]- இன்று , நவம்பர் 13, 2016, டொராண்டோவில் தமிழர் வகைதுறைவள நிலைய ஆதரவில் நடைபெற்ற தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் வெளியீடு மற்றும் கலந்துரையாடலில் நான் ஆற்றிய உரையின் முழு வடிவம். - வ.ந.கி ]
தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.
தமிழினியின் சுய விமர்சனம் பற்றிக்குறிப்பிடுகையில் தேசம் ஜெயபாலன் 'இது கூர்வாளல்ல. மொட்டை வாள்' என்று குறிப்பிட்டிருப்பார். அண்மையில் தமிழினியின் கணவர்ஜெயக்குமரனுடனான நேர்காணலொன்றில்தான் இவ்விதம் குறிப்பிட்டிருக்கின்றார். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரமாக இல்லாதிருப்பதுபோல் தென்பட்டாலும், சிறிது ஊன்றிக்கவனித்தால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் அவை என்பது தெரியவரும். ஆனால் அவர் முட்டி மோதிக்கொண்டு மோதும் விமர்சனத்தை இங்கு வைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. அதனால் ஜெயபாலன் அவ்விதம் நினைத்திருக்கக்கூடும். ஆனால் தமிழினி விமர்சனத்தை முன் வைக்கும்போது கோட்பாட்டு ரீதியில் முன் வைக்கின்றார். விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பு பின்பற்றிய கொள்கைகள் அடிப்படையில் அவற்றை விமர்சிக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து, சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு என்று பல படிகளினூடு சென்று மீண்டும் சமூகத்திற்குள் வருகின்றார். அவ்விதம் வந்தவரைச் சமூகம் எதிர்கொண்ட முறை அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில் அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் முன்னாள் பெண் போராளியொருவருக்கு மனம் திறந்த நிலையில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்குப் பூரண உரிமையுண்டு. அவரது கருத்துகளை ஏற்கலாம். ஏற்காமல் இருக்கலாம். ஆனால் அவருக்கு அவர் தான் நினைத்தவாறு கருத்துகள் கூற உரிமையுள்ளது என்பதை ஏற்கவேண்டும்.
இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.
சுருக்கமாகக் கூறுவதானால் இந்நூலைப் பலவேறு கோணங்களில் வாசகர் ஒருவர் அணுகலாம்.
1. ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியற் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விபரிப்பதால் இந்நூல் அப்போராளியின் வாக்குமூலமாக முக்கியத்துவம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத்தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, ,,இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை நூல் விபரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். ஒரு கட்டத்தில் அவர் இவ்விதம் நினைக்கின்றார்:
"ஆண், பெண் வேறுபாடில்லாமல் தினசரி நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தமதுயிரைக் கொடுத்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் வெறும் பார்வையாளராக இருப்பது எனது மனதில் பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்தும் படிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென நான் நினைக்கவில்லை.... ஒரு குடும்பத்தில் ஒருவராவது போராடச்சென்றால்தான் அடுத்த சகோதரர்களாவது நிம்மதியாக வாழ முடியும் என நம்பத் தொடங்கினேன்." (பக்கம் 31)
இவ்விதமாக மாணவியொருத்தி எவ்விதம் ஆயுதம் தாங்கிய பெண் போராளியாகப் பரிணாமம் அடைகின்றார் என்பதை விளக்குமொரு வாக்குமூலமாக இந்நூலினைக் குறிப்பிடலாம்.
