அத்தியாயம் 16
மெல்பேனின் தெற்கேயும் தென்கிழக்கேயும் இருக்கும் டன்டினோங் மலைத்தொடர் ஒரு விதத்தில் நகரின் எல்லைச் சுவராக செல்கிறது. மெல்பேனின் வடக்கு, மேற்குப் பகுதிகள் சமவெளியாக பல கிலோமீட்டர் தூரம் செல்கின்றன. மெல்பேனின் கிழக்கில் மலையடிவாரங்களில் பல புற நகர்கள் அமைந்துள்ளன. மலையடிவாரங்களில் ஐந்து ஏக்கர், பத்து ஏக்கர் என காணிகளில் வீடுகட்டி வாழ்வது பலரது இலட்சியமாக இருப்பதால் டண்டினோங் மலைப் பகுதியில் பல புறநகர்கள் தோன்றியுள்ளன. இந்தப் பகுதிகளில் வாழ்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. நகரின் சந்தடிகளில் இருந்து ஒதுங்கி வாழ விரும்புவர்கள், சிறிய தோட்டங்களை உருவாக்கி அதன் நடுவே தங்கள் மூதாதையாரால் தொலைத்துவிட்ட கிராமிய வாழ்கையை மீண்டும் தேடுபவர்கள், குதிரை, பசு ,ஆடு என மிருகங்களை வளர்க்க விரும்புவர்கள். இதைவிட கண்களுக்கு ரம்மியமான காட்சிகள் தேடும் வேறு சாரரரும் இந்த மலைப் பகுதிகளைத் தேடுகிறார்கள்.
இப்படியான மலைப் பகுதிகளை அண்டிய தென்கிழக்கு மெல்பேனினில் அமைந்த ஒரு புறநகரான பேன்ரீகலி என்னும் இடத்தில் ஜோனும் மிஷேலும் வசிக்கிறார்கள். இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக இந்த வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். இப்படிப் பல வருடங்கள் ஆணும் பெண்ணும் ஒன்றாக வாழ்ந்த பின்புதான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பொருத்தமானவர்கள் என்பதை இந்த நாட்டில் தாங்களே உறுதி செய்து கொண்ட பின்புதான் கல்யாண பந்தத்தை நோக்கி செல்கிறார்கள்.
இதற்குப் பின் ஏன் கல்யாணம்? அது தேவையற்ற செலவு என நினைக்கும் ஜோடிகள் பெருகிவருவதால் ஆவுஸ்திரேலிய அரசாங்கம் இருவர் ஒரு வீட்டில் தம்பதிகளாக இருந்தால் சடட்ரீதியாக இருவருக்கும் ஒருவர் மீது உள்ள உரிமையை அங்கீகரிக்கிறது. இதனால் சொத்துக்கள், குழந்தைகள் இக்காலத்தில் வரும்போது சட்டரீதியான அங்கீகாரம் கிடைப்பதால் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது கூடிக்கொண்டு வருகிறது. சிலர் தங்கள் குழந்தைகள் திருமணமான பின்னால் தாங்கள் உத்தியோக பூர்வமாக திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இப்படியான ஒரு செய்தியாக தாங்கள் மாறாமல் ஜோனும் மிஷேலும் திருமணம் செய்வதற்கு அடுத்த கிழமை இருவரும் நிட்சயித்து இருப்பதால் இந்த வார இறுதியில் ஜோனுக்கு பக் நையிற்றும் அதே இரவில் மிசேல் தனது சினேகிதிகளுடன் கென் நைட்டும் கொண்டாடுகிறார்கள்.
சுந்தரம்பிள்ளையும் சாமும், ஜோனினது வீட்டுக்குச் சென்ற போது ஏற்கனவே ஜோனின் பல நண்பர்கள் வந்திருந்தார்கள். அதில் வைத்தியசாலையில் வேலைசெய்யும் மாவின் மட்டுமே அறிமுகமான முகமாக இருந்தது. மற்றவர்கள் ஜோனின் பாடசாலை நண்பர்கள். திருமணம் செய்யாத இளம் வயதினர்.
சுந்தரம்பிள்ளை ஒப்பிட்டு ரீதியில் சங்கோசியாக இருந்தபடியால் ஜோன் இழுத்துப் பிடித்து ‘எனது வைத்தியசாலையில் வேலை செய்யும் டொக்டர்’எனவும் சாமை தனது நண்பன். ஆனால் இருவரும் திருமணம் செய்தவர்கள் எனவும் அறிமுகப்படுத்தியபோது சாம் ‘இதை யாராவது கேட்டார்களா? எனக் கூறிவிட்டு அங்கே இருந்த பியரை எடுத்தான். அப்பொழுது அந்த இடத்தில் ஒரு தலைமயிர் வளர்த்த இளைஞர் சாமிடம் ‘வீட்(கஞ்சா) வேணுமா’ என்றான்
‘நான் ஒழுங்காக வீடு செல்ல விரும்பகிறேன்’எனச் சாம் மறுத்தான்.
‘அது நல்லது நண்பரே’ என சொல்லியபடி மீண்டும் தனது நாற்காலிக்கு சென்று சிகரட்டுபோல் சுற்றப்பட்டு இருந்த கஞ்சாவை கொழுத்தினான்
மாவின் அந்த நேரத்தில் ‘எல்லோரும் ஒழுங்காக இருந்தால்தான் டான்ஸ் பார்க்க முடியும்.’என்றான்.
பத்துப் பேர் இருந்த அந்த வீட்டின் ஹாலில் பெயர் தெரியாத அவுஸ்திரேலிய பாடகர்களது பாடல் ஒலியோடு கஞ்சாமணமும் கலந்து மயக்கத்தைக் கொடுத்தது. ஜோன் மட்டும் மதுவை பாவிக்காது, மற்றவர்களை உபசரித்தபடி இருந்தான். பாடசாலை மற்றும் வேலைத்தல நினைவுகள், வழக்கமான விருந்துகள் போல் பகிரப்பட்டன. இரண்டு கஞ்சாகாரர்கள் புகைத்தபடி மோனநிலையில் ரப்பர்போல் வார்த்தைகளைத் இழுத்து இழுத்துப் வாயிலிருந்து வழிய விட்டார்கள்.
இரவு ஒன்பது மணியளவில் கதவு தட்டும் சத்தம் கேட்டபோது வாசலுக்குச் சென்று ஜோன் கதவைத் திறந்தபோது, ஒரு பெண் நின்றாள். முகத்தை மட்டும் வெளிக் காட்டியபடி நின்ற அவள் பாதம்வரை நீளமான கறுப்பு கோட் அணிந்திருந்தாள்.
அவளது இளம் முகத்தில் நட்சத்திரங்கள் போல் ஜிகினாத் துகள்கள் மின்னியது. முகத்தின் மேக்கப்பில் ஒட்டியிருக்கிறள் என்பது ஊகிக்க முடிந்தது.
வாசலுக்கு சென்று உள்ளே அவளை அழைத்து வந்த ஜோன் ‘ஏய் போய்ஸ். இது வெண்டி. உங்களுக்கு நடனம் ஆடுவாள். இவள் முக்கியமாக மிசேலின் சினேகிதி என்பதால் கவனமாக நடந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் எனது கதி அதோகதிதான். அடுத்த கிழமை எனக்கு கல்யாணமில்லாமால் போய்விடும்’ என்றான்.
அந்தப் பெண் ஒரு குறுந்தட்டை மியுசிக் பிளேயரில் போடும்படி மெல்வினிடம் கொடுத்தவுடன் அங்கு இப்பொழுது நைட்கிளப்பின் ரொக்கன்ரோல் சங்கீதம் குபீர் என வந்து புதிய உதிரத்தை எல்லோரிலும் ஒரே நேரத்தில் ஏற்றியது. கஞ்சா தூள்களை கவனமாக சிகரட் கடுதாசியுள் வைத்து உருட்டி மாறிமாறி புகைத்துக் கொண்டிருந்த இரண்டு ஜோனின் நண்பர்களது கஞ்சாவின் மயக்கத்தை குலைத்து அவர்களை விழிப்புக்கு அந்த சங்கீதம் கொண்டு வந்தது. தலையை நிமிர்த்தி தங்களை நிமிர்த்தி ஆசனங்களில் உறுதியாக்கி அமர்த்திக் கொண்டார்கள்.
வெண்டி கறுப்பு கோட்டைக் கழற்றியதும் அவளது அழகிய உடலை மார்புக்கச்சையாலும் மிகவும் கட்டையான காற்சட்டையாலும் மட்டுமே மறைத்திருந்தாள்.தலையில் மயிரை ஒதுக்கி உச்சிக் கொண்டை போட்டிருந்தாள். அந்த ஒளி குறைந்த சூழ்நிலையில் மேகக் கூட்டத்தின் மத்தியில் ஒளிரும் முழுமதி போல் காட்சியளித்தாள். அவளது மார்புக்கச்சையும் காற்சட்டைகளும் விசேடமாக ஒளிர்ந்தன. சிறிது நேரத்தில் அந்த வீட்டின் ஹாலில் சோபாக்களை நகர்த்தி உருவாக்கப்பட்ட சிறிய இடைவெளியில் அவளது நடனம் தொடங்கியது. அந்த நடனத்தை எந்த வகையறாவிலும் சேர்க்க முடியாது. நைட்கிளப்பில் ஆடும் கம்பு (போல்) நடனம் இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. சிலவேளை பார்த்தால் பொலிவுட் டான்ஸ் மாதிரியாக இருந்தது. மருந்துக்கும் கொழுப்பில்லாத அவளது உடம்பின் நெளிவுகள் அந்தச் சங்கீதத்திற்கு ஏற்ற மாதிரி இருந்தது. குடிவெறி, கஞ்சா இருந்த போதையுடன் பெண்ணுடலின் காம போதையும் சேர்ந்து கொண்டு அங்கிருந்தவர்கள் மனங்களை வான்வெளியில் ஈரமேகங்களுக்குள் கொண்டு சென்றது. எல்லோரும் கிறங்கியபடி கண்களால் அவளைப் புணர்ந்து கொண்டிருந்தார்கள்.
பதினைந்து நிமிடம் நடந்த ஆட்டம் முடிவுக்கு வந்ததும் சாம் மட்டும் அவளது ஆட்டத்திற்கு கை தட்டினான். மற்றவர்கள் மெய்மறந்து இருந்ததால் கைதட்ட முடியவில்லை. அப்பொழுது அவள் கட்டியிருந்த வெள்ளை மார்புக் கச்சையைக் கழற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி வீசிய போது அது வெண்புறாப் போல் வந்து சாமினது முகத்தில் மாலையாக விழுந்தது. மற்றவர்கள் வாவ் என்றார்கள். சுந்தரம்பிள்ளை இரண்டு பியரினால் வந்த போதையா, அவளது உயரத்துக்கும் உடலுக்கும் சற்று அதிகமாக இருந்த மார்பகங்கள் கொடுத்த போதையா அதிக மயக்கத்தைக் கொடுத்தது என தீவிரமான ஆய்வில் இருந்தான்.
