இன்ப ஒளி பரவட்டும் இந்நாளில்!
வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். சிலர் தீபாவளி சமயத்துடன் சம்பந்தப்பட்டதால் கொண்டாடக்கூடாது என்பார்கள். தீபாவளியின் அடிப்படை நோக்கம் மானுட சமுதாயத்தை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளியைப்பரப்பும் நாள் என்பது. சமயத்தைத்தவிர்த்து விட்டுப் பார்த்தால், மானுடரைச் சூழ்ந்திருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாள். சமய நம்பிக்கையுள்ளவர்கள் அவ்விதம் கொண்டாடட்டும். அது அவர்கள் உரிமை. அவ்வாறில்லாதவர்கள் மானுடரை மூடியிருக்கும் இருள் நீக்கி ஒளி பாய்ச்சும் திருநாளாகக் கொண்டாடலாம். என்னைப்பொறுத்தவரையில் இந்த இரண்டாவது காரணத்தையே மையமாக வைத்து இந்நாளை அணுகுகின்றேன். நண்பர்கள் அனைவர்தம் வாழ்விவும், உறவினர்கள் அனைவர்தம் வாழ்விலும், இவ்வுலக மானுடர்கள் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் ஆரோக்கியமான சிந்தனையொளி பரவட்டும். சமுதாயத்தை மூடியிருக்கும் மடமையென்ற இருள் நீங்கட்டும்; அறிவென்னும் இரவியெழுந்து ஒளி பாய்ச்சட்டும் இந்நாளில். மானுடரைக்கொன்று குவிக்கும் போரிருள் நீங்கி பேரொளி பரவட்டும். வர்க்கம், மதம், மொழி, இனம், நாடு, வருணம் என்னும் பிரிவிருள் நீங்கி , அன்பெனுமொளி உதயமாகட்டும்.
இந்த நாள் எம் அனைவர்தம் வாழ்விலும் தவிர்க்க முடியாத இன்ப நினைவுகளை நனவிடை தோய வைத்திடும் நாள். எம்மில் பலபேர் போர்ச்சூழலுக்கு முன் பண்டிகைகள் பல கொண்டாடிக் குழந்தைப் பருவத்தைக் குடும்பத்தவருடன் கழித்தவர்கள். மறக்க முடியாத அந்நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்பவர்கள். இன்னும் சிலருக்குப் போர்ச்சூழல் அவ்வாய்ப்பினைத் தட்டிப்பறித்திருக்கக் கூடும். ஆனால் அனைவர்தம் வாழ்விலும் இந்நாளில் இன்ப ஒளி பரவட்டும். இன்ப ஒளியில் இவ்வுலகு சிறகடிக்கட்டும்; சிறக்கட்டும். நோக்கும் திசையெங்கும் நாம் வாழும் இந்நானிலம் களியொளியில் ஒளிரட்டும்.
மார்க்சியமும், ஆனை பார்த்த குருடர்களும்!
மார்க்சியம் பற்றி விரிவாகப் படிக்க விரும்பும் எவரும் எடுத்த எடுப்பிலேயே மார்க்சின் மூலதனத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையும் படிப்பதிலும் பார்க்க முதலில் மார்கஸ் பற்றிய சுருக்கமான நல்லதொரு நூலைப்படிக்க வேண்டும். இவ்விதம் படிப்பதினால் அவருக்கு மார்க்ஸ் பற்றிய பரந்த அறிமுகமொன்று கிடைக்கின்றது. அதன் பின்னர் மார்க்சைப்பற்றிய அறிமுகத்துடன் மேலும் நுணுக்கமாக அவரது அரசியல், சமூகம், பொருளாதாரம், வரலாறு பற்றிய கோட்பாடுகளை அறிவதன் மூலம் விரிவான ,நிறைந்த அறிவு கிடைக்கின்றது.
மார்க்சியக் கோட்பாடுகளைப்பற்றி அறிவதற்கு முன்னர் மார்க்சின் இள வயதில் அவரைப்பாதித்த ஜெர்மனிய தத்துவஞானியான ஹெகலின் கோட்பாடுகள் பற்றியும் சிறிதளவாவது அறிந்திருக்க வேண்டும்.. ஏனெனில் மார்க்சின் இயக்கவியல், வரலாறு பற்றிய கோட்பாடுகளிலெல்லாம் ஹெகலின் பாதிப்பு தீவிரமாகவே இருந்தது.