2. தமிழினி என்னும் தமிழீழ விடுதலைப்புலி அமைப்பைச்சேர்ந்த போராளியொருவரின் சுயசரிதை என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நூலில் தமிழினி தன் குடும்பம், பள்ளி வாழ்க்கை, தான் பிறந்த நகரம் எவ்விதம் போர்ச்சூழல் மிக்க நகராக மாறுகின்றது என்பது பற்றிய விபரங்கள், தன் இயக்க வாழ்க்கை, இயக்கத்தில் தனது அரசியல் மற்றும் ஆயுதப்போராளியாக செயற்பட்டமை பற்றிய விபரங்கள், வெற்றிகரமான விடுதலைப்புலிகளின் போர்களில் ஈடுபட்ட தனது வரலாறு, யுத்தத்தின் இறுதிக்காலத்தில் இயக்கத்தின் நிலை, மக்களின் நிலை, தனது அனுபவங்கள் எனப் பல்விதமான அனுபவங்கள், யுத்தத்தின் பின்னரான தடுப்பு முகாம், மற்றும் புனர்வாழ்வு முகாம் ஆகியவற்றில் அவரது அனுபவங்கள் என தன் வாழ்வின் முக்கிய விடயங்கள் அனைத்தையும் விபரித்திருக்கின்றார். அதிக பக்கங்களை உடைய பெரிய நூல் என்றில்லாவிட்டாலும், அத்தியாயம் ஒவ்வொன்றுமே விரிவான தகவல்களை உள்ளடக்கியுள்ளன. அவசரப்பட்டுச் சுருக்கமாக விடயங்கள் விபரிக்கப்படவில்லை. அந்த வகையில் கட்டுக்கோப்பானதொரு சுயசரிதையாக இந்நூல் விளங்குகின்றது. அந்த வகையிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
3. விடுதலைப்புலிகளின் முக்கிமான உறுப்பினராக இருந்தவர் தமிழினி. அந்த வகையில் அவர் தன் இயக்க அனுபவங்களை விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றார். அது முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவே இந்நூலின் முக்கியமான சிறப்புக்குக் காரணம். இவ்வளவு விரிவாக விடுதலைப்புலி அமைப்பைச்சேர்ந்த முக்கியமான தலைவர்கள் வேறு யாரும் தம் இயக்கத்தைப்பற்றிச் சுய விமர்சனம் செய்ததில்லை. பலர் எழுதியிருக்கின்றார்கள். அவையெல்லாம் இயக்கத்தின் வீரவரலாற்றைக்கூறும் பிரச்சாரங்கள். அல்லது சுய விமர்சனம் தவிர்ந்த இயக்கத்தின் வெற்றியை மட்டுமே முன்னிலைப்படுத்தும் படைப்புகள்.
இந்நூலில் புலிகள் அமைப்பு பற்றித் தமிழினி வைத்துள்ள சுய விமர்சனத்தில் முக்கியமானவையாக நான் கருதுவது:
A அமைப்பு முழுவதும் தலைமையை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்டுள்ளதை அவர் கேள்விக்குட்படுத்துகின்றார். ஆரம்பத்தில் ஏனைய இயக்கப் போராளிகளைப்போல் அவரும் ஒரு தலைமை என்னும் அடிப்படையில்தான் இயங்குகின்றார். ஆனால் அதுவே பின்னர் பேரழிவுகளுக்குக் காரணமாக விளங்கும்போது அவரால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அரசியற்துறைச்செயலாளராக விளங்கிய தமிழ்ச்செல்வன் இறுதி வரையில் தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார் என்னும் நம்பிக்கையுடன் இருந்ததை தமிழினி நினைவு கூர்கின்றார். பொட்டம்மான் கூட இறுதி யுத்தக்காலத்தில் கூடத் தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார் என்றுதான் போராளிகளுக்குக் கூறுகின்றார்.
எல்லாம் தலைவரே என்பது பற்றிக்குறிப்பிடுகையில் 'எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாக பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும், மக்களும் தலைவரைப் பார்த்தோம்...... தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்குள்ளாகும் போதும், அவர் மக்களின் நலனுக்காகவும் , நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுக்கிறார் எனவும், தலைவர் ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம்.. தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வக்குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது. இந்தப்போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது. எல்லாம் அவர்தான் எனக்கொண்டாடியது மட்டுமில்லாமல் இறுதித்தோல்விக்கும் அவரே காரணம் என்ற குற்றத்தையும் வரலாறு அவர் மீது சுமத்தி நிற்க வேண்டியதாயிற்று..' (பக்கம் 164)
இது பற்றி இன்னுமோரிடத்தில் 'எத்தனையோ இலட்சம் பேருடைய இரத்தமும் கண்ணீரும் இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சியிருக்கிறது. அப்படியிருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கமும், தமிழ் மக்களுக்கான ஆயுதப்போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கேற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இன அழிவை ஏற்படுத்தியிருந்தது' (பக்கம் 206) என்று கடுமையாகச் சாடியிருப்பார்.
இவ்விதமான அவரது சாடல்களெல்லாம் தனிப்பட்ட மனிதர் மீதான சாடல்களல்ல. தான் சார்ந்த அமைப்பு மீதான, அதன் கட்டமைப்பு மீதான சாடல்களே.