பாட்டு முடிந்தவுடன் நடனத்தை நிறுத்திவிட்டு வியர்வையின் ஈரமான உடலுடன் ஒவ்வொருவரினதும் அருகில் வந்து மார்பால் உராய்ந்தபடி கோடைகாலத்து மோகக்காடுகளின் மத்தியில் தீப்பந்தம் ஏந்திய மோகினியாக வலம் வந்தாள். சுந்தரம்பிள்ளையின் சோபாவிற்கு அருகில் வந்து அதன் கைப்பிடியில் இருந்துகொண்டு அவளது முலைகள் தாராளமாக முகத்தில் மயிலிறகாக தடவியதும் மூச்சுத் திணறியபடி எழுந்து பொக்கட்டில் இருந்து இருபது டாலர்கள் நோட்டை அவளது இடுப்பில் செருகியதும் மற்றவர்களிடம் சென்றுவிட்டாள். ஜோனைத் தவிர மற்றையவர்கள் எல்லோருக்கும் அவளது அழகிய முலைகளால் அர்ச்சினை செய்தபோது பத்து இருபது என காணிக்கை இடுப்பில் செலுத்தினார்கள். இதில் சுந்தரம்பிள்ளைக்கு ஆச்சரியமான விடயம், ஒருவராவது அவளது தங்கத்தில் வார்த்த உடலைத் தொட முயற்சிக்கவில்லை. பதினைந்து நிமிடமாக காணிக்கை செலுத்தும் சடங்கு நடந்த முடிந்த பின் அந்தச் சிறிய வீட்டின் கூடத்தில் தீடீர் என இருள் கவ்வியபோது அவளது உடலை மட்டும் எங்கிருந்தோ கூரையில் இருந்து வந்த ஒளி நேராக வந்து குளியலறையின் சவர் போல் நனைத்து அவளது உடலின் வியர்வையை பளிச்சிடவைத்தது. அந்த ஒளியில் குளித்தபடி நெளிந்து தனது காற்சட்டையையும் அதன்பின் உள் கச்சையையும் கழட்டி, தனது ஆட்டத்தின் கிளைமாக்ஸை முடித்ததும் குளிப்பறை சவர்போன்ற அந்த வெளிச்சம் திடீர் என மறைந்ததும் ஏற்பட்ட இருட்டில் அவளும் மறைந்து விட்டாள்.
எல்லாரிடமும் இருந்த காமம் கலந்த உற்சாகம் பனிகட்டிக்குள் வைத்த வெப்பமானியின் பாதரசமாக கீழே வந்து உறைந்துவிட்டது. மீண்டும் வெளிச்சம் வந்ததும் எவருக்கும் மகிழ்சியில்லை. முகங்களில் எதையோ பறிகொடுத்த உணர்வுடன் ஏமாற்றம், வெறுமை கலந்து தெரிந்தது. ஜோன் எங்கிருந்தோ தோன்றி ‘கனவான்களாக நடந்து கொண்டதற்கு நன்றி . ஏய் சாம் அந்த பிராவை வீட்டுக்கு கொண்டு போகாதே .வெண்டிக்கு தேவை’ என கேட்டு வாங்கினான்.
சில நிமிட நேரத்கில் மீண்டும் தனது தனது கறுத்த ஓவர்கோட்டுடன் தோன்றிய வெண்டி ‘நன்றி’ சொல்லிவிட்டு சென்ற போது ஜோன் வாசல் அருகே சென்று அவளை வழியனுப்பினான்.
‘எங்களது மண்டையைக் காயவைத்து விட்டு வெண்டி வீட்டுக்கு சென்று நிம்மதியாக உறங்குவாள். நான் இரவு போய் மனைவியை நித்திரையால் எழுப்பவேண்டும். இல்லையேல் மெத்தையை சீசன் வந்த பூனை மாதிரி பிராண்ட வேண்டும்.’ என்றான் சாம்.
‘இவள் ஏன் இந்த தொழில் செய்கிறள்’ சுந்தரம்பிள்ளை.
‘போய்ஸ்; நீங்கள் அவளை பற்றி கவலைப்படவேண்டாம். அவள் மிசேலுடன் சுப்பர் மார்கட்டில் வேலை செய்கிறாள். அவளது போய் பிரண்ட் பலகாலம் வாகன போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் கட்டாதபடியால் சிறையில் இருகிறான். இன்னும் ஒரு கிழமையில் வெளியே வருவான். வெண்டி சொந்தமாக வீடு வேண்டுவதற்காகத்தான் இப்படி மேலதிகமாக வேலைசெய்கிறாள்’என்றான் ஜோன்.
தலைமை வைத்தியர் காலோஸ் சேரம் ஒருவரது ஹோமோசெக்சுவாலிட்டியை இழிந்து பேசி அவரை வன்முறையாக தாக்குவதற்கு முயன்றதாக முறைப்பாடு எழுத்து மூலம் செய்யப்பட்டது. அந்த முறைப்பாடு நிர்வாகச் செயலாளரிடம் போனது. சில மாதங்களே ஓய்வுக்கு இருக்கிறது என நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ரொன் ஜொய்சுக்கு இந்த விடயம் அவர் மனத்திற்கு புத்துணர்வு அளித்தது. காலோஸ்யை இந்த வைத்திய சாலையில் இருந்து நீக்குவதன் மூலம் தனது வேலையின் இறுதி காலத்தில் ஒரு நல்ல காரியத்தை சாதித்து விட்டு இளைப்பாற அவரும் தனக்குள் உறுதி மொழி எடுத்தார். கடந்த முறை காலோஸ் மேல் வைத்த குற்றசாட்டை விசாரிக்க மறுத்ததால் திருமதி கிளிபேட்டிடமும் திருமதி ஒச்சேட்டிடமும் அவருக்கு அதிக கோபம் இருந்தது. ஆரம்பகாலத்தில் இருந்து காலோஸின் நடத்தைகள் ரொன் ஜொய்சுக்கு ஏற்றதாகவில்லை. நாகரீகமடையாத நாட்டில் இருந்து வந்த மனிதன் என்பதோடு தனிப்பட்ட விதமாக காலோஸ் மீது தீர்க்க வேண்டிய வன்மங்களையும் மனத்தில் வைத்து பல வருடகாலமாக அடைகாத்துக் கொண்டிருந்தார். அதை தீர்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. காலோசின் தைரியத்தை உள்ளுற பலகாலமாக மனத்தில் வெறுத்துக்கொண்டு இருநதார்.
அவுஸ்திரேலியாவில் நிர்வாகத்தில் இருக்கும் ஆண்கள் அவர்களுக்கு கீழே வேலை செய்யும் பெண்களை பாலியல் விடயத்தில் வார்த்தைகளாலோ செயல்களாலோ பலவந்தப்படுத்துவதாக குற்றம்சாட்டினால் அவர்களைத் தண்டிக்க ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம் அந்த நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்படுவதும் அவர்கள் தண்டிக்கப்படுவதும் உண்மையாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை கொடுத்தது. அதேவேளையில் இந்தச் சட்டத்தை தனக்கு பிடிக்காத ஆண் மேலதிகாரி மேல் பழி வாங்குவதற்கும் ஒரு கருவியாக சில பெண்கள் பாவிப்பது உண்டு.
அவுஸ்திரேலியாவில் உள்ள பெரிய கொம்பனியில் உள்ள தலைமை அதிகாரி மீது அவரது பிரதான அலுவலரான பெண்ணால் பாலியல் ரீதியாக அந்தத் தலைமை அதிகாரி தன்னை இம்சைப்படுத்தினார் என வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு பத்திரிகை வானொலி தொலைகாட்சி என பிரபலமாக பலரது வாய்களில் அடிபட்டுக் கொண்டு இருந்தது. இப்படியான பிரபலமான விடயங்கள் வைத்தியசாலை தேநீர்க் கூடத்த்தில் அக்குவேறு ஆணி வேறாக கராச்சி துறைமுகத்தில் பழைய கப்பல்கள் பிரிக்கப்படுவது போல் பிரிக்கப்பட்டு அலசி ஆராயப்படும். வைத்தியசாலையின் காலை நேரத் தேநீர் இடைவெளியில் வெவ்வேறு கோணத்தில் பாலியல், மதம், அரசியல் என அலசப்படும். இந்த நேரத்தில் சகலரும் வந்து கலந்து கொள்வார்கள். காலோஸின் பாலுறவு கலந்த நகைச்சுவையை ரசிக்க பெண்கள், ஆண்கள் என இருக்கும் அதே வேளையில் இப்படியான பேச்சு நாகரீகமற்றது என்ற எண்ணத்திலும் காலோஸ்சை வெறுக்கும் கூட்டம் இந்தப் பேச்சில் கலந்து கொள்வதையும் தவிர்க்கும். இவர்கள் தேநீர்க் கூடத்தின் வேறு பகுதியில் இருப்பார்கள். அல்லது அந்த நேரத்தில் தேநீர் அருந்துவதை தவிர்ப்பார்கள்.
இப்படிச் சில வருடங்கள் முன்பாக ஒரு நாள் பாலியல் இம்சை வழக்கு தொடரும் பெண்களை பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு ரொன் ஜோய் தேனீர் கோப்பையுடன், வழக்கமான மஞ்சள் சுவட்டர் போர்த்த உப்பிய வயிற்றை முன்னே அனுப்பி விட்டு பின்னால் கொல்லன் உலை துருத்தியின் ஓசையுள்ள சுவாசத்துடன் வந்தார்.
‘இந்த பாலியல் இம்சை விடயத்தில் செயலாளர் ரொன் ஜோய்சின் மட்டும்தான் இந்த வைத்திய சாலையில் பாதுகாப்பானவர். அவருக்கு எதிரான ஒரு குற்றசாட்டு வந்தாலும் உடல் அமைப்பு அவரை பாதுகாக்கும்’ என காலோஸ் கூறியதை கேட்டு ‘ஹஹ ஹஹா’என மற்றவர்களுடன் சேர்ந்து அவர் சிரித்தார். முகத்தில் மாற்றத்தை காட்ட விரும்பாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.
காலோஸின் இந்த விவரணை அத்துடன் நிற்கவில்லை ‘இவரது உப்பிய வயிற்றின் கீழ் இவர் தனது குஞ்சாமணியை கண்டே பல வருடங்களாகி விட்டது என்பதால் இவரை எந்தப் பெண்ணும் தன்னைப் பாலியல் இம்சைப் படுத்தியதாக குற்றம் சாட்டமுடியாது’ என மேற்கொண்டு கூறிய வார்த்தைகளும் அதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்ததும் பதவியில் இருந்து இளைப்பாறக் காத்திருந்த செயலாளரை, காற்றில் மிதந்து வரும் தும்பி போல் ரீங்காரமாக வந்து அடைந்த போது அவரால் இரசிக்க முடியவில்லை. இந்த வார்த்தைகள் அவரது இறந்த காலத்து ஆண்மையை சீண்டி, கோபத்தை கிளறியது மட்டுமல்ல அவரது இரத்த அழுத்தத்தின் கீழ் மட்ட அளவை மேலும் கூட்டி மூச்சை இரைக்க வைத்ததால் அரைநாளுடன் வீடு திரும்பி விட்டார். அன்று இரவு வழக்கமான இரத்த அழுத்த, தூக்க மாத்திரைகள் வேலை செய்ய மறுத்து விட்டன..
காமத்தை அடக்கிய ஆண்கள் மனத்தில் வக்கிரம் கலந்த சிந்தனை உருவாகுவது போல் ஆண்மையை சீண்டும் போது குரோதம் உருவாகிறது. இப்படியான குரோதம் ஏற்படுவதற்கு வயது எல்லை இல்லை என்பதை ரொன் ஜோய்ஸ் நடத்தை வெளிக்காட்டியது.
