எழுத்தாளர் எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ அவர்களின் சிங்கள நாவலான 'தரணி' தமிழில் தற்போது 'தரணி' என்னும் பெயரில் ,எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில், பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வெளியாகியுள்ளது. சிங்கள் இலக்கிய உலகில் நன்கறிந்த எழுத்தாளர் கத்யானா அமரசிங்ஹ அவர்களுக்கு வாழ்த்துகள். அந்நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரையினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். - வ.ந.கிரிதரன் -
நூலை வாங்க: பூபாலசிங்கம் புத்தகசாலை
இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11.
மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையத்தளம்: www.poobalasingham.com
அண்மையில் நான் வாசித்த புனைகதை 'தரணி'. இதுவொரு சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. சிங்கள இலக்கிய உலகில் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவர் கத்யானா அமரசிங்ஹ. புனைகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பன்முகத்திறமை மிக்கவர் இவர். அத்துடன் ஊடகத்துறையிலும் தீவிரமாகச் செயற்படும் சமூக, அரசியற் செயற்பாட்டாளர். இலங்கையின் சமகால சமூக, அரசியற் பிரச்சினைகளில் மிகுந்த தெளிவு மிக்கவர். அவற்றை இன, மத, மொழி ரீதியாக அணுகாமல், மானுடப்பிரச்சினைகளாக அணுகுமொருவர். இதனை இவர் எழுதி அண்மையில் வெளிவந்த 'தரணி' நாவலிலும் காணலாம். இந்நாவல் இலங்கையில் பல விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப். இவரும் இலக்கியத்தின் பல்வகைப்பிரிவுகளில் , மொழிபெயர்ப்பு உட்பட, காத்திரமான பங்களிப்பைச் செய்து வருபவர். ஏற்கனவே பல நூல்களை, ஆக்கங்களைச் சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றார். இந்நாவலின் மொழிபெயர்ப்பும் இவரது மொழிபெயர்ப்பில் தமிழுக்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த படைப்புகளிலொன்றாக அமைந்துள்ளதென்பதை வாசிக்கும் எவரும் உணர்ந்துகொள்ளலாம்.
கத்யானா அமரசிங்ஹவின் 'தரணி' நாவலானது கருவினைச் சுருக்கமாகக் கூறுவதாயின் துலன்யா என்னும் பெண்ணொருத்தியின் வாழ்வு பற்றிய , அவளைப்பல்வகைகளில் பாதித்த ஆளுமைகளைப்பற்றிய அவளது எண்ணங்களின் தொகுப்பாகக் கூறலாம். அடிப்படையில் தூய காதல் உணர்வுகளை மையமாக வைத்துப் பின்னப்பட்ட நாவலென்றும் கூறலாம். இந்நாவலில் நடமாடும் முக்கிய பாத்திரங்களின் காதலை விபரிக்கும் நாவலென்றும் கூறலாம். அப்பாத்திரங்களின் காதல் உணர்வுகளை துலன்யாவின் எண்ணங்கள் வாயியலாகக் கதாசிரியர் விபரித்துச் செல்வதுடன், துலன்யாவின் காதல் உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றார். இவ்விதம் மானுடக் காதலை மையமாக வைத்துப்புனையப்பட்ட நாவலென்றவுடன் இந்நாவலை அன்றாடம் வெகுசனப் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் வெளியாகும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய காதல் கதைகளிலொன்றாக எண்ணிவிடாதீர்கள். தூய்மையான மானுடக் காதலை விபரிக்கும் அதே சமயம் , இந்நாவலானது பல்வகைகளில் சிறந்து விளங்குவதை வாசிக்கும் எவரும் உணர்ந்துகொள்வர். படைப்புத்திறமை, பாத்திரப்படைப்பு, மொழி மற்றும் கூறும் பொருள் என்பவற்றில் இந்நாவல் சிறந்து விளங்குகின்றது.
