2012 ஆம் ஆண்டு இலங்கை சென்ற நண்பர் ஒருவரிடம் என்னிடம் கொடுத்து விடும்படி திரு.கே.எஸ்.சிவகுமாரனால் கொடுத்து விடப்பட்டிருந்த 'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் அண்மையில்தான் என் கைகளை வந்தடைந்தது. :-) மறக்காமல் நினைவில் வைத்திருந்து நூலை என்னிடம் சேர்ப்பித்த நண்பருக்கு நன்றி. :-)
இது போல் இன்னுமொருவரிடமும் திரு.கே.எஸ்.சிவகுமாரன் நூல்கள் சிலவற்றைக் கொடுத்திருந்த விபரத்தை நண்பர் சில வருடங்களுக்கு முன்னர் அறியத்தந்திருந்தார். ஆனால் நூல்கள் இன்னும் என் கைகளுக்கு வந்து சேரவில்லை. :-)
இன்னுமொருவரிடம் கொடுத்திருந்த நூல் பொதி பெற்றவர் இன்னுமொருவரிடம் கொடுத்து சிறிது காலம் தாழ்த்தியென்றாலும் வந்து சேர்ந்து விட்டது.
'கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில' நூல் கைக்கடக்கமானது. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப மிகுந்த பயன் மிக்கது. குறிப்பாக ஆவணச்சிறப்பு மிக்கது. இந்நூலில் கே.எஸ்.எஸ் அவர்கள் எழுத்தாளர்களைபற்றி, வெளிவந்த நூல்கள் பற்றி, தன்னைப் பாதித்த அண்மைக்கால நாடகங்கள், சிங்களத்திரைப்படம் பற்றி, என்று பல விடயங்களைப்பற்றி , எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
அமரர் சோமகாந்தன் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய 'காந்தன் கண்ணோட்டம்' என்னும் பத்தி எழுத்துகள் பற்றியொரு கட்டுரை தொகுப்பிலுள்ளது. இச்சிறு கட்டுரை சோமகாந்தனின் பத்தி எழுத்துகளை விபரிப்பதுடன், பத்தி எழுத்துகள் பற்றிய கே.எஸ்.எஸ் அவர்களின் கருத்துகளையும் உள்ளடக்கியிருப்பது இதன் சிறப்பு.
'காந்தனின் கண்ணோட்டம்' பத்தி எழுத்துகளைப்பற்றி கே.எஸ்.எஸ் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:
" நான் இந்த எழுத்துகளை வெகு ஆவலுடனும், ஆர்வத்துடனும் வாசித்து வந்தேன். விளைவு: ஆனந்தம், தகவற்கள விரிவாக்கம், செயற்பாட்டுப்பயன். ஆனந்தம் ஏனெனில் தமிழ்மொழியின் சொல்வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தால் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளகாங்கிதம் நான் அடைந்தமை. தெரியாத சில விபரங்களைக்கோர்த்து அவர் தரும் பாங்கு எனது அறிவை விருத்தி செய்ய உதவியமை சொல்லப்பட வேண்டும். காந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத் தன்மை கொண்டவையாதலால், அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெறுகின்றேன்."
நூலிலுள்ள இன்னுமொரு கட்டுரையான 'இனிய உறவுகள் எழுச்சியுறட்டும்' கட்டுரையில் சோமகாந்தன் தம்பதியினரின் (எழுத்தாளர் சோமகாந்தனின் மனைவியரான திருமதி பத்மா சோமகாந்தன் 'புதுமைப்பிரியை' என்னும் பெயரிலும் , தனது சொந்தப்பெயரிலும் எழுதிவரும் முக்கியமான ஈழத்துப்பெண் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.) இலக்கியப்பங்களிப்பு பற்றி எழுதியுள்ளார்.
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர் கே.எஸ்.எஸ் அவர்கள்.
தொகுப்பில் ஈழத்தின் நகைச்சுவை எழுத்தாளர்களிலொருவரான பொ.சண்முகநாதன் உதயன் பத்திரிகையில் 'சண் அங்கிள்' என்றெழுதிய பத்திகளைப்பற்றியொரு கட்டுரையுள்ளது. இக்கட்டுரையில் 'நகைச்சுவையாக எழுதக்கூடிய ஒரு சில ஈழத்து எழுத்தாளர்களுள் பொ.சண்முகநாதன் முத்திரை பதித்தவர்' என்கின்றார் நூலாசிரியர்.
