- அண்மையிலிட்ட முகநூற் பதிவும் சிலவும், அவற்றுக்கான எதிர்வினைகள் சிலவற்றையும் இங்கு பதிவிடுகின்றேன். -
1. நினைவு கூர்வோம்: மகத்தான அக்டோபர் புரட்சி (நவம்பர் 7, 1917)
"குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக! என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருதயுகம் எழுக மாதோ! " - பாரதியார் -
இந்தப்புரட்சி ஏன் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது? விளாடிமீர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகளால் ரஷ்யாவில் பொதுவுடமைச் சமுதாயம் அமைப்பு முதல் முறையாக ஒரு நாட்டில் முழுமையாக நிறுவப்பட்ட தினம் என்பதால்தான். கார்ல் மார்க்ஸ் தனது இடையறாத ஆய்வுகள் மூலம் மானுட உலகுக்கு வழங்கிய மகத்தான மூலதனம் அவரது மூலதனம் என்னும் ஆய்வு நூலே. பல்வேறு பிரிவுகளால் (மதம், மொழி, இனம், வருணம், வர்க்கம் போன்ற) பிளவுண்டு, துயரத்தில் உழன்று கொண்டிருக்கும் மானுட சமுதாயத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வானது அரசு உலர்ந்து உக்கி விட்ட, வர்க்கங்களேதுமற்ற கம்யூனிசச் சமுதாய அமைப்பிலேயே இருக்குமென்னும் தன் கனவைத் தன் ஆய்வுகள் மூலம் நிறுவிப் படைத்திட்ட நூல்தான் இந்த மூலதனம்.
மார்க்ஸின் கனவை, ஆய்வுகள் மூலம் நடைமுறைச்சாத்தியமான கனவு என்று எடுத்துக்காட்டிய கனவினை இம்மண்ணில் பொதுவுடமை அமைப்பொன்றினை நிறுவியதன் மூலம் மார்க்ஸின் கனவின் முதற் கட்டத்தினைச் சாத்தியமாக்கியவர் விளாடிமீர் லெனின். இப்புரட்சியின் முக்கியத்தை இந்தியாவிலேயே முதன் முதலாக அறிந்து, ஆதரித்துக் கவிதை பாடிய இலக்கியவாதி மகாகவி பாரதியார். அவரது 'ஆகா வென்றெழுந்தது பார் யுகப்புரட்சி' இந்த வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிதை.
அக்டோபர் புரட்சியின் நினைவாக, அதனை வரவேற்று அன்று பாடிய மகாகவியின் விரிந்த சிந்தனை எப்பொழுதுமே என்னை வியக்க வைப்பது. அக்கவிதையினை இங்கு அக்டோபர் புரட்சியின் நினைவாக இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
புதிய ருஷியா! ஜார் சக்ரவர்த்தியின் வீழ்ச்சி!
மாகாளி பராசக்தி உருசியநாட்
டினிற் கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி;
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்;
வாகான தோள்புடைத்தார் வானமரர்;
பேய்களெலாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புகைந்து மடிந்தனவாம்;
வையகத்தீர், புதுமை காணீர்!
இரணியன்போ லரசாண்டான் கொடுங்கோலன்
ஜாரெனும்பேரிசைந்த பாவி.
சரணின்றித் தவித்திட்டார் நல்லோரும்
சான்றோரும்; தருமந் தன்னைத்
திரணமெனக் கருதிவிட்டான் ஜார்மூடன்;
பொய் சூது தீமையெல்லாம்
அரணியத்திற் பாம்புகள்போல் மலிந்துவளர்ந்
தோங்கினவே அந்த நாட்டில்.
உழுதுவிதைத் தறுப்பாருக் குணவில்லை;
பிணிகள்பல வுண்டு; பொய்யைத்
தொழுதடிமை செய்வார்க்குச் செல்வங்க
ளுண்டு உண்மை சொல்வோர்க் கெல்லாம்
எழுதரிய பெருங்கொடுமைச் சிறையுண்டு
தூக்குண்டே யிறப்ப துண்டு;
முழுதுமொரு பேய்வனமாஞ் சிவேரியிலே
ஆவிகெட முடிவ துண்டு.
இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால்
வனவாசம்; இவ்வா றங்கே
செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்,
அம்மைமனங் கனிந்திட்டாள்; அடிபரவி
உண்மைசொலும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள்; முடிந்தான் காலன்.
இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன்; இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுச் சூறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே.
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்ததுபார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்;
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக! என்றார்;
இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்,
கிருதயுகம் எழுக மாதோ
எதிர்வினைகள் சில:
Janaki Karthigesan Balakrishnan: I love that you included Bharathiyar’s picture also among the leadership of Revolution of Russia. The poems of Bharathiyar clearly indicated how knowledgeable he was about the politics around the world and other aspects. For that matter, he had never travelled to any other country. He could picture everything and present in poems. In vain, people did not realize the effects of those then. There again, he says with the blessings of Makali and Parasakthy Russia achieved the victory. It was very interesting. This is where I have the notions his gods, even his belief, were imaginary, but to impact the public of, not even India, but the Tamil state, he included those in his poems. He made it ஐனரஞ்சகம். Yet, people couldn’t. It’s a pity. Many publications by the Communist party, and writings of Marx and Lenin would have been very complex to understand by ordinary citizens.
Akathiyan Tholkapiyan சம தர்மம் தற்கால புதிய உலக ஒழுங்கு எனும் போர்வைக்குள் பிணமாய்ச் சுற்றப்பட்டு விட்டது , முதலாளித்துவத் தோட்டங்களில் விளைந்நத Mcdonalds சீனாவை அலங்கரிக்கிறது , kFC உருசியாவில் ஒளி ஏற்றுகிறது , மாவீரன் லெனினின் வித்துடற் கல்லறை நொருக்கி எரிக்கப்பட்டு விட்டது , ட்றம்பும் பூட்டீனும் கள்ளக் காதலராகி விட்டனர். ஏகாதிபத்திய அடக்கு முறைகளை உடைத்தெறிந்து் விடுதலை பெற்ற கியூபா , விநட்நாம் , தென்னாபிரிக்கா போன்ற நாடுகளெல்லாம் ஈழத்தின் இனப்படுகொலை விடயத்தில் காலணித்துவ வாதிகளுடன் கை கோர்த்து இலங்கைக்கு சார்பாக கை உயர்த்தியாகி விட்டது , மனிதத்திற்கு அப்பால் தோள் உயர்த்தியவன் தோழன் என்றாகிவிட்ட இன்றைய வணிக உலகில் மாக்சீய லெனினச காந்தீய பொற்காலக் கதைகளெல்லாம் அடுத்த புத்தாயிரத்தில் புராணமாய் புனை கதையாய்ப் போய்விடலாம்... எனக்கு மிகவும் பிடித்த காரர்ல் மார்க்சின் பொன்மொழி.. " Some thing that grows fast also produces the seeds of its distruction " அரிய பதிவிற்கு நன்றி...!