கதாசிரியரின் படைப்புத்திறனை இந்நாவலானது கட்டமைக்கப்பட்டுள்ள கதைப்பின்னல் வெளிப்படுத்துகின்றது. நாவலின் பிரதான பாத்திரமான துலன்யா வாசிக்கும் எவரும் மறக்க முடியாத வகையில் நாவலில் உலா வருகின்றாள். குழந்தைப்பருவத்திலிருந்தே அவள் வாழ்க்கை ஏனைய குழந்தைகளிலிருந்து ஒருவிதத்தில் வேறுபட்டதாகவும் அமைந்திருக்கின்றது. அவள் அடிக்கடி பகற் கனவுகள் காணுகின்றாள். அவ்விதம் காண்கையில் அக்கனவுகளில் நடமாடும் மாந்தர்களும் அவள் நிஜவாழ்வில் பின்னிப்பிணைந்து விடுகின்றார்கள். கனவுலக மாந்தர்கள் சிலருடன் அவள் உரையாடுகின்றாள். உணர்வுகளைப்பரிமாறிக்கொள்கின்றாள். சிறு வயதில் தனிமையில் தன் துணிப்பொம்மையைத் சிநேகிதியாக வைத்து உரையாடி வளரும் அவள் பின்னர் தன் கனவுலகத்து மனிதர்களுடனும் அவ்விதமே உறவாடி வருகின்றாள். அதே சமயம் அவள் சாதாரண பெண்ணாகவும் அன்றாட வாழ்வினைக் கொண்டு நடத்தக் கூடிய ஒருவளாகவும் வாழ்ந்து வருகின்றாள். அவளது தனிமையை நாடிய போக்கும் , கனவுலக மனிதர்களுடன் உரையாடி , உறவாடும் போக்கும் அவளது பிரியத்துக்குரிய உறவினர்கள் மத்தியில் அவளையிட்டுக் கவலையை ஏற்படுத்துகின்றது. அவளுக்கு உளவியல்ரீதியிலான பிரச்சினை இருக்கின்றதோ என்னும் சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றது. அவளை உளவியல் வைத்தியரைக்காண அழைத்துச் செல்கின்றார்கள். அவளோ அவர்கள் தனக்கு எதுவுமில்லாதநிலையில் தன்னை உளவியற்பாதிப்புக்குள்ளாகிய ஒருவளாக கருதி நடத்துவதாக ஆத்திரம் கொள்கின்றாள். உண்மையில் துலன்யா களங்கமற்ற அற்புதமான பெண்மணி. அவள் தன் நாட்டின் சக மாந்தர்களை மானுடர்களாக எண்ணியே அவர்களுடன் உறவாடுகின்றாள். எங்காவது அவர்களை அவள் மத, மொழி , இனரீதியாகப் பிரித்துபார்க்காத ஒருவளாகவே வாழ்ந்து வருபவள். அவ்விதமான ஒருவள் தன் கதையினை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றாள். தன் கதையைக் கேட்கும் வாசகர்கள் தன்னைப்பற்றி எடைபோடுங்கள் என்று வேண்டிக்கொள்கின்றாள். இவ்விதமே நாவல் ஆரம்பமாகின்றது. இவ்விதமாகத் தன் கதையைக் கூறத்தொடங்கும் துலன்யா பின்வருமாறு கூறத்தொடங்குவாள்:
"நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம், என்னைக்குறித்த அவர்களது கருத்துகளை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, நான் முன் வைக்கும் இந்தக் கதையை மிகவும் கவனமாக வாசிக்கும்படி மாத்திரமே. எனது வாழ்க்கையை மிகவும் பாதித்த ஆண்களினதும், பெண்களினதும் ஊடாக இந்தக் கதை பின்னப்பட்டிருக்கின்றது."
இந்நாவலானது துலன்யா என்னும் பெண்ணின் வாழ்வை, அவளைப் பாதித்த மானுட ஆளுமைகளைப்பற்றி விபரிப்பதாகும். இவ்விதமாக ஆரம்பத்திலேயே நாவல் கூறப்போகும் விடயம் முற்றாகப் புரிந்து விடுகின்றது. அவ்விதமிருந்தும் நாவலைப்படிக்க வாசகர்களைத்தூண்டும் வகையில் நாவல் படைக்கப்பட்டுள்ளது; கட்டமைக்கப்பட்டுள்ளது.
