[ ஏற்கனவே 'பதிவுகள்' இதழில் (பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46 ) வெளியான இக்கட்டுரை ஒருங்குறியில் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. ] 'நாவலர் பார்ம்' எனப் பொதுவாக அழைக்கப்படும் இந்தப் பண்ணையை உங்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் என்பது கேள்விக்குறி. ஆனால் காந்திய அமைப்புடன் பரிச்சயமாயிருந்தவர்களுக்கு இப்பண்ணை மிகவும் பரிச்சயமானதொன்று. இலங்கையின் பிரபல கட்டடக் கலைஞராக விளங்கிய டேவிட் அவர்களினால் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இப்பண்ணை முல்லைத் தீவுப் பகுதியில் நெடுங்கேணிப் பகுதியினுள் அடர்ந்த காட்டின் ஒரு கோடியில் அமைந்திருந்தது. இப்பண்ணையைப் பற்றி இப்பொழுது எழுதுவதன் தேவை என்னவென்று நீங்கள் கேட்கலாம். நானும் அதையே தான் என்னையே ஒருமுறை கேட்டுக் கொண்டேன். அதன் விளைவு தான் இக்கட்டுரை. இலங்கைத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றை எழுதுபவர்களின் பார்வையிலிருந்து காந்திய அமைப்பு ஒரு போதுமே விடுபட்டு விட முடியாது. அந்த வகையில் காந்திய அமைப்பினால் பராமரிக்கபப்ட்ட பண்ணைகளிலொன்றான இந்நாவலர் பண்ணையுடனான அனுபவங்களை ஆராய்ந்து பார்த்ததில் அவ்வனுபவங்களை காந்திய அமைப்பு பற்றியதொரு விமர்சனமாக நோக்கலாமென்று பட்டதன் விளைவே இக்கட்டுரை. அத்துடன் ஒரு காலகட்ட அனுபவத்தினைப் பதிவு செய்ய வேண்டிய அவாவின் விளைவாகவும் இக்கட்டுரையினைக் கொள்ளலாம். துரதிருஷ்டவசமாகப் பின்னாளில் ஏற்பட்ட அரசியல் நிலைமைகளினால் இவ்வமைப்பு ஸ்ரீலங்கா அரசின் கொடிய இனவெறி அரசின் அடக்கு முறைக்குள் சிக்கிச் சிதைந்து போனது.
அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக் கலை பட்டப் படிப்பை முடித்துவிட்டு கொழும்பிலுள்ள அரச திணைக்களமொன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். இச்சமயத்தில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்கம் துடிப்பான தமிழ் மக்களின் பிரச்சினையில் ஆர்வமுள்ள சில இளைஞர்களின் கட்டுப் பாட்டில் இருந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஏதாவது முகம் கொடுத்து ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்த இவர்களது கவனம் காந்திய அமைப்பின் மீது திரும்பியது. விளைவு.. நாவலர் பண்ணையை பொறுப்பெடுத்து அங்குள்ள மக்களுக்குத் தேவையானதைச் சிரமதான அடிப்படையில் செய்வதென்று முடிவு செய்யப் பட்டது. இதற்காக ஆர்வமுள்ள மாணவர்கள் வார இறுதியில் வன்னி மாவட்டத்திற்குச் சென்று சிரமதான வேலைகளில் கலந்து கொண்டு பின்னர் ஞாயிறு இரவு புகையிரதத்தில் கொழும்பு திரும்புவார்கள். இச்சிரமமான திட்டம் ஆறு மாதங்கள் வரையில் தொடர்ந்து நடைபெற்றது. இப்பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தினைப் பற்றிச் சிறிது கூறத்தான் வேண்டும். குறைந்த அளவு எண்ணிக்கையில் தமிழ் மாணவர்கள் பயின்று கொண்டிருந்தார்கள். ஈழத்துத் தமிழ் நாடக உலகைப் பற்றி எழுதுபவர்கள் மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பை ஒருபோதுமே மறந்து விடமுடியாது. நாடக உலகினை நவீனமயப்படுத்திய பாலேந்திராவினைத் தந்தது இத்தமிழ்ச் சங்கமே. மாவை நித்தியானந்தனை வெளிக்கொணர்ந்ததும் இச்சங்கமே. கண்ணாடி வார்ப்புகள், முகமில்லாத மனிதர்கள்,யுகதர்மம் போன்ற ஏனைய மொழி நாடகங்களுட்பட பல நாடகங்களை மேடையேற்றிப் பெருமை கண்டது இச்சங்கமே. வருடா வருடம் 'நுட்பம்' என்னும் தரமான இதழினையும் வெளியிட்டு வந்தது. 'நுட்பம்' இதழின் ஆசிரியர்களில் ஒருவனாக இருந்த அனுபவமுமுண்டு. தனிச் சிங்களப் பிரதேசத்தில் இயங்கிய போதும் இச்சங்கம் தமிழ் மக்கள் விடயத்தில் எத்தனையோ பல நல்ல காரியங்களை செய்துள்ளது.
