கரும்போர்வை போர்த்திக் கிடக்குது
அலைகளற்ற நீலவண்ண ஆழி.
படகோட்டியற்ற படகின் மீது
பயணிக்க நெடுநாள் ஆசை
கொண்டான் கவிஞனொருவன்.
ஆழியின் ஆழத்தே ஒளிரும்
'ஆங்கிளர்' மீன்கள்
கவிஞனின் ஆசை புரிந்து
புன்முறுவல் புரிகின்றன.
ஆழிகடந்து புதிய உலகம்
காண்பதற்குப் பேராசை கொண்டான்
கவிஞன்.
காலவெளி அடுக்குகள்தமை
அடக்கிய ஆழி.
ஆழி கடத்தல் பற்றிய கனவினிலே
இன்னும் மூழ்கிக் கிடக்கின்றான்
கவிஞன்.
கவிஞன்:
'ஆங்கிளர்' மீன்களே!
'ஆங்கிளர்' மீன்களே!
ஆழத்தில் ஒளிரும்
'ஆங்கிளர்' மீனகளே!
காலத்தினடுக்குகளில்
புன்னகைக்கும்
'ஆங்கிளர்' மீன்களே!
பேராசை மிக்க கவிஞன்
பெருமிதத்தில் பாடுகின்றான்.