நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அரசியல் கருத்துகளுக்கு அப்பால் ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் கூட்டணியின் வெற்றி தற்போதைய சூழலில் முக்கியமானது; வரவேற்கத்தக்கது. முக்கியமாகப் பின்வரும் காரணங்களுக்காக:
1. தற்போது பதவியிலிருக்கும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த நலன்களுக்காக, பதவிலிருப்பதற்காக இனவாதத்தை, குடிவரவாளர்களுக்கு எதிரான கடுமையான கொள்கைகளைக் கடைப்பிடித்தவர். வெள்ளையின இனவாத அமைப்புகளைப் பகிரங்கமாக ஆதரித்தவர். அவரது குடிவராளருக்கெதிரான கொள்கைகள் காரணமாக ஐந்நூறு குழந்தைகள் தம் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலது.
2. முதன் முதலாகப் பெண்ணொருவர் அமெரிக்க உப அதிபராக வந்துள்ளார். வந்தவர் ஆசிய, கரிபியன் சமூகப் பின்னணியைக்கொண்டவர். அவ்வகையிலும் முக்கியமான , வரவேற்கத்தக்க வெற்றி.
3. கோவிட -19 சூழலைப் பிழையாகக் கையாண்டதால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். இதற்கான பொறுப்பினை அதிபர் டொனால்ட் ட்ரம்பே ஏற்க வேண்டும்.
4. அண்மைக்காலமாக அதிபர் டொனால்ட் ட்ரம்பும், அவரது மகனும் வன்முறையைப் பகிரங்கமாகவே தூண்டி வருகின்றார்கள்; மிகவும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விடயமிது.
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் காலத்தில் உலக நாடுகளைப்பொறுத்தவரையில் போர்கள் அதிகமற்றவையாக இருந்தது முக்கியமான விடயம். மிக அதிக அளவில் குடியரசுக் கட்சியினரை வாக்களிக்க வைத்ததில் அவரது ஆளுமை முக்கியமானது. இதுவரை நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித்தேர்தல்களில் அதிக வாக்குகளைப் பெற்றவராக ஜோ பைடன் முதலிடத்தில் விளங்குகின்றார். அடுத்ததாக இருப்பவர் டொனால்ட் ட்ரம்ப் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே சமயம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் தோற்றதை ஏற்க மறுத்து வருகின்றார். வாக்குகளில் முறைகேடுகள் நடந்ததால்தான் தான் வெல்லமுடியவில்லையென்று குற்றஞ்சாட்டி வருகின்றார். தேர்தலில் தோற்ற நிலையில் அவர் தனது தோல்வியை ஏற்கவேண்டுமென்பது சட்டரீதியாக முக்கியமில்லை. ஜனவரியில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கையில் , டொனால்ட் ட்ரம்ப் அப்பொழுதும் வெள்ளை மாளிகையை விட்டு நீங்க மறுத்தால், அவர் பலவந்தமாக அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் அகற்றப்படுவாரென்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர்களில் அதிக வயதுள்ளதாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனையும், அவருடன் உபஅதிபராகப் பதவியேற்கவிருக்கும் கமலா ஹாரிஸையும் பாராட்டுவோம். அதிக அளவில் அவருக்கு ஜனநாயகக்கட்சியினருடன் , குடியரசுக் கட்சியினரும் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.