தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல் உண்மை அறியும் குழு அறிக்கை 

மீள்பிரசுரம்: அறிக்கை தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல் – அ.மார்க்ஸ் நவம்பர், 15, 2012- சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய மூன்று தலித் கிராமங்கள், அருகாமைக் கிராமங்களிலுள்ள வன்னியர் சாதியினரால் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்ட செய்தி தீண்டாமை ஒழிப்பிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பலரையும் கலங்கடித்தது. சுமார் பத்தாண்டுகள் முன்புவரை “தமிழகத்தின் நக்சல்பாரி” என்றெல்லாம் அழைக்கப்பட்ட இப்பகுதி இன்று வரை நக்சல் எதிர்ப்புக் காவற்படைகளின் கடும் கண்காணிப்பிற்குரிய ஒன்றாக உள்ளது. நக்சல்பாரிகள் எனப் பொதுவாக அறியப்படும் பல்வேறு மார்க்சிய, லெனினிய, மாவோயிஸ்ட் கட்சிக் குழுக்களால் தீண்டாமை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்ட பகுதியும்கூட இது. இத்தகைய ஒரு பகுதியில் இப்படி ஒரு வன்கொடுமை நிகழ்ந்தது வருத்தத்தையும் வியப்பையும் அளித்தது. இந்தியத் துணைக் கண்ட அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்நிகழ்வு குறித்து ஏராளமான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணமுள்ளன. இவற்றைத் தொகுத்து, இவற்றின் உண்மைத் தன்மைகளை மதிப்பிடுவதும், இந்த வன்முறையின் பின்னணி, நிர்வாகத்தின் கவனக் குறைவுகள் மற்றும் அலட்சியங்கள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்டறிவதும்,, உடனடி நிவாரணங்கள், எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றைப் பரிந்துரைப்பதும் அவசியமாகிறது. இந்த அடிப்படையில் உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது.

தென்னிந்திய அளவில் மனித உரிமைக் களத்தில் பணிசெய்யும் முக்கிய அமைப்புகளில் நீண்ட காலமாகச் செயலாற்றும் அநுபவமிக்க மூத்த மனித உரிமைப் போராளிகள் பலரும் பங்குபெற்ற இக்குழுவை சென்னையில் செயல்படும் ‘சிவில் உரிமைக் கண்காணிப்புக் குழு’ (Civil Rights Monitoring Committee)  ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியது.

உண்மை அறியும் குழு உறுப்பினர்கள்

1. பேரா. அ.மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (People’s Union for Human Rights – PUHR), சென்னை,
2. திரு. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (Federation for People’s Rights – FPR), புதுச்சேரி,
3. திரு. வி.எஸ்.கிருஷ்ணா, தலைவர், மனித உரிமைக் கழகம் (Human Rights Forum), ஆந்திர மாநிலம்,
4. பேரா. நகரி பாபையா, மக்கள் ஜனநாயகக் கழகம் (people’s Democratic Front), பெங்களூரு,
5. திரு. சிவலிங்கம், ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,
6. வழக்குரைஞர் ரஜினி, மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (People’s Union for Human Rights), மதுரை
7. திரு. ஜி.கே.ராமசாமி, மக்கள் ஜனநாயகக் கழகம் (People’s Democratic Front), பெங்களூரு,
8. பி.பரிமளா, சேவ் டமில்ஸ் மூவ்மென்ட் (Save Tamils Movement), சென்னை,
9. திரு. ஜான்சன், சேவ் டமில்ஸ் மூவ்மென்ட் (Save Tamils Movement), சென்னை,
10. கவின்மலர், பத்திரிக்கையாளர், சென்னை,
11. திரு. செந்தளிர். பத்திரிக்கையாளர், சென்னை
12. ரேவண்ணா, ஸ்வாபிமான தலித் சக்தி (Swabimana Dalit Sakthi), பெங்களூரு,
13. திரு. கணேஷ், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (People’s Union for Civil Rights). பெங்களூரு,
14. திரு. பி.ஷண்முகம், கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் (Karnataka Tamils Movement). பெங்களூரு,
15. அம்ரிதாபா பாசு, மாணவப் பத்திரிக்கையாளர் (Student Journalist), சென்னை,
16. ஷடாக்‌ஷி கவாடே, மாணவப் பத்திரிக்கையாளர் (Student Journalist), சென்னை,
17. விஷ்ணுபுரம் சரவணன், விடுதலைக் குயில்கள், கும்பகோணம்.
18. எஸ். நாசர், சேவ் டமில்ஸ் மூவ்மென்ட் (Save Tamils Movement), சென்னை,

