ஜனவரி 10, 1974 - இலங்கைத்தமிழர்கள் மத்தியில் மறக்க முடியாத நாள்களிலொன்று. அன்றுதான் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி தினம். யாழ் வீரசிங்கம் மண்டபத்தின் முன் இறுதி நாள் கூட்டத்தின்போது அமர்ந்திருந்த கூட்டத்தைப் பொலிசார் கண்ணீர்ப்புகைக்குண்டுகளை ஏவிக் கலைத்த தினம். அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டு, அக்கம்பிகள் பட்டு, தப்பியோடிக்கொண்டிருந்தவர்களில் எழுவர் மரணமான தினம். இச்சம்பவம் பற்றி யாழ் பிரசைகள் குழுவினரால் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் கிறெட்சர் தலைமையிலான விசாரணக் கொமிஷனின் அறிக்கையின்படி அன்று மரணமானவர்களின் எண்ணிக்கை ஏழு பேர். மாநாட்டு அலங்கார வாகன அணி வகுப்பிலும் இருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்ததாக அறிந்திருக்கின்றேன். அந்த இருவரையும் உள்ளடக்கித்தான் இந்நினவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. அன்றைய நிகழ்வில் நானும் மாணவனாகக் கலந்துகொண்டிருந்தேன்.
இன்னும் அக்கலவரச்சூழல் என் கண்கள் முன்னால் காட்சி தருகின்றது. நான் மாநாட்டுக் கொடி கட்டப்பட்டிருந்த என் ரலி சைக்கிளுடன் முற்றவெளியில், யாழ் கோட்டையின் அகழிச்சுவருக்கருகில் நின்று கூட்ட உரைகளைக்கேட்டுக்கொண்டிருந்தேன். மேடையில் திருச்சி நைனார் முகம்மது என்று நினைக்கின்றேன் உரையாடிக்கொண்டிருந்தார். என் அருகில் என் எட்டாம் வகுப்பு யாழ் இந்துக்கல்லூரி ஆசிரியரான மகேந்திரன் (முன்னாள் மேயர் ராஜா விசுவநாதனின் தம்பி) சைக்கிளுடன் உரை கேட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது. கூட்டம் நடந்தபோது வீதியையும் மறைத்துக்கொண்டு மக்கள் அமர்ந்திருந்தார்கள். பொலிசார் வந்து வீதியை மறைத்து அமர்ந்திருந்த மக்களைத் தடியடி கொண்டு கலைத்தார்கள். பதிலுக்கு அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மக்கள் தம் காலணிகளை அவர்கள் மேல் எறிந்து தாக்கினார்கள். பொலிசார் பின் வாங்கினார்கள். விரைவில் மீண்டு வந்தார்கள். மக்கள் மேல் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் தாக்கினார்கள். மக்கள் யாரும் கதறி அழுததாகத் தெரியவில்லை. எல்லோரும் ஓடித்தப்பவே முயன்றார்கள். எல்லோரும் ஆத்திரத்துடன் கூடிய பயத்துடனேயே காணப்பட்டார்கள்.
என் வாழ்நாளில் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப்பற்றி அறிந்திராத நான் பொலிசார் துப்பாக்கிக் குண்டுகளால் சுடுவதாகவே அச்சமயத்தில் நினைத்தேன். என் அருகிலும் குண்டொன்று வந்து விழுந்து புகையைக் கக்கியது. கண்கள் எரிய சைக்கிளையும் விட்டுவிட்டு ஓட முயன்றேன். கூட்டத்திலொருவர் அருகிலிருந்தவர் ' குப்புறப்படுங்கள். குப்புறப்படுங்கள். சுடுகிறான்கள் ' என்று கத்தியதும் நினைவிலுள்ளது. சிலர் நிலத்துடன் நிலம் படுத்தார்கள். நானும் அவ்விதம் படுத்தேன். கண்களின் எரிவு சிறிது நீங்கியதும் எழுந்தேன்.
பலர் கோட்டை அகழிக்குள் பாய்ந்து தப்பினார்கள். நான் அவ்விதம் அகழிக்குள் பாய்ந்து அகழிக்குள் முனியப்பர் கோயிலுக்குச் செல்வதற்காக இடையிலிருந்த நடைபாதையினால் விழாமல் அகழிக்குள் விழாமல் தப்பி மீண்டுவந்து , சைக்கிளை எடுத்து வீடு திரும்பினேன். வீடு செல்லும் வழியில் வந்து கொண்டிருந்த பஸ் வண்டிகளை மறித்து சம்பவத்தைத் தெரியப்படுத்தினோம். ராணி திரையரங்கும் ஓடி வந்த மக்களை உள்வாங்கிப்பாதுகாப்பளித்ததாக நினைவு.
ஆரம்பத்தில் பொலிசார் மக்களை நோக்கிச் சுட்டது கண்ணீர்க்குண்டுகளை. பின்னர் அவர்கள் மின்சாரக் கம்பிகளைச் சுட்டதில் அவை கீழே விழுந்து இறந்தவர்கள்தாம் அன்று இறந்த அனைவரும் என்று பின்னர் அறிந்தேன். நிகழ்வுகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன.