Giritharan Navaratnam //இன்றைய வணிக உலகில் மாக்சீய லெனினச காந்தீய பொற்காலக் கதைகளெல்லாம் அடுத்த புத்தாயிரத்தில் புராணமாய் புனை கதையாய்ப் போய்விடலாம்...// நம் காலகட்டமென்பது வரலாற்றில் ஒரு துளி. மார்க்சின் தத்துவமென்பது ஓர் தர்க்கபூர்வமான ஆய்வு. அது வெளிப்படுத்துவதன்படி இதுவரை கால மானுட வரலாறானது பல்வகையான பிரிவுகளிலிருந்து படிப்படியாக அப்பிரிவுகள் குறைந்து கொண்டே சென்று இறுதியில் இரு வர்க்கமாகிப்பின் வர்க்கமுமற்று ஆகுமொரு நிலையை அடையுமென்பது வெளிப்படும். புற விடுதலை முடிவுக்கு வந்தபின்னரே அக விடுதலையும் சாத்தியமாகுமென்பது அவர் முடிவு. நியாயமான , தர்க்கபூர்வமான முடிவு. தற்போதுள்ள சூழலை மட்டுமே வைத்து முடிவுக்கு வந்து விடக்கூடாது. மானுட வரலாறென்பது இன்னும் இலட்சக்கணக்கான ஆண்டுகள் (அதுவரையில் இப்பூமியை நாம் பாதுகாத்து வைத்திருந்தால்) செல்லத்தான் போகின்றது. மானுடர்கள் அதிமானுடர்களாகப் பரிணாமமடைந்து இப்புவியில் மானுட சமுதாயமென்பது மார்க்சின் கனவுக்கேற்ற அல்ல அதிலும் அதிக உ ன்னதமானதொரு நிலையினை அடையலாம். அடையுமென்பது என் நம்பிக்கை. ஏனெனில் இதுவரை காலத்து மானுட வரலாற்றின்படி மானுட சமுதாயமும், அறிவும் பரிணாமமடைந்து கொண்டே வந்திருக்கின்றன. இனியும் அவ்விதமே அடைந்து உச்சத்துக்குச் செல்லும். நம்பிக்கையினை இழந்து விடாதீர் நண்பரே உமது காலகட்டத்தில் இந்நிலை ஏற்படவில்லையென்ற காரணத்தால்.....
Giritharan Navaratnam இதே கவிதையின் முடிவில் 'குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு. மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றிலெழுந்தது பார்; குடியரசென்றுலகறியக் கூறி விட்டார்' என்று அப்புரட்சிக்குக் காரணமான ருஷிய மக்களைப்புகழ்ந்து முடித்திருப்பான். பாரதியின் கவித்துவத்தை, சிந்தனைச்சிறப்பினை அவனது வாழ்வின் பல்வேறு கட்டங்களினூடும் அவனடைந்த பரிணாம வளர்ச்சியாகத்தான் (அறிவில்) நான் பார்க்கின்றேன். அவனது முரண்பாடுகள் கூட இவ்விதமான வளர்ச்சிப்படிக்கட்டுகளின் விளைவாக ஏற்பட்டவைதாம். அதனால்தான் 'ஆயிரந்தெய்வங்களுண்டென்று தேடி அலையுமறிவிலிகாள் பல்லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரொ?' என்றும் பாட முடிகின்றது. பாரதி பாடும் தெய்வங்களின் பெயர்களை மட்டும் கவனத்திலெடுத்து அவனை எடைபோடுவது தவறாகவே முடியும். அவன் பாடும் தெய்வங்கள் அனைத்துமே அறிவெனும் தெய்வத்தைக்குறிக்கும் குறியீட்டுச்சொல்லாகவே கருதுகின்றேன்.
2. அழியாத கானங்கள்: நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா ?
"நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா ?". கெளரவம் திரைப்படப்பாடல். நடிகர் திலகத்தின் நடிப்புக்காகவே (சிறிது மிகை என்றாலும் கூட, பாத்திரத்துக்குச் சோபிக்கின்றது) நினைவில் நிற்கும் பாடல். இப்பாடலின் வெற்றியே முதலில் சிவாஜியின் நடிப்பும் , டி.எம்.எஸ்ஸின் குரலும்தாம். பிறகுதான் மற்றவை எல்லாமே. இது போன்ற சிவாஜிக்காவே சிவாஜியின் நடிப்புக்காகவே நினைவில் நிற்கும் படங்களாகப் பராசக்தி, வீரபாண்டிய கட்டப்பொம்மன், தில்லானா மோகனாம்பாள், தங்கப்பதக்கம், கப்பலோட்டிய தமிழன், வசந்த மாளிகை போன்ற திரைப்படங்களைக்குறிப்பிடுவேன். ராஜா (யாழ்) திரையரங்கில் பார்த்த திரைப்படங்களில் நினைவில் நிற்கும் திரைப்படங்களிலொன்று 'வியட்நாம் வீடு' சுந்தரத்தின் 'கெளரவம்'. பாடலின் இடையில் வரும் சதுரங்கக் காட்சி படைப்பாற்றல் மிக்கதொரு கற்பனை. அற்புதம்.