நெடுங்கேணியிலிருந்து மருதோடை என்ற இடம் வரைதான் பஸ் சேவை இயங்கியது. மருதோடையிலிருந்து நாவலர் பண்ணைக்கு மூன்று மைல்கள் வரை நடந்துதான் செல்ல வேண்டும். அதே சமயம் மருதோடைக்கு அண்மையிலிருந்த காஞ்சிரமொட்டை என்ற இடத்திலிருந்து நாவலர் பண்ணை ஒரு மைல் தொலைவிலிருந்தது. ஆனால் காஞ்சிரமொட்டைக்கும் நாவலர் பண்ணைக்குமிடையில் காடு மண்டிக் கிடந்தது. இந்தக் காட்டினூடு ஒரு பாதை அமைத்து விட்டாலோ நாவலர் பண்ணை வாசிகளுக்குப் பெரிதும் செளகர்யமாகி விடும். நாவலர் பண்ணை விடயத்தில் மேற்படி பாதையினை அமைப்பதென்றும், இங்குள்ளவர்களுக்குக் கிணறுகள் வெட்டிக் கொடுப்பதென்றும் தீர்மானிக்கப் பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றக் கட்டங்கட்டமாக மாணவர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் அனுப்பப்படுவார்கள். அவ்விதம் போவதற்கு மாணவ்ர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் சமயங்களில் நான் போவதுண்டு. ஆரம்பத்தில் காந்தியம் பற்றியும் காந்தியப் பண்ணைகள் பற்றியும் மாணவர்களுக்குப் போதிய தெளிவு இல்லாமலிருந்தது. கொழும்பில் இரவு மெயிலில் புறப்படும் மாணவர்கள் வவுனியாவில் இறங்கி 'டாக்டர்' இராசசுந்தரம் வீட்டில் தங்கி மறு நாட்காலை அவரது ஜீப்பில் அல்லது பஸ்ஸில் நெடுங்கேணி செல்வது வழக்கம். அப்பொழுது 'டாக்டர்' இராசசுந்தரம் காந்திய அமைப்பின் செயலாளராக ஓய்வு ஒழிச்சலின்றி செயலாற்றிக் கொண்டிருந்தார். நாவலர் பண்ணயைப் போன்ற பல பண்ணைகள் காந்திய அமைப்பினால் வன்னி, மட்டக்களப்புப் பகுதிகளில் பராமரிக்கப் பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். ஒரு முறை 'டாக்டர்' இராசசுந்தரத்துடன் வவுனியாவிலிருந்து நாவலர் பண்ணை செல்லும் வழியில் முழுநேரமும் காந்திய அமைப்பு பற்றியும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதன் அவசியம் பற்றியும் அவர் விபரித்துக் கொண்டு வந்தது இன்னும் ஞாபகத்தில் பசுமையாக நிற்கிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1977ஆம் ஆண்டுத் தேர்தல் காலத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களினால் அபகரிக்கப்படும் தமிழ்ப் பிரதேசங்கள் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார்கள். எல்லைகளில் தமிழர்கள் சென்று குடியேறுவதன் அவசியம் பற்றி வலியுறுத்துவார்கள். எத்தனை பேர் அங்கு சென்று குடியேறினார்கள் என்பது வேறு விடயம்? அவ்விதம் சென்ற பல இளைஞர்கள் நுளம்புக்கடி தாங்க முடியாமல் திரும்பிய கதைகள் பலவும் கேட்டிருக்கின்றேன். 