எழுத்தாளர் யோ.புரட்சி பதிவிட்டிருந்த முகநூற் பதிவினைப்பார்த்தேன். இது ஒரு கவிதை. முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தத்தின் இறுதிக்கால நிகழ்வுகளை விபரிக்கும் கவிதை. யோ.புரட்சியும் படையினரின் தாக்குதல்களுள்ளாகிக் காயம் பட்டவர்களிலொருவர். அச்சமயம் அவருக்கு , அவரைப்போல் பாதிக்கப்பட்ட ஏனையோருக்கு எவ்விதம் உயிரைப்பணயம் வைத்து ஓடிக்கொண்டிருந்த மக்கள் உதவினார்கள் என்பதை இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. கவிதையென்பதின் வெற்றியானது அதனைப்படைத்தவரின் புலமைச்சிறப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை. எத்தனையோ, படைத்தவரின் புலமையினை வெளிப்படுத்தும் கவிதைகள் பல படிப்பவரின் உணர்வுகளில் எவ்விதப்பாதிப்புகளையும் ஏற்றும் வலிமையற்று காலத்தில் காணாமல் போய் விடுகின்றன. சிறந்த கவிதையின் வெற்றியென்பது அதனைப்படைத்த கவிஞரின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும். உணர்ச்சியின் வெளிப்பாடாக வெளிப்படும் கவிதையே வாசிப்பவரின் உணர்வுகளையும் பாதித்து , காலத்தில் நிலைத்து நின்று விடுகின்றது. யோ.புரட்சியின் இக்கவிதை அத்தகைய கவிதைகளிலொன்று. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அவர் அடைந்த உணர்வுகளின் உண்மையின் உண்மையான வெளிப்பாடாகவிருப்பதால் , வாசிப்பவரின் நெஞ்சங்களை ஒரு கணம் அசைத்து விடுகின்றது. நிலவிய மானுடத் துயரங்கள் வாசிப்பவர் நெஞ்சங்களில் வலியை ஏற்படுத்துகின்றன. மானுடர்கள் மட்டுமல்லர் மிருகங்கள் கூடத் தம் அன்பை வெளிப்படுத்துகின்றன. அக்காலகட்டத்து நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதால் முக்கியத்துவம் வாய்ந்த கவிதைகளிலொன்றாகவும் இக்கவிதை விளங்குகின்றது.
"யாருமருகில்இல்லாவேளை, காலதிலே எறிகணைபட்டு"க் கவிஞர் காயமுற்றவேளை, "தன்னாடை தன்னில், சிறுதுண்டு கிழித்து"க் கவிஞரின் குருதிப்பெருக்கைத்தடுத்த ஏழைத் தமிழ்த்தாய், "தாய்தன்னை இழந்த, தளிர்தன்னைக் கண்டு, யார் பிள்ளை எனும் கேள்வியது கேளாது தன்முலை தனையூட்டி வன்பசி தீர்த்த" நல்மனமுள்ள பெண், "அனைத்துறவும் இழந்து, அம்பலவன் பொக்கனையில் அந்தரித்த வேளையிலே அருகேயோர் உறவாகி" அன்புதனை அளித்துக் கவிஞருக்குக் கருணை காட்டிய ஜிம்மி என்னும் நாய், 'முகம்கழுவ நீரின்றி அகம் கரைந்த நாட்களிலே சிலமணிகள் ஒதுக்கியே கிணற்றுநீரளித்த வனப்பு உளங்கள். 'பதுங்கு குழிக்கு உரப்பையின்றி பாடுபட்ட நாட்களிலே பழஞ்சேலை' தந்துதவியவர்கள், 'பதுங்கு குழியில் இடம்தந்து பாசமொடு கஞ்சிதந்து நேசமாய்' அணைத்தவர்கள்...... .. இவ்விதம் தாம் அந்தரித்த வேளையிலும் மானுட நேயம் காட்டிய, மிருக நேயம் காட்டிய உயிர்களையெல்லாம் இக்கவிதை ஆவணப்படுத்துகின்றது. அதனாலேயே வரலாற்றினை முறையாக ஆவணப்படுத்தும் சிறப்பு மிக்கதொரு கவிதையாகவும் இக்கவிதை விளங்குகின்றது. கவிதையின் முழு வரிகளும் கீழே:
கவிதை: செஞ்சோற்றுக் கடன் -யோ.புரட்சி-
இறுதிப்போர்க் காலத்து
இடைவிடா மழைப்பொழுதில்
கொட்டகையது நீராலே
குலைந்துமே சரிந்திட
தம்மிடத்தில் தஞ்சம் தந்த
தரப்பாள் கொட்டகைக்காரரின்
தகைசார் கடன் தீர்ந்திடுமோ?
யாருமருகில்இல்லாவேளை
காலதிலே எறிகணைபட்டு
நான் காயமுற்றவேளை
தன்னாடை தன்னில்
சிறுதுண்டு கிழித்து
என்குருதி தடுத்த
ஏழைத் தமிழ்த்தாயின்
கடனை தீர்ப்பதெப்போ?
