1. இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா!
நாம் வாழும் இக்காலகட்டத்தில் வாழும் மானுட உரிமைப்போராளியான இரோம் சானு சர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் மனித உரிமைகளுக்காகப்போராடும் அனைவரும் அறிந்திருக்க வேண்டியதொன்று. 2.11.2000ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உண்ணாவிரதமிருந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.
2.11.2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கிலுள்ள மலோம் என்னும் ஊரில் இந்தியப்படைத்துறையின் துணைப்படையான 'அசாம் ரைபிள்சி'னால் பத்துப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை எதிர்த்து இந்த உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்ட் இரோம் சானு சர்மிளா. இன்றுவரை தன் முடிவில் எந்தவிதத் தளர்வுமில்லாமல் இருந்து வருகின்றார்.
இவரைப்பற்றி இரா.கலைச்செல்வன் அண்மைய விகடனொன்றில் நல்லதொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அதிலவர் எவ்விதம் அவரை அவரிருக்கும் மருத்துவ மனையில் சந்தித்தது என்பது பற்றியும், இரோம் சானு சர்மிளாவின் தனிப்பட்ட அந்தரங்கள் உணர்வுகள் பற்றியும் (காதல் போன்ற) அவர் எழுதியிருக்கின்றார். அவரது காதல் (இன்னொரு தேசத்தைச் சேர்ந்த ஒருவருடான) காரணமாகப் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்கின்றார். அவர் யாருக்காகப் போராடுகின்றாரோ அந்த மக்களில் பலருக்கே அவரது போராட்டம் பற்றித் தெரியாமலிருக்கின்றது. ஆனால் இவற்றாலெல்லாம் மனம் சோர்ந்து விடாமல், தன் கொள்கைகளுக்கேற்பத் தன் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்றார் இரோம் சானு சர்மிளா.
இவருக்கு வலுக்கட்டாயமாக, மூக்கு குழாய் வழியே உணவு வழங்கப்படுகின்றது. ஆனாலும் இவரது உடலுறுப்புகள் இவரது தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டம் காரணமாகப் பழுதடைந்து போய் விட்டன. மாதவிடாய் கூட இதன் காரணமாக நின்று போய் விட்டது.
போராளி எனச்சந்தேகிக்கப்படும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க உதவும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டுமென்பதே இவரது முக்கியமான கோரிக்கை.
இதுவரை இந்திய மத்திய அரசு இவரது கோரிக்கைகளூக்குச் செவிசாய்க்கவில்லை. தன் அடக்குமுறையினை மணிப்பூர் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்தே வருகின்றது.
தன் போராட்டம் காரணமாகத் தன் இளமையினையே பலிகொடுத்திருக்கின்றார் இவர். நெல்சன் மண்டெலாவின் ஞாபகம்தான் வருகின்றது. இந்தப்போராட்டத்திலிருந்து இவர் வெற்றிகரமாக மீண்டு வரவேண்டும். இவரைப்போன்றவர்களின் அரசியல் தலைமைத்துவம் மணிப்பூர் மக்களுக்குத்தேவை.
இந்திய அரசு மணிப்பூர் மக்கள் மீதான தன் அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும். மனித உரிமைகளுக்கு எதிரான ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச்சட்டத்தினை நீக்க வேண்டும். இதுவொன்றே இரும்புப்பெண்மணி இரோம் சானு சர்மிளா தன் போராட்டத்தினை நிறுத்திட வழிவகுக்கும்.
இச்சமயத்தில் இலங்கை அரசின் பயங்கரவாதத்தடைச்சட்டத்தினை நினைவு கூர்வதும் பொருத்தமானதே. இன்றுவரை அமுலிலிருக்கும் இச்சட்டத்தினால் அதிகம் பாதிப்படைவது இலங்கையில் வாழும் தமிழ் மொழி பேசும் சிறுபான்மையினரே. இச்சட்டமும் நீக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். இலங்கை இயல்பு நிலைக்குத்திரும்புவதற்கு மிகவும் அவசியம். இச்சட்டத்தின் காரணமாகத் தமிழர்கள் பலர் காணாமல் போயிருக்கின்றார்கள்; சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்; ஆயுதப்படைகளினால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இரோம் சானு சர்மிளா பற்றிய விக்கிபீடியாக் கட்டுரை மேலதிகத்தகவல்களைத்தருகின்றது.
இலங்கை அரசின் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றிய குறிப்பு.
2. தமிழகமும், திராவிடக்கட்சிகளும், மூன்றாவது அணியினரும்..