'பதிவியா' 'சேருவில' என்று தமிழர்கள் இழந்து வரும் தமிழ்ப்பிரதேசங்களின் நிலையினை விரிவாக எடுத்துக் கூறிய 'டாக்டர்' இராசசுந்தரம் தமிழர்களின் எல்லைப்பிரதேசங்களின் பல்வேறு பகுதிகளிலும் திட்டமிட்டவாறு ஏறப்டுத்தப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் காலப்போக்கில் தமிழ்ப் பகுதிகளைச் சுற்றி வளைத்து இடையினுள் தமிழ் மக்களைச் சிறுபான்மையினராகப் பிரித்துவிடும் அபாயம் பற்றி விபரித்தார். இதனை விபரிக்க அவர் கை விரல்களை ஒப்பிட்டார். ஒவ்வொரு விரலையும் தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே வளர்ந்து வரும் சிங்களக் குடியேற்றங்களாகக் கொண்டால் இவ்விரல்களிற்கிடையில் கிடக்கும் பகுதிகளைச் சிறுபான்மையாக்கப்பட்ட மேற்படி அபகரிக்கப்படும் தமிழ்ப் பகுதிகளாகக் கொள்ளலாமெனக் குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் கிளிநொச்சியில், முழங்காவில் பகுதியிலிருந்த முந்திரிகைத் தோட்டமொன்றில் குடியேற்றப்பட்டிருந்த சிங்களக் குடியேற்றங்கள் காலப்போக்கில் தரக்கூடிய அபாயம் பற்றி அவர் எச்சரித்தார். இவற்றைத் தடுப்பதற்குக் காந்திய அமைப்பினால் ஆழ நடுக்காட்டினுள் உருவாக்கப்பட்ட பண்ணைகளில் குடியேற்றப்படும் தமிழர்கள் காலப்போக்கில் பல்கிப்பெருகி சிங்களக் குடியேற்றங்கள் பரவாவண்ணம் தடுப்பார்கள் என்பதையும் அவர் எடுத்துக் காட்டினார். இவ்விதமான பண்ணைகளில் எத்தனை வடகிழக்குத் தமிழர்கள் சென்று வாழத் துணிந்தார்கள்? துணிந்து வந்தவர்கள் ஏற்கனவே வடகிழக்குத் தமிழர்களினால் ஓரங்கட்டப்பட்ட மலையகத் தமிழர்கள். அவர்களுக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். பின்னாளில் ஸ்ரீலங்கா அரசின் இராணுவ அடக்குமுறை காந்தியப் பண்ணைகளில் பெரிதாக வெடித்த பொழுது வடகிழக்குத் தமிழர்களினால் மலையகத் தமிழர்கள் பலிக்கடாக்களக்கப்பட்டு விட்டார்களென்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதில் ஓரளவு உண்மையில்லாமலுமில்லையென்பதை இப்பொழுது நாம் துயரத்துடன் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