இயக்கத்தின் உச்சக்கட்ட காலகட்டத்தில் 'இயக்கத்தின் நடவடிக்கைகளிலும், தீர்மானங்களிலும் இருந்த சரி பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்துக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்துக்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது. 'மேலும் கள முனையில் நாளாந்தம் எந்தக் கேள்விகளும் கேட்காது எமது சக போராளிகள் தமதுயிரை அர்ப்பணித்துக்கொண்டிருந்தார்கள். அந்தத்தியாகங்களுக்கு முன்னால் வேறு எதுவுமே எழுந்து நிற்க முடியாதிருந்தது. வீரமரணம் அடையும் வரை விடுதலை இயக்கத்தின் விசுவாசமிக்க போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்ப்தைத்தவிர எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை' (பக்கம் 53 & 54) என்று தமிழினி கூறுவது அக்காலகட்ட யதார்த்த நிலையினை வெளிப்படுத்தும்.
B முகாம் செயற்பாடுகளை அவர் கேள்விக்குட்படுத்துகின்றார். இயக்கம் பற்றிய சுய விமர்சனங்களில் ஒன்று சில பயிற்சி முகாம்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் பற்றிக்குறிப்பிட்டிருக்கின்றார். இவரது நெருங்கிய தோழியான சாம்பவி தனது பயிற்சி முகாம் அனுபவங்களைக் கூறியிருக்கின்றார். அதுபற்றிக்குறிப்பிடும் தமிழினி
"குறுகிய மனப்பாங்கும் , வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும், அதிகாரமும் போய்ச்சேரும்போது எத்தகைய அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப்பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்துக்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிற்சி பெறுவோர் நடத்தப்பட்டிருந்தனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும் , தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத்தவறான முன்னுதாரணங்களாக இருந்தன" (பக்கம் 58 & 59)
ஆனால் எவ்வகையான சித்திரவதைகள் அவை எனத் தமிழினி நூலில் விரிவாக எடுத்துரைக்கவிலை.
C. முஸ்லீம் மக்களைக்கட்டாயமாக வெளியேற்றியது பற்றித் தமிழினி இவ்விதம் கூறுகின்றார்:
'மிகவும் சராசரியான வாழ்க்கைத்தரத்தைக்கொண்டிருந்த அந்த மக்களைச்சந்தித்தபொழுது என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட எமது இயக்கம் இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்குமுறைக்குள்ளாக்கியதன் நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக்கொள்ல முடியாமலிருந்தது.' (பக்கம் 66)
D. 1996இல் இராணுவத்தினர் வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டபோது இயக்கத்தின் கட்டளைக்கேற்ப அனைத்து மக்களும் வன்னி நோக்கி இடம்பெயர்ந்ததைப் பற்றிக் கூறும்போது 'சில மணி நேரத்திற்குள் ஏறக்குறைய ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலத்தைக் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும் புரிய வைக்க முடியாத மனித அவலம் என்றே கூறவேண்டும்.' என்று கூறியிருப்பார்.
E கிழக்கு மாகாணத்தளபதியான கருணா அம்மானின் பிரிவினைத்தொடர்ந்து இயக்கத்திற்குள் நடந்த சகோதர யுத்தத்தைப்பற்றிக்குறிப்பிடுகையில் தமிழினி 'கிழக்கு மாகாணப்போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் என்ற பெயரில் இயக்கத்திற்குள் அனைவரும் வெறுக்கத்தக்க ஒரு கொடூரமான சகோதர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. பல வருட காலமாக என்னுடன் பழகிய பல போராளிகள் இரு தரப்பிலும் உயிரிழந்து போயிருந்தனர்.' (பக்கம் 162) என்று கூறுவார்.
