முகநூல் செய்துள்ள பல நன்மைகளிலொன்றாக என் வாழ்வில் சந்திக்கவே சந்தர்ப்பங்கள் அரிதாகவிருந்த என் பால்ய காலத்து நண்பர்கள் சிலருடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தித்தந்ததைக் குறிப்பிடுவேன். குறிப்பாக சண்முகராஜா , திருநாவுக்கரசு, சிவகுமார், விக்கினேஸ்வரன் மற்றும் ராஜரட்னம் ஆகியோரைக் குறிப்பிடலாம். இவர்களில் முதல் மூவரும் ஏழாம் வகுப்பு வரையில் வவுனியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்கள். மற்றவர் ராஜரட்னம் யாழ் இந்துக்கல்லூரியில் 9, 10ஆம் வகுப்புகளில் படித்தவர்.
விக்கினேஸ்வரன் தற்போது திருநெல்வேலி (தமிழகம்) நகரில் வசிக்கிறார். புகைப்படக்கலைஞரான இவர் அங்கு புகைப்பட ஸ்டுடியோ நடாத்தி வருகின்றார். அண்மையில் முகநூல் மூலம் மீண்டும் என்னுடன் தொடர்புகளை ஏற்படுத்திய விக்கினேஸ்வரன் (முகநூலில் Srirham Vignesh என்னும் பெயரில் அறியப்படுபவர்) தனது முகநூல் பக்கத்தில் தன்னைப்பற்றிய அறிமுகத்தைபகிர்ந்திருக்கின்றார்.
அந்த அறிமுகத்தின் மூலம் இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபட்டு வருவதை அறிந்தேன். மகிழ்ச்சி தருவது. அந்த அறிமுகக்குறிப்பின் இறுதியில் இவர் கூறிய விடயம் என்னை ஆச்சரியபட வைத்ததுடன் மகிழ்ச்சியையும் தந்தது. அந்த அறிமுகக் குறிப்பின் இறுதியில் இவர் குறிப்பிட்டிருந்தது இதுதான்:
"எனது இலக்கியத்துறை ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்தவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் 3 - 6ம் வகுப்புவரை என்னோடு படித்த சக மாணவர் ஒருவர்தான்.அவர் 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை,கதை என எழுத ஆரம்பித்துவிட்டார். அதுபோல எழுதவேண்டும் என எழுந்த ஆர்வம் நிறைவேறியது, நான் 11ம் வகுப்பு (+1) படிக்கும்போதுதான். அந்த மாணவர் வேறு யாருமல்ல....கனடாவிலிருந்து வெளிவரும், பிரபல இலக்கிய (இணைய) இதழான ''பதிவுகள்'' இதழின் ஆசிரியர் ''கிரி'' (Navratnam Giritharan) அவர்கள்தான். சமீபத்தில்தான் அவருடைய தொடர்பு (முக நூலில்) கிடைத்தது."
இவரது குறிப்பு அன்றைய காலகட்டத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்து சிறிது மகிழ்ச்சியைத்தந்தது. எனது நாலாம் வகுப்பில் நான் பாடசாலைக்'கொப்பி'யில் தொடர்கதையொன்று கூட எழுதியிருக்கின்றேன். 'மறக்க முடியுமா?' என்று பெயர். ஆனந்த விகடன் கதைகளை வாசித்து விட்டு, அவற்றின் பாதிப்பில் எழுதிய தொடர்கதை. மெரினா பீச்சில் காதலிக்கும் காதலர்களைப்பற்றிய மணியன் பாணிக்கதைகளின் பாதிப்பின் விளைவு அந்தத்தொடர்கதை. அக்காலகட்டத்தில் சில சிறுகதைகளும் அவ்விதம் எழுதியிருக்கின்றேன். 