ரிஷான் ஷெரிஃபின் 'காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்' - மாயயதார்த்தத்தின் வலிமை
ரிஷான் ஷெரிஃபின் 'காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன்' சிறுகதைக்கான இணைப்பு ----- இது
வாசிப்பிலும் படைப்பிலும் சிறுகதையின் இடமே முதன்மையானது. இருப்பினும் படைப்பாளிகளால்சிறுகதை என்னும் உருவம் உள்ளடக்கத்தை ஒட்டியே தேர்ந்தெடுக்கப் படுகிறது. நவீனத்துவத்தில் சிறுகதையின் வீச்சு மேம்பட்டு ஆகச்சிறந்த வடிவம் இதுதானோ என்று அதிசயிக்க வைக்கிறது. ஆனால் சிறுகதை வடிவத்துக்கு வரம்புகள் உண்டா? என்ன வரம்புகள்? படைப்பாளிக்கு மட்டும் சில இடத்தில் முட்டி நின்றுவிட நேர்வதா? ஏன் அப்படி ஆக வேண்டும்? அடுத்ததாக வாசகனுக்கு சில தடைகள் உண்டா? சொற்களின் ஆற்றலுக்கும் வாசகனுக்கும் கூட தாண்டிச்செல்ல முடியாத இடங்கள் உண்டா?
உண்டு. நம்மால் நுட்பமாகப் புரிந்து கொள்ள முடியாத உணர்வுக் கோடுகள் வெட்டிக் கொள்ளும் புள்ளிகள் உண்டு. நுட்பமான தருணங்கள் ஆழ்மன பிரக்ஞை அல்லது வெளிமனப் பிரக்ஞை எனப் பகுத்தறிய முடியாத தளத்தில் சலனப்பட்டு மறைபவை. அவற்றை நாம் புழங்கும் சொற்களால் நம் மனம் பழக்கப்படுத்தப்பட்ட வாசிப்பு மற்றும் உள்வாங்குவது நம் உள்ளார்ந்த தடைகளால் இயலாத ஒன்று.
இந்த இடத்தில் தான் மாயயதார்த்தத்தின் வீச்சு படைப்பாளி வாசகன் இருவருக்கும் இவற்றைத் தாண்டிச் செல்ல உதவுகிறது., காட்சி என்னும் ஊடகம் வாசிப்பு ஊடகத்தை ஒப்பிட நுட்பங்களைப் புரிய வைப்பதில் கையாலாகாதது. மாய யதார்த்தம் வார்த்தை என்னும் வடிவம் செயலிழக்கும் இடத்தை எளிதாகக் கடந்து செல்லுகிறது. நவீன கவிதையின் பலம் நாம் பழக்கப்பட்ட காட்சி அல்லது உரையாடலைக் காட்டி நாம் தடுமாறும் புள்ளியைத் தாண்டி ஒரு ஆழ் தரிசனத்துக்கு இட்டுச் செல்வது. மாய யதார்த்தம் காட்சி வழி நவீன கவிதை நம்மை உடன் அழைத்துச் செல்லும் மாயத்தை புனைகதைக்குள் கொண்டு வருவது.
ரிஷானின் தலைப்பே அந்தக் கதையின் சுருக்கம் என்று கூறி விடலாம். சரி காக்கைகள் ஏன் அவன் தலையைக் கொத்த வேண்டும்? கதையின் இந்தப் பகுதியில் நமக்கு ஒரு முனை கிடைக்கும்:
விந்தி விந்தி ஓடித் துரத்துவான். அவன் ஓடுவதைப் பார்க்க, தவளையின் பாய்ச்சல் போலவும் நண்டின் நகர்வினைப் போலவும் இருக்கும்.
ஒழுங்காக ஓட முடியாமல் அவனது முழங்கால்கள் இரண்டும் பிறப்பிலேயே வளைந்திருந்தன. இன்னும் அவன் மிகவும் ஒல்லியானவன். அவனது முகம் போஷாக்கேதுமற்று மெலிந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையைப் போன்று சிறியது. நெடிய இமைகளைக் கொண்ட சிறிய விழிகளைப் பார்க்கப் பாவமாகவும் இருக்கும். கருத்த சருமம் உடையவனல்ல. அதற்காக சிவப்பானவனாகவும் இல்லை. ஒரு மாதிரியாக வெள்ளைக் காகிதத்தில் செம்மண் தூசு அப்பியதைப் போன்ற வெளிறிப் போன நிறம். நெற்றியிலிருக்கும் சுருக்கக் கோடுகளை வைத்து மட்டுமே அவனது வயது முப்பதுக்கும் நாற்பதுக்குமிடையிலிருக்குமென அனுமானிக்கலாம். குட்டையானவன். வளைந்த கால்கள் அவனை இன்னும் குட்டையாகக் காட்டின. ஒருபோதும் அச் சிறுவர்கள் எவரும் அவனிடம் அகப்பட்டதில்லை.
கதை நெடுக நாம் காக்கைகள் அவனைக் கண்ணில் படும் போதெல்லாம் துரத்தித் தலையில் கொத்தின என்பதையும், அவன் முதலாளி அவனுக்கு மந்திரித்த கயிறு தாயத்து எல்லாம் வாங்கித் தந்தார் எனவும் படிக்கிறோம். கதையில் மேற்கண்ட பத்தியின் வழியாகவே நாம் கதையின் உள்ளே போகிறோம். நமக்கு நன்றாகவே தெரியும் விளிம்பு நிலையில் உள்ளவர் தோற்றத்திலும் குறையுள்ளவராக இருந்தால் நாம் எப்படி அவரை நடத்துவோம் என்பது..