F. இயக்கத்தின் இன்னுமொரு விடயத்தையும் தமிழினி விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார் இந்நூலில். அது இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பு. 'இயக்கத்திற்கும் மக்களுக்குமிடையே அதிக முரண்பாடுகளை ஏற்படுத்திய இன்னொரு விடயம் இயக்கத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு' என்பார் அவர். (பக்கம் 166) சமாதானக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செயற்படுத்தப்பட்ட 'கட்டாய ஆட்சேர்ப்பு' போராளிகளுக்கிடையிலும் விமர்சனங்களை, முரண்பாடுகளை ஏற்படுத்தியதாகவும் தமிழினி குறிப்பிடுகின்றார் (பக்கம் 180). அத்துடன் 'தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத்தவறான முடிவுகளில் முக்கியமானது கட்டாய ஆட்சேர்ப்பு என்பது என் நிலைப்பாடு. இந்தக் காரியத்தில் சூழ்நிலைக் கைதிகளாகப் பல போராளிகளும் , பொறுப்பாளர்களும் மன விருப்பின்றியே செயற்பட்டுக்கொண்டிருந்தனர்' (பக்கம் 181)என்றும் தமிழினி கூறுவார். இந்த விடயத்தில் இவரது முரண்பட்ட நிலை காரணமாக அரசியல் துறை மகளிர் பொறுப்பாளராக இன்னொரு பெண் போராளி நியமிக்கப்பட்டதாகவும் தனது நூலில் தமிழினி குறிப்பிடுகின்றார்.
G. விடுதலைப்புலிகள் அமைப்பு அது பெற்ற வெற்றிகளின் காரணமாகத்தன்னை ஓர் அரச இயந்திரமாக விசாலித்துக்கொண்டது அதன் வளர்ச்சியைத் தடைசெய்ததாகவும் தமிழினி கருதுவதை நூலின் வாயிலாக அறிய முடிகின்றது. 'ஓர் அரச இயந்திரம்போல் தன்னை விசாலித்துக்கொண்டதனால் இயக்கத்தின் கூடுதலான மூளைப்பலம் நிர்வாகச்சிக்கலில் வீணே சிதறடிக்கப்பட்டது....... பல திறமையான போராளிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகச்சிக்கல்களில் தமது நேரத்தையும் திறமையையும் வீணடித்துக்கொண்டிருந்தனர்'(பக்கம் 182) என்று கூறுவது அதனையே புலப்படுத்துகின்றது.
H இராணுவரீதியில் சாதனைகளைப் படைத்த இயக்கத்தால் சமாதான காலகட்டத்தில் அரசியல்ரீதியில் வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை என்பதும் தமிழினியின் நிலைப்பாடு. அதுபற்றி அவர் 'யுத்தகளத்தில் பல வெற்றிகளைக் குவித்த தலைவர் சமாதானச் சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திர நுணுக்கங்களைத் துணிச்சலுடன் பயன்படுத்தித் தமிழர்களுக்கு உறுதியான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் நிலைய நோக்கி முன்னேற முடியாமல் திணறினார்' என்பார் (பக்கம் 168).
'ஆயிரமாயிரம் உயிர்களின் அர்ப்பணிப்பு வீண்போகாதபடி கனிந்து வந்த அரசியல் சூழ்நிலைகளைத் தலைவர் பயன்படுத்தி மக்களுக்கு ஒரு நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவார் என அனைத்துப்போராளிகளையும் போல் நானும் உறுதியாக நம்பினேன். இறுதிப் போருக்கான முடிவைத் தலைமை எடுத்தபோது , எனது சிறிதான அறிவுக்கெட்டிய வகையில் அது ஒரு சரியான முடிவாகப்படவேயில்லை.' (பக்கம் 218)
நூலின் முன்னுரையில் அவர் இவ்விதம் கூறுவார்: "போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள்ளே வாழ்ந்திருக்கிறேன். போராளிகளான நாங்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத்தவறி விட்டோம். கையிலெடுத்த ஆயுதங்களைக் பாதுகாத்துக்கொள்வதற்காக எமது அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்." (பக்கம் 7)
அதே நேரம் மக்களுக்கும் புலிகளின் போரியல் வெற்றிகளில் இருந்த நம்பிக்கை அவர்களது அரசியலில் இருக்கவில்லை என்பதும் தமிழினியின் நிலைப்பாடு. 'புலிகளின் போரியல் வெற்றிகளில் மக்களுக்கிருந்த பிரமிப்பான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தூர நோக்குடனான புலிகளின் அரசியல் செயற்பாடுகளில் எப்போதுமே இருந்ததில்லை. (பக்கம் 15)
I. நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றிய அவரது சுய விமர்சனமும் முக்கியமானது. பின்வரும் அவரது கூற்றுகள் நியாயமான கூற்றுகள்.