தமிழகத்தைப்பொறுத்தவரையில் திராவிடக்கட்சிகளுக்குக்கிடைத்த வாக்குகள் எண்பது வீதத்துக்கும் அதிகம். அறிஞர் அண்ணாவின் காலத்தில் ஒன்றாக இருந்த கட்சி, இன்று இரண்டாகப்பிளவுண்டு, தமிழக மக்களின் அதிகமானவர்களின் வாக்குகளை அள்ளிக்குவிக்கின்றது. இந்த யதார்த்த நிலையினை உணர்ந்தவர்கள் , தமிழகத்தில் இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்கு மூன்றாவது அணியினரின் வெற்றி என்பதைப்பற்றிச்சிந்திக்கவே மாட்டார்கள். ஆனால் அவ்விதமான மூன்றாவது அணியினர், திராவிடக்கட்சிகளின் குறை நிறைகளைத்தர்க்க பூர்வமாக, புள்ளி விபரங்களுடன் எடுத்துக்கூறி, மக்களை அறிவு மயப்படுத்தி வந்தால், காலப்போக்கில் தமிழகத்திலும் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.
'நாம் தமிழர்' சீமான், விஜயகாந்த போன்றவர்களின் மிகப்பெரிய தவறாக நான் கருதுவது, அவர்கள் தம் உரைகளில் பாவிக்கும் தேசிய வெறி, இனவெறியினைத்தூண்டும் தன்மை மிக்க மொழி, ரவுடிகளைப்போல் நடந்து கொள்ளும் நடத்தை.. என்பவற்றையே. அவ்வித மொழியினை அவர்கள் மிகவும் சர்வசாதாரணமாகவே பாவிப்பார்கள். 'வந்தாரை வாழ வைக்கும் தமிழர்கள்' என்று பெருமைப்படும் மக்கள் மத்தியில், தமிழகத்தைத் தமிழர்தான் ஆள வேண்டும் என்று ஆத்திரத்துடன், இனவெறியுடன் வாதிட்டால் எடுபடுமா? எப்பொழுது எடுபடுமென்றால், உணர்ச்சிவசப்படாமல் தமிழகத்தைத்தமிழர்கள் ஆளுவதிலுள்ள நியாயங்களைத் தர்க்கரீதியாக, எந்தவித இனவெறியுமில்லாமல், பொறுப்பு வாய்ந்த தலைவர் ஒருவரின் பொறுப்பு மிக்க குரலில் எடுத்துரைத்தால் காலப்போக்கில் எடுபடும். சீமானின் ஆத்திரம் மிக்க உரைகளைக்கேட்கும்போது , அவற்றிலுள்ள நியாயங்களையும் மீறி, தொனிக்கும் கோபமும், சண்டித்தனமும், இனவெறியும்தாம் முன்னுக்கு நிற்கின்றன. இந்த வகையான ஆளுமையிலிருந்து அவர் வெளியே ஒரு பொறுப்பு மிக்க தலைவராக வெளிவந்து தன்னை வெளிக்காட்ட வேண்டும்.
விஜயகாந்த்துக்கு அவர் அரசியலுக்கு வந்தபோதிருந்த ஆதரவு இன்று குறைந்திருப்பதற்குக் காரணம் அவரது நடத்தையும், உரைகளில் பாவிக்கப்படும் மொழியும்தாம் என்பது என் கருத்து. குடித்து விட்டு மேடைகளில் தடுமாறி உளறுவதும், எடுத்ததற்கெல்லாம் தொண்டர்கள் மேல் கை வைப்பதும் பொதுமக்கள் மத்தியில் அவரைப்பற்றிய தப்பப்பிராயங்கள ஏற்படுத்தவே வழி வகுக்கும். அவரும் பொறுப்பு மிக்க,கண்ணியம் மிக்க தலைவராகத் தன்னைப் பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும். உண்மையில் மக்களைக்கவரக்கூடிய ஆளுமை அவரது நடிப்பின் மூலம் ஏற்கனவே அவருக்கு அதிக அளவிலுள்ளது. ஆனால் அதனை அவர் உணர்ந்ததாகவோ , முறையாகப்பாவித்ததாகவோ தெரியவில்லை.
இவ்விதமான அணுகுமுறைக்குப் பதில் அவர்கள் தமது திட்டங்களைப்பற்றி, திராவிடக்கட்சிகளிரண்டினதும் குறை, நிறைகளைப்பற்றித் தர்க்கரீதியாக எடுத்துரைத்து, மக்களை அறிவு மயமாக்கி, அரசியல் மயமாக்கி வாக்குகளைப்பெற முயல வேண்டும். அறிஞர் அண்ணா போன்றவர்கள் எவ்விதம் திராவிட முன்னேற்றக்கழகத்தை அதுவரை ஆட்சியிலிருந்த காங்கிரசுக்கு எதிராக, ஓர் இயக்கமாக, அரசியல்மயப்படுத்திக் கட்டியெழுப்பி வந்தார்களோ அவ்விதம் இவர்களும் முயன்று பார்க்க வேண்டும். நீண்ட கால இலக்கினை மையமாக வைத்து, உடனடி இலாப நட்டங்களைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல், தம் நோக்கில் மட்டுமே கண்ணாகவிருந்து , திட்டமிட்டுச் செயலாற்றிட வேண்டும்.
