1. கவிதை: கறுப்பு ஜுலை 1983: மானுட அவலம் என்பதன் வடிவம!
எண்ணிப் பார்க்கையில் எத்தனை நினைவுகள்.
கண்ணீர்த் தீவின் வரலாற்றை மாற்றிய
கறுப்பு ஜீலை எண்பத்து மூன்று.
மானுட அவலம் என்பதன் வடிவம்.
மதத்தின் பெயரால் இனத்தின் பெயரால்
மொழியின் பெயரால் நாட்டின் பெயரால்
இதுவரை மானுடர் மடிந்தது போதும்.
இனியும் வேண்டாம் இந்த அவலம்.
இனத்தின் பெயரால் இங்கே ஒருவர்
கூனிக் குறுகி அவமா னத்தால்
இருக்கும் காட்சி காணும் போதினில்
சிந்தையில் எழும் வினாக்கள் பற்பல.
யாரிவர்? எங்கி ருந்து வந்தார்?
குடும்பம் ஒன்றின் தலைவரா அல்லது
உறவுகள் அற்ற மானுடர் ஒருவரா?
இனவெறி மிகுந்து இங்கு வெறியுடன்
ஆடி நிற்கும் காடையர் முகங்கள்
மானுட அழிவின் பிரதி பலிப்புகள்.
இந்த மனிதர் இங்கே தனிமையில்
நாணி, வாடி, ஒடிந்து கிடக்கின்றார்.
இவரை இவ்வித மழித்த மானுடர்
மானுட இனத்தின் அவமானச் சின்னங்கள்..
மானுட உரிமை ஆர்வலர் மற்றும்
அனைவரு மெழுவீர்! எழுவீர்! எழுந்து
நீதி கிடைத்திட ஒன்றெனத் திரள்வீர்!
நடந்த வற்றில் பாடத்தைப் படித்து
நல்வழி தேர்ந்து பயணம் தொடர்வோம்.
சிறிய கோளில் மோதல்கள் எதற்கு.
அறிவுத் தளத்தில் அனைத்தையும் அணுகின்.
இதுவரை மோதலில் போரினில் மற்றும்
அனைத்து அழிவினில் மடிந்த துடித்த
மக்களை எண்ணியே பார்ப்போம். பார்த்து
இம்மண் மீதினில் புதிய பாதை
சமைப்போம். வகுப்போம். தொடர்வோம், மகிழ்வோம்.
2. கறுப்பு ஜூலை 83: சில கேள்விகளும், இழைக்கப்பட்ட அநீதியும் கிடைக்க வேண்டிய நீதியும்!
83 கறுப்பு ஜூலை என்றதும் முதலில் அனைவரினதும் நினைவினில் தோன்றுவது பொரளையில் சிங்களக் காடையர்களால் நிர்வாணமாக்கப்பட்டுக்கொல்லப்பட்ட தமிழர் ஒருவரின் புகைப்படம்தான். 83 கறுப்பு ஜூலைக்கலவரத்தின் குறியீடாகவே இந்தப்புகைப்படத்தைக் கூறலாம். உண்மையில் இந்தப்புகைப்படத்தை எடுத்தவர் சிங்கள வழக்கறிஞரொருவர். இது பற்றி 'காலச்சுவடு' இதழில் மைக்கல் றொபேர்ட்ஸ் என்பவரால் எழுதப்பட்டுக் கவிஞர் சேரனால் தமிழாக்கம் செய்யப்பட்டு '1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை எண்ணித் துணிந்தே எடுத்த படுகொலை' என்னும் தலைப்பில் வெளியான 83 கறுப்பு ஜூலை பற்றிய கட்டுரையில் இந்தப்புகைப்படத்தைப் பற்றிப்பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
"கொலைக்கு முன்பாக களிக்கூத்து.: பொறள்ளை சந்தி. அதிகாலை. 24.07.1983. இந்தப் படத்தை எடுத்தவர் சந்திரகுப்த அமரசிங்க. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் 'அத்த' என்கிற நாளிதழில் பணியாற்றியவர் அவர். படத்தில் இருக்கும் தமிழர் கொல்லப்பட்டதை சந்திரகுப்த அமரசிங்க பின்னர் உறுதிப்படுத்தினார். கேளிக்கை உணர்வுடனேயே கொலையாளிகள் இயங்கியதாகச் சந்திரகுப்த அமரசிங்க என்னிடம் தெரிவித்தார்."
இந்தப்புகைப்படத்தைப்பார்க்கும்போதும் என் சிந்தையில் எழும் கேள்விகள் சில. 'இந்தத்தமிழர் நிர்வாணமாக்கப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டுள்ளார். நீதிக்காக வாதிடும் சிங்கள வழக்கறிஞரொருவர் அந்த மனிதர் எரித்துக்கொல்லப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் புகைப்படமெடுத்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியினரின் 'அத்த' நாளிதழிலும் பணியாற்றிய வழக்கறிஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட , எந்தவிதச்சந்தேகங்களுமற்ற புகைப்படம் இது. அந்த அப்பாவித்தமிழரைக்கொன்றவர்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் ஆதாரம் இந்தப்புகைப்படம்.