சுந்தரம்பிள்ளை பல நாய்களிலும் பூனைகளிலும் எலும்பு முறிவுகளை ஆபிரேசன் செய்வது மூலம் மிருக வைத்தியத்தின் கடின பகுதியான ஓதோபற்றிக்கிஸ் என்ற எலும்பு முறிவில் தேர்ச்சியடைவது மனத்தில் நிறைவைக் கொடுத்தது.. நாலு கால் பிராணிகள் பெரும்பாலும் கார் விபத்துகளில் இந்த முறிவுகள் ஏற்படும்போது பெரும்பாலான நேரத்தில் ஸ்பெசலிஸ்டிடம் எடுத்து செல்லும் போது அதிக பணம் செலவாகும். மற்றைய நோய்களை விட அதிக நேரமும் பணமும் தேவையாவதால் வசதி குறைந்தவர்கள் தங்கள் செல்லப்பிராணியை கருணைக் கொலை செய்து விடுவார்கள். இந்த வைத்தியசாலையில் ஸ்பெசலிஸ்டுகள் இல்லாவிடினும் குறைந்த பணத்தில் சிகிச்சை செய்யலாம் எனப் பலர் தங்கள் கால்கள் முறிந்த செல்லப்பிராணிகளைக் கொண்டு வருவார்கள். இதனால் இங்கு வேலை செய்யும் வைத்தியர்கள் பலவிதமான எலும்பு முறிவுகளைச் சீர் செய்து தேர்ச்சி பெறுவார்கள். ஆரம்பத்தில் உருக்கு கம்பிகள்களை பொருத்தி சிறிய நாய் பூனைகளின் எலும்பு முறிவுகளை பொருத்துவது இலகுவாக இருந்தது. உருக்குத்தகடுகளை, முறிந்த எலும்புகளில் பொருத்தி பெரிய நாய்களில் வேலை செய்யத் தொடங்கிய போது பிரச்சனை தொடங்கியது. உடல் நிறை கூடிய மிருகங்களின் நடக்கும், பாயும் வேகத்தை கணித்துக்கொண்டு அதற்கு முன்னேற்பாடாக உறுதியான உருக்கு தகடுகள் பொருத்த வேண்டும். அதைவிட அவற்றின் எலும்போடு சேர்ந்து ஒரே அமைப்பாக பொருத்தப்படட இரும்புத் தகடுகள் அவற்றோடு சேர்ந்து இயங்கிக்கொண்டு இருக்க வேண்டும். இப்படி பொருத்திய தகடுகள் ஆறு கிழமைகள் எலும்பு முற்றாக குணமடையும்வரை உறுதியாக இருக்கவேண்டும். அதுவரை உரிமையாளர்கள் எவ்வாறு அந்த நாய்களை பாயாமல், ஓடாமல் அவற்றை பராமரிக்கிறார்கள் என்ற பல விடயங்களில் எலும்புகள் பொருந்துதல் தங்கி இருக்கிறது. மனிதர்கள் போல் கட்டிலில் இருப்பதோ, சொல்வதைக் கேட்பதோ என்ற விடயங்கள் அவைகளுக்கு பொருந்தாது.
சுந்தரம்பிள்ளை ஒரு ஜெர்மன் செப்பேட்டின் முன்கால் முறிவை பொருத்தியபோது எலும்பு பொருந்தி நாய் நடந்தாலும் முன்கால் நடக்கும் போது நேராக இருக்க வேண்டிய பாதங்கள் வெளித் தள்ளியபடி இருந்தது. காரணம் உடைந்த எலும்புகள் தவறாகப் பொருந்தி விட்டது. எலும்பு பொருந்தி நாய் குணமாகி நடந்ததால் உரிமையாளருக்கு சந்தோசமாக இருந்தாலும் பல காலமாக சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் அந்த விடயம் தொழிலின் தோல்வியாக அரித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரியாமல் பலர் இந்த நாயை உதாரணம் காட்டி தன்னை குறை கூறுவதாக உணர்வு ஏற்பட்டது. தொழிலில் ஏற்பட்ட தவறுகள் நிழலாக பலகாலம் தொடரும். அது தொடரும் போது எச்சரிக்கையாக அந்த தவறுகள் வராமல் எதிர்காலத்தில் பார்த்துக் கொள்ளமுடியும். அந்த நாயின் எக்ஸ்ரே ரிப்போட்டை பற்றி ரிமதி பாத்தோலியஸ் தேனீர்கூடத்தில் பேசியதாக காற்று வாக்கில் செய்தி வந்ததால் சுந்தரம்பிள்ளை சிலவாரங்களாக உருக்கு தகடுகளைப் பொருத்தும் எலும்பு முறிவுகளை எடுக்காமல் இருந்தான்.
அன்று மெல்பேனில் காரத்திகை மாதத்துக்கு முதல் செவ்வாய் கிழமை குதிரைப் பந்தய நாள். அவுஸ்திரேலியா முழுவதும் சில நிமிடங்கள் ஸ்தம்பித்துவிடும். அத்துடன் விக்டோரிய மாநிலத்தில் விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தப்பட்ட நாள். விடுமுறை நாள் வேலை செய்வதற்கும் சுந்தரம்பிள்ளையும் போலினும் ரொஸ்ரர் பண்ணப்பட்டு இருந்தார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு வந்த காலத்தில் இருந்து சுந்தரம்பிள்ளைக்கும் மெல்பேன் குதிரைப் பந்தயத்திற்கும் பொருத்தமில்லாமல் இருந்தது. புலம் பெயர்ந்து வந்த இரண்டாம் வருடத்தில் குயின்சிலாண்ட் பல்கலைக்கழகத்தில் மிருக வைத்தியத்தில் நேர்முக பரீட்சை எடுப்பதற்காகச் சென்றபோது பத்துக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் காத்திருந்தார்கள். அதில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கில எழுத்துகளின் கிரமத்தில் நேர்முகப் பரீட்சைக்காக உள்ளே சென்றுவிட்டார்கள். அத்துடன் மதிய உணவு இடைவெளி வந்து விட்டது. தனது தருணத்துக்காக காத்திருந்த சுந்தரம்பிள்ளைக்கு ஒரு மணிநேர இடை வெளிதான் என காத்திருந்த போது மதியம் இரண்டு மணிக்கு மெல்பேனின் குதிரை பந்தயம் தொடங்கிவிட்டது. அந்த நேரம், குதிரையோட்டம் நடைபெறுவதால் பரீட்சை வைத்துக்கொண்டிருக்கும் பேராசிரியர்கள் எல்லாம் குதிரைப்பந்தயத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கப் போய் விட்டார்கள். தொலைக்காட்சியில் குதிரை ஓட்டத்தைப் பார்ப்பதோடு சம்பைனும் சீஸ்சும் அவர்களுக்கிடையே பரிமாறப்பட்டது.
பரீட்சை நேர்முகத்திற்காக காத்திருந்த சுந்தரம்பிள்ளைக்கும் சம்பைனும் சீஸ்சும் கிடைத்தது. ஆனால் குதிரைப்பந்தய அனுபவத்தை கொண்டாடும் நிலையில்லை. மனத்தில் பரீட்சையை எப்போது முடிப்பேன்? எப்பொழுது தேர்வு பெற்று வேலை கிடைக்கும்? என்ற எண்ணங்களில் மிதந்தபடி இருந்ததுடன் பொறுமையிழந்து குதிரைப் பந்தயத்தைச் சபித்தபடி இருந்தபோது இரண்டு மணித்தியாலங்கள் கடந்து சென்றது. மீண்டும் நேர்முகப் பரீட்சை தொடங்க மாலை நாலுமணியாகிவிட்டது. சுந்தரம்பிள்ளை தொடர்ச்சியாக இருந்த மன அழுத்தத்தோடு பரீட்சையைச் செய்து முடித்தாலும் கடைசியில் ஒரு பாடம் கோட்டை விட்டாகியது. இதனால் ஒரு வருடம் வீணாகிவிட்டது. இதோடு போகாமல் அடுத்த வருடம் சிட்னியில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது வாய் மொழிப் பரீட்சை நேரத்தில் மெல்பேன் குதிரைப்பந்தயம் வந்து எரிச்சலைக் கொடுத்தாலும் இந்த முறை எதுவும் நட்டம் வரவில்லை.
பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான பந்தயக் குதிரைகள் கலந்து கொண்டு பலநூறு மில்லியன் டாலர்கள் கைமாறும் இந்த பந்தய நாள் என்பது, அவுஸ்திரேலியர்களுக்கு ஒரு களியாட்டநாள். இந்த ஒரு நாளுக்காக வருடம் முழுவதும் காத்திருப்பார்கள். மிருகவைத்தியரான சுந்தரம்பிள்ளைக்கு அந்த நாள் வெறுப்பை கொடுத்தது. மனரீதியாக குதிரைகளுடன் பழகவோ குதிரை வைத்தியத்தில் தேர்வு பெறவோ இலங்கையில் சந்தர்ப்பம் கிடைக்காத சுந்தரம்பிள்ளைக்கு குதிரைகளில் ஒரு கவர்ச்சி இருந்தாலும் குதிரை வைத்தியத்தில் தேர்ச்சி பெறவில்லை என்ற உணர்வு இதற்கு காரணமோ என நினைப்பதுண்டு. சிலமாத காலங்கள்; தென் அவுஸ்த்திரேலியாவில் ஒரு சிறிய நகர்ப்புறத்தில் வேலையில் இருந்த போது குதிரை வைத்தியத்தில் ஈடுபட்டாலும் அது நிறைவாக இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. அக்காலத்தில் குதிரையின் உரிமையாளர்களுக்கு குதிரை பற்றிய அறிவு பல மடங்காக தன்னிலும் பார்க்க இருந்தது என்ற விடயம் புரிந்த போது கசப்பாக இருந்தது. அவர்கள் அறிவைப் புரிந்தும் கடந்தும் வைத்தியம் பார்பது என்பது இலகுவான விடயமாக இருக்கவில்லை.
அக்காலத்தில் நடந்த ஒரு விடயம் இன்னமும் நினைவில் பசுமையாக இருக்கிறது. தென் அவுஸ்திரேலியாவில் வேலை செய்யும் காலத்தில் ஒரு நாள் இரவு படுக்கையில் இருந்தபோது நடு நிசியில் ஒரு குதிரைக்கு வயிற்றுவலி என தொலைபேசி அழைப்பு வந்தது. மிகுந்த தயக்கத்துடன் மருந்துகளையும் உபகரணங்களையும் சரிபார்த்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு நாட்டுப்புறமாக வந்த போது பண்ணைகளை தேடுவது கடினமாக இருந்தது. நட்சத்திரங்கள் அற்ற அந்த இரவில் கருமையான இரவு சர்வாதிகாரமாக ஆட்சியில் இருந்தது.எந்த உயிரினங்களின் சத்தமற்று அமைதியாக இருந்தது. ஒவ்வொரு பண்ணைகளையும் அடையாளம் கண்டு பாதையில் இறங்கிப்போய் , காரை நிறுத்தி அடையாளம் கண்டு கடைசியில் அந்த பண்ணையைக் கண்டு பிடிக்க இரண்டு மணித்தியாலங்களாகி விட்டது.
தென் அவுஸ்திரேலியாவில் விலங்குப் பண்ணைகள் பல கிலோ மீட்டர் நீள அகலமானவை. இலக்கத்தால் வரைபடத்தில் அடையாளம் இடப்பட்டிருக்கும். வரைபடத்தில் தேடி பின்பு வெளிச்சமற்ற நிலையில் இலக்கங்கள் மிக சிறிதாக அந்தப் பண்ணைகளின் வாசலில் தபால் பெட்டிகளில் பொறிக்கப்பட்டிருக்கும். பகலில் கூட அவற்றை தேடுவது இலகுவானது அல்ல.
