யூலை 9, 2017 அன்று 'டொராண்டோ'வில் பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brect) எழுதிய புகழ் பெற்ற நாடகங்களிலொன்றான The Exception and The Rule என்னும் நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான 'யுகதர்மம்' நூலின் வெளியீடு நடைபெறவுள்ளது. அன்று மாலை 3800 Kingston Road , Toronto என்னும் முகவரியில் அமைந்துள்ள Scarborough Village Community Centre மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்காகத் திரு. பாலேந்திரா அவர்கள் தற்போது 'டொரோண்டோ' வருகை தந்திருக்கின்றார். அவரது நூல் வெளியீடு வெற்றியடைய வாழ்த்துகள். பாலேந்திராவின் வருகை அவர் பற்றிய சிந்தனைகளை ஏற்படுத்திவிட்டது. அது பற்றிய நினைவுப்பதிவே இது.
உலகத்தமிழர்கள் கலை, இலக்கிய வரலாற்றில் , நாடகக் கலையைப்பொறுத்தவரை க.பாலேந்திராவுக்கு முக்கியமானதோரிடமுண்டு. இலங்கையிலும் , புகலிடத்தமிழச்சூழலிலும் அவரது குழுவினரின் அவைக்காற்றுக்கழகத்தின் பங்களிப்பு முக்கியமானது. இத்தருணத்தில் அவரைப்பற்றிச் சிறிது என் சிந்தனையினையோட்டுகின்றேன்.
நான் அவரை முதன் முதலில் சந்தித்தது மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில்தான். அப்பொழுதுதான் நான் அங்கு கட்டடக்கலைப்பிரிவுக்குத் தெரிவாகியிருந்தேன். அவர் பொறியியற் கல்வி கற்று, பொறியியலாளராக வெளியேறியிருந்தார். இருந்தாலும் அவர் அடிக்கடி பல்கலைக்கழகத்துக்கு வருவார். பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்துக்காக அவரது நாடகங்கள் பல அக்காலகட்டத்தில் மேடையேறின. நான் நாடகங்களை இரசிப்பவனாகவிருந்தேன். நடிப்பவனாக இல்லாத காரணத்தால் அச்சமயத்தில் அவருடன் நெருங்கிப்பழக முடியவில்லை. ஆயினும் காணும் தருணங்களில் எப்பொழுதும் அவருக்கேயுரிய , இதழ்க்கோடியில் மலரும், அனைவரையும் ஈர்க்கும் புன்னகையுடன்தான் தோன்றுவார். எனக்கு அவரைப்பற்றி நினைத்தவுடன் முதலில் தோன்றுவது அந்தப்புன்னகை தவழும் முகமும், அதனைத்தொடர்ந்து அவர் இயக்கி , ஈழத்தமிழ் நாடக உலக்குக்கு அறிமுகப்படுத்திய நவீன நாடகங்களும்தாம்.
எனக்கு முதன் முதலில் டென்னஸி வில்லியம்ஸ், பெர்டோல்ட் பிரெக்ட், பாதல் சார்க்கர் ஆகியோரை மட்டுமல்ல இந்திரா பார்த்தசாரதியை நாடகாசிரியராகவும் அறிமுகப்படுத்தியவை பாலேந்திராவின் இயக்கத்தில் மொறட்டுவப்பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்துக்காக நடாத்தப்பட்ட நாடகங்களெ.
இந்தவகையில் இதுவரையில் நான் பார்த்த நவீன நாடகங்களில் எனக்கு மிகவும் பிடித்தவையாக டென்னைஸி வில்லியமஸின் (Tennessee" Williams) 'கண்ணாடி வார்ப்புகள்' (The Glass Menagerie) நாடகத்தையும், பிரெக்டியின் 'யுகதர்மம்' (The Exception and The Rule என்னும் Bertolt Brect எழுதிய நாடகம்; தமிழாக்கியவர்கள் நிர்மலா நித்தியானந்தன் மற்றும் ச.வாசுதேவன் ஆகியோரே.) நாடகத்தையும் கூறுவேன். நடிகர்களையும், வசனங்களையுமே நாடகமென்று இரசித்துக்கொண்டிருந்த எனக்கு நாடக அரங்கில் கையாளப்பட்ட மொழி, அரங்க ஒலி, ஒளி, நடிகர்களின் கடும் பயிற்சிக்குள்ளாக்கப்பட்ட உடல் அசைவுகள், நிதானம் மிக்க செதுக்கப்பட்ட மொழியுடன் கூடிய உச்சரிப்புகள், இவற்றுடன் பல்வேறு வகைகளில் அமைந்த நாடக வடிவங்கள் எனப்பலவற்றை முதன் முதலில் அறிமுகம் செய்தவை பாலேந்திராவின் இயக்கத்திலுருவான நாடகங்களே.