இக் குழுவினர் நேற்று (நவம்பர் 14) தருமபுரி மாவட்டத்தில் நாய்க்கன்கொட்டாய்க்கு அருகிலுள்ள, தாக்குதலால் பாதிக்கப்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டாம்பள்ளி கிராமங்களுக்குச் சென்று அழிவுகளைப் பார்வையிட்டனர். அங்குள்ள மக்களைச் சந்தித்து விரிவாகப் பேசினர். செல்லன்கொட்டாயிலுள்ள இறந்துபோன நாகராஜின் வீட்டிற்கும் சென்றனர். வெறிச்சோடிக் கிடந்த அந்தக் கிராமத்தில் யாருமில்லை. தாக்குதலுக்குக் காரணமாயிருந்த வன்னிய கிராமங்கள் பலவற்றிலும் இன்று யாரும் இல்லை. குறிப்பாக ஆண்கள் யாரும் இல்லை. காவல்துறை நடவடிக்கைகளுக்கு அஞ்சி அவர்கள் அருகிலுள்ள கிராமங்களில், உறவினர்கள் வீடுகளில் ஒளிந்துள்ளதாகத் தெரிகிறது. தருமபுரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் அவர்களையும் சந்தித்து விரிவாகப் பேசினர்.

பின்னணி

தமிழகத்தின் வட மேற்கு எல்லையிலுள்ள தருமபுரி மாவட்டம் மிகவும் பின்தங்கிய வரட்சி மாவட்டங்களில் ஒன்று. பெண் சிசுக் கொலை, தீண்டாமைக் கொடுமைகள் ஆகியவற்றிற்கும் பெயர் பெற்ற மாவட்டம் இது. தருமபுரி மாவட்டத்தில், குறிப்பாக தற்போது தலித் மக்கள் மீதுத் தாக்குதல் நடைபெற்ற இப்பகுதியில் 1970களில்  நக்சல்பாரி இயக்கம் வளர்ந்தது. தீண்டாமை, கந்து வட்டிக் கொடுமை, கள்ளச் சாராய மாஃபியா முதலானவற்றை எதித்துப் போராடியது. கடும் அடக்குமுறையை ஏவி அரசு இவ்வியக்கத்தை ஒடுக்கியது. வால்டர் தேவாரத்தின் தலைமையில் தருமபுரி, திருப்பத்தூர், சேலம் பகுதிகளைச் சேர்ந்த 28 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

செப்டம்பர் 12, 1980 அன்று இப்பகுதியில் செயல்பட்டு வந்த பாலனைப் போலீஸ் பிடித்துச் சென்று அடித்துக் கொன்றது,

நக்சல்பாரி இயக்கத்தில் இருந்து பிரிந்து, தொடர்ந்து அங்குச் செயல்பட்டு வந்த குழுக்கள் பறை அடிப்பது, பிணந்தூக்குவது முதலான தீண்டாமைக் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வந்தன. சாதி மறுப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தன. இன்னொரு பக்கம் காவல்துறைக் கண்காணிப்புகளும் அடக்குமுறைகளும் தொடர்ந்தன.

ஜனவரி 10, 2000 அன்று இப்பகுதியில் கட்சிப் பணி புரிந்த பொறியாளர் ரவீந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நவம்பர் 24, 2002 அன்று ரவீந்திரன் கொலையின் நேரடி சாட்சியாகவும் இப்பகுதியில் தொடர்ந்து செயல்பட்டு வந்தவருமான சிவா சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடனிருந்த 28 பேர் கைது செய்யப்பட்டு பொடா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் இன்று எரிக்கப்பட்ட நத்தம் காலனியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நக்சல்பாரி இயக்கம் கொடுமையாக ஒடுக்கப்பட்ட பின்பு இப்பகுதியில் வன்னியர்கள் மத்தியில் பா.ம.கவும், தலித்கள் மத்தியில் விடுதலைச் சிறுத்தைகளும் வளரத் தொடங்கின. பொடாவில் கைதாகியிருந்தவர்களில் ஒரு சிலரும் கூட விடுதலைச் சிறுத்தைகளில் இணைந்தனர். அதேபோல முன்னாள் நக்சல்பாரி இயக்க உறுப்பினர்களாகவும் அநுதாபிகளாகவும் இருந்த பலர் பா.ம.க வில் இணைந்தனர்.