Michael Collin: மறக்க முடியாத பாடல்
Pena Manoharan: இப்பொழுதுள்ளவங்க இக்காட்சியை...டப்மாஷ்..ரீமிக்சிங் செய்வதைப் பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை...
Vimal Kulanthaivelu: சிவாஜியின் நடிப்பு சிறிது மிகையல்ல . . . மிகையே . . ராஜ ராஜ சோழன், கர்ணனும் கூட.
Vadakovy Varatha Rajan : சிவாஜி நடிப்பு மிகையே ( மேலானதே )
Iravi Arunasalam : பரிஸ்டர் ரஜனிகாந்தின் புறங்கையால் மற்றவர்களை உதாசீனம் செய்யும் திமிர் இருக்கிறதே! அபாரம்!
Vickneaswaran Sk: நாடகத்திலிருந்து சினிமாவுக்கு மாறிவந்த காலத்துக் கலைஞர் அவர். அவர் மிகை நடிப்பை அக்கால தமிழ் சினிமா உலகின் புரிதலோடுதான் பார்க்கவேண்டும். சினிமாவுக்குத்தான் அது மிகையே தவிர மேடைக்கல்ல. ஆயினும் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை!
Giritharan Navaratnam : பாகவர் காலம் பாட்டுக்கான காலம். பின்னரான கலைஞர், சிவாஜி காலம் வசனத்துக்கான காலம். அக்காலகட்டத்தின் வெற்றிகரமான பிரதிபலிப்பு சிவாஜி.
Siva Murugupillai : தெய்வ மகன் கறுப்பு வெள்ளையாகினும் மூன்று வேடம் ஒருவரை ஒருவர் விஞ்சும் நடிப்பு
Giritharan Navaratnam சிவா, அதில் வரும் 'தெய்வமே' பாடலுக்கு அழகற்ற சிவாஜி நடித்திருப்பது அக்காலத்தில் எனக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக 'அந்த அழகுத்தெய்வதின் மகனா இவன். ஆ..' என்று கூறிப்பாடுவதை மீண்டும் மீண்டும் கேட்டு இரசித்ததுண்டு. அப்பாடலிலும் சிவாஜி / டி.எம்.எஸ் இணை நன்கு பொருந்தியிருந்தது.
Siva Murugupillai Best moments between Sivaji and Sundrarajan frame also elder son falls in love with Jayalalitha
Parathan Navaratnam: சிவாஜி எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரது ஆரம்ப கால நடிப்பும் உடல்மொழியையும் மிஞ்ச யாரும் இல்லை .எழுபதுகளுக்கு பின் பல கலர் படங்களில் இளம் நடிககைகளுடன், சட்டி கவுட்டது போல டோப் தலையுடன் ,அகண்ட பெல்பொட்டதுடன் சகிக்க முடியாமல் போய்விட்டது .கடவுளே என்று இறுதிகாலத்தில் முதல் மரியாதை வந்து மீண்டும் ஒரு மதிப்பை ஏற்படுத்தியது . .
Giritharan Navaratnam: பரதன், அக்காலகட்டத்திலும் 'தங்கப்பதக்கம்' போன்ற படங்கள் , 'வசந்த மாளிகை' போன்றவை வெளியாகியுள்ளனவே. 77ற்குப் பின்னரென்று கூறலாம். வாத்தியார் அரசியலில் நூறு வீதம் நுழைந்தவுடன் அதுவரை நிலவிய எம்ஜிஆர் / சிவாஜி போட்டியைத் தமிழ்ச்சினிமா இழந்து விட்டது. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமென்பது இதற்குத்தான். அதுவும் சிவாஜி தன் உடலில் கவனம் செலுத்தாமல் விட்டதற்குக் காரணமாக இருக்கக் கூடும். தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாக வெற்றிகரமாகத் திகழ்ந்த ஜெய்சங்கரும் தன் உடலைக் கவனிக்காமல் கதாநாயக அந்தஸ்தினை இழக்க வேண்டி வந்தது நினைவுக்கு வருகின்றது. நீங்கள் சிவாஜிக்குக்கூறிய அவ்வளவும் ஜெய்சங்கரின் இறுதிக்காலக் கதாநாயகப் படங்களுக்கும் பொருந்தும்.