டென்னஸி வில்லியம்ஸின் 'கண்ணாடி வார்ப்புகள்', பிரெக்டின் 'யுகதர்மம்' ஆகிய நாடகங்கள் மேனாட்டில் எழுதப்பட்டாலும், அவற்றில் வரும் பாத்திரங்களும், இருப்பை அவர்கள் எதிர்நோக்கும் போக்குகளும் , அப்பாத்திரங்களை உலகில் எப்பகுதியில் வாழும் மக்களுடனும் ஒன்றிணைக்கச்செய்யும் வல்லமை மிக்கவை. அதனால்தான் அவை உலகப்புகழ்பெற்ற படைப்புகளாக, உலக இலக்கியத்தில் வைத்தெண்ணப்படும் படைப்புகளாக விளங்குகின்றன.
தாயொருத்தி, அவளது இரு குழந்தைகள் (மகன், மகள்) மற்றும் விருந்தாளியொருவர் ஆகிய நான்கு பாத்திரங்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட 'கண்ணாடி வார்ப்புகள்' நாடகத்தின் கதை , அந்தத்தாயின் மகன் கூறுவதாக அமைந்துள்ளது. மகனாக பாலேந்திரா நடித்திருப்பார். மகளாக ஆனந்தராணி பாலேந்திரா, தாயாக நிர்மலா நித்தியானந்தன் ஆகியோர் மிகவும் சிறப்பாக, பாத்திரங்களின் குணவியல்புகளை உணர்ந்து , அவற்றுக்கேற்ப நடித்திருப்பார்கள். இன்றும் என் மனக்கண்ணில் அன்று பார்த்த கண்ணாடி வார்ப்புகள் நாடகக் காட்சிகள் பசுமையாகத் தோன்றுகின்றன. அந்நாடகத்தில் வரும் தாயின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள், கனவுகளையெல்லாம் வெளிப்படுத்தும் நிர்மலா நித்தியானந்தனின் நடிப்பு , வேலையிடச்சச்சரவுகள், குடும்ப முரண்பாடுகள் ஆகியவை காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய மகனின் நனவிடை தோய்தலாகவே இந்நாடகம் பின்னப்பட்டுள்ளது. இவ்விதமானதொரு சூழலில் வாழும் மிகவும் மென்மையான குழந்தை உள்ளம் கொண்ட மகளின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆனந்தராணியின் நடிப்பும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. தாயின், மகனின், மகளின் உணர்வுகள், கனவுகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் எம்மையும் , அவற்றை நாம் வாழும் சூழலில் வாழும் மாந்தர்களுடன் ஒன்றிணைத்து உணர வைக்கின்றது. அதுவே நாடகத்தின் பெரு வெற்றிக்குக் காரணம. இவையெல்லாம் உலகமெங்கும் வாழும் மானுடர்களின் (அவர்கள் எத்தகைய சமுதாய அமைப்புகளில் வாழ்ந்தாலும்) உணர்வுகளைப்பிரதிபலிப்பவை.
டென்னிஸி வில்லியம்ஸ் தன் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தன் உணர்வுகளை வெளிப்படுத்தி எழுதிய நாடகம் 'கண்ணாடி வார்ப்புகள்' என்பர் திறனாய்வாளர்கள். அதில் உண்மை இல்லாமலுமில்லை. முப்பதுகளில் அமெரிக்காவில் நிலவிய பொருளாதார மந்த நிலையின் பாதிப்புக்குள்ளாகிய சூழலில் வாழ்ந்தவர் டென்னஸி வில்லியம்ஸ். தந்தையால் கைவிடப்பட்ட குடும்பம்; தாயுடனும், சகோதரியுடனும் வாழ்ந்த மகனாக, தொழிலாளியாக வேலை பார்த்தவர் நாடகாசிரியர் டென்னஸி வில்லியம்ஸ். அவர் தான் அனுபவித்த உணர்வுகளை, அனுபவங்களை வைத்துப் படைத்ததால்தான் , அவரது நெஞ்சின் ஆழத்தேயிருந்து பீறிட்டெழுந்த உணர்வுகளின் விளைவாக இருப்பதால்தான் அப்படைப்பு அனைவரது இதயங்களையும் தொட்டு, அசைக்கின்றது.