இரண்டுமணி நேரமாக நோய் வாய்ப்ட்ட குதிரையோடு விழித்திருக்கும் குதிரையின் உரிமையாளர் எப்படியான மனநிலையில் இருப்பார்?
குதிரைக்கு வயிற்றுவலி பல காரணத்தால் ஏற்படும். ஒரு பார தூரமான நோயை விரைவில் குணமாக்காவிடில் இறந்து விடும் என்ற கவலையோடு அந்தப் பண்ணையை அடைந்த போது செங்கட்டியின் சிகப்பு நிறத்தில் நெற்றியில் மட்டும் வெள்ளை சுட்டியுள்ள அழகான ஆண் குதிரை நிலத்தில் படுப்பதும் எழும்புவதும் பின்பு நிலத்தில் கால்களால் மாறிமாறி உதைத்துக்கொண்டும் நின்றது. மூக்கில் வேர்வை சிறிய மணிகளாக இருந்தது. ஒரளவு மத்திமமான வலியாக இருக்க வேண்டும். கடுமையான வலியெனில் நாலு கால்களையும் ஆகாயத்தில் உதைத்தபடி துடிக்கும் குதிரைகளை சுந்தரம்பிள்ளை கேள்விப்பட்டிருந்தான். இந்த சிவப்பு நிற ஸ்ரான்ரேட் பிரீட் குதிரை அவர்களது குதிரை சிறிதளவு வெளிச்சம் மட்டும் உள்ள லயத்தில் நின்றது. லயத்தின் வாசல் அருகே மீசை வைத்த இத்தாலியரும் அவரது மனைவியும் நீண்ட கறுப்பு கோட்டணிந்தபடி குளிரின் நடுக்கத்துடன் நின்றார்கள் தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு சுந்தரம்பிள்ளை குதிரையின் இதயத்துடிப்பைப் பரிசோதித்தான். இதயத்துடிப்பிற்கும் வலிக்கும் நேரடியான தொடர்பு உள்ளதால் வலியின் வேகத்தை அளக்கமுடியும். வலி மத்திம அளவானது என உறுதியாகியதும் மருந்தை எடுத்து அதனது கழுத்தில் உள்ள நாளத்தில் கொடுக்கவேண்டும்.. நாலுகாலில் நிற்கும் குதிரைக்கு வைத்தியம் செய்வது இலகுவானது. வீழ்ந்த குதிரையை எழும்புவது கடினமான காரியம்.
அந்த தொழுவத்திற்கு வெளிச்சம் போதுமானாதாக இருக்கவில்லை. வேறு இரண்டு குதிரைகள் அந்த இரவில் தங்களுக்கு இந்த பின்னிரவு நேரத்தில் மனிதர்களாலும் நோய்வாய்ப்பட்ட குதிரையாலும் ஏற்பட்டுள்ள தொந்தரவை ஆடசேபித்து அடிக்கடி கனைத்தபடி நின்றன. அதிக வெளிச்சம் வேண்டும் என்ற போது புதிதாக மின்சார லைட்டைப் தொழுவத்தில் பொருத்திவிட்டு கணவன், மனைவி இருவரும் வலி கொண்ட குதிரையின் கழுத்தைப் பிடித்து உயர்த்தினார்கள். ஊசி மூலம் வலி மருந்தை கழுத்தில் உள்ள இரத்த நாளத்துக்குள் ஏற்றியதும் சில நிமிடத்தில் குதிரை அமைதியடைந்தது. குதிரையின் வலி தீர்க்கப்பட்டுவிட்டது என்பது அது நிலத்தை உதைப்பதை நிறுதியதன் மூலம் தெரிந்தது. ஆனால் ஏன் குதிரைக்கு வலி ஏற்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு மருந்து செய்யவேண்டும். அதற்காக குதிரையின் குதத்துக்குள் கையை விட்டு பரிசோதிக்க வேண்டும். அதற்காக கைச் சட்டையை மடித்து தயாராகிய போது அந்த மீசை வைத்த இத்தாலியர் ‘டொக்டர் இந்தப் பகுதியில் சொரியல் மண்ணைப் புல்வோடு சேர்த்து மேய்வதால் மணலால் ஏற்படும் வயிற்றுவலிதான் ஏற்படுகிறது. நீங்கள் பரபின் ஒயில் கொடுத்தால் நல்லது’ என்றார். அவர் சொல்லிய வைத்திய ஆலோசனை சுந்தரம்பிள்ளை எதிர்பார்க்காத, வரவேற்காத விடயம். என்றாலும் பின்னிரவு நேரத்தில் வேலையை இலேசாக்கியது. குதிரையின் குதத்திற்குள் கை வைத்து அந்த இரவில் பரிசோதிப்பது சந்தோசத்தையளிக்கும் விடயம் அல்லவே.
காருக்குள் இருந்து பரபின் ஆயிலை எடுத்து வாளிக்குள் ஊற்றிவிட்டு குதிரையின் மூக்குக்குள் ஒரு ரப்பர் குழாயைச் செலுத்தும்போது மேல் உதட்டில் உரிமையாளர் கயிற்றுத் தடத்தால் இறுக்கி பிடித்துக்கொண்டிருந்தார். ரப்பர் குழாய் இரைப்பைக்குள் சென்று இருந்தால் புல்லுமணம் அந்த குளாயின் அடுத்த முனையில் மூக்கை வைத்து நுகரும் போது வரவேண்டும். இல்லாவிடில் குழாய் நுரையீரல் உள்ளே இருக்கிறது என்பதாகும். நுரையீரலுக்குள் பரபின் ஒயில் போனால் குதிரை உடன் இறப்பது நிச்சயம். புல் மணத்தை உறுதிப்படுத்திவிட்டு சைக்கிள் பம்பால் ஒரு லீட்டர் பரபின் ஒயிலை இரைப்பையுள் செலுத்திவிட்டு, வேலை முடிவடைந்தது என்ற திருப்தியுடன் வெளியே வந்தாலும் குதிரைக்கு எதனால் வயிற்றுவலி என தெரிந்து கூறியது அந்த மீசைக்கார இத்தாலியர்தான் என்ற விடயம் சுந்தரம்பிள்ளைக்கு மனத்தில் இருந்து அகலவில்லை. அது இந்த நடு இரவில் பல கிலோ மீட்டர் துாரம் வந்து செய்த மருத்துவத்திற்கு நிறைவற்ற தன்மையை கொடுத்தது. அந்த இத்தாலியர் சொன்னதைச் செய்தேன். இதில் அதிக பெருமை அவருக்கே சார்கிறது அல்லவா?
வீடு திரும்பும் போது வானம் வெளுத்து அந்தப் பிரதேசம் உயிர் பெறத் தொடங்கி விட்டது. போகும் போது இருந்த இரவின் அமைதிக்கும் தற்போது இருக்கும நிலைக்கும் எவ்வளவு பெரிய மாறுதல்?. மரங்கள் குறைந்து தட்டையாக நிலப்பரப்பாக தெரிந்தது அந்த பிரதேசம். இன்னும் முற்றாக அடையாளம் தெரியாத இருள் இருந்தாலும் கிளிகளின் வர்க்கத்தைச் சேர்ந்த கொக்கற்றோ இளம் பச்சை வர்ண பறவைகள் அங்கும் இங்கும் பறந்து வானத்தையே மறைத்ததுடன் அவற்றின் குரல் அந்தப்பிரதேசத்தை ஆக்கிரமித்தது மிகவும் புதுமையாக இருந்தது. அந்தக்காட்சி அந்த பரந்த சாம்சன் பாலைவனப்பகுதியின் விளிம்பு பிரதேசத்தில் அதிகாலையாகிவிட்டது என்பதை தெரிவித்தது.
அதன்பின்பு சில மாதங்கள் மட்டும் அந்த தென் அவுஸ்திரேலியாவில் வேலை செய்ததால் சுந்தரம்பிள்ளைக்கு ஒரு சில குதிரை சம்பந்தமான வேலைகளே செய்ய வேண்டி இருந்தது. நாய் பூனைகளுக்கு மட்டுமே வைத்தியம் செய்ய வேண்டிய வேலை மெல்பேனில் கிடைத்ததால் சிறிதளவு கிடைத்த குதிரை வைத்திய அனுபவம் கையை விட்டுப் போனது.
இப்படி குதிரைப் பந்தயம் மட்டுமல்ல குதிரை வைத்தியம் மீதும் கசப்பான அனுபவம் ஏற்பட்டதால் சுந்தரம்பிள்ளை வீட்டில் குதிரைப்பந்தயத்தை பார்த்து விடுமுறை தினமாக இன்புற்றிருக்க விரும்பவில்லை. வேலை செய்ய விரும்பியதற்கு மற்றைய காரணம் அன்று விக்டோரிய மாநிலத்தில் விடுமுறையானதால் வேலைசெய்யும் போது அதிக வேதனம் கொடுக்கப்படுவதுமாகும்.
மெல்பேன் குதிரைப்பந்தய தினத்தில் வைத்தியசாலையில் அதிக வேலை இருக்கவில்லை. காலையில் சிலர் வந்து போனாலும் நடுப்பகலின் பின்பாக வைத்தியசாலை அமைதியாக இருந்தது. தேநீர் குடித்தபடி பத்திரிகையில் மூழ்கி, சுந்தரம்பிள்ளை இருக்கும்போது போலின் தொலைக்காட்சியில் குதிரைப்பந்தயத்துக்கு வந்திருநத பெண்களின் உடை அலங்காரத்தையும் அவர்களது தொப்பிகளையும் பார்த்து கொண்டு அதை பற்றிய நேர்முகவர்ணனையில் இருந்தாள். அவளுக்கும் குதிரைகளிலோ அவைகள் வெற்றி பெறும் பணத்திலோ அக்கறை இல்லை. இந்த மெல்பேன் குதிரைப்பந்தய நாளும் அதனைத் தொடர்ந்து வரும் சில நாட்களும் பெண்மணிகள் தங்கள் உடையலங்காரத்தை காட்சிப்படுத்தும் நாட்கள். அதனால் போலினினது உடல் வைத்தியசாலையிலும் அவளது ஆத்மா பிளமிங்ரன் குதிரைப்பந்தய திடலிலும் சஞ்சரித்தது.
திடீரென அவளது நேர்முக வர்ணனைக் குரலை கேட்காததால் அவளைத் திரும்பிப் பார்த்த போது போலினை தொலைக்காட்சியருகில் காணவில்லை. எங்கே என நினைத்துக் கொண்டிருந்தபோது கிரிக்கத் தோரணையில் ஆங்கிலம் பேசிய ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் ஜெர்மன் செப்பேட் நாயொன்றை தள்ளு வண்டியில் வைத்து தள்ளியபடிவந்தவள் கொரிடோரை அடைந்ததும் “சிவா சிவா“ என ஏலம் போட்டபடி வந்தாள்.
பத்திரிகையையும் தேநீரையும் அப்படியே விட்டு விட்டு முதலாவது ஆலோசனை அறைக்கு வந்த போது சுந்தரம்பிள்ளையிடம் அந்தப் பெண் ‘ரோசியை கார் அடித்துவிட்டது டொக்டர்’ என்றாள். எதுவித மேக்கப் பூச்சும் இல்லாத அவளது முகத்தில் கோடிட்ட கண்ணீரைத் துடைத்தபடி மூக்கை சிறுபிள்ளைகள் போல் உறிஞ்சியபடி பேசினாள்.