எழுத்தாளர்களான கலைச்செல்வி சிற்பி சரவணபவன் பற்றி 'சிற்பியும் நானும்' (ஞானம் சிற்பி பவள விழா மலருக்காக எழுதிய கட்டுரை), தெளிவத்தை ஜோசப் பற்றி 'தெளிவத்தை ஜோசப்பும் நானும்' (ஞானம் சஞ்சிகையில் வெளியான கட்டுரை), 'செங்கை ஆழியானின் எழுத்தும் எண்ணமும்' (வீரகேசரியில் வெளியான கட்டுரை), செங்கை ஆழியானின் நாவலான 'கிடுகு வேலி' பற்றிய சிறு கட்டுரை (வீரகேசரி), எழுத்தாளர் மு.கனகராசனின் 'புடம்' சிறுகதை பற்றி ('பகவானின் பாதங்கள்' நூலில் இடம்பெற்ற கட்டுரை), எழுத்தாளர் நாவேந்தனின் சிறுகதைத்தொகுப்பு பற்றிய மதிப்புரை, வெலிகமை ரிம்ஸா முஹம்மத்தின் கவிதைத்தொகுப்பான 'தென்றலின் வேகம்' (மல்லிகை), எனப்பல கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. மு.கனகராசன், நாவேந்தன் போன்றோரைத் தொகுப்பு வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறது.
'தேனருவி' சஞ்சிகையில் வெளியான கட்டுரைகள் சிலவற்றையும் தொகுதி அடக்கியுள்ளது. தமிழ் எழுத்தாளர் மன்றத்தினால் வெளியிடப்பட்ட 'ஈழத்துப்பரிசுச்சிறுகதைகள்' பற்றிய நூல் மதிப்புரையும் அவற்றிலொன்று (தேனருவி, செப்டம்பர் 1963). அதில் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், உதயணன், முத்து சிவஞானம், சிற்பி, செந்தூரன், நவம், என்.எஸ்.ராமையா, அ.முத்துலிங்கம் போன்றொரின் தொகுப்பிலுள்ள சிறுகதைகளைப்பற்றிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன. அ.முத்துலிங்கத்தின் தொகுப்பிலுள்ள சிறுகதையான 'பக்குவம்' கே.எஸ்.எஸ் அவர்களைக்கவர்ந்திருப்பதை ' நவீன உளவியல் போக்குக்கேற்ற முறையிலும், சிறிது நளினமான கதைப்பொருளைக் கொண்டதினாலும், இறுக்கமாக எழுதப்பட்டதினாலும், அ.முத்துலிங்கத்தின் 'பக்குவம்' மற்றக்கதைகளினின்றும் சிறிது எழும்பி நிற்கிறது. அவ்வளவுதான்' என்னும் வரிகள் வெளிப்படுத்துகின்றன.
இச்சிறுநூல் A.C.Barr குமாரகுலசிங்கி என்பவர் எழுதிய 'Tale of Three Loves' என்னும் ஆங்கில நாவலை பற்றிய தகவலையும் தருகின்றது. ஆவணச்சிறப்பு மிக்க தகவல் இது. இவரைப்பற்றி இப்பொழுதுதான் இக்கட்டுரை மூலம் நான் முதன் முதலாக அறிந்துகொள்கின்றேன். 'யாழ்ப்பாண்ச்சமுதாயத்தின் முன்னைய தோற்றம்' என்னும் கட்டுரையிலேயே மேற்படி விபரங்களை விபரிக்கின்றார் கே.எஸ்.எஸ். இக்கட்டுரையில் தெரிவிக்கப்படும் விபரங்கள் சில வருமாறு:
"1. A.C.Barr குமாரகுலசிங்கி பற்றிய விபரங்கள் தெரியவில்லை. ஆயினும் சட்டத்துறையில் Barr குமாரகுலசிங்கி குடும்பத்தினர் பிரபல்யமானவர்கள்.
