எழுத்தாளர் டொமினிக் ஜீவா பற்றிய முகநூல் பதிவொன்றுக்கு எதிர்வினையாற்றிய எழுத்தாளர் மாலன் அவர்கள் பின்வருமாறு கேட்டிருந்தார்" இலங்கையின் இதழியல் வரலாறு பற்றி ஒரு நூல் எழுதப்பட வேண்டும்.எத்தனை பெரும் ஆளுமைகள்! ஏன் நீங்களோ முருகபூபதியோ முயற்சிக்கக் கூடாது?"
அதற்கு நான் பின்வருமாறு பதிலளித்திருந்தேன்: "முருகபூபதியே பொருத்தமானவர். அவர் ஏற்கனவே நிறைய எழுதியுள்ளார். நூல்கள் பல எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் பலருடன் அதிகமாகப்பழகியுள்ளார். வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் அவர் பணியாற்றியதும் அதற்கு அவருக்கு உதவியாகவுள்ளது. அவரிடம் இது பற்றித்தெரிவிக்கின்றேன்."
இது பற்றி முருகபூபதி அவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு முருகபூபதி அவர்கள் உடனடியாகவே பின்வருமாறு பதிலளித்திருந்தார். அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:
"அன்புள்ள நண்பர் கிரிதரனுக்கு வணக்கம். நீங்கள் அனைவரும் நலமாக இருக்கவேண்டும். இங்கு நாமும் வீட்டில்தான் முடங்கியிருக்கின்றோம். தங்களது அண்மைய இரண்டு பதிவுகள் ( காவலூர் ஜெகநாதன் – மல்லிகை ஜீவா ) படித்தேன். நல்ல பதிவு. தாமதிக்காமல், பிரான்ஸில் வதியும் ஈழநாடு ( டான் ரீவி) குகநாதனுக்கும் ( காவலூர் ஜெகநாதனின் தம்பி ) அதனை பகிர்ந்துகொண்டேன்.
இலங்கை இதழியல் ஆய்வு தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை உதிரியாக முன்னர் எழுதியிருக்கின்றேன். உதயதாரகை முதல் காலைக்கதிர் ( கடந்த சிலவருடங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை. சமீபகாலமாக காலைக்கதிர் காலை – மாலைத்தினசரியாக வெளியாகின்றது. ) என்ற தலைப்பிலும் எழுதினேன். எனது இலங்கையில் பாரதி நூலில் இலங்கை இதழியல் வரலாற்றை ஓரளவு பதிவுசெய்துள்ளேன். இந்த நூல் கடந்த ஆண்டு ( 2019 ) நடுப்பகுதியில் வெளியானது. உங்கள் பதிவுகளிலும் அந்த நூல் பற்றிய மதிப்பீடுகள் வந்துள்ளன. அதன் பிரதிகள் சிலவற்றை இலங்கை பல்கலைக்கழக பேராசிரியர்கள் – விரிவுரையாளர்களிடமும் நேரடியாகவும் தபால் மூலமும் இலவசமாகவே சேர்ப்பித்தேன். ஆனால், எவரிடமிருந்தும் ஒரு வரிகூட பதில் இல்லை.!? அதனால் நான் சோர்வடைந்துவிடவில்லை.
எழுத்துத்தான் எனக்குத் தெரிந்த தொழில். வேறு எந்தத் தொழிலும் தெரியாது. அதனால், எனது தொழில் புகழுக்கானது அல்ல! என்றும் பலதடவை சொல்லியும் எழுதியுமிருக்கின்றேன். எனக்கும் எனது குடும்பத்திற்கும் சொற்ப வருமானத்தை தந்ததும் எனது பத்திரிகைத் தொழில்தான். அதனால் இதழியல் குறித்து நன்றி விசுவாசத்துடன்தான் இயங்கிவருகின்றேன்.