பாத்திரப்படைப்பிலும் இந்நாவல் தனித்துவம் மிக்கதாக விளங்குவதுடன், பாத்திரங்களை உயிர்த்துடிப்புடன் படைப்பதிலும் ஆசிரியர் வெற்றிபெற்றுள்ளார். இந்நாவலைப்படித்து முடிந்ததும் ஒருவரைக்கூட என்னால் மறக்கமுடியவில்லை. பாத்திரங்கள் அனைவரையும் என்னால் எவ்விதச் சிரமங்களுமில்லாமல் நினைவுக்குக் கொண்டுவர முடிகின்றது. அது ஒன்றே பாத்திரப்படைப்பின் வெற்றியை வெளிப்படுத்துகின்றது. இந்நாவலில் துலன்யா விபரிக்கும் மானுட ஆளுமைகளில் முக்கியமானவர்கள் அவளது அம்மா, அம்மம்மா, அக்கா, பெரியண்ணன், ரஞ்சித் அண்ணன், ரவீந்திரன், ஜெயகாந்தன், வர்ணிகா மற்றும் ராஜினி. இவர்களுடன் மனநல மருத்துவன் வனசிங்ஹ. இவர்கள் அனைவருமே நாவலை வாசித்து முடிந்த பின்னரும் வாசிக்கும் வாசகர்கள் நெஞ்சங்களில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றார்கள்.
பெரியண்ணன் வாழ்க்கையின் அடித்தட்டு மானுடர்களின் நல்வாழ்வுக்காகப்போராடும் புரட்சிகர சிந்தனைகள் மிக்க மனிதர். அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டு வதைகளுக்குள்ளாக்ப்பட்டு நடைப்பிணமாக விடுதலையாகின்றார். அதன் பின்னர் அவரது வாழ்க்கை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவேயில்லை. வீட்டிலிருந்து நீங்கி வாழ்க்கையைத் தொடங்கும் அவர் ஒருநாள் தன் வாழ்வை முடித்துக்கொள்கின்றார். அவரது நண்பனான தமிழனான ரவீந்திரனோ வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்தப்படுகின்றான். இறுதியில் எரியுண்ட நிலையில் அவனது உடல்தான் எஞ்சுகின்றது. அவன் மேல் துலன்யாவின் அக்கா உயிரையே வைத்திருக்கின்றாள். அவனும் அவளையே காதலிப்பதாகத் துலன்யாவும் எண்ணுகின்றாள். ஆனால் நாவலின் இறுதியில்தான் தெரிய வருகின்றது அவன் விரும்பியது அவளது அக்காவையல்ல. அவளைத்தான் என்று. இதற்கிடையில் அவளது திருமணம் நடைபெறாது அவளது வயதும் ஏறிக்கொண்டே செல்கின்றது. இச்சூழலில் அவளது வாழ்வில் எதிர்ப்படுகின்றான் ஜெயகாந்தன். நாட்டின் அரசியற் சூழல் காரணமாக நாட்டை விட்டு இங்கிலாந்துக்கு அகதியாகச் சென்று அங்கு வாழ்க்கைப்போராட்டத்தில் ஈடுபட்டு, நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் திரும்புவன். வயது முதிர்ந்தவன். அவன் மீது அவள் காதல் வயப்படுகின்றாள். ஆனால் அவனோ இயக்கப்போராளியான ராஜினியின் மீது காதலை வைத்திருப்பவன். யுத்தச்சூழலில்காணாமல் போன தனது காதலி என்றாவது திரும்பிவருவாள் என்று நம்புபவன். அவனும் வாழ்க்கைப்போராட்டத்தின் விளைவாக மீண்டும் இங்கிலாந்து திரும்புகின்றான். இந்நிலையில் திருமண வயதினைக் கடந்தும் கன்னியாகவே வாழும் துலன்யாவுக்கு எப்படியாவது திருமணம் முடித்து வைக்க் அவளது தாயார் விரும்புகின்றாள். அவளது உறவினனான வர்ணிகாவை அவளுக்குக் கட்டி வைக்கின்றான். வர்ணிகாவும் முதிர்ச்சியடைந்த மனத்தை உடையவன். துலன்யாவுக்கு ஜெயகாந்தன் மீதான காதலை உணர்ந்தவன். இருந்தும் அவளை மனப்பூர்வமாக ஏற்று மனைவியாக்கிக்கொள்பவன். கள்ளங்கபடமற்ற துலன்யாவுக்கு ஏற்ற கணவன் அவன். தூய்மையான உள்ளம் அவனுடையது. இவ்விதமாகச் செல்லும்கதையோட்டத்தில் ராஜினியைத் தன் கனவுலகத்தோழியாக உருவகித்துத் துலன்யா உரையாடுகின்றாள்; உறவாடுகின்றாள்.
