அண்மையில் 'Kälam / Tradition & Heritage /C.Anjalendran / The Architecture of the Tamil Hindus of Sri Lanka' என்னும் தலைப்பிடப்பட்ட , இலங்கைக் கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனுடான நேர்காணலை உள்ளடக்கிய காணொளியொன்றினைப் பார்த்தேன். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் சிலவற்றைப்பற்றிய என் கருத்துகளின் பதிவிது. காணொளிக்கான இணைப்பினை இப்பதிவின் இறுதியில் தந்துள்ளேன்.
முன்னாள் வவுனியா பா.உ சி.சுந்தரலிங்கத்தின் பேரனும் , கட்டடக்கலைஞருமான அஞ்சலேந்திரனின் உரையிது. அஞ்சலேந்திரன் புகழ்பெற்ற இலங்கை, தெற்காசியக் கட்டடக்கலைஞர்களிலொருவர். இங்குள்ள காணொளியில் அஞ்சலேந்திரன் இந்துக் கட்டடக்கலை பற்றிக் கூறிய கருத்துகளிலிருந்து அவருக்கு இந்துக்கட்டடக்கலை பற்றி மேலோட்டமான புரிதல்தான் உள்ளதோ என்று சந்தேகப்படுகின்றேன். உதாரணத்துக்கு அவர் கோயில் விமானத்தைக் கோபுரமாகக் கருதிக் கூறிய கருத்துகள். பொதுவாகக் கட்டடக்கலை கற்கைநெறி மேனாட்டுக் கட்டடக்கலையை அடிப்படையாகக்கொண்டு கற்பிக்கப்படுவது. அதில் பாரம்பரியக் கட்டடக்கலை ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை. பெளத்தக் கட்டடக்கலை , இந்துக் கட்டடக்கலை பற்றியெல்லாம் கற்பிக்கப்படுவதில்லை. இதன் காரணமாகவும் அவரது புரிதலில் தெளிவின்மை ஏற்பட்டிருக்கலாம்.
இதிலவர் கோபுரம் பற்றிக் கூறியவற்றைப் பார்க்கலாம். முதலில் கூறுகின்றார் 1080 இல் சோழரால் தஞ்சைபெரிய கோவிலில் அறிமுகப்படுத்தபட்டதுதான் கோபுரம் என்கின்றார். அதன் பின் இன்னுமோரிடத்தில் கூறுகின்றார். இலங்கைத்தமிழர்களின் கோயில் அமைப்பு கேரளாவுடன் அதிகம் தொடர்புள்ளது தமிழகத்துடனல்ல என்கின்றார். இன்னுமோரிடத்தில் கூறுகின்றார் தமிழ்நாட்டில் கோயில் வாசலிலுள்ளது கோபுரம் என்கின்றார். மேலுமோரிடத்தில் இலங்கையில் கோபுரம் அறிமுகப்படுத்தப்பட்டது கடந்த இருபது , முப்பது வருடங்களில்தானென்கின்றார் .
கோபுரம் பற்றிய இவரது கூற்றுகள் அவை பற்றிய இவரது அறியாமையை[ப் புலப்படுத்தின. முதலாம் இராசராசனின் தஞ்சைப்பெருவுடையார் ஆலயத்திலிருப்பது கோபுரமல்ல. அது விமானம். தஞ்சைப்பெரிய கோயில் , கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றின் காலகட்டம் ஆலய வடிவமைப்பில் விமானங்கள் கோலோச்சிய காலகட்டம். விமானம் என்பது ஆலயத்தின் கர்ப்பக்கிருகத்தின் மேல் (கருவறையின் மேல்) அமைக்கப்படுவது. அக்காலச்சோழர் காலத்தில் அமைந்திருந்த ஆலயங்களில் கோபுரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. பிற்காலச்சோழர்களின் காலகட்டத்திலேயே அவற்றின் முக்கியம் அதிகரிக்கத்தொடங்கிப் பின்னர் விஜயநகரசப் பேரசு காலத்தில் , நாயக்கர் கோலத்தில் அவை ஆலய அமைப்பில் கோலோச்சத்தொடங்கின. விசயநகரப்பேரரசு காலத்தில்தான் ஆலயங்கள் பெருமண்டபங்களையும் கொண்டிருக்கத்தொடங்கின. மேலும் இவர் கூறுவதுபோல் அண்மைக்காலத்தில்தான் இருபது , முப்பது வருடங்களில்தான் யாழ்ப்பாணத்தில் கோபுரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது தவறானது என்பது யாவருக்குமே தெரியும்.