டாகடர் இராசசுந்தரத்தின் விபரிப்பால் மாணவர்கள் பெரிதும் உற்சாகமடைந்தார்கள். தங்களது பங்களிப்பு ஒருவிதத்தில் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதென்ற நினைவே அதற்குக் காரணம். தங்களது பணி வீணானதொன்றல்ல என்று மகிழ்ச்சியடைந்தார்கள். இது தவிர காந்தியப் பண்ணைகளின் நோக்கம் பற்றியும் அமைப்பு பற்றியும் டாக்டர் விபரித்தார். ஒவ்வொரு பண்ணையைப் பொறுத்தவரையிலும் நடுவில் ஒரு மாதிரிப்பண்ணை அமைந்திருக்கும். இப்பண்ணைக்குப் பொறுப்பாக ஒருவர் இருப்பார். இப்பண்ணையில் ஒரு நியாய விலைக்கடையும் பாலர் பாடசாலையுமிருக்கும். இப்பாலர் பாடசாலையில் கிளிநொச்சி குருகுலத்தில் பயிற்சி பெற்ற பெண்கள் ஆசிரியைகளாகக் கடமையாற்றுவார்கள். இம்மாதிரிப்பண்ணையில் பணியாற்ற அனுமதிப்பதின் மூலம்குடியேற்றவாசிகளுக்கு விவசாய முறைகள் பற்றிப் போதிப்பது அதே சமயம் இக்குடியேற்ற வாசிகள் குடிசைகள் கட்டக் கிடுகு முதலான பொருட்களை வழங்குவது கிணறு வெட்ட உபகரணங்கள் தருவது, மற்றும் இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை நியாய விலையில் தருவது, குழந்தைகளுக்குத் 'திரிபோஷா' மா வழங்குவது முதலான பல்வேறு உதவிகளை இம்மாதிரிப்பண்ணை வழங்கியது. குடியேற்றவாசிகளை தமது சொந்தக் கால்களில் நிற்க வைப்பதே இதன் நோக்கமாகவிருந்தது. துரதிருஷ்ட்டவசமாக அநேகமான பண்ணைகளில் பண்ணைப் பொறுப்பாளர்கள் மாதிரிப்பண்ணைகளை இலாபத்தை நோக்காகக் கொண்டு நடத்தினார்கள். இதற்காக நன்கு வேலை செய்யக் கூடியவர்களை மட்டுமே அப்பண்ணைகளில் வேலை செய்ய அனுமதித்தார்கள். இதனால் பல குடியேற்றவாசிகளுக்கு பண்ணைகளில் வேலை செய்து பெறவேண்டிய அனுபவம் கிட்டாமலே போனது. இது மேற்படி பண்ணைகளின் அடிப்படை நோக்கத்திற்கே முரணாக அமைந்து விட்டது. இதே சமயம் தங்களது நல்லதோர் எதிர்காலத்திற்காக வந்து குடியேறிய மலையகத் தமிழர்களின் நிலைமையினைப் பயன்படுத்தி அயற்கிராமங்களிலிருந்த பூர்விகத் தமிழர்கள் சிலர் தங்களது தோட்டங்களில் மேற்படி மலையகத் தமிழர்களைக் கூலிக்கமர்த்திச் சுரண்டவும் செய்தார்கள். நாவலர் பண்ணையைப் பொறுத்த அளவில் சுமார் நாற்பது குடும்பங்கள் வரையில் குடியேறியிருந்தார்கள். எல்லோருமே தங்களது எதிர்காலச் சந்ததியாவது நல்லாயிருக்குமென்ற நம்பிக்கையிலிருந்தார்கள். அவர்களெல்லாம் அவர்களது சந்ததியெல்லாம் இப்பொழுது எங்கிருக்கின்றார்களோ? அவர்களது அப்பாவித்தனமான தோற்றங்களும் அவர்களது கனவுகளும் இப்பொழுதும் நினைத்தால் நெஞ்சினில் வேதனையினைப் பரப்பும்.
