கம்யூனிஸ்ட் கே.ஏ. சுப்பிரமணியம் ; சில பதிவுகள்!
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியவர். மூத்த இடதுசாரி தோழர்களான மு கார்த்திகேசு, ந. சண்முகதாசன் என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர். ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த கட்ட பரிமாணமாகவும் திகழ்ந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம். ஆதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக ஓர் ஆர்ப்பரிப்பில் உண்மையின்-உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று போராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும் இவர் பற்றி வெளிவந்த நினைவு மலரைத் தவிர அவர் பற்றி காத்திரமான ஆய்வுகள் ஏதும் வந்ததாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் எழுதப்பட்டு ,செம்மைப்படுத்தப்பட்ட "தாயகம்"",செம்பதாகை", புதியபூமி" போன்றவற்றின் ஆசிரிய தலையங்கங்களும் ,சில கடிதங்களும் பார்வைக்கு கிட்டின. மேலும் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களைக் கொண்டு அவரை அறிய முடிந்தது.