இது தவிர இலங்கைத் தமிழருக்கும், கேரளாவுக்குமிடையிலான தொடர்புக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார். அதனையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இலங்கைத்தமிழருக்கும் கேரளாவுக்குமிடையில் தொடர்புகள் இருந்தன. அவற்றின் விளைவாக இருபக்கமும் தாக்கங்கள் ஏற்பட்டன. அவை இயல்பானவை. அதற்காக இவர் தமிழர்களின் ஒட்டுமொத்த வரலாற்றையுமே மாற்றி விடுவது ஏற்கத்தக்கதல்ல. முப்பது , நாப்பதுகளில் யாழ்ப்பாணத்துக்கும், கேரளாவுக்குமிடையிலான வர்த்தகத்தொடர்புகள் உச்ச நிலையிலிருந்ததை அக்கால ஈழகேசரிப் பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். உதாரணமாகப் புகையிலை வர்த்தகத்தைக் குறிப்பிடலாம்.
இன்னுமொரு விடயத்திலும் இவர் தவறிழைக்கின்றார். சிங்களவர்கள், தமிழர்கள் மத்தியில் ஒரு காலத்தில் கி.பி ஆரம்ப நூற்றாண்டுகளில் பெளத்தமதத்தைப் பின்பற்றும் சூழல் இருந்ததை மணிமேகலைக் காப்பியம் எடுத்துக்காட்டும், சிங்கள மன்னன் கஜபாகு கண்ணகி வழிபாட்டை இலங்கைக்குக்கொண்டு வந்தான். பெளத்தர்கள் மத்தியில் பத்தினி வழிபாடு ஏற்பட அது முக்கிய காரணம். சிங்கள மக்கள் மத்தில் ஏற்பட்ட பத்தினி வழிபாட்டை ஒட்டுமொத்தமாகத் தமிழ் இந்துக்கள் மத்தியிலும் ஏற்பட்டதாகத் தீர்மானித்துக் கருத்துகளைக் கூறுகின்றார் அஞ்சலேந்திரன். அது தவறானது. தமிழர்கள் மத்தியிலுல் கண்ணகி வழிபாடு அக்காலகட்டத்தில் ஏற்படத்தான் செய்தது. தமிழ்ப்பகுதிகளிலுள்ள கண்ணகியம்மன் ஆலய வழிபாட்டை அதற்குதாரணமாகக் காட்டலாம்.
இவ்விதமானதொரு சூழலில் இலங்கைத்தமிழர்கள் அதிகமாக தமிழகச்சோழர்களின், பாண்டியர்களின் பண்பாட்டுத் தாக்கங்களுக்கே ஆட்பட்டிருந்தார்கள். நல்லூர் சோழர் காலத்திலேயே பிரபலமான நகராக விளங்கியது. சோழர்களின் படையெடுப்புகளால் அதிக அளவில் தமிழகத்துக்கும் ,இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் ஏற்பட்டன. பெருமளவில் சோழர் காலத்தில் மக்கள் தமிழகத்திலிருந்து இலங்கை இடம் பெயர்ந்திருப்பர். இன்று வட,கிழக்கிலிருக்கும் வரலாற்றுச் சின்னங்கள், ஆய்வுகள் அதனையே சுட்டிக்காட்டுகின்றது. யாழ்ப்பாண அரசின் உருவாக்கத்தில் பாண்டியரின் தாக்கம் பலமாக இருந்ததையே வரலாறு எடுத்தியம்புகின்றது. நல்லூரில் அமைந்திருந்த முருகன் ஆலயக் கட்டடம் இடிக்கப்பட்டு , கோட்டை கட்டப் போர்த்துக்கீசர் பாவித்தனர் என்பது வரலாறு. யாழ்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலக்கல்வெட்டொன்று நல்லூரை நல்லை மூதுரென்கின்றது. இவ்விதமாக வரலாறிருக்க அஞ்சலேந்திரன் வரலாற்றையே திரிக்கின்றார்.
மேலுமின்னொன்றையும் கூறுகின்றார். அது: இலங்கைத் தமிழர்களின் புனித நூல் இராமாயணமோ மகாபாரதமோ அல்ல. சிலப்பதிகாரமே. சிலப்பதிகாரத்தைத் தமிழர்கள் யாருமே புனித நூலாகக் கொள்வதில்லை. ஐம்பெருந் தமிழ்க் காப்பியங்களிலொன்றாகவே கொள்வார்கள். சிலப்பதிகாரம் உருவான காலத்தில் கூடச் சேரர்கள் தமிழர்கள். சேர நாடு தமிழகத்தின் ஒரு பகுதி. சேரர் மூவேந்தரில் ஒரு பிரிவினர்.