* :" எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், பெண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 73)
* "பெண்கள் ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது. குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப்பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப்போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். " ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 75 & 76)
* "பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை. பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 76)
* "பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று கருத்துகளை நான் கூறியிருக்கிறேன். ஆனாலும், ஆயுதப்போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களும்முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை." (('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 77)
* "அரசியல்துறை மகளிர் பிரிவினுடைய பணிகளாக சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பதும், இன்னும் பரந்துபட்ட ரீதியில் சமூக மாற்றத்துக்காக உழைப்பதும், என்பனவாகவே இருந்தன. இதன் அடிப்படையில்தான் அரசியல் மகளிர் பிரிவின் வேலைத்திட்ட அலகுகளும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் நடைமுறையில் சாத்தியமானது என்னவோ இயக்கத்திற்கு புதிய போராளிகளை இணைப்பதும், பெண்களுக்கென குறிப்பிட்ட சில வேலைகளை மாத்திரம் செய்ய முடிந்ததுமேயாகும். ஏனெனில் இயக்கத்தின் முழுக்கவனமும் , மொத்த வளங்களும் யுத்தத்தில் ஈட்டப்பட வேண்டிய வெற்றியை நோக்கியே திருப்பபட்டிருந்தன்" ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 77)
4. இந்த நூலில் பெண்கள் பற்றிய சமூகம் மீதான விமர்சனத்தையும் மிகவும் காத்திரமாக வைத்திருக்கின்றார். 'அந்த அர்ப்பணிப்பின் அனுகூலங்களை அனுபவிக்கச் சித்தமாயிருக்கும் சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வை கொச்சைப்படுத்தியே பார்க்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி, அரசியல் பிழைப்பு நடத்துகிறது. போராடத்தில் பங்குபற்றி, உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்து போய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவது எத்தனை மோசமான இழிசெயல்?'
5. இந்நூலின் இன்னுமொரு முக்கிய சிறப்பு இந்நூல் பல விடயங்களை ஆவணப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் அரசியல், போர்ச்செயற்பாடுகளை ஆவணப்படுத்தியிருக்கின்றது. புலிகளின் வன்னிப்போர்கள் பலவற்றை நூல் ஆவணப்படுத்தியிருக்கின்றது. குறிப்பாகப் பூநகரிச்சமரான தவளைப்பாய்ச்சல் பற்றி விரிவாகவே ஆவணப்படுத்தியிருக்கின்றார். முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக்காலத்து அனுபவங்களை நூல் ஆவணப்படுத்தியிருக்கின்றது. போரின் பின்னரான தடுப்பு முகாம் , வெலிக்கடைச்சிறை வாழ்வு மற்றும் பூந்தோட்டத்துப் புனர்வாழ்வு வாழ்க்கை ஆகியவற்றை நூல் ஆவணப்படுத்தியிருக்கின்றது.
நூலின் ஆரம்பத்தில் தமிழினி அமைப்பில் சேர்ந்தபொழுது , ஆயுதப்பயிற்சி எடுப்பதற்கு முன்னர் தான் ஆற்றிய அரசியல் பணிகளைப்பற்றி விரிவாகவே குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு விதத்தில் அவரது இயக்க அரசியல் பணிகள் என்னை ஆச்சரியத்திலாழ்த்தின என்றே கூறுவேன். பொதுவாகப்புலிகள் என்றால் ஆயுதப்பித்துப்பிடித்தவர்கள் என்றே மாற்றுக்கருத்துள்ள அனைவராலும் விமர்சிக்கப்படுபவர்கள். மக்களைப்பற்றி அவர்கள் எண்ணுவதில்லை என்றே விமர்சிக்கப்படுபவர்கள். ஆனால் இந்நூலில் தமிழினி குறிப்பிட்டுள்ள அரசியற் செயற்பாடுகள், அவரது அச்செயற்பாடுகள் பற்றிய சிந்தனைகள், விமர்சனங்கள் எல்லாம் புலிகளின் மக்களுடனான அரசியல் நடவடிக்கைகளை விபரிக்கின்றன.