இவ்விதம் பாத்திரப்படைப்பில் தனித்துவம்மிக்கதாக விளங்கும் நாவலின் மொழியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இயற்கையை, சக மானுடரைப்பற்றிய துலன்யாவின் எண்ணங்களை வெளிப்படுத்தும் நாவலின் மொழிநடை நாவலின் சிறப்புக்கு முக்கிய காரணங்களிலொன்று. வாசகர்தம் இதயங்களை வருடிச்செல்லும் நடை. பாத்திரங்களின் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் மொழி. உதாரணங்களாகப் பின்வரும் பந்திகளைக் குறிப்பிடலாம்:
"வயலைத் தாண்டி ஒரு பசும் புல் நிலம். அதையும் தாண்டி ஒரு பற்றைக்காடு. தொலைவில் நீல மலைத்தொடர் வரைக்கும் விரிந்து செல்லும் இப்பூமியின் தரிசனமானது அதிகாலை வேளைகளில் பனிப்புகாரால் மூடியிருப்பதைக் காணலாம். அன்று , அசோக மரத்தினருகே வாங்கில் அமர்ந்திருந்த நான் அச்சத்தில் உறைந்து போய், அறுவடைக்குப்பிறகு பாழடைந்து பொயிருந்த வயல்வெளியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சிறு பராயத்தில் அவ்விடத்தில் , அதே பலகை வாங்கில் அமர்ந்திருந்த நானும், அக்காவும் , பெரியண்ணனும் ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவைகளைப்பார்த்துக்கொண்டிருப்போம். தோட்டத்தின் இடதுபக்க மூலையிலிருந்து தோன்றும் அவை முற்றத்தினூடாக ஆகாயத்தின் ஏகாந்தத்தைக் குலைத்தவாறு பறந்துய் சென்று தூரமலைத்தொடரில் ஒளிந்துகொளளும். அவை அவ்வாறு பறந்துசென்று எங்கே தங்கிக்கொள்ளும் என நான் பல தடவைகள் சிந்தித்திருக்கின்றேன். பால்ய வயதில், இரவில் ஆகாயத்தில் உதித்திருக்கும் நட்சத்திரக் கூட்டங்களை நாங்கள் பார்த்துக்கொண்டிருந்ததுவும் இவ்விடத்திலிருந்துதான். பெரியண்ணன் பெருங்கரடி, சிறு கரடி விண்மீன் தொகுதிகளை வேறுபடுத்தி அறிந்துகொள்ளும் விதத்தை எனக்கும், அக்காவுக்கும் கற்றுத்தந்தார்." [பக்கங்கள் 8 & 9]
இவ்விதமாகப்பெரியண்ணன் வாழ்ந்தபோது தன் வாழ்வினை விபரிக்கும் துலன்யா அவர் தன் வாழ்வை முடித்துக்கொண்டதும் அதன்பின்னரான தனது வாழ்வினைப் பின்வருமாறு விபரிக்கின்றார்:\
"இராக்கால வானத்தை நான் பார்த்துக்கொண்டிருந்த போதிலும் , ஏனைய நாட்களைப்பஓல் பெருங்கரடி விண்மீன் கூட்டத்தை அடையாளம் காண என்னால் இயலாதிருந்தது. நட்சத்திரக் கூட்டங்கள் தெளிவற்றதாக ஓன்றின் மேலொன்றென ஒழுங்கற்று உதித்திருப்பதாக எனக்குத்தென்பட்டது. இருண்ட வானத்தில் நட்சத்திரங்கள் ஒளி மங்கியிருப்பதைப்பார்த்தவாறிருந்தேன்." [பக்கம் 23]