2. இந்த நாவல் 19ஆம் நூற்றாண்டின் திருப்புமுனையின்போது யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த பாதி நிலப்பிரபுத்துவக் குடும்பம் ஒன்றின் வாழ்க்கைப்போக்குகளின் சிலவற்றைச்சித்திரிக்கின்றது. அக்காலப்பகுதியில்தான் அமெரிக்க மிஷனரியைச்சேர்ந்தவர்கள் வடக்கிற்குச் சென்று கல்வித்துறையில் பங்களிப்பைச் செய்ததுடன், மதமாற்ற வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
3. அக்காலப்பகுதியிலே வாழ்ந்த பழமை போற்றும் யாழ்ப்பாண சமூகத்தினரின் சிந்தனைப்போக்கைத் தமது செல்வாக்குக்கு உட்படுத்திய பிறநாட்டவரின் செயல்களின் பதிவாக இந்த நாவல் உருப்பெற்றிருக்கின்றது. அந்த விதத்தில் நாவல் சுவாரஸ்யமாக இருக்கிறது.
4. யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையை ஓரளவு சித்திரிக்கும் முதலாவது ஆங்கில நாவலாக இது இருப்பதனால் 'வயலில் ஒரு மலர்' ( A Flower of The Field') முக்கியத்துவம் பெறுகிறது." (நூல்: கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில}
கட்டுரையின் ஆரம்பத்தில் ''Tale of Three Loves' என்று நாவலின் பெயரைக்குறிப்பிட்டுவிட்டுப் பின்னர் A Flower of The Field என்று நாவலைப்பற்றிக்கூறுவது நாவலின் பெயர் பற்றிய சிறிது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் கட்டுரையின் இறுதியில் கே.எஸ்.எஸ் அவர்கள் தான் டெய்லி நியூஸ் பத்திரிகையில் எழுதிய Gleanings பத்தியில் எழுதிய கட்டுரையின் அடிப்படையில் இக்கட்டுரையினை எழுதியதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததால், கூகுளில் தேடிய அக்கட்டுரையினை வாசித்துப்பார்த்தேன் (A novel in English on early Yaalpaanam society : http://archives.dailynews.lk/2007/09/19/art10.asp). அதிலும் கட்டுரையாசிரியர் அதே தவறினை விட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் அவரது இன்னுமோர் ஆங்கிலக்கட்டுரையில் ( A range of reading material : http://archives.dailynews.lk/2012/01/25/art10.asp) மேற்படி தனது நூலைப்பற்றிக்குறிப்பிட்டிருக்கின்றார். அதில் அவர் "There is also a critical introduction of a novel in English titled A Flower of the Field by A C Barr Kumarakulasinghe which depicts the Yaalpaanam (Jaffna) society in the turn of the 19th century." என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதன்படி நாவலின் பெயர் A Flower of the Field. ஆனால் அவர் குறிப்பிட்டிருக்கும் தமிழ் நூலிலுள்ள கட்டுரையிலும், A novel in English on early Yaalpaanam society கட்டுரையிலும் Tale of Three Loves' என்றே கட்டுரைகளின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் கட்டுரை முழுவதும் A Flower of The Field என்றே நாவலின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாலும், இத்தலைப்பினையொட்டியே நாவல் பற்றிக் கட்டுரையில் விபரிக்கப்ட்டிருப்பதாலும், நாவலின் தலைப்பு A Flower of The Field என்று கொள்வதே பொருத்தமாகப்படுகிறது. இது பற்றி கே.எஸ்.எஸ் அவர்கள் விளக்கமளிப்பதும் பொருத்தமானதே.
மேலும் இந்த நாவல் 35 அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும், கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழ் இளைஞன் ஒருவனுக்கும், அமெரிக்க யுவதிக்குமிடையிலான காதலைப்பற்றிக் கூறுவதாகவும், தீண்டாமைக்கெதிரான கருத்துகளைக்கொண்டிருப்பதால் நாவலாசிரியரின் முற்போக்கு எண்ணத்தை அறிய முடிவதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது இந்நாவலின் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது. நாவலாசிரியரின் எழுத்து நடை சிறிது கடினமானது என்பதையும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன் இந்நாவல் எழுதுவதற்குத் தூண்டுதலாக இருந்தவர் அவரது மருமகள் ஒருவரேயென்பதையும், அதற்கு நன்றியாக அர்ப்பணிக்கும் வகையில் 'The Late Letterர் என்னும் சிறுகதையொன்றினையும் A.C.Barr குமாரகுலசிங்கி எழுதியுள்ள தகவலையும் கட்டுரை அறியத்தருகின்றது.
இந்த ஒரு கட்டுரை போதும் இச்சிறு நூலின் ஆவணச்சிறப்பினை வெளிப்படுத்துவதற்கு. கே.எஸ்.எஸ்.எழுத்துகளால் அடையும் பயன்களில் முக்கியமான பயன் அது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.