'மழை பெய்து ஓய்ந்தது' என்றொரு மர்மச்சிறுகதை இன்னும் ஞாபகத்திலுள்ளது. அக்காலகட்டத்தில் எனது ஏழாம் வகுப்பில் மட்டக்களப்பில் நடைபெற்ற அகில இலங்கைத்தமிழ்த்தின விழாக் கட்டுரைப்போட்டியில் பங்கு பற்றி முதற் பரிசும் வாங்கியுள்ளேன். என் கட்டுரையொன்று பற்றிய பாராட்டுக் குறிப்பு ஈழநாடு மாணவர் மலரில் வெளியானது என் எழுத்தார்வத்தை மேலும் தூண்டியது. தீபாவளியையொட்டி ஈழநாடு (மாணவர் மலர்) 'தீபாவளி இனித்தது' என்றொரு கட்டுரைப்போட்டியினை மாணவர்களுக்கு நடாத்தியது. அதில் அப்போது வவுனியா மகாவித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நானும் கலந்துகொண்டு கட்டுரையொன்றினை அனுப்பி வைத்தேன். அது பிரசுரமாகாவிட்டாலும், அதனைப்பாராட்டி என்னைப்பற்றிக்குறிப்பிட்டு குறிப்பொன்றினை ஈழநாடு மாணவர் மலர் வெளியிட்டிருந்தது. உண்மையில் அந்தக் கட்டுரைப்போட்டி உயர்தர மாணவர்களை மையமாக வைத்து நடத்தப்பட்டதொன்று. அப்போட்டியில் அப்பொழுது உயர்தர மாணவராகப் பயின்று கொண்டிருந்த கண. மகேஸ்வரனின் கட்டுரை தெரிவு செய்யப்பட்டு வெளியானது ஞாபகத்திலுள்ளது. கண.மகேஸ்வரன் பின்னாளில் நல்லதோர் எழுத்தாளராக உருவானார். இவரது பல சிறுகதைகளை இலங்கையில் வெளியான பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் வாசித்திருக்கின்றேன். பின்னர் என் ஏழாம் வகுப்பில் என் முதற் கவிதையான 'பொங்கலோ! பொங்கல்!' கவிதையினைத் தனது பொங்கற் சிறப்பிதழில் வெளியிட்டு ஊக்குவித்தது கோவை மகேசன் ஆசிரியராகவிருந்த 'சுதந்திரன்' பத்திரிகையே.
விக்கினேஸ்வரனின் முகநூல் அறிமுகக் குறிப்பு மேற்படி ஞாபகங்களை மீண்டும் ஏற்படுத்திவிட்டது. ஒருவர் எழுதுவதற்கு ஏதோ வகையில் என் செயற்பாடுகள் இருந்துள்ளன என்ற விடயம் உண்மையிலேயே மகிழ்ச்சியினைத்தருவதுதான். மேலும் தன் அறிமுகக் குறிப்பில் விக்கினேஸ்வரன் விபரித்திருக்கும் அவரது இலக்கியச்செயற்பாடுகள் அவரது இலக்கியப்பங்களிப்பின் சிறப்பினைப் புலப்படுத்துகின்றன. விக்கினேஸ்வரன் மேலும் மேலும் தன் எழுத்தாற்றலை விரிவு படுத்தி, பல படைப்புகளைத்தருவாரென எதிர்பார்க்கின்றேன்; வாழ்த்துகிறேன்.
Photographic Memory என்று ஒன்று உண்மையிலுண்டா அல்லது இல்லையா என்ற சந்தேகம் விக்கினேஸ்வரனின் நினைவாற்றலை அறிந்த பின்னர் எனக்கு நீங்கிவிட்டதென்பேன். அக்காலகட்டத்தில் நடைபெற்ற பல, நினைவிலேயே இல்லாத நிகழ்வுகளை இவர் விபரித்தபொழுது எனக்குப் பிரமிப்பாகவிருந்தது. இவரது விபரிப்பின் பின்னரே எனக்குப் நினைவில் புதைந்துபோயிருந்த பல விடயங்களை மெல்ல மெல்ல வெளிக்கொணர முடிந்தது. இவர் நல்ல படைப்பாற்றல் மிக்க புகைப்படக் கலைஞராக உருவானதற்குரிய காரணத்தை அறிய முடிகின்றது.
விக்கினேஸ்வரனின் முகநூல் அறிமுகக்குறிப்பினைக் கீழே தருகின்றேன்.
ஶ்ரீராம் விக்னேஷ் (Srirham Vignesh)
"சிறுகதை,கவிதை துறைகளில் ஆர்வம் உண்டு. ''ஆனந்த விகடன்''னில் (1991)ஆறுதல் பரிசும், 'னமல'ரில்(1999) முதல் பரிசும் சிறுகதைக்காக பெற்றுள்ளேன். மேலும், ''தினமலர்'' (நெல்லை) 'வாரமலர் கதை மல'ரில், சில சிறுகதைகளும், ஒரு குறு நாவலும், ஒரு தொடர்கதை ஆகியன எழுதியுள்ளேன். ''கரிசல்காட்டுக் கதைகள்'' (சிறுகதைத் தொகுப்பு) நூலில் எனது சிறுகதை உள்ளது. கவிதைத் துறையில், ''குமரி முரசு''பத்திரிகை என் கவிதைகளுக்கு இடம் தந்தது. ''தமிழ் முரசு'' சஞ்சிகை நடத்திய,''பொற்கிழி கவிதைப் போட்டி''யில், தகுதிகாண் பரிசு கிடைத்தது.
