[ வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதி. - பதிவுகள். ]
எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் முடிவு!
எனக்குப் பொதுவாக எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு, சுயசரிதை நூல்கள் ஆகியவற்றை வாசிப்பது பிடிக்கும். அவற்றில் அவர்களின் பல்வேறுபட்ட ஆளுமை இயல்புகள், வாழ்க்கைப் போராட்டங்கள், அவற்றை அவர்கள் எதிர்கொண்ட விதங்கள் எனப் பல்வேறு பட்ட விடயங்களை அறிந்து கொள்ள முடியுமென்பது முக்கிய காரணம். அண்மையில் இவ்விதமான பல்வேறு ஆளுமைகள் பற்றிய எழுத்தாளர் ஜெயமோகனின் 'இவர்கள் இருந்தார்கள்' என்னும் , நற்றிணை பதிப்பாக வெளிவந்த நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதில் எழுத்தாளர் சு. சமுத்திரம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்த தகவலொன்று நெஞ்சினை ஓங்கி அறைந்தது. அது:
"..சென்னையில் ஒருசாலை விபத்தில் சிக்கிய சமுத்திரம் சாலையில் நெடுநேரம் நினைவிழந்து ரத்தம் பெருகக்கிடந்திருக்கின்றார். அவரை அருகே இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டெ சென்று சேர்த்திருக்கின்றார்கள். அவர் யாரென்று தெரியவில்லை என்பதனால் அவரிடம் கட்டணம் வசூலிக்க முடியாது என எண்ணி அவசியமான அறுவைச் சிகிச்சை செய்யாமல் இரண்டரை மணி நேரம் சும்மாவே ஒரு கட்டிலில் போட்டிருக்கின்றார்கள். உறவினர்கள் வந்து பார்க்கும்போது அவர் இறந்திருந்தார்."
கதைகளில் வருவது போலவே அவர் வாழ்க்கை முடிந்திருக்கின்றது. வறிய மக்களுக்காக, விளிம்பு நிலை மனிதர்களுக்காக, மிகவும் ஆக்ரோசத்துடன் தன் பேனாவைப் பாவித்தவர் எழுத்தாளர் சமுத்திரம். இத்தகவல் மட்டும் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவருக்கேற்பட்ட இந்த நிலை மானுட இனம் குறிப்பாக உயிரைக் காப்பாற்றுவதற்காகப் பட்டம் பெற்ற வைத்தியர்கள் வெட்கித்தலை குனிய வேண்டியதொன்று. அந்த மருத்துவ நிலையம் முதலில் செய்திருக்க வேண்டியது விபத்தில் பாதிக்கப்பட்டு அங்கு வந்திருந்த அந்த மனிதனின் உயிரைப் பாதுகாத்திருக்க வேண்டியது. அதன் பிறகுதான் அவர் யார், பணமுள்ளவரா அல்லது வறியவரா என்பதெல்லாம்.
குப்பிழான் ஐ.சண்முகத்தின் 'தலை மன்னார் ரெயில்'
ஆங்கிலேயர்களால் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் தமிழகத்தமிழர்கள், ஏனைய மொழிபேசும் இந்தியர்கள் எனப்பலர் கூலி அடிமைகளாக இலங்கை, கரிபியன் நாடுகள் எனப்பல நாடுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இவரகளில் இலங்கையின் மலையகத்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்காக அடிமைகளாகக்கொண்டு செல்லப்பட்ட தமிழகத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி நாகரிக உலகம் நாணப்பட வேண்டியதொன்று. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். அவ்விதம் அவர்கள் நாடற்றவர்களாக்கப்படுவதற்கு இலங்கையின் பூர்வீகத்தமிழர்களும் உடந்தையாக இருந்ததுதான் வேதனையானது. இந்திய, இலங்கை அரசுகளால் ஒப்பந்தங்கள் போடப்பட்டாலும் அவை முறையாக அமுல்படுத்தப்பட்டனவா? ஒரு நாட்டில் ஐந்தாறு வருடங்கள் சட்ட விரோதமாக இருந்தவர்களுக்கே நாடுகள் பல மன்னிப்பை வழங்கித் தம் குடிமக்களாக ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் இலங்கையின் தோட்டங்களில் தம் இரத்தத்தை உரமாக்கித் தம்மை அழித்த மக்களை நாட்டற்றவர்களாக்குவதற்கே இந்தியா அனுமதித்திருக்கக்கூடாது. இலங்கைத் தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்திய அரசியல் அமைப்புகள் ஆதரவளித்திருக்கக்கூடாது. தமிழக அரசுகள் மலையகத்தமிழர்களின் உரிமைகளுக்காக உறுதியாகக்குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
