தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்நாளில் பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும் என்றும் வாழ்த்துவார்கள். இனிய பொங்கல் நன்னாளில் நாமும் 'பதிவுகள்' வாசகர்களுக்கும், அவர்கள்தம் குடும்பத்தவர்களுக்கும் அவர்கள்தம் வாழ்வில் மங்கலம் பொங்கிட வாழ்த்துகின்றோம். நினைவு தெரிந்த நாள் முதலாக இத்தினம் தமிழர் திருநாளாகத்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. வழக்கிலுள்ள சொற்களை உள்வாங்குவது இலக்கணம். அதுபோல் வழக்கிலுள்ள இது போன்ற நிகழ்வுகளை உள்வாங்குவது எம் மரபு. இத்தினத்தைத் தமிழர்தம் திருநாளாகவே கருதுகின்றோம். அவ்விதமே தெரிந்த நாளிலிருந்து கொண்டாடி வந்தோம்; வ்ருகின்றோம்; வருவோம்.
தமிழர்தம் திருநாள்களில் மிகவும் பிடித்த திருநாளாக இதனையே கூறலாம். இதற்குக் காரணம் இந்நாள் கொண்டாடப்படுவதற்கான காரணங்கள். கதிரவன் ஒளியும், உழவர்களும் இல்லாவிட்டால் இவ்வுலகில் எவையுமே நடைபெறாது. அதற்காக அவர்களுக்கு நன்றி கூறுவதுதான் இத்தினத்தின் சிறப்பு. அது மட்டுமல்ல உழவர்களுக்கு உறுதுணையாக விளங்கிய எருதினையும் நன்றியுடன் நினைவு கூர்வதற்காகக் கொண்டாடப்படுவதுதான் 'மாட்டுப்பொங்கல்'.
மக்கள் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட , மக்கள் வாழ்வுக்கு முக்கியமான விடயங்கள் பற்றி, அவற்றுக்காக நன்றி கூறுவதற்காக அனுசரிக்கப்படும் தினமென்பதால் இத்திருநாளை 'மக்கள் திருநாள்' எனக் கூறுதலும் பொருத்தமானதே.
'ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்' என்று சிலப்பதிகாரக் காவியத்தைத் தொடக்கி வைத்தான் கவி இளங்கோ. நாமும் இத்திருநாளில் ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்! ஞாயிறு போற்றுவோம்!
"ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல், பொன்கோட்டு
மேரு வலந் திரிதலான். " - இளங்கோவடிகள்.