நக்சல்பாரி அமைப்பின் முயற்சியில் தீண்டாமைக் கொடுமைகளிலிருந்து ஒரளவு விடுபட்ட மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அருகிலுள்ள தொழில் நகரங்களுக்குச் சென்று பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர். அதன்மூலம் ஓரளவு அவர்களின் வீடுகளில் மிகவும் அடிப்படையான வசதிகள் உருவாயின. தொலைக்காட்சிப் பெட்டி, வாஷிங் மெஷின், டிஷ் ஆன்டெனா, கான்க்ரீட் வீடுகள் சகிதம் தலித் பகுதிகள் மாற்றம் பெற்றன. பிள்ளைகள் கல்லூரி மற்றும் தொழிற் படிப்புகளில் பயிலும் நிலையும் உருவானது. எனவே அவர்கள் யாரும் தீண்டாமைக்குட்பட்ட சாதிக் கடமைகள் எதையும் செய்வதில்லை.

மங்கியிருந்த சாதீய உணர்வுகள் மீண்டும் தலை எடுக்கத் தொடங்கின. பறை அடிப்பது, பிணந்தூக்குவது முதலிய பணிகளை வெளியூர்களிலிருந்த தலித்களைக் கொண்டு ஆதிக்க சாதியினர் நிறைவேற்றிக் கொண்டனர். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிரான முணுமுணுப்புகள், கண்டனங்கள், ஊர்க்கூட்டங்கள் முதலியனவும் நடை பெறலாயின. இப்பகுதியைச் சேர்ந்ததில்லை ஆயினும் சற்றுத் தொலைவிலுள்ள மருக்கலம்பட்டி கோழிமக்கனூர் என்னுமிடத்தில் முனுசாமி மனைவி கம்சலா என்கிற தலித் பெண்மணி பாதைத் தகராறு ஒன்றில் சாதி இந்து ஒருவரால் இரண்டாண்டுகளுக்கு முன் குத்திக் கொல்லப்பட்டார்.

தற்போதைய வன்முறை

நாய்க்கன்கொட்டாய், நத்தம் காலனியைச் சேர்ந்த இளங்கோவனின் மகன் இளவரசன் (23) என்கிற தலித் இளைஞனும், செல்லன்கொட்டாயைச் சேர்ந்த நாகராஜ் மகள் திவ்யா (21) என்கிற வன்னியர் சாதியைச் சேர்ந்த இளம் பெண்ணும் சுமார் இரண்டாண்டுகள் காதலித்து, சென்ற அக்டோபர் 14, 2012 அன்று பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணத்திற்குப் பெண் வீட்டாரிடமிருந்து கடும் எதிர்ப்பும் மிரட்டலும் இருந்துள்ளது. இதை ஒட்டி மணமக்கள் டி.ஐ.ஜி சஞ்சய் குமார் மற்றும் எஸ்.பி அஸ்ரா கார்கிடம் புகார் செய்தனர். அவர்களும் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

எனினும் வன்னிய சாதியில் முக்கியமானவர்களும், உள்ளூர் பா.ம.க தலைவர்களும் திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து அழைத்து வருமாறு திவ்யாவின் தந்தை நாகராஜை வற்புறுத்தியுள்ளனர்.  தந்தையின் வேண்டுகோளை திவ்யா ஏற்கவில்லை. இந்நிலையில் சென்ற நவம்பர் 4 அன்று பா.ம.கவின் தருமபுரி மாவட்ட இளைஞர் அணித் தலைவர் மதியழகன் உள்ளிட்ட பலர் தம் சாதியினரைப் பெருந்திரளாகத் திரட்டி நாய்க்கன்கொட்டாயில் சாதிப் பஞ்சாயத்து ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் இந்தக் காதல் திருமணம் குறித்துக் கடுமையாகப் பலரும் பேசியுள்ளனர். இறுதியில் அவர்கள் திரண்டு சென்று, இளவரசனின் ஊரான நத்தம் காலனி ஊர்த்தலைவர் சக்தி என்பவரைச் சந்தித்து திவ்யாவைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் எனவும் மிரட்டியுள்ளனர்.