Siva Murugupillai: சிவாஜியின் நடிப்பின் உச்சம் வரலாற்று நாயகர்கள் புராணங்களில் வரும் பாத்திரங்கள் தெயவங்கள் விடுதலை வீரர்கள் போன்ற மக்களால் அதிகம் பேசப்பட்ட பாத்திரங்களில் நடித்து இவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்பதை மக்கள் தமது மனதில் பதியப்படுத்திக் கொள்ளவைத்ததே. அது கட்டப் பொம்மனாக இருக்கலாம் வஊ ஆக இருக்கலாம் அப்பர் சுவாமியாக இருக்கலாம் சிவபெருமானாக இருக்கலாம் கர்ணனாக இருக்கலாம் அல்லது வித்துவானாக மிளிர்ந்த தில்லான மோகனாம்பாள் பாத்திரம் மிருதங்க சக்கரவர்த்தி என்று அடுக்கிக்கொண்டு போகலாம். நாடகத்துறையில் இருந்து வந்த படியால் சற்று மிகையான ஆனால் உருகவைக்கும் ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தினார்.
3. கவிஞர் நீலாவணன் பற்றி..
ஈழத்துத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமான ஒருவர் கிழக்கிலங்கை தந்த கவிஞர் நீலாவணன். அவரைப்பற்றி நல்லதொரு சுருக்கமான கட்டுரை 'கிழக்கின் கவித்துவ ஆளுமை நீலாவணன்'. எழுதியவர் மோகனதாஸ். அதற்கான இணைய இணைப்பினை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அவரது கவிதைத்தொகுப்புகள் பலவற்றை 'நூலகம்' இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். இவரது 'விளக்கு' கவிதை எனக்கு பிடித்த கவிதைகளிலொன்று.
எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் நீலாவணனின் கவிதையான 'விளக்கு' இதோ:
விளக்கு - நீலாவணன்
வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
காடுகளின் ஊடே ஓர் காடாகிவீடும்
காட்சிதரும் மையிருட்டு! கள்வர்கள் - பேய் - பாம்பு!
ஓடோடித் திரும்புகிறேன். ஓர் துணையும் இல்லை!
உள்ளிருந்து பேசுவதும் யார்? உற்றுக்கேட்டேன்.....
வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
காலமெனும் கருங்கிழவன் காத்திருந்தான். எண்ணெய்
கலங்களிலே ~~கலன்கலனாய் நிறைந்திருந்த துண்மை!
கோல எழில் விளக்குகளும் குறைவில்லை! குச்சி
குறையாத தீப்பெட்டி மூலையிலே தூங்கும்!
மூளவில்லை - விளக்கெரிய முடியவில்லை! உள்ளே
மூதேவி அரசுசெய்ய முயல்கின்றாள்! வல்லே.....
வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
எண்ணெய் விளக் காய்விடுமா? எண்ணெயைவிட் டெரிக்கும்
ஏனந்தான் விளக்காமோ? எரிகின்ற திரியா?
மின்னி இரைந் தே புகைந்து எரியுந்தீக் குச்சி
விளக்காமோ? விளக்கென்னில் மேற்குறித்த யாவும்
ஒன்றுகுறை யாமலுள்ளே உள்ளனவே! ஏனும்
உள்ளுக்குள் ஒளியில்லை! வழிதெரியவில்லை!
வீடிருண்டு கிடக்கிறது - விளக்கேற்றல் வேண்டும்.
