்டிய வாய்ப்புகளை வழங்காமல், இந்தியர்களைத் திட்டமிட்டே, அரசியல்,பொருளாதாரம்,கல்வி,சமய மற்றும் பல துறைகளில் ஒடுக்கி வந்திருக்கிறது.
2007 நவம்பர் 25 ஆம் நாள் பதினெட்டுக் கோரிக்கைகளை முன்வைத்து இந்நாட்டு இந்தியர்களின் உரிமைக்காகப் போராட துணிவுடன் தெருவில் இறங்கிய ‘ஹிண்ட்ராஃப்’ இயக்கத்தினர் இலட்சக்கணக்கில் திரண்டு கோலாலம்பூர்,அம்பாங்கிலுள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு ஊர்வலமாகச் சென்ற போது, உரிமைக்காகத் திரண்ட பேரணியை அரசாங்கம் திட்டமிட்டுக் காவல் துறையினரைக் கொண்டு வன்முறையின் மூலம் தடுத்தனர்!
காவல் துறையினரின் கண்மூடித்தனமானத் தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் பலர் தங்கள் உயிரைக்காக்கப் போராடவேண்டியிருந்தது! பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். ‘பஞ்சபாண்டவர்கள்’ ஐவர் ‘ஐ எஸ் ஏ’ கைதிகளாகப் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்!
ஓர் இனத்தின் போராட்டத்திற்காகச் சிறைச்சென்ற இளைஞர்களில் ஒருவனாகத் தன் மகன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால்கூட நிச்சயமாக அம்பிகை மகிழ்ந்திருப்பார்.
ஆனால்,போதைப் பொருள் கடத்தும் கும்பலின் நயவஞ்சக வலையில் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாது தன் உயிரையும் இழக்கும் நிலைக்கு அறிவு மலுங்கிப் போன மகனின் செய்யலுக்குப் பெருமையடைய முடியுமா? மகனின் சிறைவாசம் ஒருபுறம்,குடும்ப மானத்தை காற்றில் பறக்க விட்ட மகனை நினைத்து அம்பிகை கண்ணீர் விடாத நாள்தான் உண்டா? பிள்ளையப் பெற்ற அன்னைக் கண்ணீர்தான் மிஞ்சுமோ?
அம்பிகை ஒரு நடைப்பிணமாகவே இப்போது மாறிவிட்டிருந்தார். மகனின் நினைவாகவே இருக்கிறார். நன்றாகச் சாப்பிட்டு உறங்கியப் பல நாட்கள் ஆகின்றன! மகன் வீடு திரும்பும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கனத்த மனதுடன் காலத்தை ஓட்டுகிறார்!
கணவர் மட்டும் அனுசரணையாக நடந்து கொள்ளாமலிருந்தால் நிச்சயமாக அம்பிகை இந்நேரம் மனநலம் குன்றிய ஒரு மருத்துவமனையில்தான் சேர்க்கப் பட்டிருப்பார்!
தமிழ் நாளிதழ்களில் வெளியிடப்படும் இந்திய இளைஞர்கள் பற்றி வெளியிடப்படும் செய்திகள் வேறு அம்பிகைக்கு வீணாக மனக்கலக்கத்தை உண்டு பண்ணியது! சந்தேகத்தின் பேரில்,காவல் துறைக்குக் கொண்டு செல்லப்படும் இந்திய இளைஞர்கள் பலர், சிறிதும் மனிதாபிமானம் அற்ற முறையில் காவல் துறையினர் விசாரணை என்ற பேரில் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்துவதும், சித்திரவதையைத் தாங்க முடியாமல் உயிரை விடுவதும் வாடிக்கையாகிப் போகிறது!
தங்களின் அன்புச் செல்வங்களை அநியாயமாகப் பறிகொடுத்துக் கதறியழுவும் பெற்றோர்கள், யாரும் கேட்க நாதியற்ற சமூகமாக,இந்த அநீதியைத் தட்டிக் கேட்க வழி தெரியாமல் தவிக்கும் பெற்றோர்களுக்கு உதவும் பொருட்டு, எதிர்க்கட்சியிலுள்ள சில தமிழ் எம்பிகள்,பொது இயக்கத் தலைவர்கள் காவல்துறை மீது வழக்குத் தொடர உதவும் காட்சிகளைப் பத்திரிக்கைகளில் படிக்கும் அம்பிகை மேலும் திகிலடைகிறார்.
“காவல் துறையினர் திட்டமிட்டே இந்திய இளைஞர்களைக் கொன்று குவிக்கும் படலத்தில் இறங்கிவிட்டனரா?” மிகுந்த அதர்ச்சியோடு கேள்வி கேட்கும் அம்பிகைக்கு நம்பிக்கைதான் நம்மை வாழவைக்கும் என்று கணவர் தரும் விளக்கத்தில் துளிகூட திருப்தி அடைய மாட்டார்! தன் மகன் உயிருடன் வீடு திரும்புவானா...? என்ற சந்தேகம் அம்பிகையின் மனதில் பெரும் அச்சத்தையும்,அதர்ச்சியையும் ஏற்படுத்தின!
[தொடரும்]