சுற்றத்தாரின் வற்புறுத்தல் மற்றும் இதனால் ஏற்பட்ட அவமானம் ஆகியவற்றால் சென்ற நவம்பர் 7 மதியம் 2 மணி அளவில் வித்யாவின் தந்தை நாகராஜ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் எனச் சொல்லபடுகிறது. அன்று மாலை 4 மணி அளவில் பா.ம.க தலைவர் மதியழகன், வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ராஜா, கொட்டாவூர் எஸ்.மாது ஆகியோர் தலைமையில் பெருந்திரளாகத் திரண்ட வன்னியர்கள் நாகராஜின் பிணத்தைத் தூக்கி வந்து, நத்தம் காலனியில் இருந்த இளவரசனின் வீட்டின் முன் வைத்து, ஆத்திரத்துடன் சாதி சொல்லி இழிவாகப் பேசிக் கொண்டே, கடப்பாரை, உருட்டுக் கட்டைகள், இரும்புத் தடிகள் முதலான கொடும் ஆயுதங்களுடன் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதலைத் தொடங்கினர். பெரிய அளவில் வீடுகளை எரித்து வன்முறைகளை மேற்கொண்டபின் பிணத்தை எடுத்துச் சென்று நெடுஞ்சாலையில் கிடத்தினர். தொடர்ந்து கொண்டம்பட்டி, அண்ணா நகர் ஆகிய தலித் குடியிருப்புகளும் தாக்கிச் சூறையாடப்பட்டுப் பின் எரியூட்டப்பட்டன. தாக்குதலினூடே சாலை மறியல், மரங்களை வெட்டிச் சாலைகளில் போட்டு தீயணைப்பு வண்டிகள் உட்பட எதுவும் வர இயலாமல் தடுத்தனர். ஆயுதங்களுடன் கூடிய பெருந்திரளான மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் வீடுகளிலிருந்த தலித் மக்கள் வெளியே ஓடி உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டனர். அப்படியும் கையில் அகப்பட்டவர்களை அடித்துள்ளனர்.  வன்முறையில் சில பெண்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இத் தாக்குதலின் விளைவான பாதிப்புகள் குறித்து அரசு மற்றும் ஊடகங்களின் மதிப்பீடு: 268 வீடுகளும் நத்தம் காலனி 144; கொண்டம்பட்டி 90; அண்ணா நகர் 34), 50 இரு சக்கர வாகனங்களும், நான்கு வேன்களும் எரிக்கப்பட்டன எனவும், இதனாலும் இதை ஒட்டி நடந்த சூறையாடல்களினாலும் ஏற்பட்ட இழப்பீட்டின் மதிப்பு சுமார் 3.5 கோடி முதல் 4 கோடி வரை இருக்கலாம் எனவும் காவல்துறையும் வருவாய்த்துறையும் மதிப்பிட்டுள்ளன.

ஆனால் அரசின் இந்த இழப்பீடு குறித்த மதிப்பீடு தவறென தேசியப் பட்டியல் சாதியினருக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. சென்ற நவம்பர் 12 அன்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ஆணையம் மொத்த இழப்பு சுமார் 6.95 கோடிகள் வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. 40 வீடுகள் முழுமையாக எரிந்து அழிந்துள்ளன எனவும், 175 வீடுகள் எரிந்து பாதிக்கப்பட்டுள்ளன எனவும் ஆணையத் தலைவர் ஆர்.எல்.புனியா தெரிவித்துள்ளார்.

இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் இப்போது எரிக்கப்பட்ட 268 வீட்டு உரிமையாளர்களுக்கும் தலா 50,000 ரூபாய்கள் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சில பாத்திரங்கள், வேட்டி, புடவை, இன்று வரை மூன்று வேளை உணவு ஆகியன வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக எரிக்கப்பட்டுள்ள 40 வீடுகளையும் தலா 1.5 லட்ச ரூபாயில் புதிதாகக் கட்டித் தருவது எனவும், பிற எரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட வீடுகள் அனைத்தையும் மொத்தம் 40.9 இலட்ச ரூபாயில் சீரமைத்துத் தருவது எனவும் அரசு அறிவித்துள்ளது.

காவல்துறை நடவடிக்கை: தருமபுரியில் தலித்துகள் தாக்கப்பட்டது குறித்து கிருஷ்ணபுரம் காவல்நிலையத்தில் போடப்பட்ட வழக்கு விவரங்கள்:

நத்தம் காலனி: Cr. No. 296/12 u/s 147, 148, 435, 436, 427, 307 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act. 300 பேர் மீது வழக்கு.  இதில் 87 பேர் அடையாளம் தெரிந்தவர்கள். 20பேர்கைது.
அண்ணா நகர்: Cr. No. 295/12 u/s 147, 148, 435, 436, 427, 307 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act.  500 பேர் மீது வழக்கு. இதில் 17 பேர் அடையாளம் தெரிந்தவர்கள். 7 பேர் கைது.
கொட்டாம்பட்டி: Cr. No. 297/12 u/s 147, 148, 435, 436, 427, 307 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act. 80 பேர் மீது வழக்கு. 26 பேர் கைது.
செங்கல்மேடு: Cr. No. 298/12 u/s 147, 148, 435, 436, 427, 307, 395 IPC, 3 (1)(X), 3 (2)(III), 3 (2)(IV) SC/ST Prevention of Atrocities Act 1989, 31 TNPPDL Act. 44 பேர் மீது வழக்கு. 39 பேர் கைது.

