பெண் உலகம் பற்றி ஒரு புரிதல் -நைஜீரிய எழுத்தாளர் சிமமாண்டா நகோஜி அடிச்சி (Chimamanda Ngozi Adichie)
ஆண் பெண் இரு வேறு உலகங்கள் என்பது கால காலமாக நிலைத்து விட்ட ஒன்று. அது இயல்பானதுமே. அதில் தவறொன்றுமில்லை. ஆனால் குறைந்த பட்சப் புரிதல் ஒருவர் உலகை பற்றி இன்னொருவருக்குத் தேவை. அன்பில் பிணைய, புண்படுத்தாமல் இருக்க, சேர்ந்து பணியாற்ற, பரஸ்பரம் உற்ற துணையாய் நிற்க எனக் காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாம் காண்பது என்ன? பெண்ணுக்கு ஆணின் உலகைப் புரிந்து கொள்வதில் அக்கறை அதிகமாக இருக்கிறது. அதற்குக் கட்டாயம் மட்டுமே காரணம். இல்லையேல் அந்தப் பெண் உணர்வு பூர்வமாகக் குடும்பத்துக்குள்ளும் நிராகரிப்பும் கொச்சைப்படுத்தப் படுதலுமென சமூகத்துக்குள்ளும் தாக்குதலுக்கு ஆளாவாள்.
அடிச்சி சமகால நைஜீரிய எழுத்தாளர். Purple Hibiscus, Half of a yellow sun, Americana ஆகிய இவருடைய நாவல்கள் மிகவும் புகழ் பெற்றவை. பெண்ணாயிருப்பது என்பது என்ன அதன் வலியும் அவள் மீதான வன்முறைகளும் எத்தகையவை என்பதை ஒரு சொற்பொழிவில் நமக்குப் புரிய வைக்கிறார். நகைச்சுவையும் நுட்பமாக வெளிப்படும் அறச்சீற்றமுமான அந்த உரைக்கான இணைப்பு -- இது.
உயர்பதவிகளில் இன்றைய நிலவரம் கூடப் பெண்கள் மிகவும் குறைவானோரே. உண்மையில் யார் தலைமை ஏற்று வழி நடத்த முடியும்? அதை அவர் ஆண்பால் அல்லது பெண்பால் என்னும் பால் அடிப்படையில் முடிவு செய்ய இயலுமா? தனது குழுவை சகபணியாளர்களை வழி நடத்தக் கூடியவர், கற்பனை வளமும், புதிய இலக்குகளை எட்டும் உற்சாகமும் உடையவர் என்பதே அடிப்படையாக இருக்க முடியும். இன்றைய சிந்தனை அவ்வழியிலேயே செல்வது. ஆனால் நாம் இன்னும் பெண்கள் தலைமை ஏற்கும் ஒரு சூழலை உருவாக்கவே இல்லை. அடிச்சி நாம் பெண்களை குழந்தைப்பருவத்திலிருந்தே எப்படி நடத்துகிறோம் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
இன்றைய சூழலில் நாம் அனைவருமே பெண்ணியவாதிகளாக மாற வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். பெண்ணியம் பேசுவது மேற்கத்திய சிந்தனை என்னும் அணுகுமுறையைக் கண்டிக்கிறார். திருமணத்துக்கு முன் ஒரு பெண் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு நாம் தரும் முக்கியத்துவம் அவளுக்குத் தரும் போதனைகள் ஏன் ஒரு இளைஞனுக்கு நாம் தருவதே இல்லை என்னும் கேள்வியை அவர் எழுப்புகிறார்.
நைஜீரியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். அந்த மாணவி ஏன் நான்கு இளைஞர்களுடன் தனியான சூழலில் இருந்தார் என்பதே கேள்வியானது. எவ்வளவு வசதியான கேள்வி. ஒருதலைப்பட்சமானதும் ஆணாதிக்கமானதுமான சிந்தனைக்கு சரியான எடுத்துக் காட்டு.
அடிச்சி குறிப்பிடும் சிந்தனைப் போக்கு மற்றும் பெண்களுக்கு எதிரான சமூகச் சூழலை நாம் இந்தியாவிலும் காண்பது உலக அளவில் ஒரு சிந்தனை மாற்றம் இன்னும் நிகழாமலேயே இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது.
பால் அடிப்படையான சிந்தனை நம் இயல்பு வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை இப்படி எடுத்துக் காட்டுகிறார். ஒரு உணவகத்தில் சாப்பிடப் போனோம் என்றால் (அதாவது ஒரு ஆணும் பெண்ணும் அது என்றால்) பணம் தர முன் வருவது ஆண் தான். நைஜீரியாவில் ஒரு நல்ல தங்குமிடத்தில் அதாவது 'லாட்ஜில்' ஒரு பெண் தனியாகப் போனால் அவர் பாலியல் தொழிலாளியாகவே கருதப்படுவார். எந்த அளவு பால் அடிப்படையில் சிந்தனை கீழ்த்தரமாயிருக்கிறது.
ஆதி காலத்தில் வேட்டையே பெரிய வேலை. தப்பிக்க ஓட , விலங்கினத்தில் இருந்து பிற குழுக்களிடமிருந்து தப்பிக்க ஆணின் வலிமை ஆதாரமாயிருந்தது. அப்படித் தொடங்கிய ஆணாதிக்கம் ஏன் இப்படி இந்த நாகரிக காலகட்டத்திலும் தொடர வேண்டும்? இதன் மறுபக்கம் ஆண் எப்போதும் பெண்ணைப் பாதுகாப்பவன் என்னும் வேலையை அவனே தன் மேல் ஏற்றிக் கொண்டு தடுமாறுகிறான். பெண் குடும்பமாக வாழ விரும்புகிறேன் என்பதற்கு உன் பாதுகாப்பில் தான் வாழ்வேன் என்பதா பொருள்?
இவைகள் அடிப்படையான கேள்விகள். எளிமையாகத் தோன்றும் ஆழ்ந்த கேள்விகள். நாம் பாராமுகமாயிருந்த கேள்விகள். அடிச்சி நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பெண்ணடிமைச் சமுதாயத்தின் பழகிய வழியில் மிகவும் சந்தோஷமாகப் பயணப்படுகிறோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sathyanandhan: http://sathyanandhan.com
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.