நூலில் பூநகரி முகாம் மீதான 'தவளைப்பாய்ச்சல்' பற்றி விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் போராளிகள் சுமார் ஒரு வருடமாக எடுத்த பயிற்சி பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. பூநகரிச்சமர் பற்றி நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்:
"1993 இறுதிப் பகுதியில் அச்சுவேலிப்பகுதியில் வல்லை வெளியோடு சேர்ந்திருந்த கடல் நீரேரியில் ஒரு மாதிரி இராணுவ தளம் அமைக்கப்பட்டு எமது அணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அது எந்த இராணுவத்தளத்தின் மாதிரி வடிவம் என்பது அபோது தான் எங்களுக்குப் புரிந்தது. நான் முதன் முதலாகப் பங்கெடுத்த தாக்குதல் பூநகரி இராணுவ முகாம் மீதானதாகும்." (பக்கம் 55; இலங்கைப்பதிப்பு)
" இத்தாக்குதல் நடவடிக்கைக்காக விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வருடத்திற்கும் மேலான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.. வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக்கொண்ட தாக்குதலணிகள் இந்தச் சமரில் ஈடுபடுத்தப்பட்டன." (பக்கம் 56)
இந்தச் சமருக்குத் 'தவளைப்பாய்ச்சல்' என்று விடுதலைப்புலிகள் பெயர் வைத்திருக்கின்றார்கள். அவ்விதமான பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம் சுவாரசியமானது. அது பற்றித் தமிழினி பின்வருமாறு விபரிப்பார்:
"புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ- கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடாத்தப்பட்ட ஈரூடகத் தாக்குதல் இதுவாகும். இதனால் இந்நடவடிக்கைக்கு 'ஒப்பரேசன் தவளை' என இயக்கம் பெயர் சூட்டியிருந்தது." (பக்கம் 56)
தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட பெயர்தான் 'தவளைப்பாய்ச்சல்'.
மேற்படி சமரானது புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாளர் பொட்டு அம்மானின் மேற்பார்வையில் பயிற்சி கொடுக்கப்பட்டு நடாத்தப்பட்ட சமரென்று நூலில் தமிழினி விபரிப்பார்.
இந்தச்சமரில் ஈடுபட்ட போராளிகள் உணர்வுகளையும் தமிழினி பதிவு செய்திருக்கின்றார்.
"பல போராளிகள் தமது குடும்பத்தவர்களுக்கு தமது இறுதி மடல்களையும் எழுதிக்கொண்டிருந்தனர். எனது நெருங்கிய பல நண்பிகளும் இத்தாக்குதலில் பங்கு பங்கெடுத்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், உயிர் மீதான உத்தரவாதமின்மை, வெளிப்படுத்தமுடியாத விரக்தி என நிச்சயிக்கப்பட்ட யுத்தமொன்றில் பங்குபற்றும் போராளிகளின் இறுதிக்கணங்களில் அவர்களுடைய கண்களில் தேங்கியிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்த எவராலும் மீண்டுமொரு யுத்தத்தைப்பற்றி பேசவோ அல்லது நினைத்துப்பார்க்கவோ முடியாது." (பக்கம் 57)
இந்த யுத்தத்தில் பெரிய வெற்றிகளை இயக்கம் அடைகின்றது. இயக்க வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தினரின் 'யுத்த டாங்கி' ஒன்று கைப்பற்றப்படுகின்றது. இது பற்றியெல்லாம் விபரிக்கும் நூலில் தமிழினி இச்சமரில் இழந்த தனது தோழிகள் பற்றியும் விபரித்திருக்கின்றார். அவர்களது காதல் போன்ற அந்தரங்க உணர்வுகளை, நெஞ்சினைத்தொடும் வகையில் அவர்களது இழப்பை விபரித்திருப்பார். குறிப்பாக சாம்பவி பற்றிய அவரது விபரிப்பைக் கூறலாம்.
"வயல் வெளிகளுக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருந்ததால் வெள்ளம் தேங்கிக் கிடந்தது. தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச்சுடுபவனின் இலக்குத் தவறாத ரவைகள் அந்த வயல்வெளியில் பல போராளிகளின் உயிர்களைக்குடித்துக்கொண்டிருந்தன. சிறிதாகக் கூடத்தலையை நிமிர்த்திப்பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாம் தவழ்ந்து கொண்டிருந்தோம். எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து திடீரென 'ஹக்' என வினோதமான சத்தம் கேட்டது. திரும்பிப்பார்த்தேன். அவளது முகம் சேற்றுக்குள் புதைந்துபோய்க்கிடந்தது. நான் அவளது தலையை நிமிர்த்திப்பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது." (பக்கம் 59).
