அண்மையில் அகழ் இணைய இதழில் காலம் செல்வத்துடனான நேர்காணலொன்று வந்திருந்தது. அதில் பேட்டி கண்டவர் பின்வரும் கேள்வியொன்றைக் கேட்டிருந்தார்:
"கி.பி.அரவிந்தன் புலம்பெயர் தேசத்தில் கவிதைகள் எழுத முன்னரே பாரிசில் கவிதைகள் எழுதியவர் நீங்கள். ஆண்டு வரிசையை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் தான் நமது புலம்பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகச் சொல்லாம். கவிதைகள் எழுத நேர்தது எப்படி? அப்போது உங்களுக்கு ஆதர்சனங்கள் இருந்தார்களா?"
இதற்குக் காலம் செல்வம் பின்வருமாறு பதிலளித்திருந்தார்:
"கி.பி.அரவிந்தன் 90களுக்கு பிறகு, நான் கனடாவுக்கு வந்தபிறகுதான் பாரிஸ் வந்தார். அவருடைய கவிதைகள் நல்லதாயிருக்கலாம். சில சிலபேர் வேறு காரணங்களுக்காக அவர் புலம் பெயர்ந்த முதல் கவிஞன் என்று எழுதியதைப் பார்த்திருக்கிறேன்"
கேள்வி கேட்டவர் காலம் செல்வம் புலம்பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகச் சொல்லலாம் என்று கூறுகின்றார். இதற்கான பதில் ஊடகமொன்றில் வெளியான காலம் செல்வத்தின் கவிதையிலுள்ளது. இது பற்றி அறிய நானும் ஆவலாகவுள்ளேன். காலம் செல்வம் எழுதிய முதலாவது கவிதை எப்பொழுது , எங்கு வெளியானது என்பதை அவர் அறியத்தந்தால் இவ்விடயத்தில் முடிவொன்றினை எடுக்க முடியும். 1984இல் மொன்ரியாலில் வெளியான புரட்சிப்பாதையில் கவிதைகள் வெளியாகியுள்ளன. எனது கவிதைகளும் அதில் இடம் பெற்றுள்ளன. வேறு சிலரின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அதில் வெளியான எனது கவிதைகள் மண்ணின் குரல் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளன. காலம் செல்வம் புலம் பெயர் முன்னோடிக் கவிஞன் என்று தீர்க்கமாகக் கூறியிருப்பதால் அவருக்கும் காலம் செல்வத்தின் முதல் கவிதை வெளியான விபரம் தெரிந்திருக்க வேண்டும். அவரும் இவ்விடயத்தில் பதிலைக் கூறலாம்.
மேலும் காலம் செல்வம் தான் கனடாவுக்கு வந்தபின்னரே , தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிஞர் கி,பி,அரவிந்தன் பாரிசுக்குப் புலம் பெயர்ந்தாரென்று கூறியிருக்கின்றார். ஆனால் கி.பி.அரவிந்தன் பற்றிய விக்கிபீடியாப் பக்கத்தில் "இவர் தோழர் சுந்தர் என்றும் ஈரோஸ் இயக்கத்தின் விடுதலைப் போராளியாக அறியப்பட்டவர். 1977 இல் இலங்கையை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்ந்து வந்தார். இவரது படைப்புக்களில் ஈழவிடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழரின் புகலிட வாழ்வியலும் முனைப்புடன் காணப்படுகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து கி.பி.அரவிந்தன் நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த ஆண்டு 1977 என்று தெரிகின்றது. மேலும் அவரது கவிதைத்தொகுதியான 'இனி ஒரு வைகறை ' சென்னையில் 1991இல் பொன்னி வெளியீடாக வெளியாகியுள்ளதாக அறியப்படுகின்றது.
இலங்கைச் சூழலால் புலம்பெயர்ந்து தமிழகம் சென்றவர்களும் புலம்பெயர் எழுத்தாளர்கள்தாம். எனவே காலம் செல்வத்தின் கவிதைத்தொகுதி வெளியாவதற்கு முன்னர் கி.பி.அரவிந்தனின் 'இனி ஒரு வைகறை' வெளியாகியுள்ளது. அதிலுள்ள கவிதைகள் எக்காலகட்டத்தில் , எங்கு எழுதப்பட்டன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
இந்நிலையில் மேற்படி நேர்காணலைக் கண்டவரின் கேள்விக்குப் பதிலளித்த செல்வம் '"கி.பி.அரவிந்தன் 90களுக்கு பிறகு, நான் கனடாவுக்கு வந்தபிறகுதான் பாரிஸ் வந்தார். அவருடைய கவிதைகள் நல்லதாயிருக்கலாம். சில சிலபேர் வேறு காரணங்களுக்காக அவர் புலம் பெயர்ந்த முதல் கவிஞன் என்று எழுதியதைப் பார்த்திருக்கிறேன்" என்று கூறியுள்ளது வியப்பைத்தருகின்றது.