இவ்விதமாகப் படைப்புத்திறமை, பாத்திரப்படைப்பு, மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கூறும் பொருளிலும் தனித்துவம் மிக்கதாக விளங்குகின்றது. அத்துடன் நாட்டின் சமூக, அரசியற் சூழல்கள் எவ்விதம் மக்கள்தம் வாழ்வினைப்பாதித்துள்ளன என்பதையும் வெளிப்படுத்துகின்றது. எழுதுவதன் மூலம் சமூக, அரசியற் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஜெயகாந்தன், மக்கள் மீதான அரசின் மானுட உரிமை மீறல்களால் ஆயுதத்தைக் கையிலெடுக்கும் பெண் போராளியான ராஜினி, அவர்களுக்கிடையில் நிலவும் காதலை, உள்ளக் குமுறல்களை விபரிக்கும் நாவல் அதே நாட்டுச்சூழல் எவ்விதம் அவர்கள்தம் வாழ்வினைச் சீரழித்து விடுகின்றது என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது. அவர்களை மட்டுமல்ல பெரியண்ணனின் முடிவுக்கும், ரவீந்திரனின் முடிவுக்கும் நாட்டில் நிலவும் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல்கள்தாம் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இவர்கள் அனைவர்தம் வாழ்வியற் பிரச்சினைகளை, சவால்களை மானுடர்தம் பிரச்சினைகளாக அணுகுவதில் வெற்றியடைந்துள்ளார் கதாசிரியர். நாவலை வாசித்து முடிக்கையில் எதற்காக இந்நாட்டு மானுடர்கள்தம் வாழ்வு இவ்விதம் சிதைந்து போக வேண்டும்? எதற்காக இவர்களுக்கிடையிலான காதல் உணர்வுகள் இவ்விதமான வலிகளுக்கு, வதைகளுக்குள்ளாக வேண்டும்? என்று இந்நாட்டு மானுடர்கள்தம் வாழ்வில் பூரண மகிழ்ச்சி நிறையும்? எதற்காக இந்நாட்டு மனிதர்கள் அந்நிய நாடுகளில் அகதிகளாக அலைய வேண்டும்? என்று அடக்குமுறைகள் அனைத்தும் நீங்கி இந்நாட்டு மானுடர்கள் அமைதியான , அன்புமயமான வாழ்க்கையினை இன, மத, மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகளற்று வாழும் நிலை உருவாகும்?
ஒருவகையில் இந்நாவலின் மாந்தர்கள் அனைவரும் குறியீடுகள். நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் பிரச்சினைகளை விபரிக்கும் குறியீடுகள் அவர்கள். இவ்விதமாகச் சீர்குலைந்திருக்கும் மண்ணில் அமைதியும், நல்லிணக்கமும் மலர வேண்டுமானால் எவ்விதம் முடியும்? அதற்கான பதிலையும் நாவலே முன்வைத்துமுள்ளது நாவலின் பிரதான பாத்திரமான துலன்யாவின் வடிவில். கள்ளங்கபடமற்ற துலன்யா எவ்விதம் சக மானுடர்களை மானுடர்களாக ஏற்றுக்கொண்டு காதலிக்கின்றாளோ? அவர்கள் மேல் அன்பு வைக்கின்றாளோ? நட்பு வைக்கின்றாளோ? அவ்விதமே வையுங்கள் என்று மறைமுகமாகக் கூறுமொரு குறியீடுதான் துலன்யா பாத்திரம்.
தரணி என்றால் பூமி. இந்நாவலின் தலைப்பு எதனால் தரணி என்று எண்ணிப்பார்த்தேன். சமூக, அரசியல் மட்டும் பொருளியற்பிரச்சினைகளால் மத, மொழி, மற்றும் இனப்பிளவுகளால் பற்றியெரிந்துகொண்டிருக்கின்றது இத் தரணி. இவற்றுக்கெல்லாம் உண்மையான தீர்வு சக மானுடர்கள் மீதான நிபந்தனையற்ற பூரணமான தூய அன்பே! துலன்யாவின் சக மானுடர் மீதான் தூய அன்பு அதனையே மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.