இந்தப்புகைப்படத்திலுள்ள தமிழர் யார்? இந்தப்புகைப்படத்தை நிச்சயம் அவரது உறவினர்கள், குடும்பத்தவர்கள், நண்பர்கள் மற்றும் அவரை அறிந்தவர்கள் எனப்பலர் பார்த்திருப்பார்கள். அவர் யார்? அவரைப்பற்றி எங்காவது விபரங்கள் வெளியாகியுள்ளனவா? இந்தப்புகைப்படத்தில் சிறிது நேரத்தில் இனவெறிக்குப் பலியாகப்போகும் அந்தத்தமிழருக்கு முன்னால் ஆடிப்பாடியபடி சிங்களக்காடையர்கள் சிலர் காணப்படுகின்றார்கள். அவர்களது உருவங்கள் அடையாளம் காணக்கூடிய அளவுக்கு நன்றாகவே தெரிகின்றது. அவர்களது நிலையென்ன?
தமிழ் மக்கள் பிரச்சினையைப் புதிய கோணத்தில் அணுகித்தீர்க்கப்போவதாக அடிக்கடி கூறும் இன்றைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நல்லதொரு வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்தப்புகைப்படத்தில் காணப்படும் தமிழருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இவரைக்கொன்ற காடையர்கள் இனங்காணப்பட்டு தண்டனை பெற வேண்டும். இரண்டாம் உலக மகாயுத்தத்தில் யூதர்களைக்கொன்ற நாசி அதிகாரிகளை மேற்கு நாடுகளீல் இன்னும் தேடித்தேடி வழக்குகள் போடுகின்றார்கள். அதைப்போல் இந்தப்புகைப்படத்தில் உள்ளவர்களையும் அரசு அடையாளம் கண்டு , கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகள், மானுட உரிமைக்காகப் போரிடும் அமைப்புகள் மனிதர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அனைத்துதமிழ் மக்களும் இந்த விடயத்தில் குரல் கொடுக்க வேண்டும். மானுட உரிமைகளுக்காகச் செயற்படும் சிங்கள மக்களும் , அமைப்புகளும், ஊடகங்களும், பொதுமக்களும் அந்த அப்பாவி மனிதருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்விதம் சிங்களவரொருவர் தமிழரால் கொல்லப்படும் புகைப்படமொன்று வெளியாகியிருந்தால் உடனேயே அந்தத்தமிழர் அடையாளம் காணப்பட்டு , நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டுத் தண்டனை பெற்றிருப்பார். அல்லது படையினரால் கைது செய்யப்பட்டுச்சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்.
தமிழரென்ற காரணத்தால் நிர்வாணமாக்கப்பட்டு எரியூட்டப்பெற்ற இந்த அப்பாவித்தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குரிய நீதி கிடைக்க வேண்டும்.
இனத்தின் பெயரால் இங்கே ஒருவர்
கூனிக் குறுகி அவமா னத்தால்
இருக்கும் காட்சி காணும் போதினில்
சிந்தையில் எழும் வினாக்கள் பற்பல.
யாரிவர்? எங்கி ருந்து வந்தார்?
குடும்பம் ஒன்றின் தலைவரா அல்லது
உறவுகள் அற்ற மானுடர் ஒருவரா?
இனவெறி மிகுந்து இங்கு வெறியுடன்
ஆடி நிற்கும் காடையர் முகங்கள்
மானுட அழிவின் பிரதி பலிப்புகள்.
இந்த மனிதர் இங்கே தனிமையில்
நாணி, வாடி, ஒடிந்து கிடக்கின்றார்.
இவரை இவ்வித மழித்த மானுடர்
மானுட இனத்தின் அவமானச் சின்னங்கள்..
மானுட உரிமை ஆர்வலர் மற்றும்
அனைவரு மெழுவீர்! எழுவீர்! எழுந்து
நீதி கிடைத்திட ஒன்றெனத் திரள்வீர்!
3. பெட்டிக்கு வெளியில் நின்று சிந்திக்கப்பழகுவோம் (Think outside the box).
வெளியில் சென்று சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்து விட்டது. எதற்கெடுத்தாலும் சிங்கள இனத்தை மொத்தமாக இனவெறி பிடித்த சமூகமாக உருவகித்துத் தமிழர்கள் சிந்தனையை ஓட விடுவதும், அதே போல் தமிழினத்தை ஒட்டு மொத்தமாக இனவெறி பிடித்த சமூகமாக எண்ணிச் சிங்கள மக்கள் செயற்படுவதும் ஆக்கபூர்வமான விடயங்களல்ல.
ஆனால் அதே சமயம் தமிழர்களின் , சிங்களவர்களின் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும், செயற்படும் சிங்கள மக்கள் பலர் இன்னும் நாடு திரும்ப முடியாத நிலையிலுள்ளார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். சிங்கள மக்கள் பக்கத்திலும் பல ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த சிங்கள, தமிழ் மாணவர்களுக்கிடையிலான மோதல் பற்றி தென்னிலங்கையிலிருந்து பத்திரிகைகளில் எழுதப்படும் ஆரோக்கியமான பத்திகள் நம்பிக்கையினைத்தருகின்றன.