மலையகத்தமிழர்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் மலையகத்தைச் சேராத படைப்பாளிகளால் பல புனை கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அ.செ.மு.வின், அறிஞர் அ.ந.கந்தசாமியின் சிறுகதைகள், அ.ந.க.வின் கவீந்திரன் என்னும் பெயரில் வெளியான கவிதைகள், டாக்டர் நந்தியின் மலைக்கொழுந்து (நாவல்). டாக்டர் தி.ஞானசேகரனின் 'குருதிமலை' (நாவல்) எனப்புனைவுகள் பல பின்னப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகத்தின் மலையக மக்களின் துயரை வெளிப்படுத்தும் சிறுகதையொன்றினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. மல்லிகையின் மாசி 1970 இதழில் பிரசுரமான அவரது 'தலைமன்னார் ரெயில்' என்ற அச்சிறுகதை காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியான அவரது சிறுகதைத்தொகுப்பான 'ஒரு பாதையின் கதை'யிலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இலங்கை , இந்திய அரசுகளால், மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியற் தலைமைகளால் நாடற்றவர்களாக்கப்பட்ட மலையகத்தொழிலாளர்கள் தோட்டத்தொழிலாளர்களாக அடையும் துயரை வெளிப்படுத்தும் புனைவுகள் பல. ஆனால் குப்பிழான் ஐ.சண்முகத்தின் 'தலைமன்னார் ரெயில்' சிறுகதை நாட்டற்றவர்களாக்கப்பட்ட மலையக மக்கள் அதனால் அடையும் துயரினை வெளிப்படுத்துகிறது. தன் வாழ்வின் இறுதிக்கட்டத்திலிருக்கும் ஒரு மூதாட்டி, தான் வாழ்ந்த மண்ணிலிருந்து பிரிந்து செல்கின்றாள். இளைஞனொருவன் தன் அன்புக் காதலியைப்பிரிந்து செல்கின்றான். குழந்தையொன்று தன் தாயுடன் தன் பாட்டியிடமிருந்து பிரிந்து செல்கின்றது. இவற்றையெல்லாம் கதை சொல்லி தான் செல்ல வேண்டிய புகையிரதத்தைத் தவற விட்ட காரணத்தால், அடுத்த 'ரெயிலு'க்காகக் காத்து நிற்கும் சமயம் அவதானிப்பதன் மூலம் கூறுவதாக இச்சிறுகதை விபரிக்கின்றது. அவர்களை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் ரெயில் புறப்படுவதுடன் கதை முடிவுக்கு வருகின்றது.
குப்பிழான் ஐ.சண்முகனின் இச்சிறுகதை அளவில் சிறியது. ஆனால் வாசிப்பவர் நெஞ்சினை தாம் வாழ்ந்த மண்ணை விட்டுப் பிரியும் அந்த மக்களின் துயரம் கூர் முள்ளெனத் தைத்து விடுகிறது.. உதாரணத்துக்குச் சிறுகதையிலிருந்து சில வரிகளைக் குறிப்பிடலாம்:
" அந்தக் கிழவியில் என் கண்கள் படிந்தன. எழுபதையோ எண்பதையோ அவள் தாண்டி விட்டிருந்தாள்; வாழ்க்கையின் அனுபவச்சுருக்கங்கள் அவள் முகத்தில் பிரதிபலிக்க ஏதோ நோயினால் அவஸ்தைப்படுபவள் போல் அவளிருந்தாள். காதில் பெரிய துளைகளின் கீழ்த்தொங்கிய கடுக்கண்கள் அசைந்தாட ஏதோ தன்பாட்டிலேயே அணுங்கினாள். பூமிக்குப் பாரமாய் நெடுநாள் இருக்க முடியாத, பூமியோடு இரண்டறக்கலக்க வேண்டிய அவளும் இந்தியாவுக்குப் போகின்றாள். அல்லது போகடிக்கப்படுகின்றாள். மனிதாபிமானம் மிகுந்த மனித உரிமைகளை மதிக்கும் இன்றைய உலகில் மண்ணோடு மண்ணாகப் போகும் அவள் தான் பிறந்த இந்திய மண்ணில் சங்கமமாகப்போகின்றாள். தான் வளர்ந்த தான் வாழ்ந்த மண்ணில் தன்னால் வளர்க்கப்பட்ட தேயிலைச்செடிகளுக்கு அவள் உரமாகக் கூடாதாம். இந்த உலகம் மனிதாபிமானமுள்ள உலகமாம்.
எனக்குச் சிரிப்பு வந்தது. வேதனை கலந்த சிரிப்பு.
என் மனம் அவளைச்சுற்றி வட்டமிட்டது. அவள் இங்கு எப்படி வாழ்ந்திருப்பாளென நான் கற்பனை செய்து பார்த்தேன். பனியிலும் , குளிரிலும், வெயிலிலும், மழையிலும் , புயலிலும் மாளாத உழைப்பு. இரவினில் அவள் கணவனுடன் 'மங்கியதோர் நிலவினிலே..' அனுபவங்கள்; தந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவிய நாட்டின் நினைவுகள் பிள்ளை குட்டிகள், பேரன் , பேத்திகள். இன்ப துன்பங்கள்..
நான் பெருமூச்சு விட்டேன்..."
கதை சொல்லி மட்டும் பெருமூச்சு விடவில்லை. தலைமன்னார் ரெயிலும் உஸ்- உஸ்சென்று பெருமூச்சு விட்டுக்கொண்டு விரைவதுடன் கதையும் முடிவுக்கு வருகின்றது. அத்துடன்முதற் கதையாக 'தலைமன்னார் ரெயில்' சிறுகதையே தொகுப்பில் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நாடற்றவர்களாக்கப்பட்டவர்களுக்கு நாடுகள் ஏற்படுத்திய ஒப்பந்தங்கள் அம்மக்களை வாழ்ந்த நாட்டிலிருந்து மட்டும் பிரித்துவிடவில்லை. உறவுகளையும் அவர்களிடமிருந்து பிரித்து விடுகின்றது. அதனை வெளிப்படுத்தும் சிறுகதை என்னும் வகையில் 'தலைமன்னார் ரெயில்' முக்கியமானதொரு சிறுகதை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.