வெளியேபோய் வெகுநேரம் தாமதமாய் மீண்டேன்!
இருட்டில் மெய்ப் பையின்பை துழாவுகிறேன். சாவி
எடுத்தில்லின் தலைவாசல் கதவுதிறக் கின்றேன்!
திருட்டொன்றும் போகவில்லை! உள்ளறையும் திறந்து.
தீப்பெட்டி எடுத்ததனைக் கிழித்து விளக்கேற்றித்
தெருப்பக்கச் சன்னல்களைத் திறந்துவைத்தேன்! தனியே -
திருடர், பிற பயமின்றித் தெம்பொடிருக் கின்றேன்!
வீடிருண்டு கிடக்கவில்லை - விளக்கேற்றிவிட்டேன்
வீதியிலே போவார்க்கும் ஒளிவிழுதல் கண்டேன்!
- தினகரன் 31.5.69 -
நீலாவணன் பற்றிய கட்டுரை: http://www.arayampathy.lk/index.php/allnews/81-07112016
Sivanesaselvan Arumugam : Neelavanan was my friendly Kavgnar from Suthanthiran days
Giritharan Navaratnam : வணக்கம் திரு. சிவநேசச்செல்வன் அவர்களே, தகவலைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Vathiri C Raveendran நீலாவணன் உன்னதமான ஒரு கவிஞன்.
Thambirajah Elangovan ஈழத்துக் கவி மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது 'பாவம் வாத்தியார்' கவிதையை அன்று இரசித்துப் படித்த ஞாபகம். வேளாண்மை - வடமீன் - பட்டமரம் என காவியங்களும் படைத்த கவி மன்னன்.
4. அழியாத கானங்கள்: வா என்றது உருவம். நீ போ என்றது நாணம்.
படம்: காத்திருந்த கண்கள்
இசை: எம்.எஸ்.வி / ராமமுர்த்தி
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்: பி.சுசீலா
காதல் வயப்பட்ட பெண்ணுள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறந்த பாடல்களிலொன்று இப்பாடல். கவிஞரின் வரிகளுக்கு இசையும் , சுசீலாவின் குரலும், நடிகையர் திலகத்தின் நடிப்பும் உயிரூட்டுகின்றன. ஓர் இளமாதின் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறு சிறு வசனங்கள் கேட்பவர் நெஞ்சங்களை ஈர்க்கின்றன. உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிகையர் திலகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பால் இப்பாடல் மேலும் சிறக்கின்றது.
பாடல் வரிகள் முழுமையாக:
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்
கண் கொண்டது மயக்கம்
இரு கால் கொண்டது தயக்கம்
மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்
மனம் கொண்டது கலக்கம்
இனி வருமோ இல்லையோ உறக்கம்
வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம் - அவர்
யார் என்றது இதயம்
மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன
மாலை நிலாவினைக் கேட்டேன்
என் மனதில் வந்தது என்ன
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது
ஆசை என்றது நிலவு
ஆம் அதுதான் என்றது மனது
வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
ஏதோ ஒரு வகை எண்ணம்
அதில் ஏனோ ஒரு வகை இன்பம்
ஒரு நாள் ஒரு முறை கண்டேன்
அவர் உயிரைத் தொடர்ந்தே சென்றேன்
வா
வா என்றது உருவம்
நீ போ என்றது நாணம்
பார் என்றது பருவம்
அவர் யார் என்றது இதயம்
எதிர்வினைகள்:
Maheswaran Murugaiah இன்றைய பாடல்களுக்கும் இப்படி ரசித்து விமர்சனம் எழுதமுடியுமா /
Giritharan Navaratnam ஒரு விதத்தில் தலைமுறை இடைவெளியென்று கூடக் கூறலாம். எங்கள் அப்பாவைக்கேட்டால் அவருக்கு எம்.கே.டி, பி.யு.சின்னப்பா அவர்கள்தாம் அபிமான நட்சத்திரங்கள். நாங்கள் வளர்ந்தது அறுபது, எழுபது , எண்பது திரையுலகத்தினருடன். அதுவும் ஒரு காரணம். உண்மையில் என்னால் இன்றைய பாடல்களை இது போன்ற பழைய பாடல்களை மீண்டும் மீண்டும் இரசிப்பதைபோல் இரசிக்க முடியவில்லை. உண்மையில் இப்பாடல்களெல்லாம் ஒரு விதத்தில் நான் சினிமா பார்க்காத பருவத்தில் வெளியானவை. ஆனால் எனக்கும் பிடித்திருக்கின்றன. யு டியூப் மூலமே இவற்றை நான் அறிந்து, இரசித்து வருகின்றேன். இவற்றிலுள்ள கவித்துவம், குரலினிமை, இசை, நடிப்பு இவற்றையெல்லாம் இன்றைய சினிமாவில் காண முடியாது. செயற்கைத்தனமும், தொழில் நுட்பமும் ஆட்டிப்படைக்கும் இன்றைய திரையுலகில் நடிப்புத்திறமையற்ற யாரும் வந்து வாயசைத்து நடித்துவிட்டுச் சென்று விடலாம்.