அஞ்சலேந்திரன் இலங்கைத்தமிழர்களின் , தமிழகத்தின் வரலாறு, இந்து, திராவிடக் கட்டடக்கலை பற்றிய ஞானம் நிறையவே பெற வேண்டியிருப்பதை அவரது இக்காணொளிக் கருத்துகள் புலப்படுத்துகின்றன.
கட்டடக்கலைஞர் அஞ்சலேந்திரனின் நேர்காணலையுள்ளடக்கிய காணொளி: https://www.youtube.com/watch?v=0QU8m4VOxXY&fbclid=IwAR3DS7PjLOUvrWe6a0nuJ9k4cqoqVwz5lgH3__zjNmEP_sZd9DVhKKN7HJ4
முகநூல் எதிர்வினைகள்:
மயூரநாதன் (கட்டடக்கலைஞர்) Mayooranathan Ratnavelupillai : அஞ்சலேந்திரனின் பேச்சிலிருந்து, விமானத்துக்கும் கோபுரத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்து எவ்வித விளக்கக் குறைவும் அவருக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கோபுரங்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் கூறியிருப்பது முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்குச் சரிதான். தஞ்சைப் பெரிய கோயிலில் விமானமே மிகப் பெரிதாகவும், முழுக் கட்டிடத்திலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூறாகவும் காணப்பட்டபோதும், சிறிய அளவில் வாயிற் கோபுரங்களும் இக்கோயிலில் அமைந்துள்ளன. திராவிடக் கட்டிடக்கலையில் கோபுரங்கள் முக்கியத்துவம் பெற்று வளர்ந்து வருவதை இது காட்டுவதாகப் பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆனாலும், கோபுரம் கோயிற் கட்டிடக்கலையின் ஒரு கூறாக, இதற்கு முன்னர், பல்லவர் காலத்திலேயே உருவாகிவிட்டதைக் காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயிலில் காணலாம். எனினும் யாழ்ப்பாணத்தில் கோபுரங்கள் 20, 30 வருடங்களுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்டன. என்பது சரியல்ல. வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலில் 100 வருடங்களுக்கு முன்னரே கோபுரம் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. வேறு கோயில்களிலும் இருந்திருக்கலாம். ஆனால், பெரும்பாலான யாழ்ப்பாணத்துக் கோயில்களில் கோபுரங்கள் கட்டப்பட்டது அண்மைக் காலத்திலேயே என்பது ஓரளவு சரியாக இருக்கலாம்.
யாழ்ப்பாணத்துக் கட்டிடக்கலை பற்றிய அஞ்சலேந்திரனின் கருத்துக்கள் ஆழமான ஆய்வுகளின் பாற்பட்டவை அல்ல என்பது உண்மைதான். யாழ்ப்பாணப் பண்பாடு பெருமளவுக்குக் கேரளப் பண்பாடே என்னும் எம். டி. இராகவனின் கருத்துக்களை மையமாகக் கொண்டே இக்கருத்துக்கள் உருவாகியிருப்பதாகத் தெரிகின்றது. எம். டி. இராகவன் யாழ்ப்பாணத்து நாற்சார் வீடுகளையும், கேரளத்து வீடுகளையும் ஒப்பிட்டிருப்பது மிக மேலோட்டமானதும், பலவீனமானதும் ஆகும். நாற்சார் வீடுகள் கேரளாவுக்கு மட்டும் உரியனவல்ல. யாழ்ப்பாணத்து வீடுகளை வரலாற்றுப் பின்னணியில் ஆராயாமல், வெறுமனே வடிவ ஒற்றுமைகளை வைத்து, கேரளத்து வீடுகளுடனோ, தமிழ்நாட்டு வீடுகளுடனோ, அல்லது சிங்களவர்களின் வளவைகளுடனோ ஒப்பிடுவது சரியாக இருக்காது.
மயூரநாதன் (கட்டடக்கலைஞர்) Mayooranathan Ratnavelupillai : அஞ்சலேந்திரனின் காணொலியில் பொலநறுவைச் சிவதேவாலயத்தின் மீட்டுருவாக்கப் படம் காட்டப்பட்டது. இதில் கருவறைக் கட்டிடத்துக்கு முன் மரத்தாலான கூரை அமைப்புடன் கூடிய கட்டிடங்கள் காணப்படுகின்றன. யாரால், எந்த அடிப்படையில் இவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இது சரியாக இருக்காது என்பதே எனது கருத்து.
