தினக்குரல் (மீள்பிரசுரம்): கடும் விமர்சனத்தில் சிக்கியது டில்லியின் இலங்கைக் கொள்கை!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவரின் 12 வயதுடைய மகன் ஆகியோருக்கு நீதி விசாரணைக்குப் புறம்பான விதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பிரிட்டனின் ஆவணக்காணொளியில் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதானது தனது அயலவர் தொடர்பான இந்தியாவின் நடு நிலைக் கொள்கைக்கு பரிசோதனையாக அமைந்திருக்கிறது என்று வோல்ஸ் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்திருக்கிறது. இந்தப் பத்திரிகையில் ரொம் ரைட் என்பவர் "கடும் விமர்சனத்தின் கீழ் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை' என்ற தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியின் காணொளியானது புதன்கிழமை (இன்று) வெளியிடப்படவுள்ளது. இறந்தவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சன்னக் காயங்களைக் காண்பிக்கும் ஒளிநாடா பிரதிமையை இந்தக் காணொளி கொண்டுள்ளது. மிக சமீபகமாக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்தக் காணொளி பிரதிமையைக் கொண்டுள்ளது. இறந்த பையனின் புகைப்படத்தை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் நேற்று செவ்வாய்க்கிழமை இந்திய பாராளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் நல்லிணக்க நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாக விமர்சித்துள்ளனர்.