சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் (Environmental Sustainability) பற்றிய நகரமைப்பு வல்லுநரும், கட்டடக்கலைஞருமான பியால் சில்வாவின் உரை!
இலங்கையின் நகர அமைப்பு நிபுணர்கள் சபையும், இலங்கைப் பசுமைக் கட்டடச் சபையும் இணைந்து பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் 25.1.2014 நடாத்திய 'பசுமையினூடு பெறுமதியை உருவாக்குதல்' என்னும் மாநாட்டில் கட்டடக்கலைஞரும் ,நகர அமைப்பு வல்லுநருமான திரு/. பியால் சில்வா (Piyal Silva) அவர்களின் உரையினைத் தற்செயலாக 'யு டியூப்'பில் கேட்டேன். முதலில் எனக்கு மகிழ்ச்சியாகவிருந்தது. காரணம் இவர் என்னுடன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவர்களிலொருவர். இவர் சூழற் பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் என்னும் (Environmental Sustainability) தலைப்பில் அம்மாநாட்டில் உரையினையாற்றினார். அபிவிருத்தி என்னும் போர்வையில் உலகம் முழுவதும் சூழற் பாதுகாப்பு சீரழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இவ்வுரை முக்கியமானதென்பதால் அவ்வுரையின் முக்கிய அம்சங்களை இங்கு குறிப்பிடலாமென்று கருதுகின்றேன்.
இவர் தனது உரையினை மேற்படி 'சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல்; என்னும் கோட்பாடு பற்றிய கேள்வியொன்றுடன் ஆரம்பித்தார். நகர்மயமாக்கல் மிகுந்த வேகத்துடன் முன்னெடுக்கப்படுகையில் நாம் அதனால் ஏற்படும் சூழல் விளைவுகளைக் கண்டுகொள்வதில்லை. பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன. அவற்றாலேற்பட்ட விளைவுகளை அனுபவுக்கத்தொடங்கி விட்டோம். இப்போது ஒவ்வொருவரும் அதனைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்த ஐந்தாறு வருடங்களில் பல்வேறு இயற்கை விளைவுகளை (சுனாமி, சூறாவளி போன்ற) நாம் அனுபவித்திருக்கின்றோம். இவ்வகையான விளைவுகள் தற்போது அடிக்கடி நிகழ்கின்றன. தற்போது சூழலைப்பாதுகாப்பதென்பது ஒருவகை ட்ரென்ட் ஆகிவிட்டது. எல்லோரும் சூழலின் நண்பர்களாகிவிட்டார்கள். பசுமைக் கட்டடம், பசுமை 'மோல்' .என்று பலவற்றைக் கேட்டிருக்கின்றோம். இப்போக்கானது வெறும் ஒப்பனையானதா? அல்லது நாம் உண்மையிலேயே சூழற்பாதுகாப்பைத் தொடர்ந்தும் பேணுதல் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்திருக்கின்றோமா? அல்லது இவ்விடயத்துடன் எம்மை அடையாளப்படுத்துவதுடன் நின்று விடுகின்றோமா" குறிப்பாக உலகமயமாக்கல் என்னும் இன்றைய நிலையில் எல்லாமே இறுதியில் பணத்தில்தான் வந்து முடிகின்றன. ஆனால் எவ்வளவு கவனத்தை நாம் இவ்விடயங்களில் காண்பிக்கின்றோம்.