ஜும்பா லாகிரியின் 'திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது'
'Interpreters Of Maladies.' சிறுகதைத்தொகுதிகாகப் புலியட்சர் விருதினைப் பெற்றவர் ஜும்பா லாகிரி. இவரது எழுத்து நடை, கதைப்பின்னல் ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் சுவையாக, வாசிப்பவர் நெஞ்சினை அள்ளும் வகையில் அமைந்திருக்கும் இவரது எழுத்து நடை.
இவரது மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதையொன்று அன்றிலிருந்து இன்று வரை மனதில் பசுமையாகவுள்ளது. அது மேற்படி தொகுப்பிலுள்ள சிறுகதைகளிலொன்றான 'திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது' (When Mr.Pirzada Came to Dine.) என்னும் சிறுகதை திரு.பிர்ஷடா கிழக்குப் பாகிஸ்தானைச்சேர்ந்தவர். பாகிஸ்தான் அரசின் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா வந்திருப்பவர். அவரது குடும்பத்தினர் டாக்காவிலுள்ள அவரது மூன்று மாடி வீட்டில் வசித்து வருகின்றார்கள், அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் உயிரியலில் விரிவுரையாளராக இருப்பவர். திருமணமாகி இருபது வருடங்களாக அவருக்கு ஆறிலிருந்து பதினாறு வரை வயதினரான ஏழு பெண் குழந்தைகள். எல்லாருடைய பெயரும் A என்னும் முதல் எழுத்தில் ஆரம்பமாகும்.
திரு.பிர்ஷ்டா அமெரிக்காவிலிருக்கும் சமயம் பாகிஸ்தான், சுயாட்சி கேட்டுப்போராடிய கிழக்குப் பாகிஸ்தான் மீது அடக்குமுறைகளைக்கட்டவிழ்த்து விடுகிறது. இக்காலகட்டத்தில் கிழக்குப்பாகிஸ்தானில் மக்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்படுகின்றனர். இக்காலகட்டத்தில் நடைபெறும் கதைக்களத்தைக்கொண்ட கதை 'திரு.பிர்ஷ்டா உணவருந்த வந்தபோது.'
அவர் ஊரில் தன் குடும்பத்தினரின் நிலை அறியாது கவலையுறும் சமயம் ஒவ்வொரு நாள் மாலையும் அமெரிக்க நகரொன்றில் வசித்து வரும் இந்தியத்தம்பதியினரின் வீட்டுக்கு வருவது வழக்கம். அந்த இந்தியத் தம்பதியினருக்குப் பத்து வயதில் ஒரு பெண் குழந்தை. அந்தப் பெண் குழந்தையின் பார்வையில் கதை நகர்ந்து செல்கிறது. அந்தப்பெண் குழந்தைதான் கதையின் கதைசொல்லி.
பங்களாதேஷ் உருவாவதற்குக் காரணமான அந்த யுத்தக் கால்கட்டத்தில் திரு. பிருஷ்டா தன் குடும்பத்தவர்களின் நிலை எதுவும் பற்றி அறியாது துயருறும் உளவியலை , அவருடன் சேர்ந்து கதை சொல்லியான அந்தக்குழந்தை அடையும் உணர்வுகளை அற்புதமாக விபரித்துச்செல்லும் கதாசிரியரின் எழுத்துச்சிறப்பு மறக்க முடியாதது.
இறுதியில் திரு.பிர்ஷ்டா யுத்தம் முடிவுற்று, பங்களாதேஷ் உருவாகிய சமயம் டாக்கா திரும்புகின்றார். நல்ல வேளையாக அவரது குடும்பத்தினர் யுத்தச்சூழலிலிருந்து தப்பி அவருடன் இணைந்து விட்டனர். கதைசொல்லியான அந்தக் குழந்தையுடன் சேர்ந்து நாமும் நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றோம்.
சிறுகதையில் நடுவில் அமெரிக்க நகரில் அக்டோபர் இறுதியில் நடைபெறும் ஹலோவின் பற்றியொரு சம்பவம் விபரிக்கப்படுகிறது. ஹலோவின் அன்று குழந்தைகள் எல்லாரும், தம்மை முகமூடிகள் கொண்டு அலங்கரித்து, அயலிலுள்ள வீடுகளுக்குச் சென்று அங்கு கொடுக்கப்படும் இனிப்பு வகைகளைச்சேகரித்து வருவார்கள். அவ்விதம் கதை சொல்லியான பெண் குழந்தையும் செல்வதை, ஊரிலுள்ள தன் ஏழு பெண் குழந்தைகளையும் பிரிந்திருக்கும் திரு. பிர்ஷ்டா மிகவும் எச்சரிக்கையுடன் இவ்விதம் வெளியே செல்லும் பெண் குழந்தைக்கு ஆபத்து ஏதாவதும் ஏற்பட்டு விடாதா என்று அணுகுவார். இத்தருணத்திலான அவரது உளவியலை மிகவும் மனதைத்தொடும் வகையில் கதாசிரியர் விபரித்திருப்பார். அவரது எச்சரிக்கை கலந்த பய உணர்வுகளைப்பார்த்து கதை சொல்லியான அந்தப்பெண் குழந்தை கூறுவாள்: "Don't worry!" அதுதான் அக்குழந்தை அவருடன் பேசும் முதல் வார்த்தை.
அற்புதமான சிறுகதையான ''திரு.பிர்ஷடா உணவுண்ண வந்தபோது' கதையினை , சந்தர்ப்பம் கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.