ரோசி என்ற அந்த ஜெர்மன் செப்பேட் எதுவும் நடக்காத போல் தனது தலையை தூக்கி அந்த தள்ளு வண்டியில் இருந்தபடி தான் இருக்கும் சூழ்நிலையை அளவெடுத்தது.
போலின் ரோசியை மெதுவாக மேசைக்கு மாற்றிய போது முதுகெலும்பு பகுதி பாதிக்கப்பட வில்லை எனத் தெரிந்தது. ஆனால் எழுந்திருக்க முயற்சித்த போது ரோசியால் நிற்க முடியாது என்பது தெரிந்ததும் ஒவ்வொரு கால்களாக பரிதோதித்த போது இடது தொடையில் முறிவு தெரிந்தது. உடனே எக்ஸ்ரேயை எடுத்ததும் முறிவை உறுதிப்படுத்திவிட்டு அந்த எக்ஸ்ரேயை அந்தப் பெண்ணிடம் காட்டியதும் மீண்டும் கண்ணீர் மீண்டும்அவளது கன்னத்தில் ரவிவர்மாவாக ஓவியம் கீறியது.
‘எனது கணவர் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார். அவர் இந்த நாயைக் இரண்டு மாதக் குட்டியாக கொண்டு வந்து எனது பிறந்த நாளுக்குப் பரிசாக நாலு வருடங்களுக்கு முன்பாக தந்தார்.நான் ரோசியையும் இழப்பதற்குத் தயாரில்லை. எப்படியும் இதைக் குணப்படுத்தித் தாருங்கள்’ என மன்றாடினாள்.
அவளது மன்றாட்டத்தைப் பார்த்து போலினுக்கு கண்ணீர் வந்து விட்டது. அவளை அணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொன்னாள். போலினோடு வேலை செய்யும்போது சுந்தரம்பிள்ளைக்கு இலகுவாக இருக்கும். செல்லப்பிராணிகளின் பிணி, துன்பத்தின் கவலையில் துவளும் உரிமையாளர்களுக்கு அறுதல் அளிப்பதில் அவளுக்கு நிகரான நேர்ஸ் அந்த வைத்தியசாலையில் இல்லை. கண்கள், வார்த்தைகள், உடல் மொழிகள் மூலம் அவளது வைத்தியம் உரிமையாளரைச் சாந்தப்படுத்தும் போது வைத்தியர்களால் செல்லப்பிராணிகளின் பிரச்சனையில் மட்டும் கவனம் செலுத்தமுடியும். அல்லாத போது இரண்டு விடயங்களையும் செய்ய வேண்டிய நிலைக்கு மிருகவைத்தியர் தள்ளப்படுவார்.
‘நாங்கள் இந்த எலும்பு இரண்டையும் உருக்கு பிளேட்டை பாவித்து பொருத்தலாம். நாளை இதைச் செய்கிறேன்’ என சுந்தரம்பிள்ளை உறுதி மொழி கொடுத்த போது சுந்தரம்பிள்ளையினதும் போலினதும் கைகளைப் பிடித்தபடி ‘உங்களைத்தான் நம்பியுள்ளேன்’ என மீண்டும் கூறிவிட்டு தயக்கத்துடன் திரும்பிப் பார்த்தபடி வெளியேறினாள்.
அசோகனின் வைத்தியசாலை அத்தியாயம் 17
காலோஸ் மீதான அந்தப் புகார் ஜிவ் என்ற பூனையின் உரிமையாளரான விக்டர் வில்லியத்தால் வைக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் நூறு பேர் வாயால் குறை கூறும் போது ஏற்படும் தாக்கத்திலும் பார்க்க எழுத்தில் அளிக்கப்படும் மனுவுக்கு அதிக தாக்கம் உண்டு. விக்டர் வில்லியம் எழுத்தில் கொடுக்கப்பட்ட மனுவுக்கு நிர்வாகம் எப்படியும் பதில் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது. பூனைகள் ஒன்பது தரம் உயிர் தப்பும் என்ற ஆங்கில கூற்றுக்கு ஏற்ப ஜிவ் ஒரு விதமாக உயிர் மீண்டது. வைத்தியசாலையில் வைத்து அளிக்கப்பட்ட தீவிர சிகீச்சையால் குணமாகி வீடு சேர்ந்தாலும் விக்டருக்கு ஏற்பட்ட கோபம் தீரவில்லை. காலோசின் கையால் உடலில் அடி விழுந்தால் கூட பொறுத்திருக்க முடியும். புவ்ரா என்ற ஹோமோசெக்சுவல் ஆண்களை இழிவாக பேசும் அந்தச் சொல், நெஞ்சில் நெருப்பால் சுட்டது போல் இருந்தது. சாதாரணமான ஆணுக்கு அவனது ஆண்மையை பழிக்கும் போது ஈகோவில் ஏற்படும் தாக்கம் மற்றயவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹோமோசெக்சுவல்காரரை இப்படியான சொற்களால் தாக்குவது வழமையானது. விக்டர் அந்தச் சொல்லால் ஏற்பட்ட அவமானத்திற்கு எதிர் நடவடிக்கையை நீதிமன்றத்தில் எடுக்க நினைத்து தனது ஒரு பால் நிலையை இழிவு செய்ததாக வழக்கொன்று போடுவதற்கு ஆரம்பத்தில் தீர்மானித்தார் விக்டர் வில்லியம். அதற்காக வழக்கறிஞரான நண்பன் ஒருவனைத் தொடர்பு கொண்ட போது வைத்தியசாலையில் இந்த விடயத்தை பார்த்தவர்கள் உனக்கு ஆதரவாக சொல்லமாட்டார்கள். உனக்குச் சாதகமான சாட்சிகள் இல்லாத போது வழக்கு வெல்லாது. வெல்ல முடியாத விடயத்தை எடுத்துக் கொண்டு நீதிமன்றம் போவதில் பிரயோசனம் இல்லை எனக் கூறி சமாதனப்படுத்தியதால் சிறிது விக்டர் குளிர்வடைந்து கடிதத்தில் தனது புகாரை எழுதி நிர்வாகத்திடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ரொன் ஜொஸ் இதற்கு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி கொடுத்தார். காலோஸ் மீதான இந்தப் புகாரை விசாரணைக்கு எடுக்க வேண்டுமென்பதில் செயலாளரான ரொன் ஜோய் விடாப்பிடியாக நின்றார். இம்முறை எவராலும் தடுக்க முடியவில்லை. மனிதர் இதைச் சாதித்து விட்டுத்தான் இளைப்பாறுவது என்று தனிபட்ட சவாலாக எடுத்துவிட்டார்.
கடந்த முறை பத்து வருடத்துக்கு மேலாகத் தலைமை வைத்தியராக இருந்த ஒருவரை விசாரணைக்கு எடுக்க நிருவாக சபை மறுத்துவிட்டது. இந்தக் கடிதத்தை விசாரணைக்கு எடுக்காது விட்டால் தனது வேலையை விட்டு விலகுவதாக அந்தக் கூட்டத்தில் கூறிய போது இருபது வருடமாக இருந்த வைத்திய சாலை செயலாளரை இழக்க விரும்பாமல் அரைமனத்துடன் நிருவாக சபையினர் காலோஸ்சிடம் விளக்கம் கேட்க சம்மதம் தெரிவித்தார்கள்.
வழமை போல் மாலை இரண்டு மணியளவில் தொடங்கிய கூட்டத்தில் அரை மணித்தியாலத்தில் வெளியே வந்த ரொன் ஜோய் வைத்திய சாலையின் தேநீர் கூடத்தில் இருந்த காலோஸ்சிடம் ‘உம்மை வரும்படி அழைக்கிறார்கள்’என்ற போது அதை சட்டை செய்யாமல் எதிரே இருந்த கதிரையை காட்டி அதில் இருக்கும்படி காலோஸ் ரொன்னைக் கேட்டது அவருக்கு வியப்பாக இருந்தது.
இவன் என்னை ஆழம் பார்கிறானா? இம்முறையும் திருமதி கில்பேட் திருமதி ஒச்சாட் போன்றோரின் துணையுடன் தப்பிவிடலாம் என்று இலகுவாக எடுக்கிறானா?
இருவரும் ஒருவர் முகத்தை பார்த்து மனநிலைகளை புரிந்து கொள்ள முயற்சித்தார்கள். பரஸ்பரம் கண்கள் ஊடாக எண்ணங்கள் தெரிகிறதா என யோசித்தனர். இருவரது முகத்திலும் பரஸ்பரமான வெறுப்பு மட்டும் தெரிந்தது. மனங்களில் வெறுப்பு ராட்சத மரமாக வேர் விட்டு கிளைவிட்டு இருப்பதை எப்படி மறைக்க முடியும்? அப்படியான மறைப்பு முயற்சியில் ஈடுபட இருவரும் தயாராக இல்லை. வார்த்தைகளைப் பரிமாறினால் காலோஸ்சிடம் வார்த்தைகள் வேகமாக வரும் என்பது ஏற்கனவே ரொன் ஜொய்சுக்கு தெரிந்த விடயம். நேரடியாக முரண்பட்டால் தோற்பது தானாகத்தான் இருக்கும் என்பதால் என்ன நடக்கிறது பார்ப்போம் என்று நினைத்தபடி அமர்ந்தார்.
‘தயவு செய்து உங்களது பேனையைத் தரமுடியுமா? என்று காலோஸ் அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கையை நீட்டி கேட்டபோது ரொன் ஜொய்ஸின் கழுத்துப்பட்டை கட்டிய அவரது கழுத்தில் சிறிது வியர்த்தது. வெறுப்பு மறைந்து மனத்தில் குழப்பம் ஏற்பட்டது.
ஏதோ திட்டம் வைத்திருக்கிறான் என நினைத்தபோது இதயத்தின் துடிப்பு அதிகரித்து இரத்த அழுத்தம் கூடுவதாக உணர்ந்தார். தேவை இல்லாத பலப்பரீட்சையில் இறங்கி விட்டேனோ? இனிமேல் பினவாங்க முடியாது. இரண்டில் ஒன்றை பாத்திரவேண்டும் என தனக்கு தைரியத்தை தானே மனத்துக்குள் சொல்லிக் கொண்டார் குழப்பத்தை முகத்தில் காட்டாது சிறு பிள்ளை போன்ற அப்பாவியாக சிரித்தபடி பேனையை கொடுத்தபோது ‘அழகான பேனை’ எனக் கூறிய படி பொக்கட்டில் இருந்து எடுத்த கடிதத்தில் அந்த பேனாவால் கையெழுத்துப் போட்டு அதை ரொன் ஜோய்சிடம் நீட்டிய போது ‘இது என்ன?’ எனக் கேட்டபடி வாங்கிக் கொண்டார்.
‘இது எனது தலைமை வைத்தியர் பதவியில் இருந்த விலகும் கடிதம். இந்த கடிதத்தை நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டபின் எனது நிலையை விளக்க விரும்புகிறேன்’’
‘காலோஸ் ரிலாக்ஸ். நீர் வந்து விளக்கிவிட்டால் பிரச்சனை முடிந்து விடும். இதற்காக ஏன் பதவியை விலகவேண்டும்? தனது ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல். இவன் விலகினால் புதிய ஒருவரைத் தேட வேண்டிய வேலை தனது தலையில் வந்து முடியும். அதைச் செய்வது மிகவும் கடினமானது. மேலும் காலோஸை அவமானப்படுத்தி நிற்க வைத்து, அவன் தன் நிலையை விளக்குவதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தில் போட்ட சிறிய வியூகத்தில் இருந்து காலோஸ் இலகுவாக தப்பி செல்வதும் அவருக்கு பிடிக்கவில்லை.