இது தவிர சாலை மறியல் செய்ததற்காகவும், மரங்களை வெட்டிச் சாலையில் போட்டு போக்குவரத்தைத் தடை செய்ததற்காகவும் மேலும் இரு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இதுவரையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 127. 


எமது பார்வைகள்

1. கலவரம் தொடங்கியபின் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கலவரத்தைக் கட்டுப்படுத்தியபோதும் காவல்துறை முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் இன்றைய நிலையைத் தடுத்திருக்கலாம். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளின்படி, சாதிக் கலவரங்களுக்கு வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து விழிப்புணர்வுக் குழுக்கள் முதலியவற்றை அமைத்து அவற்றைக் கண்காணிக்க வேண்டும். அப்பகுதியில் துப்பாக்கி லைசன்ஸ் முதலியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை அரசு கடைபிடிப்பதே இல்லை. இது சரியாகக் கடைபிடிக்கப்பட்டால் இது போன்ற கலவரங்களை முன்கூட்டியே தடுக்கலாம்.

2. இக்காதல் திருமணம் நடைபெற்று சுமார் மூன்று வாரங்களுக்குப் பின் இவ்வன்முறை நடைபெற்றுள்ளது. இடைப்பட்ட காலத்தில் தன் உயிருக்கு ஆபத்து என இக்காதல் தம்பதியர் டி.ஐ.ஜி மற்றும் எஸ்.பி அளவில் புகார் அளித்துள்ளனர். இப்பகுதியில் சாதி உணர்வுகள் தலை எடுத்து வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் இதில் உரிய கவனம் செலுத்தியிருந்தால் இன்றைய நிகழ்வுகளைத் தடுத்திருக்கலாம். சென்ற செப்டம்பர் 17 அன்று வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்து தருமபுரியில் நடத்தப்பட்ட விளக்கக் கூட்டத்தில், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மிகவும் சாதி வெறியுடனும், வன்முறையைத் தூண்டும் விதத்திலும், காதல் திருமணங்களைக் கண்டித்தும் பேசியுள்ளார். பின்னர் அக்டோபர் 4ல் நடைபெற்ற சாதிப் பஞ்சாயத்திலும் இந்தக் காதல் திருமணம் குறித்துக் கடும் நடவடிக்கைகள் பற்றி சாதி வெறியுடன் பேசப்பட்டுள்ளது. இதை உளவுத்துறையினர் குறிப்பெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு நடந்தும் இப்படியான ஒரு வன்முறைத் தாக்குதலை காவல்துறை ஊகிக்கவில்லை என்பது வியப்பாக உள்ளது. சாதி வெறி ஒரு பக்கம் என்றால், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை இவ் வன்முறையின் காரணமாக அமைந்துள்ளது,

3. கலவரத்தன்று ஒரு வேனில் போலீஸ்காரர்கள் இருந்தும் கலவரத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. குறிப்பாக கிருஷ்ணபுரம் காவல் நிலைய டி.எஸ்.பி ஒரு வன்னியர் எனத் தெரிகிறது. இன்று அவருக்குக் கீழே உள்ள அதிகாரிகள் இருவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கூட இந்தக் காரணத்திற்காகப் பணி நீக்கம் செய்யப்படவில்லை. தவிரவும் இன்னமும் அந்த டி.எஸ்.பி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத்தகைய பகுதிகளில் ஆதிக்கம் செய்யும் அதே சாதியினரை காவல் மற்றும் ரெவின்யூ பதவிகளில் அமர்த்துவது பொதுவாக இது போன்ற வன்முறைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்கள் நீதி பெறுவதற்கும் தடையாக அமைந்து விடுகிறது.