தாய்தன்னை இழந்த
தளிர்தன்னைக் கண்டு
யார் பிள்ளை எனும்
கேள்வியது கேளாது
தன்முலை தனையூட்டி
வன்பசி தீர்த்த
நல்மன பெண்ணின்
கடன்தான் தீர்வதெப்போ?
பசிமயக்கம் கொண்டும்
படுக்கவொரு இடமற்றும்
பரிதவித்த போதினிலே
பதுங்கு குழியில் இடம்தந்து
பாசமொடு கஞ்சிதந்து
நேசமாய் அணைத்த
நெஞ்சங்களின் கடனை
தீர்ப்பதெப்போ?
தேகமது தன்னில்
சேகரித்த குருதிகளை
பாரங்கள் சுமந்து
பாடுபட்ட மக்களுக்கு
தானங்களாய் கொடுத்த
வானதிலும் பெரியவுளம்
தானதனைப் படைத்தோரின்
தர்மக்கடன் தீர்வதெப்போ?
அனைத்துறவும் இழந்து
அம்பலவன் பொக்கனையில்
அந்தரித்த வேளையிலே
அருகேயோர் உறவாகி
அன்பெனக்கு அளித்த
அழகு ஜிம்மி நாயின்
அன்புக்கடனை
அடைப்பது எப்போ?
முள்ளிவாய்க்கால் முற்றங்களில்
முகம்கழுவ நீரின்றி
அகம் கரைந்த நாட்களிலே
சிலமணிகள் ஒதுக்கியே
கிணற்று நீரளித்த
வனப்பு உளங்களின்
நிறைத்த கடனை
சென்றுமே அளிப்பதெப்போ?
பதுங்கு குழிக்கு உரப்பையின்றி
பாடுபட்ட நாட்களிலே
பழஞ்சேலை தந்துமே
பாதுகாப்பு அளித்திட்ட
பாட்டியின் பாசக்கடன்
தீர்ந்துதான் போவதெப்போ?
இறுதிப்போர் காலங்களில்
எத்தனை கடன்கள்.
செஞ்சோற்றுக் கடன்களிலும்
சிறந்த கடன்கள்.
யாரென்ற
எவர் என்ற
கேள்விகளே கேளாது
கிடைத்திட்ட கடன்கள்.
அப்போதும்...
இப்போதும்...
எப்போதும்...
தீர்க்க முடியாத
செஞ்சோற்றுக் கடன்கள்.
எதிர்வினைகள் சில:
Vadakovy Varatha Rajan நல்லதோர் கவிதை .அதற்கு நீங்களிடட குறிப்பு சிறப்பு
Navaratnam Uthayakumar //முள்ளிவாய்க்கால் முற்றங்களில் முகம்கழுவ நீரின்றி அகம் கரைந்த நாட்களிலே சிலமணிகள் ஒதுக்கியே கிணற்றுநீரளித்த வனப்பு உளங்களின் நிறைத்த கடனை சென்றுமே அளிப்பதெப்போ? // இப்பகுதி மெல்லுவதற்கு சற்று சிரமமாகவே உள்ளது பலமுறை முயற்சித்தும் அறிவால் வழுக்கி வாயால் தெறிக்கின்றது. இதுக்கு ஒரு வழி நீங்களே சொல்லுங்கள் அண்ணா.
Giritharan Navaratnam முள்ளிவாய்க்காலில், போரின் இறுதிக்கட்டத்தில் அலைந்துகொண்டிருந்த சமயம், முகங் கழுவக்கூட நீரின்றி நெஞ்சு வருந்திய நாட்களில், கிணற்று நீர் கொண்டு வந்து தந்த மானுடர்கள் (தனிப்பட்டவர்களாகவிருக்கலாம் அல்லது அமைப்பொன்றாகவிருக்கலாம் ... நல்ல நீர் கொண்டுவந்து தருவதற்காக ஒவ்வொரு நாளும் சில மணி நேரம் ஒதுக்குகின்றார்கள்; அவ்விதம் இரக்க சிந்தனை மிக்க உள்ளங்களாதலால் இங்கு கவிஞர் அவர்கள்தம் உள்ளங்களை வனப்பு உள்ளங்கள் என்கின்றார்) அவர்கள் செய்த உதவிக்கெல்லாம் பதிலாக நன்றிக்கடன் அளிப்பதெப்போ? இதுவே இதன் கருத்து.
