எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பிறந்ததினம் ஜூன 27!
யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள், பேராசிரியர்களை அதிக அளவில் கொண்ட பல்கலைக் கழகமொன்றுள்ளது. இங்கு தமிழ்ப்பேராசிரியர்கள் பலர் இது ஆரம்பித்த நாளிலிருந்து பணி புரிந்து வந்துள்ளார்கள். இவர்கள் இதுவரையில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் வகையில் இதுவரையில் கீழுள்ளவற்றில் எத்தனை விடயங்களைச் செய்துள்ளார்கள் என்பதை அறிந்தவர்கள் அறியத்தரவும்?
* இலங்கைத் தமிழ் இலக்கியத்தை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் * ஆய்வுக் கட்டுரைகள்..
* இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்காலகட்டத்தை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்
* இலங்கை முற்போக்கு இலக்கியத்தின் வரலாற்றை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைதமிழ் இலக்கியத்தின் ஏனைய இலக்கியப்போக்குகளான பிரபஞ்ச யதார்த்தவாதம் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைச் சிறுபான்மைத்தமிழரின் குரலினை வெளிப்படுத்தும் ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கை மலையகத்தமிழர்களின் இலக்கியம் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைத் தமிழ் முஸ்லீம் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியத்து ஆற்றிய பங்கு பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
* இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்கள், ஆய்வாளர்களை நினைவு கூர்ந்து எழுத்தப்பட்ட ஆக்கங்களைப்பற்றிய ஆய்வு நூல்கள் & ஆய்வுக் கட்டுரைகள்.
இவற்றைப்பற்றித் தெரிந்தவர்கள் அறியத்தரவும், ஆனால் இவற்றையெல்லாம் தனித்திருந்து ஒருவர் சாதித்துள்ளார். இவர் வெளியிட்ட மல்லிகை சஞ்சிகைகளில் வெளியான ஆக்கங்களிலிருந்து இவை அனைத்தையும் உருவாக்க முடியும்.
அட்டைபட ஓவியங்களாக்கி எழுத்தாளர்களைக் கெளரவப்படுத்தியுள்ளார். பல நூல்களைத் தனது மல்லிகைப்பந்தல் வாயிலாக வெளியிட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழகமோ அல்லது அங்கு பணி புரிந்த பேராசிரியர்களோ இவர் ஆற்றிய அளவுக்குத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருப்பார்களா? குறிப்பிடத்தக்க சிலர் இவ்விதம் செய்திருப்பார்கள்.
இவ்விதமான சாதனைக்குரியவர்தான் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் பெரும்பாலான போக்குகளைப் பிரதிபலிக்கும் எழுத்துகளைத் தாங்கி மல்லிகை வந்துள்ளது. பிரதேச வேறுபாடுகளைக் கடந்து, மத வேறுபாடுகளைக் கடந்து, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, வர்ண வேறுபாடுகளைக் கடந்து படைப்புகளைத் தாங்கி வெளியான சஞ்சிகை மல்லிகை. புத்தக வெளியீடு, சஞ்சிகை வெளியீடு இவற்றுடன் புனைகதை, கட்டுரை எனப் பங்களிப்பு செய்தவர் எழுத்தாளர் டொமினிக் ஜீவா. அவரது பிறந்த தினம் ஜூன் 27. அவரை நன்றியுடன் நினைக்கும் இத்தருணத்தில் யாழ் பல்கலைக்கழகம் ஏன் இவருக்குக் கெளரவக் கலாநிதி பட்டமளித்துக் கெளரவம் செய்யக்கூடாது என்றொரு கேள்வியும் கூடவே எழுந்தது. அவர்கள் செய்ய வேண்டிய பலவற்றை இவர் ஒருவரே தனியாகச் செய்திருக்கின்றார். அந்தப் பங்களிப்புக்காகவாவது யாழ் பல்கலைக்கழகம் இவருக்குக் கெளரவ கலாநிதி பட்டமளித்துக் கெளரவிக்கலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.