4. இவ்வன்முறை மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. உரிய ஆயுதங்களுடன் சென்று தொலைக்காட்சிப் பெட்டிகள். மின் விசிறிகள், வாகனங்கள், பீரோக்கள் முதலியன உடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.. முழு அழிவுகளும் மேற்கொள்ளப்படும் வரை காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் உள்ளே நுழைவதற்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்துள்ளன. உடைத்து எரியூட்டப்பட்டது தவிர பொருட்கள், நகைகள், சேமிப்புகள் முதலியன கொள்ளை அடிக்கப்பட்டும் உள்ளன. ஆக இது மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு வன்முறை (organized violence).

6. தலித் மக்கள் இதுபோல ஆதிக்க சாதியினரைச் சார்ந்திராமலும், ஓரளவு ஆதிக்கச் சாதியினருக்குச் சமமான அளவில் அடிப்படை நவீன வசதிகளுடனும் வாழ்கிற சூழலில் நடைபெறும் சாதி வன்முறைகள், அவர்களின் இத்தகைய வசதிகளையும் பொருட்களையும், சம அந்தஸ்தில் கட்டப்பட்ட வீடுகளையும் அழிப்பதாக உள்ளது கவனிக்கத்தக்கது. கொடியங்குளம் மற்றும் தென்மாவட்டக் கலவரங்களிலும் இத்தன்மையைக் காண முடியும். ஆண்களைக் கொலை செய்வது, பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது, நவீன வாழ்வு தலித்களுக்கு ஏற்படுத்தியுள்ள வசதிகளை அழிப்பது என்பன தலித் மக்களின் மீதான வன்கொடுமை வடிவங்களாக உள்ளன.

7. தமிழகம் முழுமையும் சாதி மதங்களைத் தாண்டிய காதல் திருமணங்கள் கவுரவக் கொலைகளால் எதிர் கொள்ளப்படுதல், அல்லது அத்தம்பதியர் தற்கொலைக்குத் தூண்டப்படுதல் என்கிற நிலை அதிகமாகியுள்ளது. சாதி அமைப்புகள், சாதி அரசியல், சாதிக் கட்சிகளின் பெருக்கம் என்பன இதன் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. கிட்டத்தட்ட எல்லாச் சாதி அமைப்புகளுமே, குறிப்பாக கொங்கு வேளாளர் அமைப்பு, வன்னியர் சங்கம் முதலியன காதல் திருமணங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றன. சென்ற சித்திரை முழு நிலவுத் திருநாளில் மகாபலிபுரத்தில் கூட்டப்பட்ட வன்னியர் சங்க விழாவில், அச்சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இவ்வாறு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களும் இதைக் கண்டிக்கவில்லை.

ஒருபக்கம் இன்றைய வாழ்க்கை முறையில் திருமண வயது தள்ளிப் போகிறது இருபாலரும் இணந்து கல்வி பயில்வதும் வேலை பார்ப்பதும் அதிகமாகி வருகிறது, செல்போன் மூலம் எந்நேரமும், பெரியவர்களுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இவை காதலித்துத் திருமணங்கள் செய்யும் நிலையை அதிகரித்துள்ளன. இந்தக் காதல் திருமணங்கள் பலவும் சாதிகளைத் தாண்டியதாகத்தான் அமைகின்றன.

ஆனால் அதே நேரத்தில் சாதி மத இறுக்கங்கள் சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே போகின்றன. சாதிக் கட்சிகளும் சாதி அமைப்புகளும் அதிகமாகியுள்ளன. சாதி அல்லது மதம் போன்ற ஒரு குறிப்பான அடையாளங்களின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும்போது அவர்களின் அதிகபட்ச ஆதரவிற்கு ஒரு எல்லை, limit ஏற்பட்டுவிடுகிறது. எனவே தமது குறிப்பிட்ட ஆதரவுச் சாதியை அதிகபட்சமாகத் திரட்டி consolidate பண்ணுவது என்பதே இக்கட்சிகளின் ஒரே வேலையாகி விடுகிறது. எனவே மற்றவர்களின் மீது வெறுப்பை விதைப்பதற்கு இவை தயங்குவதில்லை.