Navaratnam Uthayakumar பொதுவாகவே நான் உங்கள் இருவரினதும் தீவீர இரசிகன் என்ற வகையில் எனக்கு ஏற்பட்ட ஐமிச்சத்தை கேட்டேன். அதற்கு நீங்கள் அளித்த விளக்கம் சிறப்பு அதற்காக நன்றிகள். இருந்தும் கவிதையின் காட்சிப்படம் ஒரு அடைமழைகாலத்தை காட்சிப்படுத்துகின்றது நிசமும் அதுதான் இறுதிப்போர் அடைமழை நாட்களி நடந்தது இருந்தும் முள்ளிவாய்க்காலில் ஏனோ நீர் அற்றுப்போனது? சரி அது ஒரு புறமாக இருக்கட்டும். சிலவேளை அந்த தனிப்பட்ட மானுடர்களை கவிதைக்குள் திணிப்பதற்காக கவிதையில் நிலம் அங்கு வறண்டு போயிருக்கலாம்! அதெல்லாம் எழுத்தாளனின் சமயோசிதம் அல்லது சாதுரியம். சமகாலத்தில் நாமும் வாழ்வதால் இவைகளைப்பற்றி கதைத்து பேசி அறிந்து கொள்ளலாம் இருந்தும் இன்று இதுபோன்ற கவிதைகள்தான் ஆவணக்கோப்புகளில் செருகப்படுகின்றது வரவேற்கக்கூடியதாயினும் இங்கே கூறப்பட்ட மானிடர் யார் என்பது கால ஓட்டத்தில் எதிர்கால தலைமுறையினர் மத்தியில் சர்ச்சையினை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. விடுதலைப்புலிகள், எதிரி, மக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இவைகளுக்கும் அப்பால் ஒரு அமைப்பு, அல்ல பிரிவு இருந்திருந்தால் எழுத்தாளர் அதை சற்று விபரித்திருக்கலாம். என்பது எனது கருத்து அவர் குறிப்பிடப்போகும் பதிலும் எனது அனுமானமும் சரியாக இருப்பின் இதைப்பற்றி மேலும் நாம் பேசலாம்.
Navaratnam Uthayakumar இதற்கான விளக்கத்தினை யோ புரட்சி அவர்கள் கூறினால் சிறப்பாக இருக்கும்!
Giritharan Navaratnam உண்மையில் கவிஞர் இதற்கான விளக்கம் கூறவேண்டும் என்ற தேவையேயில்லை. கவிதையை ஒவ்வொருவரும் தமக்கேற்ப விளங்கிக் கொள்ளலாம். அதனால்தான் ஒரு படைப்பானது பன்முக வாசிப்பில் பல விளக்கங்களை, உணர்வுகளை வாசகர்களுக்கு அளிக்கின்றது. படைத்தவர் அவ்விதம் ஒரு கருத்தினைத் தெரிவித்தால் அது தடைபட்டுப் போகின்றது. இக்கவிதையில் கவிஞர் குறிப்பிடும் அடைமழை ஒரு சம்பவம் நடைபெற்றபோது பெய்த மழையைக் குறிப்பிடுகின்றது. மேலும் அவர் குறிப்பிடும் சம்பவங்கள் எல்லால் ஒரே நாளில் நடைபெற்றவையல்ல. யுத்தத்தின் இறுதிக்காலத்தில் பல்வேறு நாட்களில், சமயங்களில் நடைபெற்றவை.
யோ புரட்சி: இது பற்றி விளக்க இயலும். போரின் இறுதி நாள்வரை அறிந்தவனாகையால் பகிர்கிறேன். 2009 மே மாதம் நந்திக் கடலோரத்தில் பதுங்குகுழிகளை பிக்கான் பாவித்து வெட்டவே கடினம். அத்தனை கடினத்தரை. நந்திக் கடற்கரை அண்டி கிணறுகள் வெட்டியவர்கள் சில மணிநேரங்கள் தண்ணீர் ஊறும்வரை காத்திருப்பர். பின் அள்ளுவர். பின் ஊற விடுவர். சில குடும்பங்களுக்கு நேரம் பிரித்தும் கொடுப்பர். முதல்நாள் கிணறு தோண்டிய குடுப்பம் இருக்கும் இடத்திற்கு நூறாக ஆயிரமாக மறுநாள் குடும்பங்கள் குவியும். வந்ததும் கிணறு தோண்ட முடியுமா? இடம் இருக்கவேண்டுமே. ஆனால் 2009 மார்ச் ஏப்ரல் மாதங்களில் கடும் மழை பெய்ததுண்டு. மார்ச் மாதம் புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் பகுதி அடைமழைக்கு நானே சாட்சி. பல இடங்களிலும் பொழிந்தன. மழை பொழிந்தாலும் இலட்சக்கணக்கான மக்களுக்கு எத்தனை கிணறுகள் வேண்டும். மே மாதமும் மழை பெய்ததுண்டு. ஆனால் அடைமழை எனச்சொல்லும் அளவு நான் காணவில்லை. அதற்கும் நானே சாட்சி. இறுதி நாட்கள் மழையற்றவை. இக்காட்சி மார்ச்/ஏப்ரல் காட்சி.
யோ புரட்சி படைத்தபோது அடைந்த திருப்தியை விட இதை பார்த்தபோது கொள்ளும் திருப்தி அதிகம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.