பதவியில் ஆசைப்பட்ட ஒருவனை அவமானப்படுத்த முடியும். பதவி வேண்டாம் என காலோஸ் தூக்கி எறிந்த போது ரொன் ஜொய்சின் அவமானப்படுத்தும் ஆசை நிராசையாகி விட்டது.
‘நான் வந்து விளக்கம் சொல்ல விரும்புகிறேன். எனது தேநீரை குடித்து விட்டு இன்னும் கால் மணிநேரத்தில் வந்து சந்திக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு எனது இராஜினாமா கடிதத்தை நீங்கள் நிர்வாக குழுவில் தாக்கல் செய்யவேண்டும் இரண்டும் வேறான விடயங்கள்’ என உறுதியாகக் கூறினான் காலோஸ்.
வேறு வழியில்லாததால் அந்தக் கடிதத்துடன் எழுந்து போனபோதே இந்த இரவுண்டிலும் காலோஸ் வென்றதும் தான் தோற்றுப் போனதும் புரிந்தாலும் குறைந்த பட்சமாக தலைமை வைத்தியர் பதவியில் இருந்து காலோஸ் விலகியதை ஒரு ஆறுதல் பரிசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவரது உள்மனம் சொல்லியது.
உள்ளே சென்றதும் நிர்வாகக் குழுவிடம் விடயத்தை சொல்லும் போது வார்த்தைகளில் உற்சாகம் இருக்கவில்லை.வெறுமையான மன உணர்வே இருந்தது. ஆனால் திருமதி ஒச்சட் ‘பத்து வருடம் பொறுப்பாக இருந்து இந்த வைத்தியசாலையை நடத்திய ஒரு டொக்டரின் மேல் ஒருவர் ஏதோ ஒரு குற்றசாட்டு எழுதிவிட்டதும் அவரிடம் உடனே விசாரிக்க முடிவு செய்தது சரியானது அல்ல. மேலும் இப்பொழுது திரு ரொன் ஜொய்சின் அவசரத்தால் வைத்தியசாலை ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டது’ என நேரடியாக குற்றம் சாட்டியதும் திருமதி கிளிபேட் அதை ஆமோதித்தார். மற்றைய அங்கத்தவர்களும் மவுனத்தால் ஆமோதித்தது போல இருந்தது. திரு லோட்டன் மிஸ்டர் ‘ஜொய் நீர் அவசரப்பட்டுவிட்டீர். ஆனால் ஏற்கனவே நடந்ததை மாற்ற முடியாது. மேலும் என்ன செய்வது என்பதை சிந்திப்போம் என்றார்.
செயலாளர் ரொன் ஜோய் திருடன் முதலாவது தடவையாக திருட முயன்று கையும் களவுமாக பிடிபட்டது போன்று அவமானத்தில் தலையைக் குனிந்து கொண்டார். இந்த விவகாரம், இப்படி முடியும் ஒரு சாத்தியத்தை எதிர்பார்க்காதது தனது தப்பு என்பதும் அவருக்குப் புரிந்துவிட்டது. இளைப்பாறவிருந்த சில மாதத்தில் தேவையில்லாமல் இந்த விடயத்தில் காலை விட்டது தவறு. அப்படிச் செய்ய முயலும் போது பின் விளைவுகளை யோசிக்காதது தனது பிழை என்ற சுய கழிவிரக்கம் அவரைப் பீடித்துக் கொண்டது. தனிப்பட்ட முறையில் காலோஸ் மீது கொண்ட காழ்ப்புணர்வு எனது சிந்தனையை மழுங்கப்பண்ணி இருக்கிறது. கடந்த இருபது வருடத்தில் செய்த சேவை எல்லாம் இறுதியில் அவமானத்தில் முடிந்தது என மனத்தை உறுத்தியது. புண்பட்டு சீழ் வடியும் கர்வத்துடன் அவரும் செயற்குழு அங்கத்தவர்களோடு சேர்ந்து காலோசுக்காக காத்திருந்தார். அந்த கால் மணிநேரம் பல ஆண்டுகள் காத்திருந்தது போல் அவருக்கு மனச்சேர்வைத் தந்தது. அந்த இடத்தில் இருந்து திடீரென மறைந்து விடவேண்டும் என உள்மனது கூறியது. அது சாத்தியம் இல்லை என ஆறுதலாக நினைத்துக் கொண்டு இருந்தார்
ஓட்டப்பந்தயத்தில் இறுதிப்புள்ளியை முதலாவதாக அடைந்த சிறுவன் பூரணமான வெற்றி சிரிப்புடன் கைகளை ஆட்டியபடி பெற்றோரை நோக்கி வருவதுபோல் காலோஸ் உள்ளே நுளைந்த போது செயலாளருக்கு வெறுப்பு முகத்தில் முகத்தில் வடிந்தது. நிர்வாகக்குழு அங்கத்தினருக்கு காலோசின் அந்தநிலை வியப்பைக் கொடுத்தது. உள்ளே நுளைந்ததும் ப வடிவில் இருந்த அந்த மேசையின் இடது பக்கத்தியில் நடுப்பகுதியில் திருமதி கில்பேட்டுக்கு பக்கத்தில் கதிரையை இழுத்து இருந்து கொண்டு அவருக்கு குட் மோனிங் சொன்ன விதம் செயலாளருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
திரு லோட்டன் ‘மன்னிக்க வேண்டும் காலோஸ். இந்த கடிதத்தைப் பற்றிய அபிராயத்தை கேட்க நாங்கள் நினைத்தோம். ஆனால் நீங்கள் பதவி விலகுவதாக எழுதி கடிதம் கொடுத்தி;ருக்கிறீர்கள். இதன் அர்த்தம் புரியவில்லை. இந்த இராஜினாமாக் கடிதத்தை நாங்கள் ஏற்கவில்லை.’
உட்கார்ந்திருந்த நாற்காலியை முன்னால் இழுத்துவிட்டு சிரித்தபடி பரந்த தோள்களை அசைத்துவிட்டு சகலரையும் ஒரு சில கணங்கள் கண்களால் காலோஸ் பார்த்துவிட்டு மீண்டும் திரு லோட்டனை நோக்கி ‘நான் பதவியில் இருந்து விலகுவது இந்த விடயத்தால் மட்டுமல்ல. தற்பொழுது சிலர் என்னை இந்தப் பதவியில் இருந்து விலத்துவதற்குப் பல வழியில் முயல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் வைத்தியசாலையில் மற்றவர்கள் என்னில் நம்பிக்கை வைத்து ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் நான் இந்த பொறுப்பில் தொடர்ந்து இருக்கமுடியும். நான் பத்து வருடங்களாக இந்தப் பதவியை என்னால் முடிந்தவரை சரிவரச் செய்திருக்கிறேன். இதைச் செயலாளர் ரொன் ஜொஸ் கூட ஒப்புக் கொள்ளுவார். வேறு ஒருவர் வந்து இந்த வேலையைச் செய்தால் நான் அதற்கு ஒத்துழைப்புக் கொடுப்பேன். அதில் எவரும் எந்தச் சந்தேகமும் படத் தேவையில்லை. இந்த வைத்தியசாலையையும் அதனது நோக்கமும் உன்னதமானவை என்பதால் இதை நடத்தும் உங்களுக்கு என்னால் எதுவித சிரமமும் வராமல் பார்த்துக்கொள்வேன். இப்பொழுது என் மேல் வைக்கப்பட்ட புகாருக்கு வருகிறேன். மாலை ஐந்தே முக்கால் மணி போல் வந்த அந்தப் பூனைக்கு நான் மருந்து கொடுத்து விட்டுத்தான் சென்றேன். ஆனால் எனது தெரிந்தவர் ஒருவரை ஏயர்போட்டில் பார்க்கும் அவசரத்தில் மருத்துவக் குறிப்பு எழுத மறந்து விட்டேன். காலை அந்தப் பூனையை பார்த்ததும் ரிமதி பாத்தோலியஸ்; என்னிடம் வந்து பேசி இருக்கவேண்டும். அதற்குமாறாக என்னில் குற்றம்சாட்டி அந்த உரிமையாளருக்கு ஆத்திரத்தை கூட்டியததால் அந்த மனிதர் எனது விளக்கத்தை கேட்காமல் எனது சேட்டை பிடித்தார். என்னை அடிக்க கையோங்கிய போது நான் என்னைப் பாதுகாக்க முயற்சித்தேன். மேலும் அவசரத்தில் எனது வாயால் புவ்ரா என்ற வார்த்தை வந்தது உண்மை. ஆனால் எனது சேட்டை பிடித்து தாக்க முயற்சித்த பின்புதான் நான் அந்த வார்த்தையைப் பேசினேன்.’
‘அப்படியானால் இதை ஏன் ரொன் ஜொஸ்சிடம் கூறவில்லை? என கேட்டார் லோட்டன்.
‘என்னிடம் இந்தப் புகார் கடிதம் வந்ததாக ரொன் சொல்லி இருந்தால் நான் பதில் கூறலாம். ரோன் நான் குற்றவாளி என முடிவு எடுத்து இந்த புகாரை உங்களிடம் கொண்டு வந்த பின்பு நான் எதுவும் செய்யமுடியாது.’
‘இப்பொழுது என்னால் உமது நிலையை புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த நேரத்திலும் உமது ராஜினாமா கடிதத்தை நீங்கள் மீள்பரிசீலனை செய்தால் நல்லது. இரண்டு கிழமை உங்களுக்கு அவகாசம் தருகிறோம்’ எனக் கூறிய போது ‘நன்றி’ எனக் கூறிவிட்டு காலோஸ் வெளியேறிய போது, ரொன் ஜொய் தலை நிமிர்ந்து பார்கவில்லை. மானம் மரியாதை என்பனவற்றை இழந்து தான் ஒரு சடலமாக இருப்பதாக உணர்ந்தார்.இம்முறையும் காலோஸ் தான் வகுத்த வியூகத்தை உடைத்து வெளியேறியது மட்டுமல்ல தன்னை அந்த பொறியில் சிக்கவைத்து விட்டதாக அவரது மனம் நினைத்தது.
------
சுந்தரம்பிள்ளை ஹெலன் என்ற அந்த பெண்ணுக்கு வாக்களித்தபடி மெல்பேண் குதிரைப் பந்தயத்திற்கு அடுத்த நாளான புதன்கிழமை அந்த ஆபரேசனை செய்ய காத்திருந்தான். முன்பாக உருக்குத்தகடு வைத்து பொருத்திய ஜெர்மன் செப்பேட்டின் நினைவு இடைக்கிடை வந்து மனத்தில் மரம் கொத்தி போல் துளையை போட்டுக்கொண்டே இருக்கும். பல விதத்தில் வைத்தியராக விட்ட தவறுகள் மனத்தளர்ச்சியை கொடுத்த போதும் எதிர்காலத்தில் அந்தத் தவறைப் பாடமாக எடுத்துக் கொள்ள உதவி இருக்கிறது.