மேலும் அண்ணா தலைமையிலான திமுகவினர் சகல ஊடகங்களையும் (சினிமா, பத்திரிகை , சஞ்சிகைகள்) அனைத்தையும் தம் நோக்கத்தை அடைவதற்காக , நீண்ட காலத்தொலைநோக்கில் பயன்படுத்தினார்கள். பராசக்தி, வேலைக்காரி போன்ற திரைப்படங்கள் வெளியாகி 17 வருடங்களுக்குப் பின்னர்தான் திமுகவினர் ஆட்சியைப்பிடித்தார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
திமுகவினர் ஐம்பதுகளில் , அறுபதுகளில் தம் நூல்கள் மூலம், கட்டுரைகள் மூலம், உரைகள் மூலம் மக்களிடத்தில் பெரும் கிளர்ச்சியினை, ஆர்வத்தினை, சமுதாயச்சீர்கேடுகளை ஒழிக்க வேண்டுமென்ற சிந்தனையை ஏற்படுத்தினார்கள். திமுகவினரின் உரைகளைக்கேட்பதற்காகவே இலட்சக்கணக்கில் மக்கள் கூடினார்கள்.
தமிழகம் மட்டுமல்லாமல் தமிழர்கள் வாழும் உலகின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்கள் மத்தியில் திமுகவினரின் பாதிப்பு அதிகமாகவிருந்தது. என் மாணவப்பருவத்தில் அறிஞர் அண்ணாவின் நூல்களை, குறிப்பாக மதம் எவ்விதம் மக்களைப்பாகுபடுத்தி வைத்திருக்கின்றது என்பதை எடுத்துரைக்கும் கட்டுரைகளை, வாசிப்பதற்காக அலைந்து திரிந்ததை இப்பொழுதும் நினைத்துப்பார்க்கின்றேன். திமுகவினரின் பாதிப்பால் தமிழ் இளைஞர்கள் அண்ணாவின் பெயரால் நூலகங்கள் அமைத்தார்கள். சிரமதானங்கள் போன்ற சமூகப்பணிகளைச்செய்தார்கள். அறிஞர் அண்ணா மறையும் காலம் வரையிலான காலகட்டத்தைத் திமுகவினரின் பொற்காலமென்பேன். கலை, இலக்கிய, அரசியலில் திமுகவினரின் பங்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் முற்போக்கு அம்சங்களுடன் விளங்கியது என்பதை மறுக்க முடியாது.
3. 'டொராண்டோவில் மகிந்த ராஜபக்சவும், முள்ளிவாய்க்காலும்'
இம்முறை காலச்சுவடு சஞ்சிகையில் டொராண்டோ நகரில் சித்தசுவாதீனமற்று (முள்ளிவாய்க்காலின் பாதிப்பும் முக்கிய காரணம்) அலைந்து திரியும் தமிழர் ஒருவரைப்பற்றிக் கவிஞர் சேரன் எழுதியிருந்ததைப்படித்தபோது எனக்கு நான் முன்பு எழுதிய 'மகிந்த ராஜபக்ச' என்னும் சிறுகதையின் ஞாபகம் வந்தது. டொராண்டோ நகரில் இவ்விதம் அலைந்து திரியும் இளைஞர்கள் பலரை நான் சந்தித்திருக்கின்றேன். பார்லிமண்ட்/ ஜெராட் நூலகத்தில் ஒருவரைச் சந்தித்திருக்கின்றேன். நகரின் பல்வேறு பாகங்களில் இன்னுமொருவரை அவ்வப்போது சந்தித்திருக்கின்றேன். மேலும் ஒருவரை சென்ட்கிளயர்/கென்னடிக்கு அண்மையிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் 'பேஸ்மெண்'டில் தங்கியிருக்கும் வீடற்ற இளம் சமுதாயத்தில் ஒருவராகச்சந்தித்திருக்கின்றேன். இவர்களைச்சந்திக்கும் சமயங்களில் நான் அவர்களுடன் உரையாடலை ஏற்படுத்திக்கொள்வேன். ஓரிரு டொலர்களைக்கேட்பார்கள். கொடுப்பேன். அப்பொழுதெல்லாம் மிகவும் சாதாரணமாகவே உரையாடிக்கொண்டு வருவார்கள். ஆனால் அவ்வப்போது அவர்கள் வாயிலிருந்து வரும் ஓரிரு வசனங்கள்தாம் அவர்களது உளநிலையினை வெளிக்காட்டுபவையாக இருக்கும்.
