- கடந்தவருடம் இலங்கையில் இரண்டாவது பதிப்பாக, மகுடம் வெளியீடாக வெளிவந்த எனது (வ.ந.கிரிதரன்) 'அமெரிக்கா' நாவலுக்குப் பேராசிரியர் வழங்கிய அணிந்துரை! -
பேராசிரியர் செ.யோகராசாவின் அணிந்துரை!
புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர் வரிசையில் வ.ந.கிரிதரனின் இந்நாவல் வித்தியாசமானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாகவுள்ளது. இதுபற்றி இவ்வேளை எடுத்துரைப்பது பொருத்தமானதென்று கருதுகின்றேன்.
புலம்பெயர் இலக்கியத்தின் பேசுபொருள் அகற்சியுடையதென்பதையும் பல உட்பிரிவுகள் கொண்டதென்பதையும் ஆழமான வாசிப்புடைய இலக்கிய ஆர்வலர் அறிந்திருப்பர். எனினும் அவற்றுள் சில விடயங்கள் இன்றுவரை போதியளவு பேசப்படவில்லை என்பதே கவனத்திற்குரியது. 'நெடுவழிப்பயண'மும் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுவதும் சார்ந்த அனுபவங்கள் இவ்விதத்தில் முக்கியமானவை. ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் போதான நெடுவழிப்பயணம் பற்றி கி.பி. அரவிந்தனின் சில கவிதைகளும், இளைய அப்துல்லாவின் பத்தி எழுத்துகளும் குறிப்பிடத்தக்கவை. கனடாப் பயணம் பற்றிய சில அனுபவங்களை அ.முத்துலிங்கம் பதிவு செய்துள்ளார். அவுஸ்திரேலிய பயண அனுபவங்கள் சில பத்திரிகைகளில் மட்டும் வெளிவந்திருக்கின்றன. அமெரிக்காவில் தடுப்பு முகாம் அனுபவங்களுக்குட்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுவது அரிதானது. இத்தகைய அபூர்வமான வாய்ப்பு அவப்பேறாகவோ அதிஷ்டகரமாகவோ இவருக்குக் கிடைத்திருக்கின்றது. இவ்விதத்தில் பேசாப் பொருளாகவிருந்ததொன்று இந் நாவலூடாக முதன் முதலாகப் பேசு பொருளாகியுள்ளமை விதந்துரைக்கப்பட வேண்டியதாகின்றது.
எண்பத்து மூன்று இனக்கலவரத்தின் விளைவாக கனடா செல்வதற்கு புறப்பட்டவர்கள் விசா இல்லாமை காரணமாக அமெரிக்காவில் தடங்களுக்குள்ளாகி திருப்பி அனுப்பப்பட வேண்டிய நிலைக்குள்ளானபோது அகதி அந்தஸ்துக் கோரியமையினரால் நியூயோர்க் மாநகரின் ஒரு பகுதியான புரூக்லீனின் ஓர் ஓரத்தே கைவிடப்படும் நிலையிலிருந்த கட்டிடத்தின் ஐந்தாம் மாடியிலே தங்க வைக்கப்படுகின்றனர். அங்கிருந்த மூன்று மாத காலத்திலும் பெற்ற பல்வேறு அனுபவங்களே இந் நாவலாக மலர்ந்துள்ளது. அவைபற்றி இவ்வேளை எதுவும் குறிப்பிடாமல் வாசகரது வாசிப்பிற்கு விட்டுவிடுவதே உசிதமானது.
*அட்டை வடிவமைப்பு: கட்டடக்கலைஞர் சிவசாமி குணசிங்கம் -
இன்னொரு விதத்திலும் இந்நாவல் சிறப்பிடம் பெறுகின்றது. 'உலகின் மாபெரும் ஜனநாயக நாடு. மனித உரிமைகளுக்கு மதிப்புத் தருகின்ற மகத்தான பூமி என்றெல்லாம் வர்ணிக்கப்படும் அமெரிக்காவானது உண்மையில் 'ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம். உள்ளே இருப்பது ஈரும் பேனும்' என்ற நிலையில் இருக்கின்றது என்ற கசப்பான உண்மையை முதன் முதல் எமக்கு உணர்த்துகின்ற படைப்பாகவும் இந்நாவல் காணப்படுகின்றது. (அதே வேளையில் மு.பொ. தமது 'பொறியில் அகப்பட்ட தேசம்' என்ற நெடுங்கவிதையூடாக அமெரிக்காவில் ஜனநாயக இருப்பிற்கு இன்னொரு விதத்தில் பாடம் புகட்டியிருந்தார் என்பதும் நினைவு கூரத்தக்கது).
தவிர, இவ்வாறான முகாம்களிலுள்ள தமிழர்களை எட்டிப்பார்ப்பதற்கு நேரமில்லாத தமிழ் அமைப்புகளின் சுயரூபமும் அம்பலப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஆக, இன்னும் விரிவாக எழுதியிருக்கலாமென்ற குறையொன்றிருந்தாலும், 'கடுகு சிறிதெனினும் காரம் பெரிதாகவுள்ளது ' என்பதில் ஐயமில்லை. இக்குறையைப்போக்குவது போல, நியூயோர்க் மாநகர அனுபவங்களைப்பேசும் இவரது அடுத்த நாவலான 'குடிவரவாளன்' விரிவாக உருவாகியுள்ளமை நிறைவளிக்கின்றது. தொடர்ந்து கனடா வாழ் அனுபவங்கள் இன்னும் விரிவும் ஆழமும் பெற்று வெளிப்படுமாக.
வாழ்த்துகளுடன்
பேராசிரியர் செ.யோகராசா