இன்று மாலை (ஜூன் 29, 2017) எழுத்தாளரும், புதிய சொல் ஆசிரியர் குழுவைச்சேர்ந்தவரும், இணையச் சுவடிகள் காப்பகத் தளமான 'நூலகம்' தளத்திட்டத்தின் பங்காளர்களிலொருவருமான அருண்மொழிவர்மனுடன் சுமார் இரு மணித்தியாலங்கள் வரையில் , பிரிம்லி மற்றும் லோரன்ஸ் வீதிச்சந்திப்பிலுள்ள 'டிம் கோர்ட்ட'னில் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மறைந்திருக்கும் ஈழத்தவர்களின் படைப்புகளையெல்லாம் இணையத்தில் ஆவணப்படுத்தி வரும் 'நூலகம்' தளம் பற்றி, நூல் வெளியீடுகள் பற்றி, அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அனைவருக்கும் பொதுவாக நூல்கள், ஓலைச்சுவடிகள், கலை, இலக்கிய ஆளுமைகளின் இறுதிக்காலக் கையெழுத்துக் குறிப்புகள், ஆக்கங்கள் போன்றவையெல்லாம் ஆவணப்படுத்தும் பணியினைச் செய்துவரும் இணையச் சுவடிகள் அமைப்பான 'நூலகம்' தளத்தின் முக்கியத்துவம் பற்றி இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றி உரையாடல் தொட்டுச் சென்றது.
நூலகம் தளத்தின் சுவடிகளை ஆவணப்படுத்தும் திட்டம் பற்றி, அதனை எவ்விதம் செய்வது பற்றி, இதற்காக இலங்கையில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளைப்பற்றி இவர் இச்சந்திப்பின்போது எடுத்துரைத்தார். நூலகம் தளத்தின் முக்கியமான ஆவணப்படுத்தல் செயற்பாடுகளில் இவ்வோலைச்சுவடிகளை ஆவணப்படுத்தலும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க செயற்பாடு.
இணையத்தள ஆவணப்படுத்தல்
உரையாடலில் இவர் குறிப்பிட்ட மேலுமொரு விடயமும் என் கவனத்தை மிகவும் ஈர்த்தது. அது இணையத்தளங்களை ஆவணப்படுத்தல் பற்றியது. இவ்விதமான இணையத்தள ஆவணமாக்கல் தனிப்பட்டரீதியில் இணைய இதழ்களை, கலை, இலக்கியத்தளங்களையெல்லாம் நடாத்தி வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைவதோடு, ஆவணப்படுத்தலைப் புரிந்து வரும் 'நூலகம்' போன்ற ஆவணப்படுத்தும் அமைப்புகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும். தனிப்பட்டவர்களால் அல்லது அமைப்புகளால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் ஏதோ ஒரு காரணத்தால் செயற்படுதலை நிறுத்தி விட்டபோதும் கூட, அவற்றைப்பற்றி எதிர்காலத்திலும் அறிந்து கொள்ள மற்றும் அவற்றின் ஆக்கங்களை வாசிக்க இவ்விதமான இணையத்தள ஆவணப்படுத்தல் மிகவும் உதவிகரமாக அமையும் என்பதால் நல்லதொரு , வரவேற்கத்தக்க முயற்சி இது. இத்திட்டம் விரைவில் வெற்றியடைய வாழ்த்துகின்றேன்.
இச்சந்திப்பின்போது இவர் கொண்டு வந்திருந்த 'புதிய சொல்' சஞ்சிகையின் இதழ் 4 மற்றும் இதழ் 5 ஆகியவற்றை வாங்கினேன். மேலோட்டமாகப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்ததில் ஈழத்திலிருந்து செயற்படும் பல புதியவர்களின் பல் வகை ஆக்கங்களைக் காண முடிந்தது. சஞ்சிகையின் காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தும் படைப்புகளை அவர்கள் எழுதியிருப்பதையும் காண முடிந்தது. சஞ்சிகைகளை முழுமையாக வாசித்ததும் என் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.
பயனுள்ள கலை, இலக்கியச் சந்திப்புகளிலொன்றாக அமைந்த சந்திப்புகளிலொன்றாக அமைந்து விட்ட, நிறைவான சந்திப்பு இந்தச்சந்திப்பு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.