Sj Siva: மனம் மயங்கிய பாடல்!.
5. இசை கேட்கும் நேரம் இது: பாட்டும் நானே பாவமும் நானே!
எம்ஜிஆரை நினைத்தால் முதலில் எனக்கு நினைவுக்கு வரும் பாடல் அவரது 'நான் ஆணையிட்டால்'. அது போல் சிவாஜியை நினைத்தால் முதலில் நினைவுக்கு வரும் பாடல் 'பாட்டும் நானே. பாவமும் நானே.' இரு திரைப்படங்களுமே ஒரே வருடத்தில் , ஒரே சமயத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படங்கள். அதன் காரணமாகவே 'பட்டணத்தில் பூதம்' திரைப்படத்தில் வரும் பூதமான 'சீ பும் பா' தினசரியொன்றில் இரு பாடல்களையும் தோன்றச்செய்து இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கும்
இந்தப்பாடலை நினைத்ததும் எனக்கு ஞாபகத்துக்கு வரும் இன்னுமொரு விடயம் 'பாலமுரளிகிருஷ்ணா'வின் 'ஒரு நாள் போதுமா?' . திரைப்படத்தில் அவரது பாடலைபாடும் சங்கீத வித்துவான் , செளந்தரராஜனின் குரலில் இப்பாடலைப்பாடும் , சிவனாக நடித்திருக்கும் சிவாஜியிடம் போட்டியிட முடியாமல் பயந்து ஓடுவதாகக் காட்சி வரும். நிஜத்தில் கூட சுப்பர் சிங்கர் இறுதி நிகழ்வொன்றில் இப்பாடலைப்பாடிய சாயிசரண் மக்களின் ஆதரவு காரணமாக வென்றிருக்க, அற்புதமாக 'ஒரு நாள் போதுமா' பாடிய சத்யபிரகாஷ் தோற்றிருப்பார்.
இப்பாடலை பாலமுரளிகிருஷ்ணாவின் பாடலுடன் ஒப்பிட முடியாவிட்டாலும், மக்களில் பெரும்பான்மையோருக்குப் பிடித்துள்ள பாடல் என்று கூறலாம். எனக்கும்தான். கவிஞர் கண்ணதாசனின் வரிகள், கே.வி.மகாதேவனின் இசை, டி.எம்.எஸ்ஸின் குரல், நடிகர் திலகத்தின் நடிப்பு எல்லாமே இப்பாடலில் எனக்குப் பிடித்திருக்கின்றன்.
பாடல்: பாட்டும் நானே பாவமும் நானே!
படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)
பாடியவர்: T.M.செளந்தரராஜன்
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை: K.V. மகாதேவன்
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
(பாட்டும்)
கூட்டும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
கூட்டும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
எதிர்வினைகள் சில:
Paiwa Asa பாட்டும் நானே பாவமும் நானே பாடலை எழுதியவர் கண்ணதாசனல்ல, கவிஞர் கா.மு.ஷெரீப். நம்ப முடியாதுதான்.
