புகலிடத் தமிழ் இலக்கியத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டதும், அதிகமானவர்களின் கவனத்தைப் பெற்றதுமாக ஷோபாசக்தியின் 'கொரில்லா' நாவலைக் குறிப்பிடலாம். இந்த நாவல் கூறப்பட்ட மொழியினாலும், கூறப்பட்ட விடயங்களினாலும், கூறப்பட்ட முறையினாலும் பலரைக் கவர்ந்திருக்கலாமென நினைக்கின்றேன். கதை சொல்லி பேச்சுத் தமிழைப் பாவித்துக் கொரில்லாவின் கதையினைக் கூறியிருக்கின்றார். இவ்விதமான நடையினை, மொழியினைப் பாவிப்பதிலுள்ள அனுகூலம் இலக்கணம் பற்றியெல்லாம் அதிகம் கவனிக்கத்தேவையில்லை. அவ்விதம் கூறும்போது பாத்திரங்களை அவர் விபரிக்கும் விதம் வாசிப்பவருக்கு ஒருவித இன்பத்தினை எழுப்பும். அதன் காரணமாகவே பலருக்கு இந்த நாவல் பிடித்திருப்பதாக உணர்கின்றேன். பேச்சு வழக்கில் ஒருவருக்கொருவர் உரையாடும்பொழுது 'மசிரை விட்டான் சிங்கன்', 'ஆள் பிலிம் காட்டுறான்' போன்ற வசனங்களைத் தாராளமாகவே பாவிப்பது வழக்கம். அவ்விதமானதொரு நடையில் கொரில்லாவின் கதை விபரிக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கதையில் ஈழத்து விடுதலைப் போராட்ட நிகழ்வுகள், புகலிட நிகழ்வுகள் ஆகியவை விபரிக்கப்பட்டுள்ளன.
அந்தோனிதாசனின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான மேன்முறையீட்டுக் கடிதத்துடன் நாவல் ஆரம்பமாகின்றது. கொரில்லா காட்டாற்ற ஏசுதாசன், அவனது மகனான கொரில்லா ரொக்கிராஜ் ஆகியோரின் வாழ்க்கை கூறப்படுகின்றது. ஒரு காலத்தில் சண்டியர்களின் ஆதிக்கம் நிலவிய யாழ்ப்பாணக் கிராமங்களில் பின்னர் இயக்கங்களின் வருகை சண்டியர்களின் ஆதிக்கத்தினை ஒழித்து, அதற்குப் பதிலாக இயக்கத்தவர்களின் ஆதிக்கத்தினைக் கொண்டுவருகின்றது. இந்தக் கொரில்லா நாவல் பதிவு செய்யும் விடயங்களில் இதுவுமொன்று. அடுத்தது பொதுவாக இயக்க நடவடிக்கைகளை விபரிக்கும் புனைவுகளில் நா.பாரத்தசாரதியின் புனைகதைகளில் நடமாடும் இலட்சிய மாந்தர்களைப் போல் பாத்திரங்களைச் சித்திரிப்பதுதான் வழக்கம். ஆனால் கொரில்லாவில் வரும் இயக்கத்தவர்களும், இயக்க நடவடிக்கைகளும் மிகவும் யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. இயக்கத்தவர்கள் குறை, நிறைகளுடன் நடமாடுகின்றார்கள். அவர்களின் நடவடிக்கைகள் விமர்சிக்கப்படுகின்றன. சமூக விரோதிகளென்று தாழ்த்தப்பட்டவர்கள் ஆரம்பத்தில் கொல்லப்படுவது, தமிழ் அரசியல்வாதிகள், இயக்கங்கள் எல்லாரும் சாதிய அடிப்படையில் இயங்குவது, சக இயக்கங்களுடனான ஆயுதரீதியிலான முரண்பாடுகள், புகலிடத்தில் தொடரும் அரசியல் படுகொலைகள், புகலிட வாழ்வின் பாதிப்புகளால் சிதைவுறும் லொக்காவின் குடும்பம் (இதனை ஒரு குறியீடாகவே கருதலாம்).