ஆனால் நமக்குத் தெரியாதது அக்கறையில்லாதது ஒன்று அவரிடம் இருக்கிறது. அது தான் நிராகரிப்பாலும், இழிவு படுத்தப்படுவதாலும் நிகழும் வலி. அந்த வலி எப்படிப்பட்டது என்பது அனுபவித்தவருக்கு மட்டும் தான் புரியும். நாம் எந்தக் விதத்திலும் கண்டுகொள்ளாத அந்த வலி மிகவும் ஆழ்ந்தது. அல்லும் பகலும் மனதை கத்தியால் கீறும் மாறா ரணம்.
இந்த ரணத்தை, வலியை, அவஸ்தையை நாம் உணரும் துவங்கு புள்ளியில் இல்லை என்பது எளிய உண்மை அது நமக்கு என்றுமே அக்கறையில்லாத விஷயம். நமக்கு அன்னியமானதும் நம் மரத்துப் போன மனித நேயத்தால் உணர முடியாததுமான அதை இந்த மாயயதார்த்தத்தின் மூலம் காண்கிறோம். பிறர் கண்ணால் இழிவாகப் பார்க்கப் படுவதும் வார்த்தைகளால் காயப்படுத்தப்படுவதும் எத்தனை துன்பம் தருவது என்பதையே பகலில் துரத்திக் கொத்தும் காகங்கள் வடிவில் காண்கிறோம். அதே காகங்கள் வழி வேறு ஒன்றும் நமக்கு உணர்த்தப் படுகிறது. இறுதியில் வரும் இந்தப் பத்தியைப் பார்ப்போம்:
குளிக்கப்போன அவ்வூர் மருத்துவச்சிக் கிழவிதான் கரையோரப் பாறையொன்றில் வழுக்கிவிழுந்து மண்டை உடைந்து பெரிய சிவப்பு எறும்புகள் மொய்க்க, குருதி காயச் செத்துக்கிடந்தவனைக் கண்டு அலறினாள். ஆற்றங்கரையின் மருத மரத்தில், அயல்மரங்களிலென எல்லாவற்றிலும் கருப்புத் திட்டுக்களாய்க் காக்கைகள் அவனைச் சுற்றிலும் கரைந்தபடி இருந்தன. அவன் எழவில்லை. எனினும் அவ்வூர்க் காக்கைகளெல்லாம் ஒன்று சேர்ந்தாப்போலக் கூட்டமாக இருந்து அவனைப்பார்த்துக் கரைந்தன. இரை தேடி அலைதல் மறுத்து அப் பிணம் அகற்றப்படும் வரையில் அங்கேயே கிடந்தன. இனிமேல் அவனது தலை வானொலிப்பெட்டியை அழுத்தி, ஒலிக்கவைக்கச் செய்யமுடியாதென அறிந்தோ என்னமோ, அவை அவனைக் கொத்தவுமில்லை, துரத்தவுமில்லை.
காக்கைகள் தமது இனத்தில் ஒரு காக்கைக்கு அடிபட்டாலோ அல்லது இறந்து போனாலோ மட்டுமே அவ்வாறு கூடி வருந்தும் எனவே அவனுக்காக இன்று கூடும் காக்கைகள் அவனை இத்தனை நாளாகவே தமது இனம் என்றே கருதி வந்தன. அவைகளைத் தவிர அவனைத் தன் இனம் என எண்ணுவோர் யாரும் இல்லை. இதை இந்த மாய யதார்த்தம் வாயிலாக அவர் எடுத்துரைக்கிறார்.
மிகவும் நுட்பமாகவும் விரிவாகவும் அவர் இந்த மாயயதார்த்தத்தை கதைக்குள் சேர்த்திருக்கிறார். அப்படி சேர்த்திருப்பது பிழையென்று சொல்ல முடியாது. அதே சமயம் அது மாய யதார்த்தம் சுட்டும் புரிதலை சற்றே நீர்க்க அடித்து விடுகின்றது.
கதையின் இறுதி பத்தி அந்த நீர்க்கடித்தலைத் தாண்டி நம்மை ஆழ்ந்த புரிதலுக்கு இட்டுச் செல்வதால் நாம் ரிஷான் தமது முயற்சியில் வெற்றி கண்டார் என்றே கூறலாம். மூத்த எழுத்தாளர்கள் பலரும் மாய எதார்த்தம் தேவைப்படாத சூழலில் அதைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். ரிஷான் பொருத்தமான கதையில் அதை சரியாகப் பயன் படுத்தி இருக்கிறார்.
திண்ணையில் வெளியாகி நான்கு ஆண்டுகள் கழித்தாலும் இதை நான் வாசிப்பதற்குக் காரணம் மாய யதார்த்தம் பற்றி சக எழுத்தாளரிடம் விவாதித்த போது அவர் இதற்கான இணைப்பை எனக்குத் தந்ததே. ஓர் அசலான படைப்புக்குக் கிடைக்கும் அங்கீகரிப்புக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். சத்யானந்தன்