சுந்தரம்பிள்ளை தொடர்சியாக அறிந்து கொண்ட உண்மை இந்த வைத்திய துறையில் தவறுகளை மூடி மறைக்க முடியாது. கொலை செய்து விட்டு கடலில் போட்ட சடலம் அடுத்த சில நாட்களில் மீண்டும் அலையால் கரையில் ஒதுங்குவது போன்று தவறுகள் வெளிப்படும். தவறுகள் ஏற்பட்டால் அதை நேர்மையாக எதிர் கொள்ளுவது நேர்மையானது மட்டுமல்ல சிக்கலற்றது என்பது தெளிவாகப் புரிந்து கொண்ட பாடம்.
சுந்தரம்பிள்ளை காலையில் வேலைக்கு வந்ததும் நாய் கூடுகள் இருக்கும் பகுதிக்கு சென்று ரோசி என்ற அந்த ஜெர்மன் செப்பேட் நாயை சென்று பாரத்தான். அது மூன்று கால்களில் நின்றாலும் தனக்கு எதுவும் நடக்கவில்லை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்பது போல் நின்றது. வாலை மட்டும் அசைத்தபடி “தேவையில்லாமல் என்னை இந்தக் கூட்டில் போட்டு அடைத்திருக்கிறீர்கள். என்னை சுற்றி நிற்கிற நாய்கள் பைத்தியம் பிடித்தவை போல் இரவு முழுக்க குலைத்துக்கொண்டிருந்தன. இவைகளுக்கு வாய் வலிக்கவில்லையா? கால் உடைந்த எனக்கு வலியை மறந்து ஒரு கண்ணுக்கும் நித்திரை கொள்ள விடவில்லை. அதிலும் எதிரில் நிற்கும் இந்த பொமரேனியன் என்னைப் பார்த்து ஏதோ பேயை பார்த்து குலைப்பது போல் இரவு முழுவதும் தொடர்சியாக குலைத்தது. உண்மையில் என்னைப் பார்த்துத்தான் குலைத்ததா இல்லை நாளை தான் இழக்கப்போகும் ஆண்மையை நினைத்ததால் ஏற்பட்ட சோகத்தால் குலைத்ததா என எனக்குப் புரியவில்லை. இரவு எனக்குத் கிடைத்த சாப்பாட்டை எந்த நாயும் சாப்பிடாது. அப்படியாக வயிற்றை குமட்டும் மணம். ஆனாலும் பசிக்கிறது. என்ன செய்வது என சாப்பிட்டதால் இப்பொழுது வயிறு சரியில்லை. கட புட என வாய்வு வயிற்றுள் ஏதோ எலி ஓடுவதுபோல் சத்தமாக இருக்கிறது. நான் வீட்டுச் சாப்பாடுதான் வழமையாக சாப்பிடுவது. இங்கு எல்லாம் மாறி நடக்கிறது. இப்பொழுது காலை ஒன்பது மணியாகிவிட்டது. காலை ஆகாரம் தரவில்லை. வாயில்லாத எங்களை இப்படி பட்டினி போடுவது இந்த நாட்டில் குற்றமானது. போததற்கு நாக்கை நனைக்க எனக்குப் பச்சைத் தண்ணீர கூடத் தரவில்லை. இது என்ன கொடுமையாக இருக்கிறது” என புலம்வது போல் வாயை அசைத்தது.
சுந்தரம்பிள்ளை திறந்து வைத்த கதவு வழியால் நாய்கள் அடைத்து வைத்த கூட்டுப்பகுதி இருந்த இடத்துக்குள் மக்சி தனது சந்தன கலரான அடர்ந்த வாலை ஆட்டியபடி வந்து சுந்தரம்பிள்ளையின் கால்களை மூக்கால் உராய்ந்து கொண்டு நின்றது. அதன் தலையைத் தடவிய படி ‘மக்ஸி என்ன ஏதாவது சாப்பாடு மிகுந்திருக்குமா என்றா இங்கு வந்தாய்? எல்லா நாய்களும் நக்கி வழித்து விட்டன. உன்பாடு ஏமாற்றம். அது போதாமல் எல்லாக் கூட்டையும் ஒரு பருக்கையில்லாமல் நன்றாக தண்ணீர் விட்டு கழுவி இருக்கிறார்கள்.’
‘நான் சாப்பட்டுக்கு வரவில்லை. எனக்கு வயிறு நிரம்பி இருக்கிறது எனக்கூறி மக்ஸி ஏப்பம் விட்டது.’
‘அப்படியானால் ஏன் உள்ளுக்கு வந்தாய்?
‘நீ என்ன செய்ய போகிறாய் எனப் பார்க்லாம் என்றுதான்...“
‘அதென்ன உனக்கு என் மேல் கரிசனை?“
நீ மட்டும்தான் என்னையும் கொலிங்வுட்டையும் புரிந்து கொள்ளபவன் என்பதால் எங்கள் மன வெளிப்பாட்டை உன்னிடம் வாய்விட்டு சொல்ல முடிகிறது. இந்த சுயநலத்தால் உம்மில் எமக்கு கரிசனை.
‘அப்படியா? மக்ஸி டார்லிங்’
‘உனது நண்பன் இப்பொழுது மேலதிகாரியில்லை. உனக்கு சப்போட் இல்லாததால் உனக்கு எதிராக சிலர் சதி செய்கிறார்கள். செய்யும் வேலையை கவனமாக செய்யாவிட்டாலும் கூட செய்த வேலையை திறமையாக எழுதுவது முக்கியம் தெரியுமா?’ உனக்கு எழுதத் தேவையான அளவு ஆங்கிலம் தெரியும் தானே?
‘என்ன நக்கல் போல இருக்கு?’
‘உண்மையான கரிசனை.’
‘மக்ஸி இதெல்லாம் எனக்குத் தெரியும். நீ சொல்லத்தேவையில்லை. என்னை பார்த்துக் கொள்ள என்னால் முடியும். உன்னிடம் இருந்து அறிவுரை பெறும் நிலையில் இல்லை. உன் வேலையைப் பார்த்துக்கொள். எனப் பொரிந்தான்.
‘கொஞ்சம் பொறுமையாகக் கேள். விடயம் புரியும்’
நீ கவலைப்படாதே. எதற்கும் குறையச் சாப்பிட்டு விட்டு அதிகம் நடப்பது உனக்கு நல்லது.’
‘இதைத்தான் எல்லோரும் சொல்லுவீர்கள். அதுவும் எனக்குத் தெரியும்’ எனத் திரும்ப முயற்சித்த போது ‘மக்ஸி திருட்டு முண்டம். உன்னை இந்தப்பகுதியின் உள்ளே வரவேண்டாம் என சட்டம் போட்டது தெரியாதா’ என மல்வின் காலை ஓங்கி அடிப்பது போல் பாவனை செய்த போது ‘போடா குண்டா’ எனக்கூறிவிட்டு மக்ஸி வெளியே சென்றது.
சுந்தரம்பிள்ளை மக்ஸி கூறியதை அலட்சியம் செய்வது போல் வெளிக்காட்டினாலும் மனத்தில் ஒரு கிலேசத்தை உருவாக்கியது. காலோஸ் இராஜினாமா செய்த இடத்திற்கு இன்னும் ஒருவரும் நியமிக்கப்படவில்லை. காலோஸ் ஒரு மேலதிகாரியாக நடக்காமல் உற்ற நண்பனாக நடத்துவதும் அவனது வீட்டு விசேடங்களுக்கு அழைப்பது மூலம் நெருங்கிய நட்புணர்வு இருவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அந்த உணர்வு வேலைத்தலத்தில் ஒரு பாதுகாப்பாக இருந்தது உண்மை என்பதும் இப்பொழுது அந்த நிலைமை இல்லை என்பதும் ஏற்கனவே புரிந்திருந்தது.
வழக்கமாக செய்ய வேண்டியிருந்த கருத்தடை ஆபரேசன்கள் நாய் பூனைகளுக்கு செய்வதன் மூலம் சுந்தரம்பிள்ளைக்கு அன்றய காலை நேரம் கழிந்தது. மதிய உணவுக்கு மதுச்சாலைக்கு வரும்படி காலோஸ் அழைத்தபோது இன்று நான் வர முடியாது என மறுக்கையில், வழக்கமாக இலேசில் விட்டுப் போகாத காலோஸ் அன்று அன்ருவோடு மட்டும் சென்றது ஆச்சரியத்தை கொடுத்தது. தலைமை மருத்துவர் வேலையிலிருந்து இராஜனாமா செய்த நாளிலிருந்து சுய கழிவிரக்கத்துடன் மற்றவர்களுடன் பேச்சை குறைத்துக் கொண்டது மட்டுமல்ல. நான் பலருக்கு உதவி செய்தேன். தனக்கு ஒருவரும் உதவவில்லை என்ற ரீதியாகக் காலோஸ் பேசிக்கொண்டது சுந்தரம்பிள்ளைக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. சாமும் அன்ரூவும் அதற்கு வேறு விளக்கம் கொடுத்தார்கள். மரியாவுடன் காதல் செய்யவே காலோசுக்கு நேரம் போதவில்லை. இந்த நிலையில் தலைமை வைத்தியர் வேலை இல்லாமல் போனது சந்தோசத்தையும் நேரத்தையும் கொடுத்திருக்கும் என்றார்கள். மற்றவர்கள் ஓருவரும் எதுவும் இதைப் பற்றி பேசவில்லை. காலோஸ்சை பிடிக்காதவர்களும் யார் புதிதாக தலைமை வைத்தியராக வரப்போகிறர்கள் என்று ஆவலாக காத்திருந்தார்கள். அதேவேளையில் காலோஸ்சை மீண்டும் பதவி ஏற்கும்படி நிர்வாக குழு வற்புறுத்தலாம் என நினைத்தார்கள். நிர்வாக குழுவில் சகலருக்கும் காலோஸ் மேல் மரியாதை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
மதியத்துக்கு மேல் ரோசிக்கு மயக்க மருந்துக்கு முன்பு கொடுக்கும் வலி போக்கும் மருந்தைக் கொடுத்து விட்டு சுந்தரம்பிள்ளை ஆபரேசன் அறைக்கு அழைத்து வருகையில் ரோசி மெதுவாக மூன்று கால்களால் நடந்து வரும் போது தலையை தடவியபடி அழைத்து வந்தான். பின்பு ஆபரேசனுக்கு தேவையான உபகரணங்களை தயாராக வைத்துவிட்டு எலும்பில் துளை போடுவதற்கான மிசினுக்கு தேவையான காஸ் சிலிண்டரைக் கொண்டு வந்தான். சிலிண்டரில் இருந்து வரும் காற்றுத்தான் எலும்பைத் துளைபோடும் டிரில்யை இயக்குவது. மயக்க வாய்வுகளை பாவிக்கும் இடத்தில் மின்சாரத்தால் இயங்கும் டிரில்லை பாவித்தால் ஏதாவது வெடி விபத்து ஏற்பட சாத்தியம் உண்டு என்பதால் காற்றால் இயங்கும் டிரில் மட்டும் பாவிக்கப்படும்.
‘சாம் தேவையான அளவு அந்த சிலிண்டரில் ஏர் இருக்கிறதா?
‘அப்படித்தான் நினைக்கிறேன். உபரியாக வேறு ஒரு ஏர் நிரம்பிய சிலின்டர் உள்ளது’.
