இலங்கையின் நகர அமைப்பு நிபுணர்கள் சபையும், இலங்கைப் பசுமைக் கட்டடச் சபையும் இணைந்து பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் 25.1.2014 நடாத்திய 'பசுமையினூடு பெறுமதியை உருவாக்குதல்' என்னும் மாநாட்டில் கட்டடக்கலைஞரும் ,நகர அமைப்பு வல்லுநருமான திரு/. பியால் சில்வா (Piyal Silva) அவர்களின் உரையினைத் தற்செயலாக 'யு டியூப்'பில் கேட்டேன். முதலில் எனக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. காரணம் இவர் என்னுடன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவர்களிலொருவர். இவர் சூழற் பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் (Environmental Sustainability) தலைப்பில் அம்மாநாட்டில் உரையினையாற்றினார். அபிவிருத்தி என்னும் போர்வையில் உலகம் முழுவதும் சூழற் பாதுகாப்பு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வுரை முக்கியமானதென்பதால் அவ்வுரையின் முக்கிய அம்சங்களை இங்கு குறிப்பிடலாமென்று கருதுகின்றேன்.
இவர் தனது உரையினை மேற்படி 'சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல்; என்னும் கோட்பாடு பற்றிய கேள்வியொன்றுடன் ஆரம்பித்தார். நகர்மயமாக்கல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகையில் நாம் அதனால் ஏற்படும் சூழல் விளைவுகளைக் கண்டுகொள்வதில்லை. பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. அவற்றாலேற்பட்ட விளைவுகளை அனுபவுக்கத்தொடங்கி விட்டோம். இப்போது ஒவ்வொருவரும் அதனைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் பல்வேறு இயற்கை விளைவுகளை (சுனாமி, சூறாவளி போன்ற) நாம் அனுபவித்திருக்கின்றோம். இவ்வகையான விளைவுகள் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன. தற்போது சூழலைப்பாதுகாப்பதென்பது ஒருவகை ட்ரென்ட் ஆகிவிட்டது. எல்லோரும் சூழலின் நண்பர்களாகிவிட்டார்கள். பசுமைக் கட்டடம், பசுமை 'மோல்' .என்று பலவற்றைக் கேட்டிருக்கின்றோம். இப்போக்கானது வெறும் ஒப்பனையானதா? அல்லது நாம் உண்மையிலேயே சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்திருக்கின்றோமா? அல்லது இவ்விடயத்துடன் எம்மை அடையாளப்படுத்துவதுடன் நின்று விடுகின்றோமா" குறிப்பாக உலகமயமாக்கல் என்னும் இன்றைய நிலையில் எல்லாமே இறுதியில் பணத்தில்தான் வந்து முடிகின்றன. ஆனால் எவ்வளவு கவனத்தை நாம் இவ்விடயங்களில் காண்பிக்கின்றோம்.
இவ்விதமாகத் தனது உரையினை ஆரம்பித்த பியால் சில்வா அவரகள் தொடர்ந்தும் தனதுரையில் சுட்டிக்காட்டிய முக்கிய விடயங்களைப் பின்வருமாறு கூறலாம்.
.சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்பது பசுமைப்படுத்தல் பெறுமதியை அதிகரித்தால் மட்டுமே சாத்தியமாகும். நான் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். எல்லோரும் இதுபற்றிக் கூறுகையில் இது சக்தியைச் சேமிக்கின்றது, பணத்தைச் சேமிக்கின்றது, பெறுமதியை அதிகரிக்கின்றது என்று வாதிடுகின்றார்கள். பொருளியல் அடிப்படையில் இத்திட்டமானது விளம்பரப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.