முதல் பகுதியில் அந்தோனிதாசனின் மேன்முறையீடும், அடுத்த பகுதியில் ரொக்கிராஜின் வரலாறும் கூறும் நாவலின் அடுத்த பகுதியில் ரொக்கிராஜும், அந்தோனிதாசனும் ஒருவரே என்று வருகின்றது. ஆனால் கதை சொல்லி யார்? அவருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? கதை சொல்லி செயற்கைக் காலுடன் நாவலில் வருகின்றார். அவர் எவ்விதம் தனது காலொன்றினை இழந்தார்? அதற்கான விடையெதனையும் நாவல் வெளிப்படுத்தவில்லை.
நாவலின் இறுதியில் லொக்கா என்னும் பாத்திரம் படுகொலை செய்யப்பட்டதாக வருகிறது. உடனேயே லொக்கா காவற்துறையினரின் பாதுகாப்பிலிருப்பதும் வருகிறது. அவர் தனது மனைவியை தனது துனிஷிய நண்பனான ரிடாவுடன் பாலியல் உறவு கொள்வதைக் கண்ட ஆத்திரத்தில் படுகொலை செய்துவிடுவதும் விபரிக்கப்படுகின்றது.
இவ்விதமாகச் செல்லும் நாவல் இறுதியில் பாரிசில் சபாலிங்கத்தின் படுகொலையுடன் முடிவடைகின்றது. நாவலின்படி கதை சொல்லியும் , இன்னுமொருவரும் தான் சபாலிங்கத்தைச் சந்திப்பதாக வருகின்றது. மற்றவர் வாசலை மறைத்து நிற்க , சபாலிங்கம் படுகொலை செய்யப்படுவதாக வருகின்றது. அவ்வாறென்றால் கதை சொல்லி யார்? அவரா சபாலிங்கத்தைக் கொன்றார்?
சபாலிங்கத்தின் கொலை நாவலில் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தெரிகின்றது. நாவல் அந்தோனிதாசனெனும், 'கொரில்லா' என்றழைக்கப்படும் ரொக்கிராஜின் கதை. நாவல் முழுவதும் அவனது கதையே விபரிக்கப்படுகிறது. முடிவு மட்டும் சபாலிங்கத்தின் படுகொலையுடன் அமைந்திருக்கின்றது.
ஒருவர் கதை சொல்லும்போது சம்பவங்களை மாறி மாறிக் கூறுவது வழக்கம். உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற 83 இனக்கலவரத்தைப் பற்றிக் கூறும் ஒருவர் 58 கலவரத்து நிகழ்வுகளை இடையில் கூறலாம்; 77 கலவர நிகழ்வுகளை விபரிக்கலாம்; 81 யாழ்நகர் எரிப்பினை நினைவுபடுத்தலாம். மீண்டும் 83ற்கே திரும்பலாம். இது சாதாரணமானதுதான். இதற்காக இவ்விதமான கதை சொல்லலை பின்நவீனத்துவக் கூறென்று கூறலாமா?
இந்நாவலின் தலைப்பு 'கொரில்லா'. நாவல் சண்டியன் கொரில்லாவையும் (Gorilla) அவனது மகனான 'கெரில்லா'வையும் (guerillaa) பற்றிக் கூறுகின்றது. ஊரவர்களால கெரில்லாவும் கொரில்லாவென்றே அழைக்கப்படுகின்றான். பொதுவாகவே தமிழர்கள் கெரில்லாவையும் கொரில்லா என்றே தவறுதலாக அழைப்பதை வாசித்திருக்கின்றேன்; கேட்டிருக்கின்றேன். நாவலுக்கு எதற்காக ஆசிரியர் கொரில்லா என்று பெயரிட்டார்? கொரில்லா ஒரு குறியீடாகப் பாவிக்கப்பட்டிருந்தால் நாவலில் அது ஆழமாகச் சித்திரிக்கப்படவில்லை என்றே தென்படுகிறது. நாவலில் வரும் பாத்திரங்களிரண்டுக்கு கொரில்லா என்று பெயர் வருவதாலோ, அல்லது அப்பாத்திரங்களிலொன்று கெரில்லாவாக இருப்பதாலோ கொரில்லா என்று நாவலுக்குப் பெயரிட்டிருந்தால் அது ஆழமானதாக எனக்குப் படவில்லை.