தன் சாதி ஆதிக்கத்தை விரிவுப்படுத்துவது, தன் சாதிக்காரரை முதலமைச்சர் ஆக்குவது, தன் சாதிப் பெண்களை வேறு யாரும் குறிப்பாகக் குறைந்த சாதியினர் திருமணம் செய்வதைத் தடுப்பது என்பதெல்லாம் இன்று வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. எல்லாச் சாதி அமைப்புகளும், மதவாத அமைப்புகளும் காதல் திருமணங்களுக்கு எதிராக இருப்பதையும் காணலாம். காதலர் தினக் கொண்டாட்டங்கள் மீது வன்முறை மேற்கொள்வது, காதலர்களை அடித்துப் பிரிப்பது என்பதெல்லாம் அதிகமாகியுள்ளன. இந்த வன்முறையைப் பொருத்தமட்டில் பா.ம.கவின் சாதி அரசியல் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது. இதுவரை பா.ம.க தரப்பில் மட்டுமே இந்த வன்முறை கண்டிக்ககப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

7. இழப்பீடு குறித்த அரசின் மதிப்பீடும், தற்போது கொடுக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையும் மிகக் குறைவு. பொருளிழப்பு குறித்த தேசிய பட்டியல் சாதி ஆணையத்தின் மதிப்பீடாகிய 7 கோடி ரூபாய் என்பதே சரியாக இருக்கும்.  ஆனால் கொடுக்கப்பட்டுள்ள உதவித் தொகையின் மதிப்பு சுமர் 1.75 கோடி ரூபாய்கள் மட்டுமே. எரிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கும் (தலா 1.75 இலட்சம்), சீர்திருத்துவதற்கும் (எஞ்சிய 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் மொத்தம் ரூ 40.9 இலட்சம்) அரசு செலவழிக்கத் திட்டமிட்டுள்ள தொகை மிக மிகக் குறைவு. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி பட்டியல் சாதியினரது வீடுகள் இவ்வாறு அழிக்கப்படும்போது இது தொடர்பான நிதியிலிருந்து அவ்வீடுகள் திருப்பிக் கட்டித் தரப்பட வேண்டும்.  திருத்தப்பட்ட விதிகளின்படி இது போன்ற இழப்புகளின்போது கொடுக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையின் குறைந்தபட்ச மதிப்பு 1,20,000 ரூபாய்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது பரிந்துரைகள்

1. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளின்படி தமிழகம் முழுவதும் சாதிக் கலவரம் நடைபெறும் வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து உரிய கண்காணிப்புக் குழுக்கள் முதலியவற்றை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். சட்டத்திலும் விதிகளிலும் கண்டுள்ள இதர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். உடனடி நடவடிக்கையாக அரசு இதை மேற்கொள்ள வேண்டும். காதல் திருமணத் தம்பதியர் புகார் கொடுத்திருந்தும் கலவரச் சூழலை ஊகித்து உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். வெறுமனே வேறு காரணங்களைச் சொல்லி தற்காலிகப் பணி நீக்கம் செய்து, பிறகு சில மாதங்களுக்குப் பின் அவர்களது பணி நீக்கத்தை ரத்து செய்வது என்பதாக அல்லாமல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு அதிகாரிகள் பொறுப்பைத் தட்டிக் கழைத்தல் என்கிற பிரிவின் கீழ் குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகராஜின் தற்கொலையேகூட சாதிக் கலவரத்தைத் தூண்டுவதற்காகச் செய்யப்பட்ட கொலையோ என்கிற சந்தேகம் சிலர் மத்தியில் இருப்பதால், நாகராஜின் பிரேத பரிசோதனை அறிக்கையை விரைவாக வெளியிட்டு, அந்த அடிப்படையில் தேவையாயின் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

2. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளைக் கடைபிடிக்காத காவல் மற்றும் ரெவின்யூ அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு இச்சட்டம் திருத்தப்பட வேண்டும். சாதி மீறிய திருமணத்திற்கு எதிராகப் பேசுவதையும் இச்சட்டத்தின் கீழ் சாதி கூறி இழிவு செய்வது, வன்முறையைத் தூண்டுவது என்கிற அளவில் குற்றமாக்க வேண்டும்.

3. வன்முறையில் ஈடுபட்டோரின் எண்ணிக்கை சுமார் 800 பேர்கள். போடப்பட்டுள்ள வழக்குகளிலும் வன்முறை மேற்கொண்டவர்களாக அதிகம் பேர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தும் இதுவரை 127 பேர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர், விரைந்து பிறரும் கைது செய்யப்பட வேண்டும். இந்த வழக்குகளின் விசாரணைக்கென சிறப்பு நீதிமன்றம் அமைத்து, ஆந்திர மாநிலம் குண்டூர் போன்ற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டதுபோல பாதிக்கப்படட கிராமங்களிலேயே இந்நீதிமன்றம் இவ்வழக்கை விசாரிக்க வேண்டும்.

4. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கண்டுள்ளபடி எரிக்கப்பட்ட வீடுகளை இதற்குரிய நிதியிலிருந்து அரசே கட்டித்தர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் இதற்கென குறைந்தபட்சம் ஐந்து இலட்ச ரூபாய்கள் ஒதுக்க வேண்டும். பகுதியாக இழப்புகள் ஏற்பட்டுள்ள வீடுகளுக்குப் பாதிப்புகளுக்குத் தகுந்தாற்போல இழப்பீடு வழங்க வேண்டும். குறைந்தபட்ச இழப்பீட்டுத் தொகை மூன்று இலட்சத்திற்குக் குறையக் கூடாது.  பொருள் இழப்புகள் தொடர்பாக ஒவ்வொரு வீட்டிலும் இழப்பீட்டை மதிப்பிட சுதந்திரமான நடுநிலையாளர் குழு ஒன்றை அரசு நியமித்து அதனடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும். திருட்டுக் குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டுப் பொருட்கள் மீட்கப்பட வேண்டும்.

5. இதுபோன்ற கும்பல் வன்முறைகளில், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விதிகளின்படி ஒடுமொத்த வன்முறையாளர்களின் மீதும் collective fine போடுவதற்கு வழி உண்டு. அது இங்கே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சொத்திழப்புகளை மதிப்பிட்டு இவ்வாறு வசூலிக்கப்படும் கூட்டு அபராதத் தொகையிலிருந்து அது ஈடு செய்யப்பட வேண்டும்.

6. எரியூட்டப்பட்ட வீடுகளில் அழிந்துபோன குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை முதலான அடிப்படை ஆவணங்களை உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும், இதற்கென மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்குப் புதிய பாடநூல்கள் வழங்க வேண்டும்.

7. காதல் மற்றும் காதல் திருமணங்கள் குறித்து இளைஞர்கள் மத்தியில் உரிய விழிப்புணர்வு ஊட்டும் அதே நேரத்தில், காதல் திருமணங்கள் சமூகத்தில் அதிகமாகக் கூடிய நிலை தவிர்க்க இயலாது என்பதை ஒரு பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் இது குறித்துப் பதற்றமடையத் தேவையில்லை என்கிற உணர்வு பரவலாக்கப்படுதல் அவசியம். சாதி அடிப்படையில்லாத அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் இதில் முன்கை எடுக்கவேண்டும். தீண்டாமை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வைச் சமூகத்தில் பெருக்குவதில் இவர்கள் முன்நிற்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் செயற்கரிய செய்வோருக்கு வீரப் பரிசுகள் வழங்குவதைப்போல தீண்டாமைக்கு எதிராகச் செயல்படுவோருக்கும் ஆண்டு தோறும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

8. தலித் மக்கள் ஓரளவு நடுத்தர வர்க்க வசதியுடன் வாழத்தொடங்கினாலும் கிராம அளவில் அவர்கள் வலுவற்று இருப்பதையே இவ்வன்முறை காட்டுகிறது, கிராமங்களில் நிலமே அதிகாரத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது என்பதால் இப்பகுதியில் உள்ள தலித் மக்களுக்கு அரசு நிலம் வழங்க ஆவன செய்ய வேண்டும். தவிரவும் தலித் கிராமங்களில் உரிய அடிப்படை வசதிகள், ரேஷன் கடைகள் முதலியன அமையாததும் இம்மக்கள் ஆதிக்க சாதியினரைச் சார்ந்து நிற்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது. தலித் குடியிருப்புகளில் இத்தகைய அடிப்படை வசதிகள், குறிப்பாகக் கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

9. பள்ளி மாணவர்கள் பலரையும் வெண்டுமென்றே வழக்கில் தொடர்புப்படுத்திக் கைது செய்துள்ளதாக வன்னியர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் அதிக அளவில் இளைஞர்கள் வன்முறையில் கலந்து கொண்டதைப் பலரும் உறுதிப்படுத்தினர். இளைஞர்கள் மத்தியில் இவ்வாறு சாதி உணர்வு உருவாவது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. எவ்வாறாயினும் வன்முறை நடவடிக்கைகளில் தொடர்பில்லாத மாணவர்கள் யாரேனும் கைது செய்யப்பட்டிருந்தால் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

தொடர்புக்கு: அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு,சாஸ்திரி நகர்,   சென்னை- 600020, செல்: 94441 20582

நன்றி: http://vallinam.com.my/navin/?p=1182


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்