மயூரநாதன் (கட்டடக்கலைஞர்) Mayooranathan Ratnavelupillai : இவற்றைவிட, எம்.ஜி.ஆர் இலங்கையில் பிறந்தார் என்பது மட்டுமே இலங்கைக்கும் தமிழ்நாடுக்கும் உள்ள தொடர்பு என்பதுபோல் ஒரு கருத்தையும் அவர் முன்வைக்கிறார். இது யாழ்ப்பாணத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையிலான பன்முகப்பட்ட தொடர்புகளை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகும்.
Giritharan Navaratnam: நன்றி மயூரநாதன் ,வருகைக்கும், கருத்துக்கும். இலங்கைத்தமிழர்களின் பண்பாட்டில் கேரளப்பண்பாட்டுத் தாக்கங்கள் உள்ளன என்பது வேறு. இலங்கைத் தமிழர்கள் மொழி தவிர அனைத்திலும் கேரளத் தாக்கத்துக்குள்ளானவர்கள் என்பது வேறு. மேலும் யாழ்ப்பாணத்து நாற்சார வீடுகளில் காணப்படுவது மேனாட்டுக்கட்டடக்கலை அம்சங்கள். அதனால்தான் அவை காலனித்துவ வீடுகள் (Colonial) என்றழைக்கப்படுகின்றன. அந்நியர் ஆதிக்கத்துக்கு முன்னர் யாழ்ப்பாண அரசிலிருந்த வீடுகள் எப்படியிருந்தன என்பதைச் சரியாக அறியாமல் அவை கேரளக் கட்டடக்கலைத் தாக்கத்தால் ஏற்பட்டவை என்று கூறுவதும் சரியாகாது. சபுமல் குமாரயாவின் யாழ்ப்பாண அரசின் மீதான வெற்றியைக் குறித்துப்பாடப்பட்ட காப்பியத்தில் நல்லூரில் மாடி வீடுகளைக்கொண்ட மக்கள் குடியிருப்புகளைப்பற்றிய குறிப்புகளுள்ளன. இது மேலும் விரிவான ஆய்வுக்குரியது.
Giritharan Navaratnam: //இவற்றைவிட, எம்.ஜி.ஆர் இலங்கையில் பிறந்தார் என்பது மட்டுமே இலங்கைக்கும் தமிழ்நாடுக்கும் உள்ள தொடர்பு என்பதுபோல் ஒரு கருத்தையும் அவர் முன்வைக்கிறார்.// உண்மைதான் . அதைக்கேட்டு நான் சிரித்தேன். :-) வரலாற்றில் நிகழ்ந்த சோழர் படையெடுப்புகள், பாண்டியர் படையெடுப்புகள், அவற்றால் ஏற்பட்டிருக்கக்கூடிய தமிழகத்திலிருந்து இலங்கைக்கு இடம் பெயர்ந்த மக்களைப்பற்றியெல்லாம் வரலாற்றுக்குறிப்புகள் இருக்கையில் அவை பற்றி எவற்றையுமே அவர் அறியவில்லையே என்று நினைத்தேன். நாடு சுதந்திரம் அடைவதற்கு முற்பட்ட காலகட்டத்தில் கூட தமிழகத்துக்கும், இலங்கைக்குமிடையிலான பிரயாணம் எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்று (கடவுச்சீட்டு போன்ற) நடைபெற்றதாக அறிகின்றேன். தமிழகமும், இலங்கைத்தமிழர்களும் என்னும் தலைப்பில் விரிவான ஆய்வுகளைச் செய்யக்கூடிய அளவுக்குத் தகவல்களுள்ளன. மேலும் நான் ராகவனின் நூலை இன்னும் வாசிக்கவில்லை. அதில் அவர் அஞ்சலேந்திரன் கூறியது போல் கூறியிருப்பார் என்று நினைக்கவில்லை. கேரளாவின் பண்பாட்டுத் தாக்கத்தை விபரித்திருக்கக்கூடுமே தவிர தமிழகத்துக்கும், இலங்கைத்தமிழர்களுக்குமிடையிலான தொடர்புகளை மறுதலிக்கும் வரையில் எழுதியிருப்பாரென்று நான் நினைக்கவில்லை. இருந்தாலும் இது விடயத்தில் அந்நூலை வாசிக்காமல் இறுதி முடிவுக்கு வர முடியாது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.