நாவலர் பண்ணைக்குப் பொறுப்பாகவிருந்தவர் ஈழத்துக் கபிலர் என சுதந்திரன் வாசகர்களுக்குக் கவிதைகள் மூலம் அறிமுகமான ஒரு முதியவர். வடமராட்சிப் பகுதினைச் சேர்ந்தவர். ஒவ்வொருமுறை நாவலர் பண்னைக்கு செல்லும் போதெல்லாம் பண்ணையில் தான் நாம் தங்குவது வழக்கம். இரவு முழுவதும் எம்மைத் தூங்கவிடாமல் தான் எழுதியிருந்த சிறுகதைகளை மிகவும் உணர்ச்சி பூர்வமாக வாசித்துக் காட்டி எம்மைத் தூங்கவிடாது திணற அடித்து விடுவார் இந்தக் கபிலர். அவரது கதைகளெல்லாம் ஸ்ரீலங்கா அரச படைகள், குண்டர்கள் தமிழ் மக்கள் மேல் அவிழ்த்து விட்ட அடக்குமுறைகள் பற்றியே இருக்கும். அவற்றை விபரிக்கும் பொழுது உண்மையாகவே கபிலர் அழுது விடுவார். அப்பொழுது நாமோ இடது சாரித் தத்துவங்களில் மூழ்கியிருந்த சமயம். எங்கெல்ஸின் 'டூரிங்கிற்கு மறுப்பு', மார்கஸ்/எங்கெல்ஸின் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, 'வரலாற்றுப் பொருள்முதல்வாதம்/இயக்கவியல் பொருள்முதல்வாதம்' போன்ற நூல்களைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்த காலம். கோர்க்கியின் 'தாய்' நாவலில் மூழ்கிக் கிடந்த காலம். எந்தவிதத் தத்துவார்த்த சிந்தனைகளுமற்று வெறும் உணர்ச்சிகளனடிப்படையில் வடிக்கப்பட்ட கபிலரின் படைப்புகளை அவர் உணர்ச்சி ததும்ப வாசிக்கும் பொழுது அந்த முதியவரின் மனதினைப் புண்படுத்தக் கூடாதென்ற உணர்வில் சகித்துக் கொண்டிருப்போம். சிலர் தூங்கி விடுவார்கள். இறுதியில் கபிலரும் அப்படியே வாசித்துக் கொண்டே தூங்கி விடுவார். இரத்தினபுரி மற்றும் பண்டத்தரிப்பைச் சேர்ந்த சிறுமிகள் இருவர் தொண்டர்களாகப் பணிபுரிந்தார்கள். காஞ்சிரமொட்டைக்கும் நாவலர் பண்ணைக்குமிடையில் காட்டுபாதை அமைப்பதற்காக மரங்களை வெட்டும் சமயங்களிளெல்லாம் இக்குடியேற்றவாசிகள் பெரிதும் ஒத்துழைப்பு தந்தார்கள். இளைஞர்கள் முதியவர்களென்று எங்களுடன் தங்களது பல்வேறுபட்ட அபிலாசைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். விளையாட மைதானமில்லாதது பற்றியும் சனசமூக நிலையமில்லாதது பற்றியும் தங்களது குறைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். ஒரு முறை நாங்கள் காடு வெட்டிக் கொண்டிருந்தபொழுது பண்ணைக்கு ஏதோ விடயமாக ஸ்ரீலங்காப் பொலிசார் வந்த செய்தினை அச்சிறுமிகள் ஓடி வந்து கூறினார்கள். ஏற்கனவே காந்தியப் பண்ணைகளில் படையினரின் கெடுபிடிகள் தொடங்கி விட்டிருந்தன. அச்சிறுமிகள் அச்சமயத்தில் எம்மைக் காப்பாற்றினார்களென்றுதான் கூறவேண்டும். மேலும் அக்குடியேற்றவாசிகளுக்குப் பயனுள்ள வகையில் குடிசைகளை அமைப்பதும் ஒரு திட்டமாகவுமிருந்தது. அதற்காக அப்பண்ணையிலுள்ள ஒவ்வொரு குடியேற்ற வாசியுடனும் நேரடியாகச் சந்தித்து உரையாடி அவர்களது அனுபவங்களை தேவைகளை அவர்கள் பாவித்துக் கொண்டிருந்த குடிசைகளின் அமைப்புகளைப் பற்றியெல்லாம் குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் பின்னாளிலேற்பட்ட அரசியல் நிலைமகளாலும் எண்பத்து மூன்று இனக்கலவரத்தாலும் அதற்கான சாத்தியங்கள் இல்லாதொழிந்து விட்டன. அதே சமயம் நாவலர் பண்ணையில் எமக்கேற்பட்ட அனுபவங்கள் எமக்குப் பெரிதும் பயனாகவே அமைந்தனவென்றுதான் கூறவேண்டும். முதன் முறையாக வறுமைக் கோட்டினுள் வாடும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றி மிகவும் நுணுக்கமாக அறியும் வாய்ப்பினை இவ்வனுபவம் தந்ததென்றே கூற வேண்டும். அதே சமயம் காந்திய அமைப்பு பற்றியும் நன்கு அறிந்து கொள்ள மேற்படி அனுபவம் எமக்குக் கை கொடுத்தது. தமிழ் மக்களின் விடுதலையில் தீவிர ஆர்வமுள்ள பலர் பற்றி அறிவதற்கும் மேற்படி அனுபவம் உதவியதென்றும் கூறிக் கொள்ளலாம்.