இச்சமரில் பலியாகிய இன்னுமொரு தோழியான தாமரை பற்றியும் நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.
"'நீ யாரை நினைப்பாய் தாமரை?' அவளின் வழமையான சோக விழிகள் ஒரு தடவை மின்னியது. காய்ந்து போயிருந்த உதடுகளில் மெல்லிய புன்னகை நெளிந்தது. 'நான் விரும்பியிருந்தவரைத்தான் நினைப்பேன்.' அவள் சொன்ன பெயர் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அவளுக்குள் ஆழப்புதைந்து கிடந்த காதலின் இரகசியக் காயத்தை அப்போதுதான் எனக்குத் திறந்து காட்டியிருந்தாள். ஏதோ ஒரு யுத்தத்தில் அவளுடைய போராளிக்காதலன் ஏற்கனவே உயிரிழந்திருந்தான்."
இவ்விதமாகப் போராளிகளின் உணர்வுகளைத் தமிழினி இந்நூலில் பதிவு செய்திருக்கின்றார். இவ்விதமான விபரிப்பு, போரொன்றில் நேரடியாகப்பங்குபற்றிய அவரது அனுபவத்தைச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கின்றதென்பேன்.
5. மிகவும் புகழ்பெற்ற ஆன்ஃப்ராங்கின் நாட்குறிப்பு என்னும் நூல் யூதச்சிறுமியொருத்தியின் இரண்டாம் உலக மகாயுத்தக்காலத்து அனுபவங்களை விபரிக்கும் சிறப்பு மிக்க ஆவணம் என்பதுடன் அந்நாட் குறிப்பில் அவர் பாவித்துள்ள எழுத்திச்சிறப்பு இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்குவாதல் உலக இலக்கியங்களிலொன்றாக அது கருதப்படுகின்றது. அந்நூலில் அவர் தன் உணர்வுகளை அந்நாட்குறிப்பினைத்தோழியாக்கி அதனுடன் விபரித்திருப்பார். அதுவே அந்நாட்குறிப்பினை இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்குவதற்காக முக்கிய காரணம். அது போன்றே தமிழினியின் இந்நூலும் வெறும் விபரங்களை மட்டுமே தருமொரு நூலல்ல. அவர் தன் உணர்வுகளை தன் வாழ்வின் சம்பவங்களை விபரிக்கையில் வெளிப்படுத்தியிருப்பார். அவரது எழுத்துச்சிறப்பு, சில இடங்களில் வெளிப்படும் கவித்துவமான மொழிச்சிறப்பு ஆகியன காரணமாக இந்நூலானது இலக்கியச்சிறப்பு மிக்கதொரு பிரதியாகவும் விளங்குகின்றது. கவித்துவமான மொழிச்சிறப்பு என்று நான் கூறுவதற்கு முக்கிய காரணம் அவர் பாவித்துள்ள படிமச்சிறப்பு, இயற்கை பற்றிய விபரிப்பு போன்றவைதாம்.
6. இந்நூலின் முக்கியமான இன்னுமொரு சிறப்பாக நான் கருதுவது அவரது எழுத்தில் விரவிக்கிடக்கும் மானுட நேயம்.
பிரச்சாரமற்ற, அனுபவத்தின் வெளிப்பாடாக, மானுட நேயம் மிக்கதாக விளங்கிய அவரது எழுத்து என்னைக் கவர்ந்தது. போர்க்களக்காட்சிகளை அவர் விபரித்திருந்த விதம் நெஞ்சைத்தொடுவதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்கியது கண்டு மகிழ்ச்சியே ஏற்பட்டது. இந்த யுத்தம் பின்னர் யுத்தம் பற்றிய புரிதல்களையும் தமிழினிக்கு அளிக்கிறது. அது பற்றியும் நூல் விபரிக்கின்றது.
"போர்க்களத்தில் கண்ட இன்னொரு மறக்க முடியாத காட்சியும் எனது ஆழ்மனதில் பதிந்துபோன சித்திரமாகி விட்டிருந்தது. இராணுவத்தினரினதும், விடுதலைப்புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத்தண்ணீரில் ஊறிப்போய், ஆங்காங்கே விறைத்துக்கிடந்தன. அவர்கள் உடல்களிலிருந்து வடிந்திருந்த சிவப்புக் குருதி மழை நீரில் கரைந்து தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது. சற்று நேரத்திற்கு முன்புவரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது. எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை" (பக்கம் 60).
