அண்மையில் மறைந்த கமலநாதன்தான் 'சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே?' பாடலை இயற்றிய விடயமே பலருக்கும் அவரது மறைவுக்குப்பின்னர்தான் தெரிய வந்து வியப்பினை ஏற்படுத்தியது. பலரும் இதனை நித்தி கனகரத்தினமே எழுதியதாக நினைத்திருந்தார்கள். நானும் அவ்விதமே எண்ணியிருந்தேன். இது பற்றி வானொலி நிலையமொன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில் நித்தி கனகரத்தினம் அளித்த விளக்கத்தில் தனக்கு இப்பாடலை எழுதியவர் கமலநாதனே என்ற விடயம் 2001இல் தான் தெரிய வந்தது என்று கூறியிருக்கின்றார். அதே சமயம் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான பாடலுக்கு அவரைக்குறிப்பிடுவதுபோல், இந்தப்பாடலையும் தான் இசைமைத்து, மெருகூட்டிப்பாடிப் புகழடைய வைத்ததால் தனக்குத்தான் அந்தப்பெருமை இருக்க வேண்டும் என்னும் கருத்துப்படக் கருத்தொன்றினையும் உதிர்த்துள்ளார். அந்த வானொலி நேர்காணலுக்கான இணைப்பினை எழுத்தாளர் முருகபூபதி மின்னஞ்சல் மூலம் அறியத்தந்திருந்தார். நன்றி திரு. முருகபூபதி அவர்களுக்கு.
http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/chinna-maamiye-controversy
ஒரு பாடலின் இசைக்கு இளையராஜா பொறுப்பாக இருந்தாலும், அதற்குரிய பாடலை எழுதியவரின் பெயரை அவர் மறைப்பதில்லையே. அது போல் இந்தச் 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடலை இசையமைத்துப்பாடிப் புகழடைய வைத்தவர் நித்தி என்றாலும், அப்பாடலை எழுதிய பாடலாசிரியரான அமரர் கமலநாதனின் பெயர் உரிய முறையில் குறிப்பிடப்பட்டுக் கெளரவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.
2001ஆம் ஆண்டிலிருந்து நித்தி கனகரத்தினத்துக்குத் தெரிந்திருப்பதால், அதன் பிறகு நடைபெற்ற நித்தியின் நிகழ்ச்சிகள் , நேர்காணல்கள் எல்லாவற்றிலும் பாடலாசிரியர் கமலநாதனின் பெயர் குறிப்பிடப்பட்டு , நிகழ்ச்சிகளில் உரிய முறையில் விளக்கமளிக்கப்பட்டு, . அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் நித்தி கனகரத்தினம் அவர்களுடனான எழுத்தாளர் முருகபூபதி அவர்களின் நேர்காணலொன்று 2007 காலப்பகுதியில் பல இணைய இதழ்களில் பிரசுரமாகியது; மீள்பிரசுரமாகியது. அதில் ஓரிடத்தில் கூட நித்தி கனகரத்தினம் அவர்கள் அப்பாடலை எழுதிய கமலநாதன் அவர்களைப்பற்றி ஓரிரு வார்த்தைகள்கூடக் கூறியிருக்கவில்லை என்பதையும் அண்மையில் அந்நேர்காணலை வாசித்தபொழுது அவதானித்தேன்.
இது தவிர, அண்மையில் யு டியூப்பில் தீபம் தொலைக்காட்சி சார்பாக இளைய அப்துல்லாஹ் (அனஸ்) அவர்கள் நித்தி கனகரத்தினத்துடன் நடாத்திய நேர்காணலொன்றினைப் பார்க்கும், கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதில் இளைய அப்துல்லாஹ் அவர்கள் தமிழகத்தில் பந்தயம் திரைப்படத்தில் ஏ.இ.மனோஹரன் 'சின்ன மாமியே' பாடலைத்தான் எழுதியதாகக்குறிப்பிட்டது பற்றிக்கேட்டபபோது அதற்கு ஏ.இ.மனோஹரன் அவ்விதம் செய்தது தவறு என்று விமர்சனம் செய்திருந்தார். ஆனால் அச்சந்தர்ப்பத்தில் கூட அவர் 'சின்ன மாமியே' பாடலை எழுதியவர் கமலநாதன் என்று குறிப்பிடவில்லை. பாடலை எழுதியவர் கமலநாதன். இந்நிலையில் நித்தி கனகரத்தினம் ஏ.இ.மனோஹரன் அந்தப் பாடலைத் தான் எழுதியதாகக்குறிப்பிட்டது பற்றிக் கண்டனம் செய்வது ஆச்சரியமானது. அவர் 'அந்தப் பாடலை எழுதியவர் கமலநாதன். ஏ.இ.மனோஹரனல்லர்' என்றல்லவா கூறி இருந்திருக்க வேண்டும்.