அடுத்தது காலம் செல்வம் புலம்பெயர் முன்னோடிக் கவிஞன் என்றால் அவரது கவிதைகள் 1984ற்கு முன்னர் புலம்பெயர் ஊடகமொன்றில் வெளியாகியிருக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை அவர் தர வேண்டும். ஏனென்றால் எனது கவிதைகள் புரட்சிப்பாதையில் (1984) வெளியான அதே சமயம் , 1987 ஜனவரியில் வெளியான 'மண்ணின் குரல்' (கனடா) தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளன.
'மண்ணின் குரல்' நாவலே நூலாகக் கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். இந்நாவல் மான்ரியலிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் 1.12.-1984 தொடக்கம் 14.6.1985 வரை ஏழு அத்தியாயங்கள் தொடராக வெளியானது. பின்னர் நாவல் பூர்த்தி செய்யப்பட்டு நூலாக தை 1987இல் வெளியானது. 'மண்ணின் குரல்' நாவலின் முதலிரு அத்தியாயங்களையே இங்கு காண்கின்றீர்கள்.
'புரட்சிப்பாதை' சஞ்சிகையில் வெளியான எனது கட்டுரைகள் , கவிதைகள் மற்றும் நாவல் ஆகியவற்றின் தொகுப்பே பின்னர் 'மண்ணின் குரல்' என்னும் பெயரில் கனடாவில் வெளியான தொகுப்பாகும். வெளியான ஆண்டு 1987.
'புரட்சிப்பாதை'யில் வெளியான எனது படைப்புகளின் விபரங்கள்:
நாவல்: மண்ணின் குரல் (7 அத்தியாயங்கள்)
கட்டுரைகள் 2:
1. பாரதி கண்ட சமுதாயமும், தமிழீழமும்
2. விடுதலைப்போரும் பெண்களும், பெண்கள் விடுதலையும், பாரதியும்.
கவிதைகள் 8:
1. மாற்றமும், ஏற்றமும்
2. அர்த்தமுண்டே...
3. விடிவிற்காய்...
4. புல்லின் கதை இது.
5.ஒரு காதலிக்கு....
6. மண்ணின் மைந்தர்கள்.
7.புதுமைப்பெண்
8.பொங்கட்டும்! பொங்கட்டும்!
குரல் என்னும் கையெழுத்துச் சஞ்சிகையை ஒரு காலத்தில் 'டொராண்டோ'வில் வெளியிட்டு வந்தேன். ஒரு தகவலுக்காக அது பற்றிய விபரங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். செப்டெம்பர் 1987 தொடக்கம் ஜனவரி 1989 வரையில் 11 இதழ்கள் வெளியான சஞ்சிகை. (செப்டெம்பர் 1987 தொடக்கம் ஆகஸ்ட் 1988 வரை 10 இதழ்களும், பின்னர் ஜனவரி 1989 இல் இன்னுமொரு இதழும் மொத்தம் 11) வெளியான 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையினை நான் ஆசிரியராக இருந்து வெளியிட்டேன். 'குரல்' கையெழுத்துச் சஞ்சிகையின் ஒவ்வொரு இதழும் 100 பிரதிகள் எடுக்கப்பட்டு, 'டொராண்டோ'விலுள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் விநியோகிக்கப்பட்டன. குரல் சஞ்சிகையிலும் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன.
இவ்விடயத்தில் மேலும் விபரங்கள் அறிந்தவர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இங்கு காலம் செல்வத்தை நேர்காணல் கண்டவர் கூறுவது போல் காலம் செல்வமா புலம்பெயர் முன்னோடிக் கவிஞன் என்பதை அறிவதற்கு உங்கள் தகவல்கள் உதவியாகவிருக்கும்.
புரட்சிப்பாதையில் (இதழ் 3; 15.11.1984) வெளியான எனது கவிதை: https://www.facebook.com/GiritharanVN/posts/10156262525843372
குரல்: https://www.facebook.com/GiritharanVN/posts/10157566448093372
மண்ணின் குரல்: https://www.facebook.com/GiritharanVN/posts/10156262544148372
கனடாவின் முதற் கவிதைத்தொகுப்பு: https://www.facebook.com/GiritharanVN/posts/10153774820758372
அகழில் வெளியான செல்வத்தின் நேர்காணல் - https://akazhonline.com/?p=2917
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.