இவ்விதம் கதைத்துக்கொண்டிருந்தபோது மிகவும் சாதாரணமாகக்கதைத்துக்கொண்டு வந்த ஒருவர் மிகவும் உண்மையான நம்பிக்கையுடன் தன்னைச் செயற்கைக்கிரகங்கள் மூலம் இமிகிரேஷன் கண்காணிப்பதாகக் கூறியபோதுதான் அவரது நிலையை உணர்ந்தேன். இன்னுமொருவர் தான் செய்யும் எல்லாவிதச்செயல்களையும் பெருமையுடன் தம்பட்டமடிப்பதுபோல் கூறிக்கொண்டிருந்தார். அவற்றில் LCBO கடைகளில் மதுபானங்களைக் களவெடுப்பதும் அடங்கும். 'மயிரை விட்டான் சிங்கன்' பாணியில் அவர் தன் நடவடிக்கைகளை விபரித்தார். அவரை நான் சில சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கின்றேன். அப்பொழுது அவரிடம் அவரது பெயர் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் கூறினார்: 'மகிந்த ராஜபக்ச' அவர் கேலி செய்வதாக அப்பொழுது கருதி இலேசாக நகைக்கவும் செய்தேன்.
பார்லிமெண்ட் / ஜெராட் நூலகத்தில் சந்தித்தவரிடம் இவரைப்பற்றிக் குறிப்பிட்டபோது அவர் கூறினார்: "ஓ! மகிந்த ராஜபக்சவைக்கூறுகின்றீர்களா?"
அப்பொழுதுதான் உணர்ந்தேன். மகிந்த ராஜபக்ச என்ற அந்த இளைஞர் உண்மையாகத்தான் தன் பெயரைக் கூறியிருந்திருக்கின்றார் என்ற விடயத்தை. இவ்விதம் அலைந்து திரிபவர்கள் பலர் தமக்கிடையில் தொடர்புகளைப்பேணி வருகின்றார்கள் என்பதை.
நண்பர் 'மகிந்த ராஜபக்சவை' ஞாபகப்படுத்துவதற்காகச் சிறுகதையொன்றினை எழுதிப் 'பதிவுகள்' இணைய இதழிலும் வெளியிட்டிருந்தேன். அந்தக் கதைக்கான இணைப்பினைக் கீழே தருகின்றேன்.
ஒருவேளை இந்த 'மகிந்த ராஜபக்ச'வும் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டவரோ? அதனால்தான் தன்னை 'மகிந்த ராஜபக்ச' என்று கூறிக்கொள்கின்றாரோ?
சிறுகதை: "டொரொண்டோ'வில் மகிந்த ராஜபக்ச - -வ.ந.கிரிதரன் -
டொரோன்டோவில் சேர்போன் வீதியும் குயீன் வீதியும் சந்திக்கும் அண்மைய பகுதிகளில் வீடற்றவர்களுக்கான விடுதிகள், 'சல்வேசன் ஆமி' போன்ற இலாப-நோக்கற்று இயங்கும் நிறுவனங்களென்று பல அமைப்புகளைக் காண முடியும். அண்மையிலொரு நாள் என் பணி நிமித்தமாக சேர்போன் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்தேன். வெப்பநிலை 34 பாகை சென்டிகிரேட்டைத் தாண்டி விட்டிருந்தது. தாங்க முடியாத அனல். வியர்வையால் உடல் குளித்துக்கொண்டிருந்தது. காற்றும் கூட அனலுக்கு அஞ்சி அமைதியாகவிருந்தது சூழலை மேலும் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தது. அப்பொழுதுதான் அந்தக் குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது.
"அண்ணை தமிழோ?"
அழைத்தது யாராகவிருக்குமென்று எண்ணியபடியே குரல் வந்த திக்கை நோக்கித் திரும்பினேன். அழுக்கு நிறைந்த கந்தல் ஆடைகளுடன் ஓரிளைஞன்; தமிழ் இளைஞன். உரோமம் மண்டிக் கிடந்த முகம். பிய்ந்து தொங்கிய சப்பாத்துகள்.
"ஓமோம் தமிழ்தான்"
"அண்ணைக்கு என்னோடை கொஞ்சம் கதைக்க நேரம் இருக்கா?"
எனக்கு உண்மையில் நேரமிருக்கவில்லை. இருந்தாலும் அவன் தமிழ் இளைஞனென்ற காரணத்தால் சிறிது நேரம் அவனுடன் கழிக்கலாமென்று எண்ணினேன். அத்துடன் கூறினேன்:
"பரவாயில்லை. நேரமிருக்கு. என்ன விசயம்?"
முழுக்கதையையும் வாசிக்க .. இங்கே
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.