Giritharan Navaratnam : நண்பருக்கு சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் என்று போட்டிருந்தாலும் எழுதியவர் கவி காமு.ஷெரீப் என்றுதான் தெரிய வருகின்றது. மேலுள்ள காணொளிக்கான எதிர்வினைகளிலொன்றா டி.எஸ்.கந்தசாமி என்பவரும் இதனையே சுட்டிக்காட்டியிருக்கின்றார். அதனையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
[ KANDASAMY T S: “திருவிளையாடல்” படத்தில் இடம்பெற்ற அந்த கிளைமாக்ஸ் காட்சி பாடலுக்கு பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தார் ஏ.பி.என்.அவர்கள். இறைவனே இறங்கி வந்து பாடும் பாடல் அது. அவன் பாடுகையில் இந்த ஜீவராசிகள் அனைத்தும் அசைய வேண்டும். பாட்டை நிறுத்துகையில் இந்த உலகமே ஸ்தம்பித்து நின்றுவிட வேண்டும். அப்படியொரு எஃபெக்டை கவியரசர் கண்ணதாசனிடம் இருந்து ஏ.பி.என் எதிர்பார்த்தார். Homer sometimes nods. ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பார்கள். கிட்டத்தட்ட ஒரு டஜன் பாடல்கள் எழுதி, எழுதி கொடுத்துப் பார்த்து சளைத்து விட்டார் கவியரசு. ஏ.பி.நாகராஜனின் பெரும் எதிர்பார்ப்புக்கு அந்த பாடல் வரிகள் ஈடு கொடுக்க முடியவில்லை. இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவனையும் அவைகள் திருப்தி படுத்த முடியவில்லை. ‘கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்’ என்று ஏ.பி.என். நினைத்தாரோ என்னவோ. தன் ஆத்ம நண்பர் கா.மு.ஷெரீப்பை அழைத்து பாடல் எழுதச் சொன்னார். சிறிது நேரத்தில் பாடலும் ஒகே ஆகிவிட்டது. அதுதான் இறைவனின் நாட்டம் போலும். ‘திருவிளையாடல்’ படம் வெளிவந்த நேரம் கண்ணதாசனின் புகழ் உச்சாணியில் இருந்தது. படம் அமோக வெற்றியைப் பெற கண்ணதாசனின் பெயர் தேவைப்பட்டது இயக்குனருக்கு. அனைத்து பாடல்களும் கண்ணதாசன் எழுதியிருக்க ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வேறொரு கவிஞரின் பெயரைப்போட மனது ஒப்பவில்லை ஏ.பி.என்.நாகராஜனுக்கு. நண்பரின் மனதைப் புரிந்துக் கொண்ட கவி.கா.மு.ஷெரீப் அவர்கள், “தம்பி கண்ணதாசன் பெயரையே நான் எழுதிய பாட்டுக்கும் போட்டுவிடுங்கள்” என்று பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார். -திரு.ஜெயகாந்தனின். “ ஒரு இலக்கிய வாதியின் கலையுலக அனுபவங்கள்” பக்கம்.112. ( திரு கா.மு.ஷெரீஃப் அவர்கள் சிவலீலா என்னும் நாடகத்திற்காக எழுதிய பாடல்-பாட்டும் நானே பாவமும் நானே…திருவிளையாடல் படத்திற்குப் பாடல் தேவைப்பட்டபோது ,இதைப் பயன்படுத்த ஏபிஎன் விரும்பினார்.திரு காமு ஷெரீஃப் அனுமதியுடன் கண்ணதாசன் பெயரில் பாடல் வெளிவந்தது.காமு ஷெரிஃப்- கண்ணதாசனுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அவர் பெயரில் போட்டுக் கொள்ளட்டும்.கண்ணதாசன்–திரு ஷெரீஃப் அய்யாவிற்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதமே.இவ்வாறு ஒரு பத்திரிகைச்செய்தி. ]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.