பதிவுகள் அக்டோபர் 2003 இதழ் 46
[இதன் பின்னர் இன்னுமொருமுறை வவுனியா இறம்பைக்க்குளத்தில் அமைந்திருந்த ( அநாதைகள் இல்லமென்று நினைக்கின்றேன் ) இல்லத்திற்கு இன்னுமொரு மார்க்சிய தத்துவத்தில் நன்கு ஊறியவரும், பின்னர் விடுதலை அமைப்பொன்றுடன் இணைந்து கொண்டவரும், நல்லதொரு எழுத்தாளருமான நண்பருடன் அநத இல்லத்தில் நடைபெற்ற 'தமிழ் ஈழமும் , சமயமும்' என்னும் மூன்று நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கிலும் கலந்துகொண்டிருக்கின்றேன். வடகிழக்குப் பகுதிகள் பலவற்றில் இருந்தும் பலவேறு அமைப்புகளிலிருந்தும் (பெண்கள் அமைப்புகள், விவசாயிகள் அமைப்புகள் என) தோழர்கள், தோழியரென்று பலர் வந்திருந்தார்கள். 'டாக்டர்' இராஜசுந்தரம், 'ஃபாதர்' கனகரத்தினம் உட்படப் பலரை அங்கு சந்திக்க முடிந்தது. அக்கருத்தரங்கிற்கு வவுனியா நோக்கி கொழும்பிலிருந்து இரவு மெயில் புகையிரத்தில் சென்று கொண்டிருந்த சமயம் அப்பொழுது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த திரு. மு.நித்தியானந்தன் அவர்கள் தமிழகத்திலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் அறிஞர் ஒருவருடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். திரு. நித்தியானந்தனை ஏற்கனவே சில சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கின்றேன். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச சங்க வெளியீடான 'நுட்பம்' இதழின் ஆசிரியராக இருந்தபொழுது அதனை வெளியிடுவது சம்பந்தமாக அவரைச் சந்தித்திருக்கின்றேன். யாழ் வெலிங்டன் தியேட்டருக்கு முன்பாக அமைந்திருந்த சித்ரா அச்சகத்தில் நுட்பம் இதழினை மிகவும் அழகாக ஆக்கங்களை நிரைப்படுத்தி அச்சடித்துத் தந்தவர் நித்தியானந்தன் அவர்களும், யாழ் பல்கலைக் கழகத்தில் பணி புரிந்த மூர்த்தி என்பவரும்தாம். இன்னுமொரு சமயம் நல்லூரில் அவரது மாமனார் வீட்டு வளவில் அமைந்திருந்த தனி வீட்டில் அவரையும் அவரது மனைவியரான நிர்மலா நித்தியானந்தனையும் சந்தித்தது ஞாபகத்திற்கு வருகின்றது. அப்பொழுது நிர்மலா நித்தியானந்தம் தொய்வினால் அவதிப்பட்டுகொண்டிருந்ததாக ஞாபகம். அன்றைய காலகட்டத்தில் நிர்மலா நித்தியானந்தன் மொறட்டுவை பல்கலைக்கழகத்து நாடகங்கள் சிலவற்றில் (பாலேந்திராவின் இயக்கத்தில்) பங்குபற்றிக் கொண்டிருந்தார். பாதல் சர்க்காரின் 'முகமில்லாத மனிதர்கள்' , டென்னஸி வில்லியம்ஸின் 'கண்ணாடி வார்ப்புகள்', மற்றும் 'யுகதர்மம்' போன்ற நாடகங்களில் பங்குபற்றிக்கொண்டிருநதார். இவ்விதமாக ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நித்தியானந்தனை அப்புகையிரததில் கண்டபொழுது நான் 'காந்தியக் கருத்தரங்கொன்றிற்குச் செல்வது பற்றிக் குறிப்பிட்டபோது அவரது முகம் உற்சாகமற்றிருந்தது. பெரிதும் ஆர்வத்துடன் கதைக்கவில்லையென்று பட்டது. பின்னர் அவர் கைதானபோதுதான் எனக்கு அவரது அரசியல் நிலைப்பாடு தெரிந்தது. அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு பிளவுபட்டிருந்தது. அவரது அரசியல் நிலைப்பாடு காரணமாக அவர் ஆர்வமற்றிருந்திருக்கலாமென்று பின்னர் அவர் கைதான சமயம் உணர்ந்து கொண்டேன்.