வீரவ நல்லூர் ''வாசகர் வட்டம்'', சேரன்மகாதேவி ''வாசகர் வட்டம்'',வீரவ நல்லூர் ''பாரதியார் கவிமுற்றம்'' , மற்றும் (இலங்கை)''வவுனியா இலக்கிய வட்டம்'' ஆகிய அமைப்புக்கள் நடத்திய, ''கவியரங்கு''களில் பங்குபற்றியுள்ளேன். தவிர, கவிதைத் துறையில்,என்னால் மறக்கமுடியாத (''சாதனை '' என்று சொன்னால் யாரும் தவறாக எண்ணாமல் மன்னித்து விடுங்கள்.) ஒரு செயல்பாடு நடந்தது. கவிஞர்களான - அழகாபுரி அழகுதாசன், சீவல்புரி சிங்காரம் , மற்றும் இருவர் (பெயர் நினைவில் இல்லை. மன்னிக்கவும்.) சேர்ந்து, ''செம்மாங்கனி'' என்னும் பெயரில், ''உலகத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு '' நூல் ஒன்றை (1982ல்) கோலாலம்பூரிலிருந்து வெளியிட்டார்கள். அத்ற்கு,''வன்னி நாடு'' என்னும் (மரபுக்கவிதை) அனுப்பியிருந்தேன். ஈழத்திலிருந்து பல கவிஞர்கள் அனுப்பியதில்,பிரசுரத்துக்கு தெரிவாகி, எனக்கு மனமகிழ்வைத் தந்தது.முதன் முதலில், பிரசுர வடிவில் வந்த படைப்பும் அதுதான். ''செம்மாங்க்னி '' யிலுள்ள ''ஈழத்தார் கவிதை''களை, விமர்சித்து, அங்குள்ள பிரபல பத்திரிகையான,''வீரகேசரி'' யில் வந்த விமர்சனக் கட்டுரையில், மிகச் சிறப்பான கவிதைகள் எனக் குறிப்பிடப்பட்ட, ஏழு கவிதைகளில் இதுவும் ஒன்று........ இச் சம்பவம் நடக்கும்போது எனக்கு வயது 23.
'சிறகுப் பேனா' என்னும் கையெழுத்துப் பிரதியை சில மாதங்கள் நடத்தினேன்.(இப்போது இல்லை). சென்னை, கோடம்பாக்கம் ''தென்னிந்திய திரைப்படக் கல்லூரி'' (S.I.F.I)யில்(1996) படித்துள்ளேன். எனது இலக்கியத்துறை ஆர்வத்துக்கு அடிப்படைக் காரணமாயிருந்தவர் வவுனியா மகா வித்தியாலயத்தில் 3 - 6ம் வகுப்புவரை என்னோடு படித்த சக மாணவர் ஒருவர்தான்.அவர் 4ம் வகுப்பு படிக்கும்போதே கவிதை,கதை என எழுத ஆரம்பித்துவிட்டார். அதுபோல எழுதவேண்டும் என எழுந்த ஆர்வம் நிறைவேறியது, நான் 11ம் வகுப்பு (+1) படிக்கும்போதுதான். அந்த மாணவர் வேறு யாருமல்ல.... கனடாவிலிருந்து வெளிவரும், பிரபல இலக்கிய (இணைய) இதழான ''பதிவுகள்'' இதழின் ஆசிரியர் ''கிரி'' (Navratnam Giritharan) அவர்கள்தான். சமீபத்தில்தான் அவருடைய தொடர்பு (முக நூலில்) கிடைத்தது. அதன் பின்புதான் என்னைபற்றிய தகவல்களை வெளியிடவேண்டும் என்ற எண்ணமும் வந்தது. நன்றி... கிரி.....!"
** இங்குள்ள புகைப்படத்தில் விக்கினேஸ்வரனின் பால்ய காலத்து மற்றும் அண்மைக்காலத்துத்தோற்றங்களைக் காண்கின்றீர்கள்.**
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.