நித்தியின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பினைப் பெறத்தொடங்கின. 1970இல் பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் 'தமிழ் பாப் 70' என்னும் பெயரில் இசை நிகழ்ச்சியொன்றினை தினபதி பத்திரிகையில் பணி புரிந்த ஜெயசீலன் என்பவர் , சீதா பத்திரிகையினை அக்காலகட்டத்தில் நடத்திக்கொண்டிருந்த தமிழ் நெஞ்சன் என்பவருடன் இணைந்து நித்தி கனகரத்தினத்தின் பங்களிப்புடன் நடத்தினார். எஸ்.டி.துரைசாமி பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அந்நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த அப்துல் ஹமீட் மற்றும் புவனலோசனி வேலுப்பிள்ளை ஆகியோர் மேடைக்குப் பின்புறம் நின்று நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.
இந்த நிகழ்வில் நிகழ்வு முழுவதும் நித்தி கனகரத்தினம் அவர்கள் 'சின்ன மாமியே' , 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே' மற்றும் 'ஊரே கெட்டுப் போச்சு' ஆகிய மூன்று பாடல்களை மட்டுமே திருப்பித்திருப்பிப் பாடி இரசிகர்களைக் களிப்பிலாழ்த்தியதுதான். இரசிகர்களும் அவர் அவ்விதம் திரும்பத்திரும்பப் பாடுவதை வரவேற்று இரசித்தனர்.
இந்நிகழ்வு பற்றிய இன்னுமொரு சுவாரசியமான விடயம் என்னவென்றால் அந்நிகழ்வுக்காக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணம் பதினைந்து ரூபா மட்டுமே. நிகழ்வின் மூலம் கிடைத்த பணத்தினை தினபதி ஜெயசீலனும், 'கீதா' பத்திரிகை தமிழ் நெஞ்சனுமே பங்கு போட்டுக்கொண்டர்.
இந்நிகழ்வில் பின்னாலிருந்து நிகழ்ச்சிகளைத்தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீட் அவர்கள் பின்னர் தானே முன்னின்று நித்தி கனகரத்தினத்தின் இசை நிகழ்ச்சியினை நடத்திக்கொடுத்ததாகக் குறிப்பிட்டதாகவும் அது உண்மையில்லை என்பதைப்பதிவு செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் நித்தி கனகரத்தினம் அவர்கள் பாப் 71, பாப் 72, பாப் 73 ஆகிய பாப் இசை நிகழ்ச்சிகளை எம்.எஸ்.பெர்ணாண்டோ ,மற்றும் இந்திராணி பெரேரா ஆகியோருடன் இணைந்து கொழும்பில் நடத்தியதையும் குறிப்பிட்டார். இறுதி நிகழ்ச்சி BMICH மண்டபத்தில் நடைபெற்றதையும் நினைவு கூர்ந்தார். அத்துடன் முதலிரு நிகழ்வுகளும்
கொழும்பு நவரங்கல மண்டபத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.
1972இல் Golden Swan Label பாவித்து நித்தியின் நான்கு பாடல்கள் (சின்ன மாமியே, கள்ளுக்கடை பக்கம் போகாதே, ஊரே கெட்டுப் போச்சு & திங்கள் கிழமையோ) Claude and the Fernando Sensations என்னும் பெயரில் இசைத்தட்டுகளாக வெளிவந்ததற்காகவும், அதற்காகத் தனக்குக் கிடைத்த வருமானம் 30 இசைத்தட்டுகள் மட்டுமேயென்றும், அவற்றை விற்றுப் பணத்தைப்பெற்றுக்கொள்ளும்படி வெளியிட்டவர்கள் கூறியதாகவும் குறிப்பிட்டார்.
இவை தவிர 1972இல் நித்தி கனகரத்தினம் தனது இசை நிகழ்ச்சியொன்றில் ஏ.ஈ.மனோஹரன் அவர்களை திரைப்பட நடிகர் என்று அறிமுகப்படுத்தி பங்கு பற்ற அனுமதித்து உதவியதாகவும் நினைவு கூர்ந்தார்.
சின்ன மாமியே பாடலை எழுதியவர் அண்மையில் அமரரான கமலநாதன் என்பது பற்றிக்கேட்ட பொழுது அவர் மீண்டும் மீண்டும் கூறியதென்னவென்றால் தான்
கமலநாதனின் உறவினரான தன்னுடன் ஹாடி தொழில் நுட்பக்கல்லூரியில் படித்த , சீனியர் மாணவரான பாலச்சந்திரன் மூலமே முதன் முதல் அறிந்ததாகவும், அவ்விதம் அறிந்த அந்தப்பாடலில் பல சாதாரண வழக்கில் பாவிக்கக்கூடாத சொற்கள் இருந்ததாகவும், அவற்றைத் தான் 'இடுப்பொடிய' போன்ற சொற்கள் மூலம் மாற்றிப்பாடியதாகவும், அவ்விதம் பாடிய சின்ன மாமியே பாடல் புகழ் பெற்ற நிலையில் , கமலநாதனே அப்பாடலை எழுதியதாகக்கேள்விப்பட்டதிலிருந்து பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் தான் அப்பாடலை இயற்றியவர் கமலநாதன் என்று கேள்விப்படுபவதாகக் குறிப்பிட்டு வருவதாகவும், அதே சமயம் அப்பாடளை உண்மையில் எழுதியவர் கமலநாதனா என்பதில் கூடச் சிறிது சந்தேகம் இருப்பதாகவும், ஏனென்றால் வதிரிப் பகுதியில் அவ்விதமானதொரு நாட்டுப்பாடல் இருப்பதாகத் தான் கேள்விப்பட்டதாகவும் அதன் காரணமாகவே அச்சந்தேகம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இவற்றையெல்லாம் ஒரு பதிவுக்காகக் கூறுவதாகக் குறிப்பிட்ட நித்தி கனகரத்தினம் அவர்கள் தான் ஒரு போதுமே பணத்துக்காகத் தன் நிகழ்வுகளை நடத்த விரும்புவதில்லை என்றார். கனடாவில் கூடத் தான் அவ்விதம் இசை நிகழ்ச்சி ஒன்றினை நடாத்திக் கொடுக்கத்தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்திலிருந்து நடிகைகளையும், பாடகர்களையும் அழைப்பதையே வழக்கமாகக் கொண்ட இங்குள்ள அமைப்புகள் நித்தி கனகரத்தினத்துடன் தொடர்பு கொண்டு ஏன் நல்லதொரு பொப் இசை நிகழ்ச்சியொன்றினை நடத்த முன்வரக்கூடாது?