எனக்கு மிகவும் பிடித்த அடுத்த நாடகமான பெர்டோல்ட் பிரெக்டின் புகழ்பெற்ற நாடகங்களிலொன்றான 'யுகதர்மம்' நாடகம் முதலில் மேடையேற்றப்பட்டபோது எம்முடன் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்த மாணவர்களும் அதில் நடித்திருந்தனர். முதன் முதலாக பிரெக்டை அறிமுகப்படுத்திய நாடகம் அது. மார்க்சியவாதியான பிரெக்ட் , சமூக மாற்றத்துகாக, சமூகத்தின் அடித்தள மக்களும் மிகவும் இலகுவாக விளங்கிக்கொள்ளும் வகையில் ஒரு பாணியைத் தம் நாடகங்ளில் பாவித்தார். அதனைக் காவியப்பாணி வகையென்பர். அந்தப்பாணியை அவர் ஜெர்மனிய சமுதாயத்திலிருந்த பாரம்பரியக் கலைகள் போன்றவற்றிலிருந்து மட்டும் எடுத்துக்கொண்டு வடிவமைக்கவில்லை. சார்ளி சாப்ளின் போன்ற நடிகர்களின் நடிப்பிலிருந்தும் எடுத்து வடிவமைத்தார். ஆனால் நான் விளங்கிக்கொண்டவரையில் எதற்காகச் சார்ளி சாப்ளின் போன்றவர்களின் நடிப்பும் அவரது நாடகப்பாணிக்குத் தூண்டுதலாக இருந்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் அவ்வகையான உடல் அசைவுகளுடன் கூடிய நடிப்பு மிகவும் எளிதாக சார்ளி சாப்ளின் கூற வந்த விடயத்தை மிகவும் சாதாரண அடித்தள மக்களுக்கும் புரிய வைத்தது. அதுதான் பிரெக்டுக்குத் தேவையாகவிருந்தது. சமூக மாற்றத்துகான தனது நாடகங்கள் மக்களுக்குச் சமுதாய அமைப்பு பற்றிய புரிதலை, அங்கு வாழும் பல்வகை மானுடர்களின் வாழ்வு பற்றிய புரிதலை ஏற்படுத்துபவையாக இருக்க வேண்டும். அதற்கு நாட்டுப்பாடல்கள், கருத்தைப்புரிய வைக்கும் உடல் அசைவுகளுடன் கூடிய நடிப்பு போன்றவை மிகவும் எளிதாக உதவின. அதனால்தான் பிரெக்ட் அவ்விதமானதொரு பாணியைக் கடைப்பிடித்தார் என்று கருதுகின்றேன். பிரெக்டின் காவியப்பாணி நாடக அமைப்பினை , தமிழ் நாடகத்திறனாய்வாளர்கள் தமிழர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களிலொன்றான கூத்து வடிவத்துடன் ஒப்பிடுவர். கூத்திலுள்ளதைப்போலவே பிரெக்டின் நாடகங்களிலும் நாடகம் கூறப்போகும் கதை ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்குத் தெரியும் வகையில் அமைந்திருக்கும்.
இச்சமயத்தில் பாலேந்திரா இயக்கிய இன்னுமொரு நாடகத்தையும் குறிப்பிட வேண்டும். அது புகழ்பெற்ற வங்க நாடக ஆசிரியரான பாதல் சார்க்காரின் 'முகமில்லாத மனிதர்கள்' அந்த நாடகம் தான் எனக்கு வீதி நாடகங்களை முதலில் அறிமுகப்படுத்தியது. எந்த இடத்திலும், எங்கும் நடத்தைக்கூடிய வகையில் பாதல் சார்க்கர் நாடகங்களை அமைத்தார். அவரும் பிரெக்டைப்போன்ற ஒருவர். தனது படைப்புகள் அடித்தள மக்கள் மத்தியில் மிகவும் எளிதாக எடுத்துச்செல்லப்பட வேண்டும். சமுக மாற்றத்துக்கு இவ்விதம் எடுத்துச்செல்லப்படுவது முக்கியம் அதற்கு 'வீதி நாடக' அமைப்பு போன்ற அமைப்பு மிகவும் உதவுமென்று அவர் கருதினார். அவரது நாடகங்களில் வரும் பாத்திரங்களும் உலகின் மாந்தர்களைப் பிரதிநிதிப்படுத்தும் குறியீடுகளே.
இவ்விதமாக பாலேந்திரா பற்றிய சிந்தனைகளை , டொராண்டோவுக்குத் தனது 'யுகதர்மம்' நாடக நூலினை வெளியிட வந்திருக்கும் பாலேந்திராவின் விஜயம் ஏற்படுத்தி விட்டது. என்னைப்போன்று எத்தனை பேர்களுக்கு பாலேந்திராவின் நாடகங்கள் நவீன நாடகம் பற்றிய புரிதல்களை ஏற்படுத்தி விட்டிருக்கும்? அதுதான் பாலேந்திராவின் வெற்றி. மேலும் அவர் இயக்கிய, தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட பல மேனாட்டு நாடகங்கள் தமிழ் நாடக உலகை வளப்படுத்தின. நவீன மயப்படுத்தின. பலரை இவ்வகையான நாடகங்களைத் தமிழில் எழுதி, இயக்கி , மேடையேற்றத்தூண்டியுள்ளன. அவரது நாடகக்கலை மீதான விருப்பும், அது பற்றிய நவீன சிந்தனையினைப் பார்வையாளர் மத்தியில் ஏற்படுத்துவதற்காக அவர் தேர்வு செய்த நாடகங்களும், அர்ப்பணிப்புடன் கூடிய விடா முயற்சியும் தமிழர்தம் நாடக உலகில் அவரைப்பிரிக்க முடியாத ஆளுமைகளிலொருவராக நிறுத்தி விட்டன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.