கொரில்லா தமிழில் பெற்ற வரவேற்பை ஆங்கில மொழியில் அல்லது ஏனைய மொழிகளில் பெறுமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் தமிழில் பாவிக்கப்பட்ட சுவையான பேச்சு மொழி ஏனைய மொழிகளில் சாதாரண மொழிவழக்காகப் போய்விடுவதால்தான்.
என்னைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தீவுப்பகுதிக் கிராமமொன்றின் மீது ஈழத்துத் தமிழர்களின் போராட்ட அரசியல் ஏற்படுத்திய பாதிப்புகளை விபரிக்கும் சம்பவங்களின் கோவையாகவே கொரில்லா இருக்கிறது.
நாவலின் ஆரம்பத்தில் தொடரும் என்று வருகிறது. பின்னரும் பகுதிகளுக்கிடையில் தொடரும் என்று வருகிறது. இவ்விதம் நாவல் பிரிக்கப்பட்டிருப்பது நாவலின் புதிர்த்தன்மையினை அதிகரிப்பதற்காகவா அல்லது ஏதாவது காத்திரமான காரணமொன்றிற்காகவா என்பது புரியவில்லை.
நாவலில் ஆரம்பத்தில்வரும் அந்தோனிதாசனின் மேன்முறையீட்டுக் கடிதம் மேற்கு நாடுகளில் நிலவும் அகதிகள் பற்றிய சட்டங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றது..
"நான் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட ஆபத்துகளைச் சுட்டிக்காடிய பின்புங்கூட அவற்றிற்கு ஆதாரங்கள் எதையும் நான் தங்களுக்குக் காட்டாதபடியால் அந்த ஆபத்துகள் ஆபத்துகளே இல்லையென்ற முடிவுக்கு நீங்கள் வந்திருப்பது வருத்தத்திற்குரியது. ஐயா எங்கள் நாட்டில் எல்லாம் இராணுவம் ஒரு தமிழரை வெட்டிவிட்டு 'நாங்கள்தான் வெட்டினோம்' என்று ஒரு சான்றிதழை வெட்டப்பட்டவருக்கு வழங்குவதில்லை.' என்ற அக்கடிதத்தில்வரும் வரிகள் மேற்கு நாடுகளில் நிலவும் அகதிகள் பற்றிய நடைமுறைகளை விமர்சிக்கின்றன. இதனால்தான் அகதிகள் அகதிக்கதை கட்ட நிர்ப்பந்தத்துக்குள்ளாகின்றார்கள்.
அண்மையில் கேதரின் பெல்ஸியின் 'பின் அமைப்பியல் மிகச் சுருக்கமான அறிமுகம்' (அழகரசனால் மொழிபெயர்க்கப்பட்ட) நூலில் வரும் 'ஓர் எழுத்து நடை என்கிற அளவில் சந்தைகளில் இன்று பிரபல்யமாகி, வாசகர்களுக்குச் சுகத்தைக் கொடுத்துப் பெருமளவு லாபம் ஈட்டும் ஒருவகை பின் நவீனத்துவமும் நம்மிடையே இருக்கிறதென லியோதார்த் கூறுகின்றார்.' என்ற வரிகளை வாசித்தபொழுது எனக்கு கொரில்லா நாவலின் நடை ஞாபகத்துக்கு வந்தது எந்தவிதக் காரணமுமற்ற தற்செயலாகவிருக்கலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.