மேலும் அந்த நேர்காணலில் 71 இல் தான் வெளியிட்ட சின்ன மாமியே பாடலுக்கான இசைத்தட்டு சிங்கப்பூர் , மலேசியா போன்ற நாடுகளில் மிகுந்த புகழ் அடைந்த விடயம் பற்றிக் குறிப்பிடுகின்றார். அந்த இசைத்தட்டில் பாடலை எழுதியவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது ஆராயப்பட வேண்டிய விடயங்களிலொன்று. இவ்விதமாக அப்பாடலின் மூலம் நித்தி கனகரத்தினம் ஆதாயம் பெற்றுள்ளது தெரிய வருகிறது. ஏ.இ.மனோஹரனும் இந்தப்பாடலின் மூலம் இலாபம் ஈட்டியிருக்கின்றார். தமிழகச்சினிமாவும் உழைப்பதற்கு அந்தப்பாடலைப்பாவித்திருக்கின்றது. இந்நிலையில் இவர்கள் யாவரும் இந்தப்பாடலின் சொந்தக்காரருக்கு அதனைப்பாவித்ததற்காகக் பணம் கொடுத்திருக்க வேண்டும். இவற்றையெல்லாம் கொடுக்காமல் எவ்வளவு இலகுவாக இவர்கள் அனைவரும் ஒருவரின் பாடலை உழைப்பதற்குப் பாவித்திருக்கின்றார்கள்.
திரைப்படப்பாடலொன்றினைக்கேட்கும்போது அதன் இசையமைப்பாளரை நினைத்துக்கொள்கின்றோம். அதனைப்பாடியவர்களை நினைத்துக்கொள்கின்றோம். அதனை எழுதியவர்களை நினைத்துக்கொள்கின்றோம். எல்லாருடைய கூட்டு முயற்சியில்தான் அந்தப்பாடல் வெற்றி பெற்றிருக்கின்றது என்பதையும் நினைத்துக்கொள்கின்றோம். ஆனால் பட்டி தொட்டியெங்கும், இலங்கை, தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் புகழ் பெற்ற துள்ளிசைப்பாடல் 'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' ஆனால் அதனை எழுதியவரின் பெயரை அறிவிக்காமல் பலரும் பல ஆண்டுகளாகப்பாடிப் பயன் அடைந்திருக்கின்றார்கள். பாடலாசிரியருக்குக் கிடைக்க வேண்டிய பலன் கிடைக்காமல் போயிருக்கின்றது. முன்பே இந்தப்பாடலை எழுதியவர் கமலநாதன் என்பது தெரிந்திருந்தால் அவரைப்பலர் பாடல் எழுத அழைத்திருக்கக் கூடும். தமிழகச்சினிமாவிலும் பாடல் எழுத வாய்ப்புகள் வந்திருக்கும். அவர் பெயர் மறைக்கப்பட்டதால் அவர் இழந்தது ஏராளம்.
'சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?' பாடலின் ஆசிரியர் நித்தி கனகரத்தினம் இல்லையென்பதால் ஈழத்துத் தமிழ்ப்பொப் இசைக்கான நித்தி கனகரத்தினத்தின் பங்களிப்பு எந்த வகையிலும் குறைந்து விடப்போவதில்லை. ஆனால் அதற்காக, 'சின்ன மாமி' பாடலின் ஆசிரியரை அறிமுகப்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் அதனைச்செய்யாமல் இருந்ததும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. பாடலின் ஆசிரியரை உரிய முறையில் அறிமுகப்படுத்தி, கெளரவித்திருந்தால் நித்தி கனகரத்தினத்தின் புகழ் இன்னும் மேலேறியிருந்திருக்கும். அதனைச்செய்யத்தவறி விட்டார் நித்தி. அதுவொரு களங்கமாகவே தொடர்ந்தும் இருக்கப்போகின்றது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.