மேற்படி கருத்தரங்கில் மேலும் பலரைச் சந்தித்ததும் ஞாபகத்தில் வருகின்றது. 'வாசுதேவா', ரகுமான்ஜான்' மற்றும் ஜூலி பெர்ணாண்டோ (அப்பொழுது சிறுமியாகவிருந்தார். டாக்டர் ராஜசுந்தரம் போன்றவர்களின் அன்புக்கு பாத்திரமாக விளங்கியவரென்பதை ராஜசுந்தரத்துடன் கதைக்கும்பொழுது அறிய முடிந்தது. அதன் காரணமாகவே அந்தக் கருத்தரங்கில் சிறுமியான அவருக்கு உரையாற்றவும் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது என்னைப் பிரமிக்க வைத்தவர் ரகுமான் ஜான். திருமலையைச் சேர்ந்த இவரொரு மருத்துவ பீடத்திற்குத் தெரிவான மாணவராக அப்பொழுதிருந்தார். மிகவும் திடகாத்திரமாக , இந்திப்பட நடிகரொருவரைப் போன்ற தோற்றதுடன் விளங்கிய அவர் மட்டக்களப்பில் நடைபெற்ற மே தினக் காட்சிகளை உள்ளடக்கிய ஆல்பத்தினை அக்கருத்தரங்கில் பங்குபற்றியவர்களுக்கு மகிழ்ச்சியுடன் காட்டினார். இஸ்லாமியரான ஒருவர், தனக்குக் கிடைத்த மருத்துவப்பீட வாய்ப்பினையும் உதறிவிட்டு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரியத்தினையும், பிரமிப்பினையும் தந்தது இன்னும், இன்றும் பசுமையாக ஞாபகத்திலிருக்கின்றது. அன்றைய காலகட்டத்தில் வேறு யாராவது இவரைப்போல் பல்கலைக்கழகத்து வாய்ப்பினை உதறிவிட்டுப் போராட்டத்தில் இணைந்து கொண்டார்களாவென்பது எனக்கு ஞாபகத்திலில்லை. 83ற்குப் பின்னர் பலர் இணைந்திருக்கின்றார்கள். ஆனால் முன்னர்... எனக்கு ஞாபகத்திலில்லை.
அந்தக் கருத்தரங்கில் 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்று தன்னை அறிமுகப்படுத்திய நெடுந்தீவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரை சந்தித்ததும் நினைவிற்கு வருகின்றது. பின்னர் இவர் 'றோனியோ' பிரதியாக தமது கட்சியின் கொளைகப்பிரகடன அறிக்கையினைத் தபால் மூலம் கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியல் அமைப்பான தமிழீழ விடுதலை இயக்கமென்ற அமைப்பு அன்று விளங்கியதாக ஞாபகம். அதிலிணைந்து மிகவும் ஆர்வத்துடன் வவுனியாவைச் சேர்ந்த 'டெயிலர்' ஒருவர் இயங்கிக் கொண்டிருந்தார். அவரது பெயர் மறந்துபோய் விட்டது. ஆனால் இன்னும் ஞாபகத்திலிருக்கின்றார்.