தற்போதுள்ள சூழலில் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இதுவரை ஏற்பட்ட புரட்சிகள், யுத்தங்கள், மனித உரிமை மீறல்கள், இனக்கலவரங்கள் என அனைத்தையும் ஒரு கணம் நினைத்துப்பார்ப்போம். அவற்றிலிருந்து படித்த பாடங்களின் அடிப்படையில் பெட்டிக்கு வெளியில் நின்று சிந்திக்கப்பழகுவோம். இதுவரை நடைபெற்ற அழிவுகளில் கறுப்பு சூலை 83 மற்றும் மே 18, 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவு ஆகியவை இலங்கையின் வரலாற்றையே மாற்றி வைத்தவை. அவற்றை ஒரு போதுமே மறக்க முடியாது. ஆனால் இவற்றிலிருந்து பாடங்கள் படித்து ஆரோக்கியமான திசையில் நடப்பதே நல்லது.
இலங்கையில் சகல இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்றால் குறைந்தது கீழுள்ள விடயங்கள் தீர்க்கப்பட வேண்டும்.
1. இதுவரை காலமும், இலங்கையை ஆட்சி செய்த அரசுகளால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட, உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்துச் சிறுபான்மையின மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக்கூற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நட்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும்.
.2. 83 கறுப்பு சூலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நட்ட ஈடுகள் கொடுக்கப்பட வேண்டும்.
3. முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட, காணாமல் போன அனைவர்தம் குடும்பங்களுக்கும் உரிய நட்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும்.
3. யுத்தம் காரணமாகத் தம் வசிப்பிடத்தை இழந்த அனைவருக்கும் அவர்களது காணிகள் மீளக்கொடுக்கப்பட்டு, குடியமர வசதிகளை விரைவாகச்செய்து கொடுக்க வேண்டும்.
4. யுத்தக்குற்றங்கள் புரிந்த அனைவரும் முறையான நீதி விசாரணக்குட்படுத்தப்பட்டு குற்றம் புரிந்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
5. தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரும் புனர் வாழ்வினை முறையாகப்பெறும் வகையில் உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
6. வடகிழக்கிலுள்ள படையினரின் தேவைக்கதிகமான எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும்.
7. கட்டாயக் குடியேற்றத்திட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
8. அரச வேலை வாய்ப்புகளில் உரிய விகிதாசாரம் பின்பற்றப்பட வேண்டும். அதே சமயம் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும்.\
9. பல்லினக்கலாச்சார நடவடிக்கைகள் எந்தவிதத்திணிப்புகளுமற்று , பரஸ்பர நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இவை போன்ற செயற்பாடுகளினால் மட்டுமே இலங்கையில் வாழும் பல்லின மக்களின் குறிப்பாகத் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியும். இதுவரை கால இலங்கையின் அரசியல் வரலாற்றில் காலத்துக்குக் காலம் தமிழர்கள் ஒப்பந்தங்களால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். அரச பயங்கரவாதங்களினால் மடிந்திருக்கின்றார்கள். சிறைகளில் இன்னும் சந்தேகமொன்றின் அடிப்படையில் வாடுகின்றார்கள். உலகின் நானா பக்கங்களிலும் அகதிகளாக அலைகின்றார்கள்.
இவ்விதமான சூழலில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையினை ஏற்படுத்துவதற்கு, இவ்வளவு காலமும் தவறிழைத்த இலங்கை அரசுகளின் இன்றைய பிரதிநிதியான இன்றைய அரசு படிப்படியாக நம்பிக்கையினை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட சிங்கள் , தமிழ் மாணவர்களுக்கிடையிலான மோதல்கள் தெற்கில் மிகப்பெரிய இனரீதியிலான எதிர்ப்பினை ஏற்படுத்தவில்லை. யாழ் பல்கலைக்கழகத்தின் தனிப்பிரச்சினையாக அணுகும் போக்கு தென்பட்டது. இது ஆரோக்கியமான வரவேற்கத்தக்க விடயம். முன்பெல்லாம் வெறும் வதந்திகள் கலவரங்களை ஏற்படுத்தும் சூழல் காணப்பட்டது. அந்த நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது நல்லதொரு விடயம்.
முதலில் இலங்கையில் பூரணமான இயல்பு நிலை ஏற்பட வேண்டும். அனைத்து மக்கள் மத்தியிலும் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அதற்குச் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும், எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் கிடைக்க வேண்டும். அவ்விதம் கிடைக்கும்போது அனைத்து மக்களும் அமைதியாக, மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக வாழுவதற்குரிய சூழல் உருவாகும். மாறாக தற்போதுள்ள சூழல் மாறித் தென்னிலங்கையில் மீண்டும் தீவிர இனவாதச்சக்திகளிடம் ஆட்சி கை மாறுமானால் சிறுபான்மையினர் பிரச்சினை மீண்டும் பெரிதாக வெடிக்கும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.