கட்டடக்கலை, நகர்திட்டமிடுதலைப்பொறுத்தவரையில் எங்காவது பசுமைக்கட்டடக்கலை, பசுமை நகர அமைப்பு என்றுள்ளனவா? நான் பல உரைகளை பசுமைக் கட்டடக்கலை, பசுமை நகரங்கள் என்றெல்லாம் கேட்டிருக்கின்றேன். எங்காவது பசுமைக்கட்டடக்கலை, பசுமை நகர அமைப்பு என்றுள்ளனவா? முக்கியமாகக் கட்டடக்கலையைப் பொறுத்தவரையில் அது பசுமையானதுதான். ஏனென்றால் இது சூழலைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் அடிப்படையில் சூழலுக்கேற்ப உருவாக்கப்படுகின்றது. நகர அமைப்பும் இவ்வாறுதானுள்ளது. பசுமைக்கட்டடக்கலை , பசுமை நகரமைப்பு என்றில்லை. நாம் பசுமையை மையப்படுத்திப் பல விடயங்களைப் பேசுகின்றோம். நாம் அவற்றை வெறும் ஒப்பனைக்காகப் பேசுகின்றோமா? அல்லது உண்மையிலேயே இக்கோட்பாடு பற்றிச் சரியாக அறிந்திருக்கின்றோமா?
நாம் இப்பொழுது தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் விடயத்தில் பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் மனிதர்களே சூழலுக்குத் தீங்கினை ஏற்படுத்தும் வகையில் செய்ற்பட்டவர்கள். நாம் புதுமையான தலையீடுகளை மனிதர்களின் இவ்வகையான செயற்பாடுகள் விடயத்தில் செய்துச் சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில மறுபுறத்தே தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பாவித்து முன்னெடுக்க வேன்டும்.
இன்று இங்கு பேசிய பலர் எவ்விதம் சக்திச் செல்வு குறைக்கப்பட முடியும், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எவ்விதம் இயற்கை வளங்களைச் சேமிக்கப்பயன்படுத்தப்பட முடியும் என்பவை பற்றிப்பேசினார்கள். நான் நினைக்கின்றேன். மானுட நடத்தையைச் சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் நிலைநிறுத்தும் வகையில் நாம் தாக்கத்தைக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் ஏற்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நூறுவீதம் சரியான பெறுபேறுகளைத் தராது.
இந்நூற்றாண்டுக்குள் உலக மக்கள் தொகையானது ஒன்பது பில்லியன் மக்களைக்கொண்டதாக ஆகிவிடப்போகின்றது. 19 நகரங்கள் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினைக் கொண்டவையாக இருக்கப்போகின்றன. இது பயங்கரமானது. தற்போது 29 மெகா நகரங்கள் , ஒவ்வொன்றும் 10 மில்லியன் மக்கள்:தொகையினைக் கொண்டவை. நினைத்துப் பாருங்கள் 20 மில்லியன் மக்களைக்கொண்ட நகரமொன்றில் தொற்றுநோய் ஏற்படுமானால் அதன் விளைவு பேரழிவுதான்.
நாம் பெளதிகச் சூழலை பேணுவதற்காக புதுமையான வடிவமைப்பைக் கையாள வேண்டும். பொருத்தமான கட்டடக் கட்டமைப்பு ஆரோக்கியமான விளைவினை ஏற்படுத்தும். நாங்கள் உயர்மாடிக் கட்டடங்களைப் (SkyScraper) பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கின்றோம். மாலைதீவினை எடுத்துக்கொண்டால் பசுமையான பகுதியே இல்லையென்றாகிவிட்டது. நாமும் அந்நிலையை அண்மித்துக்கொண்டிருக்கின்றோம். ஒருவர் கூறினார் எமது நகரம் பசுமை மிக்க நகரங்களிலொன்று என்று. இதே வீதத்தில் நாமும் சென்றுகொண்டிருந்தால் இங்கும் அந்நிலையே தோன்றும்.
நாம் ஒருவிதமான இருப்பிட அபிவிருத்தியை (Loational Development) கலாச்சார வேறுபாடுகளை, சமூக அடையாளங்களை உள்வாங்கும் வகையில் செய்ய வேண்டும். நாம் இப்போது உலகமயமாகிக்கொண்டொருக்கின்றோம் (Globalized). கட்டடக்கலை சர்வதேசமயமாகிவிட்டது. இந்நிலையில் எமக்கு அந்நியமான கட்டடக்கட்டமைப்புகளை நாடிச் செல்கின்றோம். அவை சக்தியை அதிக அளவில் விரயமாக்குபவை. தற்போது நாம் விரயமாகும் சக்தியைக் குறைப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றோம்.