அன்றைய காலகட்டத்தில் சந்தித்தவர்களில் இன்னுமொருவர் 'ஃபாதர் சேவியர்'. அவரையும், அவரது துணைவியாரான சிங்களப் பெண்மணியையும் டாக்டர் இராஜசுந்தரத்தின் இல்லத்திலும், காந்தியப்பண்ணைகளுக்கான பயணங்களின்போதும் சந்தித்திருப்பது ஞாபகத்திற்கு வருகின்றது. ஒரு நள்ளிரவில் ராஜசுந்தரத்தின் வீட்டில் அவரது மகள்மாரின் நடன நிகழ்வையும் கண்டுகளித்ததும் ஞாபகத்திலுள்ளது. அந்நிகழ்வின்போதும் 'ஃபாதர் சேவியரும், அவரது துணைவியாரும் அங்கிருந்தார்கள். மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த இலாபநோக்கற்று இயங்கும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலரும் அங்கிருந்தார்கள்.
'நுட்பம்' இதழானது பலரைச் சந்திக்கும் வாய்ப்பினைத் தந்திருந்தது. பேராசிரியர் கைலாசபதி, பேராசியர் சிவத்தம்பி போன்றோருடன் யாழ் மருத்துவ பீடத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த திருமதி ராஜினி திரணமகமவையும் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. வெளியான நுட்பத்தினை விநியோகிப்பதற்காகவே யாழ்பல்கலைக்கழக்த்திற்காக அங்கு விஞ்ஞானபீடத்தில் பயின்றுகொண்டிருந்த நண்பர் ஆனந்தகுமாருடன் (இவரும் பின்னர் விடுதலை அமைப்பொன்றுடன் இணைந்து தன்னை ஈழ விடுதலையுடன் பிணைத்துக் கொண்டவர்) சென்றபொழுது 'உணர்வு' பத்திரிகை ஆசிரியரான சிவகுமாரைச் சந்தித்ததும் ஞாபகத்திற்கு வருகின்றது. அப்பொழுது அவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவரான கெளரிபாலனின் தங்கையான யாழ் பல்கலைக்கழகத்து மாணவியொருவரைக் காதலித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே சிவகுமாரை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் சந்தித்திருக்கின்றேன். 'உணர்வு' பத்திரிகைக்குச் சந்தா சேகரிப்பதற்காக வந்திருந்தபொழுது சந்தித்திருக்கின்றேன். யாழ் பல்கலைக்கழகத்தில் அவரைச் சந்தித்தபொழுது அவருக்கும் 'நுட்பம்' இதழொன்றினைக் கொடுத்தபொழுது அவர் தனது வருங்கால மனைவியை கெளரிபாலனின் தங்கையென்று கூறி அறிமுகப்படுத்தியது ஞாபகத்திலிருக்கிறது. வழியில் அப்பொழுது யாழ்பல்கலைக்கழக்த்தில் நூலகத்தில் நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஆ.சிவநேசச்செல்வனையும் சந்தித்ததும் ஞாபகத்திலுள்ளது. மேற்படி நுட்பம் இதழினை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு யாழ் கைதடியில் இயங்கிக்கொண்டிருந்த மருத்துவ பீடத்திற்குச் சென்றபொழுதுதான் திருமதி ராஜணி திரணகமவைச் சந்திக்க முடிந்தது. அப்பொழுது மாணவர்கள் ஒரு வயது முதிர்ந்த பெரியவரின் உடலைக் கூறுபோட்டபடியிருந்தார்கள். ராஜனி திரணகம எங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி மாணவர்களுக்கு நுட்பம் இதழினை விநியோகிப்பதற்கு உதவினார். பின்னர் ஏற்பட்ட நாட்டின் அரசியல் நிலைமைகளினால் நுட்பத்திற்கான விற்பனைப் பணத்தினை சேகரிப்பதற்காகச் செல்ல முடியவில்லை. - ஆசிரியர்]
- இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். -