அண்மையில் டொராண்டோவில் தேடகம் ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் பற்றிய நூல் வெளியீட்டில் அரசியற் செயற்பாட்டாளர் திரு.ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ட்டர்) ஆற்றிய உரை பற்றிய எனது சிந்தனைத்தெறிப்புகள் இவை. அவரது முழுமையான உரையினைக்கீழுள்ள காணொளியில் கேட்கலாம்.
எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இவரை எனக்குத்தெரியும். ஆனால் புலம் பெயர்ந்து குடி புகுந்த நாடான கனடாவில்தான் இவரது முழுமையான ஆளுமையினை என்னால் , கடந்த பல வருடங்களாக இவரை , இவரது செயற்பாடுகளை அவதானித்ததன் மூலம் அறிய முடிந்தது. மிகுந்த தேடல் மிக்க இவரது சிந்தனையும், செயற்பாடும் எப்பொழுதும் உலகின் பல பாகங்களிலும் வாழும் மக்களின் மானுட உரிமைகளுக்காகத் தான் கற்று, உணர்ந்து, சிந்தித்துத் தெளிவடைந்த சமூக, அரசியல் தத்துவ நோக்கில் குரல் கொடுப்பதும், எழுதுவதும்தாம். இவ்வளவு வருடங்களாக அந்த விடயத்தில் இவர் மிகவும் தெளிவாகவே இருக்கின்றார். இவரது தான் நம்பும் சித்தாந்தம் பற்றிய தெளிவும், அதன் மீதான தொடர்ச்சியான இவரது தேடலும், புரிதலும், தெளிதலும் இவரது அத்தத்துவம் பற்றிய புரிதலைப் பண்படுத்துகின்றன. எனவே இவருடன் தர்க்கிப்பது மிகவும் இன்பமளிக்கக்கூடிய, பயன்மிக்க, ஆரோக்கியமானதொரு விடயமாக நான் உணர்வதுண்டு. ஆனால் அதிகம் பல்வேறு விடயங்களைப்பற்றித் தர்க்கிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை. இனிமேல் அவ்விதமான வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதை இவரது இக்காணொளியிலுள்ள உரை தூண்டுகின்றது.
இங்கு இவர் தமிழினியின் நூல் பற்றிய விமர்சனத்தை ஏனையவர்களிடமிருந்து வித்தியாசமானதொரு கோண்த்தில் நடாத்துகின்றார். தமிழினியின் நூல் பற்றிய முக்கியமான கருத்துகள் பற்றி ஆரம்பத்திலும், இடையில் அவ்வப்போதும் கூறி விடுகின்றார். தமிழினியின் நூலைப் பல்வேறு சக்திகளும் பல்வேறு வழிகளில் தமக்குச் சார்பாகப் பாவிக்கும். தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள சில விடயங்களில் தனக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவ்விதம் கூறுவதற்குத் தமிழினிக்குள்ள உரிமையினை மறுக்க முடியாது. இவ்விதமாகத் தமிழினியின் நூல் பற்றிய கருத்துகளைக் கூறும் ஜான் மாஸ்ட்டர் அதன் பின் தான் நம்பும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் நூலைப்பற்றி ஆராய்கின்றார். அந்த ஆய்வினைச் செவிமடுக்கும் ஒருவருக்கு இதென்ன இவர் தமிழினியின் நூலைப்பற்றி விமர்சிப்பதாகக் கூறி விட்டு., தனது அரசியல் கருத்துகளையெல்லாம் மடை திறந்த வெள்ளமென அள்ளி விடுகின்றாரே என்றொரு எண்ணம் தோன்றக்கூடும். ஆனால் சிறிது கூர்ந்து பார்த்தால் அவர் தமிழினியின் நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களைத்தாம் தான் புரிந்த ஏற்றுக்கொண்ட அரசியற் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்கின்றார் என்பது புரிய வரும்.
