இன்று கனடாவுக்கு வருகை தந்திருக்கும் பொப் இசைச்சக்கரவர்த்தி திரு.நித்தி கனகரத்தினம் தம்பதியினரை ஸ்கார்பரோவிலுள்ள மக்னிகல் ஜோஸ் (McNicoll Joe's) உணவகத்தில் சந்தித்தோம்.
நண்பர எல்லாளன், எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோர் என்னுடன் நித்தி கனகரத்தினம் தம்பதியினருடனான சந்திப்பில் இணைந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரச்சந்திப்பில் திரு.நித்தி கனகரத்தினம் எம்முடன் தனது பொப்பிசை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இலங்கையிலேயே முதன் முதலாக ஆங்கில இசைக்குழுவொன்று Living Fossils என்னும் பெயரில் 1965 இல் ஆரம்பமானது. அதனை ஆரம்பித்தவர்கள் மூவர். ஒருவர்: மருத்துவர் சூரியபாலன் (டொராண்டோவில் அண்மையில் அமரரானவர்), நித்தி கனகரத்தினம் இவர்களுடன் லக்சுமன் ஞானப்பிரகாசம்.
1967இல் நித்தி கனகரத்தினம் அவர்கள் அம்பாறை தொழில்நுட்பக் கல்லூரியான ஹாடியில் கல்வி பயின்றபோது இவரது சீனியர்களிலொருவரான பாலச்சந்திரன் மூலமே முதன் முதலில் சின்ன மாமியே பாடலைக்கேட்டு அறிமுகமாகின்றார். அச்சமயம் சின்ன மாமியே பாடலில் பல தூஷணச்சொற்கள் நிறைந்திருந்தன. அவற்றை நல்ல பாவனைக்குரிய தமிழுக்கு மாற்றிப் பாடத்தொடங்கினார் நித்தி கனகரத்தினம். இவை தவிர இவர் கலந்து கொண்ட பல இசை நிகழ்ச்சிகள் பற்றி, பாடல்கள் உருவாகக்காரணமான நிகழ்வுகள் பற்றி மற்றும் அண்மைக்காலமாக இலங்கையில் இவர் இலாப நோக்கற்ற நிலையில் ஆற்றி வரும் பங்களிப்புகள் பற்றி, அவற்றாலடைந்த அனுபவங்கள் பற்றியெனப் பலவேறு விடயங்களைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறிய இன்னுமொரு விடயமும் ஆச்சரியமானது. இவ்வருட இறுதியில் தனது எழுபத்தியிரண்டாவது வயதில் அவர் மாற்று மருத்துவத்தில் (Altenative Medicine) மருத்துவராகவும் தன் பட்டப்படிப்பை முடிக்க இருக்கின்றார். அது தவிர ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் பேசும் மொழி பற்றிய ஆய்வினையும் கலாநிதிப்பட்டப்படிப்புக்காக அவர் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வயது எழுபத்தியிரண்டு என்பதை நம்பவே முடியவில்லை. அவ்வளவுக்குத் துடிப்பு மிக்க இளைஞராகவே இன்னும் இருக்கிறார்.
