கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வடகிழக்கு ஸ்ரீலங்கா : இரண்டு தலையீடுகளின் ஒரு கதை
1987ல் ஏற்படுத்தப்பட்டதும், ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என அழைக்கப்படுவதுமான இந்திய - ஸ்ரீலங்கா உடன்படிக்கை ஜூலை 29 ந்திகதியுடன் 25வருடங்களை நிறைவு செய்கிறது. ஸ்ரீலங்கா (1987 – 90) மற்றும் 1971ல் பங்களாதேஷை உருவாக்கிய கிழக்குப் பாகிஸ்தான் ஆகிய இந்தியாவின் இரண்டு இராணுவத் தலையீடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற ஒரு இராணுவ வீரன் என்கிற வகையில் இந்த இரண்டு முயற்சிகளிலும் இந்தியாவின் அதிகார சக்தியின் வலியுறுத்தலை ஒப்பீடு செய்ய முடியாதவனாக உள்ளேன். இரண்டு அரங்குகளிலும் மற்றும் அந்த நேரத்தில் அந்த இரண்டு நடவடிக்கைகளின் போதுள்ள இந்தியாவின் நிலைப்பாட்டிலும் முற்றான வேறுபாடு இருந்தது. பங்களாதேஷை பொறுத்தமட்டில் நன்கு பயிற்றப்பட்ட இராணுவமான பாகிஸ்தானுடன் நடத்தும் மரபுவழி யுத்தமாக இருந்தது. அதில் இறங்குவதற்கு முன்னர் பலத்த இராணுவ திட்டங்களையும் மற்றும் தயாரிப்புகளையும் இந்தியா மேற்கொண்டிருந்தது. அதற்கு முரண்பாடாக ஸ்ரீலங்காவில் இராணுவம் ஆயத்தமில்லாத நிலையில் இருந்தபடியால் தமிழ் கிளர்ச்சியாளர்களுடன் எதிர்க்கிளர்ச்சித் தாக்குதலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. பங்களாதேஷில் படைகளின் நிலை மிகவும் உயர் மட்டத்தில் இருந்தது. விமானப்படைகளும் மற்றும் கடற்படையினரும் ஒட்டுமொத்த தாக்குதல் திட்டத்திலும் ஒரு பகுதியாகச் செயற்பட்டன. ஸ்ரீலங்காவில் முக்கியமாக அது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பரவலாக்கப்பட்ட ஒரு காலாட்படை நடவடிக்கையாக இருந்தது.