இந்தச் சுய விமர்சனத்தால் அவர் வந்தடையும் முடிவுதானென்ன? இதற்கான விடையினை அவர் நூலின் ஆரம்பத்தில் 'தொடர்ந்து போராடுவேன்' என்னும் குறிப்பில் குறிப்பிடுவார்.
'எனது மாணவப்பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான செயலை ஆற்ற வேண்டுமென்ற பெரு விருப்போடுதான் ஒரு போராளியாக மாறினேன். எனது வாழ்வின் இறுதி மூச்சு வரை ஒரு போராளியாகவே இருந்து மக்களுக்கு உதவ விரும்புகின்றேன். ஆயுதம் ஏந்துவதன் மூலமோ அல்லது பழிக்குப் பழி வாங்குதலின் மூலமாகவோ எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் நாம் செய்து விட முடியாது என்பதை அனுபவத்தின் பாடங்கள் கற்றுத்தந்து விட்டன. அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தினதும் வளர்ச்சிக்கான இயல்பான சாத்தியப்பாட்டை உருவாக்கும். அந்த வகையில் எனது இறுதிக்காலம் வரை எனது சமூகத்திலும் நாட்டிலும் மட்டுமல்ல உலகத்தின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் எனது போராட்டம் தொடரும்.'
தான் கூறியபடியே அவரது இறுதிவரை போராடியே அவர் மறைந்திருக்கின்றார். அவரது இந்தக் கூர்வாள் கூறும் விடயத்தைப்பொறுத்தவரையில் கூரிய வாள்தான். தேசம் ஜெயபாலன் கூறுவது போல் மொட்டை வாளல்ல ஆனால் யாரையும் காயப்படுத்தாத கூர் வாள். வாசிப்பவர் நெஞ்சங்களைச் சிந்திக்க வைக்கும் கூர்வாள் இது. இதுவரை காலமும் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைக் குறிப்பாக விடுதலைப்புலிகளின் சுய விமர்சனம் செய்யும் கூர்வாள். மேலும் தர்க்கச்சிறப்புள்ள விமர்சனங்கள் கூர்மையானவை. இந்நூலின் சுய விமர்சனமும் அத்தகையதே. ஆனால் இந்நூலுக்கு 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்று பெயர் வைத்ததற்குக் காரணம் இது கூறும் விமர்சனம் கூர்வாளைப்போன்றதால் என்பதல்ல. இந்நூல் விமர்சிப்பது அவர் இணைந்து இயங்கிய மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய இயக்கமொன்றினை. அதனை விமர்சிப்பதால் அது கூர்வாளின் நிழலிலிருந்து செய்யும் விமர்சனம் என்னும் அர்த்தத்தைத்தருமென்பதாக இருக்கக் கூடும். அல்லது இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு தான் சார்ந்திருந்த இயக்கத்தையும், இலங்கை அரசின் அடக்குமுறைகளையும் விமர்சிக்கின்றார். அவ்விதம் கடுமையான சட்டங்களைப்பிரயோகிக்கத்தயங்காத இலங்கை அரசின் அதிகாரத்தின் கீழிருந்துகொண்டு அதனை விமர்சிப்பதால் இந்தப்பெயரை வைத்திருக்கக் கூடும்.
இந்த நூல் கூறாத பல விடயங்களுள்ளன. ஆனால் அதற்காக இதன் முக்கியத்துவம் ஒருபோதுமே குறைந்துபோய் விடப்போவதில்லை. முதல் முறையாக விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களிலொருவராக விளங்கிய ஒருவர் தன்னை, தான் சார்ந்திருந்த இயக்கத்தை சுய விமர்சனத்துக்குள்ளாக்கியிருக்கின்றார். அது வரவேற்கத்தக்கது. சுய விமர்சனங்கள் எப்பொழுதுமே ஆரோக்கியமானவை. எதிர்காலத்தில் சரியான பாதையில் நடப்பதற்கு வழிகோலுபவை. அதுவே இந்நூலின் முக்கியத்துவமும் கூட.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.