சந்திப்பில் நித்தி கனகரத்தினம் மேலும் பல சுவையான விபரங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். அவற்றில் சில:
கள்ளுக்கடைப் பக்கம் போகாதே என்ற பாடலுக்கான காரணம் பற்றி அவர் குறிப்பிடும்போது ஒருமுறை 'டபிள் டெக்கர்' பஸ்ஸில் மேற்தட்டில் பயணித்துக்கொண்டிருந்தபொழுது அங்கே ஒரு கிழவரும் பேரனும் பயணித்துக்கொண்டிருந்ததாகவும், நல்ல நிறைவெறியிலிருந்த கிழவர் பேரனுக்கு கள்ளுக்குடிக்கக்கூடாதென்பதை வலியுறுத்தி அறிவுரைகள் கூறிக்கொண்டிருந்ததாகவும், அவர் அப்போது கூறிய வார்த்தைகளின் தாக்கமே பின்னர் அவரை இந்தப்பாடலை எழுத வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
1968இல் யாழ்மாநகரசபையினரால் நடாத்தப்பட்ட பெளர்ணமிக் கலைவிழா நிகழ்வு பற்றி அவர் கூறியதாவது:
தமிழில் சின்ன மாமியே, கள்ளுக்கடைப்பக்கம் போகாதே, மற்றும் ஊரே கெட்டுப் போச்சு ஆகிய பாடல்களை அந்நிகழ்வில் பாடத்தான் முனைந்ததாகவும்., ஆனால் தமிழில் அதுவரை அறிமுகமில்லாத அவ்விதமான பாடல்கள் பல பிரச்னைகளைக்கொண்டு வருமென்று அப்போதிருந்த யாழ் நகரசபை ஆணையாளர் பயந்ததாகவும், மேலும் அவரது இசைக்குழுவைச்சேர்ந்த மற்ற இருவரும் கூட நித்தி தமிழில் பாட முனைந்ததால் தாம் தமிழில் பாட முடியாதென்று விலகியோடியதாகவும், இந்நிலையில் தானே தனியாகத்தமிழில் மேற்படி மூன்று பாடல்களையும் அந்நிகழ்வில் பாடியதாகவும் குறிப்பிட்டார். பலரும் அஞ்சியதற்கு மாறாக அந்நிகழ்வில் நித்தி கனகரத்தினம் பாடிய பாடல்கள் மிகுந்த வரவேற்பைப்பெற்றதாகவும் நித்தி குறிப்பிட்டார். நித்தியின் மேற்படி பொப் இசைப்பாடல்களை வரவேற்று, புகழ்ந்து ஈழநாட்டில் பாமா ராஜகோபால் கட்டுரையொன்றினை எழுதியதாகவும், அத்துடன் மேற்படி நிகழ்வைப்பற்றி வீரகேசரி பத்திரிகையில் எழுதிய செல்லத்துரை 'ஆங்கிலப்பாணியில் அமைந்த தமிழ்ப்பாடல்கள்' என்று பாராட்டியதாகவும் நித்தி நினைவு கூர்ந்தார்
அதன் பிறகு யாழ் நகரில் நடைபெற்ற தினகரன் விழாவிலும் பங்கு பற்றிய நித்தி கனகரத்தினம் மேற்படி பொப் இசைப்பாடல்களைப்பாடி மிகுந்த வரவேற்பினைப்பெற்றார்.
அதன் பின்னர் ஒரு நாள் அவருக்கு அப்போது யாழ் நகரப் பொலிஸ் எஸ்.பி.ஆகவிருந்த சுந்தரலிங்கத்திடமிருந்து அழைப்பு வந்ததாகவும். அந்த அழைப்பால் சிறிது பயந்தபடியே தான் எஸ்.பி.சுந்தரலிங்கத்தைச் சந்திக்கச் சென்றதாகவும் , அவ்விதம் சென்ற தன்னை எஸ்.பி.கட்டிபிடித்து வரவேற்றதாகவும், தினகரன் விழாவில் அறிவுரைகள் கூறும் நித்தியின் பொப் இசைப்பாடல்களைப்புகழ்ந்து கூறியதாகவும், தற்போதுள்ள சூழலில் மிகவும் தேவையான பாடல்கள் எனப்பாராட்டியதாவும் நித்தி நினைவு கூர்ந்த போது மிகுந்த வியப்பாகவிருந்தது.
அதன் பிறகு 1969இல் யாழ் றிம்மர் மண்டபத்தில் ஸ்டனிஸ் சிவானந்தன் மற்றும் ஜோதிபாலா ஆகிய பாடகர்களுடன் இணைந்து பாடியுள்ள சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
அதன் பிறகு 1970 இல் பம்பலபிட்டிய சரஸ்வதி மண்டபத்தில் நடந்த நிகழ்வு பற்றியும், அது பற்றி நிலவும் தப்பபிப்பிராயங்கள் பற்றியும் சிறிது எடுத்துரைத்தார்.
[இன்னும் வரும்]