தமிழினி நூலில் ஒரு தலைமையின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள அமைப்பினை, அமைப்பின் அரசியலினையெல்லாம் கேள்விக்குட்படுத்தியிருப்பார். அந்த விடயங்களைத்தாம் ஜான் மாஸ்ட்டர் முற்போக்குத் தேசியத்தத்துவம் என்னும் அடிப்படையில் ஆராய்கின்றார் தனதுரையில்.
முற்போக்குத் தேசியம் (Progressive Nationalism) என்பதன் பண்புகள் எவை என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.
1. முற்போக்குத் தேசியமானது ஏகாதிபத்திய எதிர்ப்பினைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
2. அந்நிய ஆதிக்க சக்திகளின் (சீனா இந்தியா போன்ற) நலன்களுக்குச் சேவை செய்வதாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
3. சமூக முரண்பாடுகள் விடயத்தில் போதிய தெளிவு இருக்கும் அதே சமயத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்குச் சார்பாகவும் அது விளங்க வேண்டும்.
4. ஏனைய தேசியங்களுக்கு ஈடான சம உரிமையை வேண்டும் அதே நேரம் ஏனைய தேசியங்களை அடக்குவதை, வெறுப்பதை மையமாகக்கொண்டு செயற்படக்கூடாது.
5. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் விடயத்தில் பல்வேறு வகையான தப்பெண்ணங்கள், ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். இவற்றைக்கடந்து செயற்படும் வகையில் தெளிவு கொண்டிருக்க வேண்டும்.
6. முற்போக்குத் தேசியத்துக்குரிய உயர்ந்த மானுட விழுமியங்களைப் போராட்டத்தினூடு உருவாக்க வேண்டும். அதாவது விரிவான கருத்துப்பரிமாறல்களை அனுமதிக்க வேண்டும். ஜனநாயகம் நிலவ வேண்டும். வன்முறை மற்றும் சித்திரவதைகளை நியாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது.
இவ்விதமான முற்போக்குத்தேசியவாதத்தின் பண்புகளின் அடிப்படையில் நூலில் கூறபட்டுள்ள முக்கியமான குற்றச்சாட்டுகளை (தலைமை, அரசியல் போன்ற) , நூலைபற்றிக் குறிப்பிடாமலே ஜான் மாஸ்ட்டர் அணுகும் முறை வித்தியாசமானது. ஆனால் மிகவும் காத்திரமானது.
தனதுரையில் இவர் குறிப்பிட்ட இன்னுமொரு விடயமும் என் கவனத்தைக் கவர்ந்தது. அது: எதிரி எமது விமர்சனங்களைப்பயன்படுத்தக் கூடுமென்பதற்காக விமர்சிக்காமல் இருப்பதா என்பது பற்றியதுதான் அது. அதற்காக அவர் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லெனின் இவ்விடயம் பற்றிக் கூறிய கருத்தின் அடிப்படையில் தன் கருத்தின எடுத்துரைப்பார். விமர்சிப்பதை எதிரி பாவிப்பதால் வரும் குறுகிய காலத் தீங்கினை விட, விமர்சிப்பதால் ஒடுக்கப்படும் சமூகத்துக்கு ஏற்படும் நீண்ட கால நன்மை அதிகமானது. எனவே விமர்சிக்கப்பட வேண்டியவை விமர்சிக்கபட வேண்டும். தமிழினியின் நூலின் தேவையும் அத்தகையதுதான் என்பது இவர் நிலைப்பாடு.
அதே சமயம் இதுவரை எம் மத்தியில் கூறப்படும் தேசியம் என்பது எத்தகையது என்றொரு கேள்வி எழுகிறதல்லவா? அது முற்போக்குத் தேசியமா? அல்லது பிற்போக்குத் தேசியமா? இவரது கருத்துப்படி அது வலதுசாரித்தேசியவாதம்.
மேற்படி நூல் பற்றிய உரைகளை அழகாகப் பதிவு செய்த காணொளிகளை வெளியிட்ட வடலி அமைப்பாளருக்கு நன்றி. நிகழ்வினை ஏற்பாடு செய்த தமிழர் வகைதுறை வள நிலையத்தாருக்கும் நன்றி.
புகைப்படம் : நன்றி இ-குருவி