மார்க்ஸ் பற்றிய , அவரது சகல பக்கங்களையும் உள்ளடக்கிய சுருக்கமான அறிமுக நூல்களைக் காண்பது அரிது. ஆனால் இவ்விதமானதொரு நூலினை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியீட்டு அது பல பதிப்புகளையும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நூலின் தலைப்பு MARX. எழுதியவர் Peter Singer. இவர் தத்துவப்பேராசிரியர்களிலொருவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட Past Masters என்னும் தொடர் நூல் வரிசையில் 'மார்க்ஸ்' பற்றி இவர் எழுதிய புத்தகத்தைத்தான் நானிங்கு குறிப்பிடுகின்றேன். இவர் இத்தொடருக்காகக் ஹெகல் பற்றியும் எழுதியுள்ளார்.
இந்நூலின் முதல் பத்து அத்தியாயங்களில் மார்க்சின் வாழ்க்கை பற்றி, அவர் மீதான ஹெகலின் பாதிப்பு பற்றி, பாட்டாளி, மார்க்சியம், வரலாறு, வரலாற்றின் நோக்கம், பொருளாதாரம், கம்யூனிசம் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் தனது மார்க்சியம் பற்றிய சரி, பிழை விமர்சனத்தை முன் வைத்துள்ளார். எனது அறிவுரையென்னவென்றால்.. முதல் பத்து அத்தியாயங்களுடன் நிறுத்திக்கொண்டு, பின்னர் மார்க்சிய நூல்களை வாசிக்கத்தொடங்குங்கள் என்பதே. மார்க்சிய அறிமுகத்துடன் மார்க்சிய நூல்களைப் படித்த பின்னர் நூலாசிரியரின் விமர்சனத்தை வாசிக்கும்போது அவ்விமர்சனத்தையும் விமர்சிக்கும் அளவுக்கு மார்க்சியம் பற்றி வாசிப்பவருக்குப் புலமை வந்திருக்கும் அதனால்தான்.
இவ்விதம் மார்க்ஸ் பற்றிய பூரண விளக்கமற்று, மார்க்சிய நூல்களைப்படிக்கும்போது வாசிக்கும் ஒவ்வொருவரும் தம் புரிதல்களுக்கேற்ப அரை குறை விளக்கங்களைக்கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது ஆனை பார்த்த குருடர்களைப்போல. அவர்கள் பார்ப்பது ஆனையின் ஒரு பக்கத்தை மட்டுமே. முழுப்பக்கத்தையுமல்ல. அவர்களது பார்வை சரியானதென்றாலும் முழுமையானதல்ல.
வாழ்த்துகின்றோம்: அர்ப்பணிப்பு மிக்க முயற்சி வெற்றியடையும்.
\
32 நாடுகளில் வாழும் 1000 தமிழ்க் கவிஞர்களின் 1000 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு நூல் எதிர்வரும் 21.10.2017 அன்று யாழ் நகரில் வெளியாகவுள்ளது. இத்தொகுப்பு நூலின் செயலியக்குநராக விளங்கும் எழுத்தாளர் யோ.புரட்சி அவர்கள் உண்மையிலேயே புரட்சிதான் செய்திருக்கின்றார். சாதாரண நூலொன்றுக்கு வெளியீட்டு விழா வைப்பதிலேயே எவ்வளவோ பிரச்சினைகள். இந்நிலையில் உலகின் 32 நாடுகளைச் சேர்ந்த 1000 கவிஞர்களின் கவிதைகளைச் சேகரித்து , பலருடன், பல அமைப்புகளுடன் இணைந்து , அரவணைத்து , மிகவும் கச்சிதமாகத் திட்டமிட்டு எழுத்தாளர் யோ.புரட்சி செயலாற்றுவதையே வெளியாகும் செய்திகள் எமக்குத் தெரிவிக்கின்றன. இது அவரது கனவில் அவர் கொண்டுள்ள ஆழம் மிக்க அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியினையும், நிர்வாகத்திறமையினையும் மற்றும் தலைமைத்துவப் பண்பினையும் வெளிப்படுத்துகின்றன. நிச்சயம் அவரது , அவரது நண்பர்களினது. அவருடன் இணைந்து பல்வேறு வழிகளிலும் பங்களிக்கும் அனைவரினதும் அர்ப்பணிப்பு மிக்க இம்முயற்சி மிகுந்த வெற்றியினையே அடையும். வாழ்த்துக்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.