ரோசி இப்பொழுது நிலத்தில் நாலுகால்களையும் நீட்டியபடி படுத்து விட்டது. அதனது கண்கள் கஞ்சா அடித்த மனிதன் போல் கண்கள் உட்சொருகின. கொடுத்த மருந்துகள் வேலை செய்யத் தொடங்கிவிட்டது என உறுதிப்பட்டதும் ரோசியை மேசையில் தூக்கி வைத்து மேற்கொண்டு மயக்க மருந்தை இரத்தக் குளாயில் ஏற்றி முற்றாக மயக்கம் அடைந்தவுடன் தொண்டைக்குள் குளாயை செலுத்தி அந்த குளாயை மயக்க மருந்து வாயுவாக உள்ள மெசினோடு பொருத்தியதும் ஆபரேசனுக்கு தயாரான நிலையை ரோசி அடைந்தது. ஆரம்பத்தில் சுவாசம் அதிகமாக இருந்தது. அதை அவதானித்த மயக்க வாயுவை சிறிது சாம் கூட்டிய போது சுவாசம் மீண்டும் சாதரணமான நிலைக்கு வந்தது. உடைந்த காலில் இருந்து மயிரை சவரம் செய்து அந்தப் பகுதியை பல தடவை நுண்ணியிர் கொல்லி திரவத்தால் சுத்தப்படுத்தி விட்டு ஒப்பரேசன்; மேசையில் கிடத்தி விட்டதும் எனது வேலை முடிந்தது, இனி உன்பாடு என்பது போல் சாம் சுந்தரம்பிள்ளையை பார்த்தான்.
கைளைப் பலமுறை உராய்ந்து கழுவிவிட்டு சுத்தமாக பச்சை கவுனுடன் கண்களைத் தவிர்த்து முகத்தை முழுவதும் மறைத்து மாஸ்க் போட்டு ஆபிரேசனுக்கு தயாராக சுந்தரம்பிள்ளை இருந்தான்.
சுந்தரம்பிள்ளைக்கு இந்த ஒப்பரேசன் ஒலிம்பிக் எடை தூக்கும் பந்தயத்தில் வெற்றியை அடைவதற்காக கடைசியாக தூக்க வேண்டிய எடையை பார்க்கும் அந்த எடை தூக்குபவரது மனநிலை போன்று இருந்தது. முன்பு செய்த தவறான இடத்தில் கால் பொருந்திய அந்த ஜெர்மன் செப்பேட், வைத்தியசாலையின் நீண்ட கொறிடோரில் காலைத் திருப்பியபடி நடப்பதாக நினைவு நிழல் போல் தொடர்ந்து வந்தது. நல்ல சேர்ஜனாக விரும்பும் ஒவ்வொருவர் மனத்தில் எப்பொழுதும் தோல்விகள் வடுக்காளாக தங்கி விடுகின்றன. பல வெற்றியளித்த ஆபரேசன்கள், சந்தித்த மனிதர்கள் ,அவர்களது செல்லப்பிராணிகள் காற்றோடு கலந்து போய்விடுகிறது.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காலோஸ் சொன்னது அந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வந்தது. தவறுகள் விடாமல் தேர்ச்சியடைந்த எந்த வைத்தியரையும் நான் பார்ததில்லை. அந்த தவறுகளும், அந்த தவற்றினால் உருவாகும் மன அழுத்தமும் தான் அடுத்த தவறில் இருந்து உன்னைக் காப்பாற்றுவது. மேலும் இந்த வைத்தியத்துறையின் தவறுகள் மறைக்க முடியாதவை.
ரோசியின் தொடைப்பகுதியை வெட்டி முறிந்த இரு எலும்புத்துண்டுகளையும் தசைகளில் இருந்த தனிமைப்படுத்தியாக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகி விட்டது. இப்பொழுது அந்த எலும்புக்கு இசைவான உருக்குத் தகட்டைப் போட்டு உருக்கு ஸ்குறு ஆணியால் இறுக்கி எலும்பை உறுதிப்படுத்தவேண்டும். உடைவின் இரண்டு பகுதிகளிலும் தலா இரண்டு என நான்கு ஆணிகளைப் போட்டாகி விட்டது. ஆனால் இரண்டு பக்கத்திலும் மூன்று ஆணிபோட்டால்தான் நல்லது என நினைத்துக்கொண்டு டிரில்லை எடுத்தபோது காற்று வரவில்லை. சிலிண்டரில் இருந்து காற்று முடிந்துவிட்டது. டிரில்லை ரோசியின் போர்த்திய உடலில் வைத்து விட்டு இரண்டு கையையும் விரித்து இப்பொழுது என்ன செய்வது என்ற தொனியில் சாமை சுந்தரம்பிள்ளை பார்த்தான்;.
எலும்பை பிடித்து உதவி செய்து கொண்டிருந்த சாம் பரபரப்பாக வெளியே சென்று புதிய ஒரு சிலிண்டரைக் கொண்டுவந்தான். இப்பொழுது அந்தச் சிலிண்டரை மயக்க மருந்து மிசினில் பொருத்துவதற்கு, அந்தச் சிலிண்டரைத் திறப்பதற்கான சாவி வேண்டும். சாவியைத் தேடி போது சாவி இருக்கும் இடத்தில் இல்லை. சாம் மற்றவர்களிடம் விசாரித்த போது சாவியை கடைசியாக பாவித்தது ரீவன் என சொல்லப்பட்டது. எல்லோரும் தங்களுக்கு தெரியாது எனக் கையை விரித்துவிட்டார்கள்.
ரீவன் மாலை ஐந்து மணிக்குத்தான் வேலைக்கு வருவதானதால் அவனால் எதுவித உதவியும் கிடையாது. ரீவனுக்கு அடுத்து சீனியரான நேர்சாக முக்கியமான வேலை வந்தால் சாமிடம் தான் உதவி கேட்பது வழக்கம். இதனால் சாமுக்கு மனத்தில் இது அவமானமாகவும் இருந்தது. தலையறுந்த கோழி மாதிரி அங்கும் இங்கும் ஓடி, சாவியைத் தேடிய சாமைக் கண்டு பலர் அனுதாபத்துடன் உதவி செய்ய வந்தாலும் அந்தச் சிலின்டரைத் திறக்க முடியவில்லை. வைத்தியசாலை முழுவதும் இந்த விடயம் பரவியதால் பலர் தங்களது வேலைகளை விட்டு வந்து நிலமையை வேடிக்கை பார்த்தும் சில அனுதாப வார்த்தைகளை உதிர்த்தும் சாமையும் சுந்தரம்பிள்ளையையும் கொல்லாமல் கொன்றார்கள். அனுதாபப் பார்வைகள் வார்த்தைகளை விட பல மடங்கு கூரானவை. இரத்தம் வழியாமல் கர்வத்தையும் மனத்துணிவையும் குத்திக் கிழித்து கந்தலாக்க கூடியவை என்பதை அன்று உணரமுடிந்தது. எதுவும் செய்யமுடியாமல் அரைவாசியில் நிறுத்தப்பட்ட அந்த ரோசியின் ஆபிரேசனைப் பார்த்தபடி மற்றவர்களின் அனுதாபங்களை ஏற்றுக் கொண்டு மரணவீட்டுக்கு வந்தவர்கள், இறந்தவரின் பிள்ளைகளுக்கு அனுதாபம் தெரிவிப்பதும், அதை பெற்றுக்கொள்ளுவது போன்ற மனநிலையில் சுந்தரம்பிள்ளை அந்த இடத்திலே நின்றான். கணக்காளர் ஜோன் கூட வந்து தனது பங்கிற்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் இதமாக இரண்டு வார்த்தை பேசிவிட்டு சென்றார்.
மதிய உணவு அருந்திவிட்டு தாமதமாக காலோஸ் வந்ததும் வழக்கான எக்காளமான சிரிப்புடன் ‘இது என்ன நாடகம் நடக்கிறது?. இவ்வளவு பேரின் உதவி எலும்பை நேராக பொருத்த தேவைப்படுகிறாதா?’ என்றதும் சுந்தரம்பிள்ளைக்கு இதயத்தில் ஊசியாக குத்தியது. என்றாலும். பொறுமையைக் காத்தபடி விடயத்தை விளக்கிய போது ‘ நாலு ஸ்குருவில் எலும்பு குணமாகியதை நான் பார்திருக்கிறேன்.
எலும்பு முறிவுக்கு இரண்டு பக்கம் தலா இரண்டு ஸ்குறு போட்டாகிவிட்டது. இப்படியே காத்திருந்தால் எலும்பில் தொற்று வந்துவிடும். உடனே ஒப்பரேசனை முடித்துவிடு’
‘இந்த நாய் மிகவும் துடியாட்டமானது; இதற்கு நாலு ஸ்குறு தாங்காது. எப்படியும் இந்த எலும்பு இணையாது.’
‘எலும்பு இணையாது விட்டாலும் மீண்டும் ஆபரேசன் செய்யலாம் எலும்பில் தொற்று நோய் வந்தால் எக்காலத்திலும் எலும்பு இணையாது’
அப்பொழுது சுந்தரம்பிள்ளை காலோசின் ஆலோசனையில் உள்ள உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஓப்பரேசனை நிறுத்தி முக்கால் மணி நேரமாகிவிட்டது. பலர் தியேட்டருக்குள் வந்தும் பேசியும் போனதால் அவர்களது வாய்களில் இருந்து தொற்று கிருமிகள் வர சாத்தியம் உண்டு. புதிய சிலிண்டரை திறக்கும் சாத்தியக் கூறு ரீவன் வரும்வரையில் இல்லை. புதிதாக ஒன்று கடையில் வாங்கி வர நேரமாகும் என்பதால் காலோசின் யோசனையைக் கேட்பதைத் தவிர இப்பொழுது வேறு வழியில்லை. ஆபரேசனை முடித்து தசை, தோல் என்பவற்றை தைத்து விட்டு உடனே எக்ஸ்ரே எடுத்த போது எலும்பு பொருந்தியது போல் இருந்தாலும் மனத்தில் நிம்மதியில்லை. நடந்த விடயத்தை உரிமையாளருக்கு தெரிவிக்க வேண்டியது தனது பொறுப்பு என்பதால் ‘சாம் தயவு செய்து ஹெலனின் தொலைபேசி இலக்கத்தை எடுத்து டயல் பண்ணு. நான் பேசுகிறேன்.’
அடுத்த முனையில் தொலைபேசியில் ஹெலன் கிடைத்தவுடன் சாமிடம் இருந்து பெற்றுக் கொண்டு நடந்த விசயத்தை விளக்கி விட்டு ரோசிக்கு இரண்டு கிழமையில் நாங்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்போம் ஆபரேசன் சரியாகாது விட்டால் திரும்ப ஆபரேசன் செய்வோம். அதனது செலவை நாங்கள் பார்த்துக் கொள்வோம். நாளை நீங்கள் வந்து ரோசியைக் கூட்டிக்கொண்டு செல்லலாம் . மிக முக்கியமான விடயம் ரோசியைத் துள்ளாது பாத்துக்கொள்ள வேண்டும்.
அரைமணி நேரத்தால் ரோசி கண்களைத் திறந்தது.
‘சாம் வா நாங்கள் ரோசியைக் கொண்டு போய்க் கூட்டில் விடுவோம்;’
‘என்னை மன்னிக்கவேண்டும் சிவா .நான் அந்தச் சாவியை இருக்கிறதா என பார்த்திருக்கவேண்டும்’
அதுக்கு என்ன செய்வது? இப்படி ஒருவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
‘என்னத்தைச் சொன்னாலும் என் மனத்தில் சமாதானம் ஏற்படாது’
சாம் சுந்தரம்பிள்ளையுடன் ரோசியை மீண்டும் நாய்களின் கூட்டுப்பகுதிக்கு ரொலியில் தள்ளிக் கொண்டு சென்றான்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.