கூகுள் வரைபடம் மூலம் வீரசிங்க மண்டபம், அன்று நான் நின்றிருந்த கோட்டை அகழிப்பக்கமான முற்றவெளி, அகழிக்குள் பாய்ந்தபோது காப்பாற்றிய நடைபாதை ஆகியவற்றைப்பெற்றுக்கொண்டேன். அவற்றையே இங்கு காண்கின்றீர்கள்.
- அகழிக்குள் பாய்ந்தபோது என்னை அகழிக்குள் விழ விடாமல் காப்பாற்றிய நடைபாதை இதுதான். இப்பாதை வழியே முனியப்பர் கோயிலுக்குச் செல்லலாம். -
- யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன், யாழ் முற்றவெளியை ஊடறுத்துச் செல்லும் வீதி. தமிழாராய்ச்சி மாநாட்டின் (1974) இறுதி தினத்தின்போது மக்கள் இவ்வீதி நிறைய அமர்ந்திருந்தார்கள். பொலிசார் முதலில் இங்கு அமர்ந்திருந்தவர்களையே தாக்கிக் கலைக்க முயன்றார்கள். -
- *கூகுள் வரைப்படம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.-
முகநூல் எதிர்வினைகள்:
Kopan Mahadeva மேலே கொடுத்திருப்பது ஆசிரியர் நவரத்தினம் கிரிதரனின் மிகவும் உபயோகமான பதிவு. நாற்பத்தைந்து ஆண்டுகளின் முன் நடந்த சம்பவங்களின் வர்ணனை எனினும் மிகவும் முக்கியமான பதிவு. இவரைப் போல், எழுதும் திறனும் விருப்பமும் உள்ள, அந்த 1974 ஜனவரியின் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் நேரடி அனுபவமுள்ள இன்னும் சிலர் தங்கள் உண்மையான அனுபவங்களை வால்-காலோ கேட்டறிந்த, படித்தறிந்த வதந்திகள், செய்திகளோ இன்றித் தம் சொந்த நினைவுகள், மனச்சாட்சிகளின் படி எழுதினால் வருங்காலச் சந்ததியின் ஆராய்ச்சியாளருக்கு அவை மிகவும் உதவியாக இருக்கும். அந்த மகாநாட்டை முன்னின்று எமது யாழிலே நடாத்தி முடித்த பிரதம பொதுச் செயலாளன் என்ற முறையில் நானும் அதைப் பற்றிய நூல் ஒன்றைப் பலரின் வேண்டுகோளின்படி எழுத முயன்றுகொண்டு இருக்கிறேன். அது முடியும் தறுவாயில், பகிரங்கமாக அறிவிப்பேன். பி.கு: கிரிதரனின் படங்கள் அன்றல்ல, அண்மையில், கூகிளின் துணையுடன் எடுத்தவை. அதை அவரே அறிவிக்கின்றார். எனவே அன்று இருந்த காட்சிகளை அவை ஓரளவுக்கே பிரதிபலிக்க முடியும். உ-ம்: அன்று வீரசிங்கம் மண்டபம் இவ்வளவு பெரியதல்ல. ஆனால் அதன் முன்னுள்ள வெளி முற்றம் இன்று இருப்பதிலும் பார்க்கப் பரந்து இருந்தது என் நினைவு. வாழ்த்துக்கள்-- பேராசிரியர் கோபன் மகாதேவா.
Maheswaran Murugaiah இயக்கங்கள் உருவாக முக்கிய காரணிகளில் இதுவும் ஒன்று
Giritharan Navaratnam உரும்பிராய் சிவகுமாரன் ஆயுதம் ஏந்தியதற்கு முக்கிய காரணமான நிகழ்வு. அந்த மாநாடு நடந்து கொண்டிருந்த சமயம் அவர் கொட்டடி மீனாட்சி சுந்தரம் கல்லூரியில் கணக்கியல் பற்றிப் படித்துக்கொண்டிருந்தார். மாநாட்டின் வாகன ஊர்வலம் கே.கே.எஸ். வீதி வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது அவரும் பங்கு பற்றியிருந்ததைக் கண்டிருக்கின்றேன்
Boopal Chinappa மிக அருமையான பதிவு......நினைவுகள் சரியாகவே இருக்கிறது. நான் நைனார் முகம்மது பேசிய மேடைக்கு முன்னால்தான் இருந்தேன். அதாவது வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள றோட்டில்தான் இருந்தோம். அப்பொழுதான் மோட்டார் சைக்கிளில் இரண்டு பொலிசார் வந்து றோட்டில் இருந்து விலகும்படி சொன்னார்கள். ஒருவரேனும் அசையவில்லை. பின்புதான் கூட்டமாக முனியப்பர் பக்கமாக வந்து சுட்டார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.