இலங்கையில் பாரதி நூலில் ஈழநாடு, ஈழகேசரி, வீரகேசரி, தினகரன், தினபதி, சிந்தாமணி, மற்றும் சிற்றிதழ்கள் மல்லிகை, பூரணி, குமரன், புதுசு, அலை, ஜீவநதி, ஞானம் உட்பட பலவற்றைப்பற்றியும், அவற்றின் ஆசிரியர்கள் பற்றியும் எழுதியிருக்கின்றேன்.
உங்களதும் எனது நீண்ட கால நண்பர் மாலன் அவர்களதும் வேண்டுகோளை நிறைவேற்ற முடியும். அது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. ஏற்கனவே தினகரன் ஆசிரியர் ( அமரர் ) சிவகுருநாதன் ஒரு நூலை எழுதியிருக்கிறார். நூலகத்தில் பார்க்கமுடியும். லண்டனில் வதியும் நண்பர் செல்வராஜாவும் எழுதியிருக்கிறார். இவை பற்றியெல்லாம் நான் முன்பே நயப்புரை எழுதியுள்ளேன்.
இன்று இலங்கையில் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இதழியலும் ஒரு பாடமாகியிருக்கிறது. கொழும்பில் இதழியல் கல்லூரிகள் இயங்குகின்றன. ஆனால், அங்கு போதிக்கும் விரிவுரையாளர்கள் கூட தேடலின்றி, சமாளிக்கின்றனர். வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் இலக்கியவாதிகளை நேர்காணல் செய்யும் இன்றைய தலைமுறை சிறிதளவும் இலக்கியப்பிரக்ஞையின்றி மேம்போக்காக கேள்விகள் கேட்கின்றனர். இது பற்றியெல்லாம் எமது மனஉளைச்சல்களை எழுதி ஓய்ந்தாயிற்று. பாடசாலைகள் – கல்லூரிகள் – பல்கலைக்கழகங்களில் இருக்கும் நூல் நிலையங்களில் நெடுநாள் தூசு படிந்துள்ளது. அனைவரும் முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பொழுது போக்குகின்றனர். எனது கருத்துக்களை உங்களுக்கும் நண்பர் மாலனுக்கும் தெரிவிக்கின்றேன். நண்பர் மாலன், எப்பொழுதும் ஈழத்து இதழியல், இலக்கியம் குறித்து அக்கறை கொண்டிருப்பவர், புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் கதைகள், கவிதைகளை தொகுத்தவர். அதற்கெல்லாம் அவர் செலவிட்ட நேரம் மிகவும் பெறுமதியானது. கடினமான உழைப்பாளி அவர். இது எனது முகஸ்துதி வார்த்தை அல்ல. நீங்களும் அப்படித்தான். ஒரு கலை, இலக்கிய, சமூக இணைய இதழை தொடர்ச்சியாக நடத்துவதில் இருக்கும் சிரமங்கள் நானும் அறிவேன். இதற்குமேல் நான் என்ன செய்யவேண்டும் எனச்சொல்லுங்கள். செய்கின்றேன். உலகெங்கும் தோன்றியிருக்கும் பாரிய அச்சுறுத்தலிருந்து உலக மக்கள் விடுதலை பெறல்வேண்டும். நீங்களும் உடல் நலம் பேணுங்கள். எமது இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள். நண்பர் மல்லிகை ஜீவா பற்றி நான் நேற்று எழுதியிருந்த புதிய ஆக்கத்தையும் தங்கள் பதிவுகளுக்கு இத்துடன் இணைத்துள்ளேன். நன்றி.
அன்புடன்
முருகபூபதி"
உடனடியாக என் மின்னஞ்சலுக்குப் பதிலளித்த திரு.முருகபூபதி அவர்களுக்கு என் நன்றி. முருகபூபதி அவர்கள் எழுதிய கட்டுரைகள், நூல்கள் எல்லாம் இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் ஆளுமைகள் பற்றிய ஆவணச்சுரங்கங்கள். அதற்காகத் தமிழிலக்கிய உலகு நன்றிக் கடமைப்பட்டுள்ளது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.