எல்லோரும் வளங்களின் மீளுருவாக்கம் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் யாருமே மிகப்பெரிய மீளுருவாக்கப்படக்கூடிய வளம் பற்றிக் கதைப்பதில்லை. அது மக்கள். மக்கள் ஒன்றிணைந்து வளங்களின் பாவனையைக் குறைப்பதற்கு பங்களிக்க வேண்டும். அதன் மூலம் சூழலின் பாதுகாப்பைத் தொடர்ந்து பேணுதலைச் சாத்தியமாக்க வேண்டும். தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைப் பாவித்து சூழற்பாதுகாப்பைபேணும் அதே சமயம் மக்கள் மீதான கவனத்தையும் நாம் குவிக்க வேண்டும்.
அதிகரிக்கும் நிலத்தின் விலை மக்கள் , செல்வந்தர்கள் தவிர, நகரங்களில் வசிப்பதற்குத் தடையாக விளங்குகின்றது. மக்களை மாநகரின் எல்லைப்பகுதிகளை நோக்கித் தள்ளுகின்றது. நகரப்பரவல் தடுக்க முடியாததாகின்றது. இந்நிலை கொழும்பிலும் ஏற்பட்டுள்ளதைக் காண்கின்றோம். மாநகர்ப்பிரதேசத்துக்கு அப்பாலும் மக்களைத் தள்ளுகின்றது. இவ்விதம் மக்களை நகரத்திலிருந்து தள்ளாமால் எவ்விதம் நகருக்குரிய மக்கள் அடர்த்தியை நாம் அடைய முடியும்? அதற்காக நான் கூறவில்லை முற்றாக உயர்மாடிக் கட்டடங்களைத் தவிர்க்க வேண்டுமென்று. பொருளாதாரத்துக்கு உரிய வகையில் அவையும் தேவைதான். ஆனால் தற்போது கொழும்பு நிலத்தின் விலையானது அடிப்படையில் இங்கு வாழும் மக்களின் அனுமதிக்கப்பட்ட அடர்த்தியில் தீர்மானிக்கப்படுகின்றது. நாம் இதனை உரியமுறையில் கட்டுப்படுத்தினால் இயற்கையாக மக்கள் மாநகரில் பரந்து வாழும் நிலையேற்படும். நகரமைப்பு நிர்வகிக்கப்படுவது இன்னும் இலகுவாகும். அடர்த்தியை மேலும் அதிகரித்தால் சொத்துகளைப் (Property) பேணுவதற்கும், நிர்வகிப்பதற்குமான வளங்களின் தேவையும் அதிகமாகும்.
மேலும் இன்று சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் நிலைநிறுத்துவதென்பது (Envirinmental Sustainability) இன்று பரோபகாரச் சேவைகளிலொன்றாக அல்லது மக்கள்தொடர்பு விடயமாகப் பார்க்கப்படுகின்றது. மக்கள் செய்கின்றார்கள் இது ஒழுங்குமுறைகளிலொன்றாக இருப்பதால். நிறுவனங்கள் இதனையொரு பரோபகாரச் சேவையாகக் கருதிச் செயற்படுகின்றன. இது பரோபகாரச் சேவைகளிலொன்றல்ல. இது அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டியதொன்று என்பதை உணரும் தருணமிது. இல்லாவிட்டால் அனைவரையும் பாதிக்கும்.
இது (Envirinmental Sustainability) ஒரு வர்த்தக வாய்ப்புமல்ல. இது எம்மைப்போன்றவர்களுக்கு வருவாயைத்தந்தாலும், இதனை ஒரு வர்த்தக வாய்ப்பாகக் கருதக்கூடாது. இது நாம் தப்பிப்பிழைத்தலாகும்.
இவ்விதமான கருத்துகளை உள்ளடக்கியதாகப் பியால் சில்வாவின் உரை அமைந்திருந்தது.
மேற்படி உரைக்கான காணொளியைக் கேட்பதற்கு, பார்ப்பதற்கு: https://www.youtube.com/watch?v=XY66eBWhNlo