திறனாய்வும் திறனாய்வாளரும்!
க.பஞ்சாங்கத்தின் திறனாய்வு கட்டுரைகளின் முதற் தொகுப்பு நவீன இலக்கிய கோட்பாடுகள். இதற்கு அணிந்துரை பாரதி புத்திரன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. எப்போதுமே பலநேரங்களில் 'ஏதோ கேட்டார்கள் எழுதினேன்' என்பதுபோல சில அணிந்துரைகள் அமைந்துவிடும். இந்நூலுக்கான அணிந்துரை அவ்வாறு எழுதப்பட்டதல்ல. எழுதியிருப்பவர், உள்ளத்தால் க. பஞ்சாங்கத்தோடு அண்மித்தவராக இருக்கவேண்டும், எனினும் மருந்துக்கும் துதிபாடல்களில்லை. நூலாசிரியருக்கும் நூலுக்கும் எது பொருந்திவருமோ அதனைக் கூடுதல் குறைவின்றி சொல்லி யிருக்கிறார்.
" மனித நேயம் மிக்கதோர் இலக்கிய திறனாய்வாளனின் சமூகத் தொண்டாக, வாழ்வின் உண்மை நோக்கிய தேடுதலாக அவர் தம் பணிகளை - படைப்புகளை உணர முடியும்" என ஓரிடத்தில் பாரதிபுத்திரன் குறிப்பிடுகிறார். இலக்கிய நண்பர்களால் 'பஞ்சு' என அழைக்கப்படும் க. பஞ்சாங்கத்தின் உழைப்பை இதனினும் பார்க்க வேறு சொற்களால் செரிவுடனும், பெருவெடிப்பு பிரகாசத்துடனும் சொல்ல இயலாது. இவாக்கியத்தை வாசித்தபோது பஞ்சாங்கம் குறித்த எனது முடிவில் தவறில்லை என்பதை உணர்ந்தேன். இத்தொடரை எழுத உந்து கோலாக இருந்த சக்திமிக்க சொற்கள் அவை.
கலை இலக்கியம் இரண்டுமே எங்கிருந்து வருகின்றன என்பதைப் போலவே எவரிடம் போய்ச்சேருகின்றன என்பதன் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்ந்ததொரு சிற்பியின் கைவண்னத்தில் உருவாகும் சிலையில் அழகும், கலை நேர்த்தியும், உணர்வின் வெளிப்பாடும், உரையாடும் மொழியும், அதன் பின்னல்களும்,வளைவுகளூம்,நெளிவு சுளிவுகளும், நேர்க்கோடுகளும் ஏற்ற இறக்கங்களும், தவழலும், நடையும், ஓட்டமும், மழலைப்பேச்சும், ஊடலும் சிணுங்கலும் இன்னமும் இதுபோன்ற படைப்பிலுள்ள எண்ணற்ற கூறுகளும், அணுக்களும், இதயத்தில் இறங்கவும் உடல் சிலிர்க்கவும் ஒருவன் தேவை. நீரில் மிதக்கும் நிலவை உள்ளங்கையில் ஏந்தி உதிரத்தில் வெதுவெதுப்பை உணர்வதென்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அவன் வாசகன் மட்டுமல்ல வாசகனுக்கும் மேலானவன், படைத்தவனைக் காட்டிலும் ஒரு படி உயர்ந்தவன் - ஒரு தேர்ந்த திறனாய்வாளன். ஒரு நல்ல தலைவிக்கு உரிய தலைவன் அமைவதுபோல அது நிகழவேண்டும். அது நிகழாதவரை அந்த நூல் தனது பிறவிப்பயனை எட்டியதாகச் சொல்வதற்கில்லை. தமிழிலக்கியக் கொப்பில் முகிழ்த்து இதழ்பரப்பிய அனேக மலர்களை முகர்ந்து முகர்ந்து அதன் நறுமணத்தையும் துர்க்கந்தத்தையும் இனம் பிரிக்க அளப்பரிய ஞானமும், பழுத்த அனுபவும் வேண்டும்.
க. பஞ்சாங்கத்தின் இரு திறனாய்வு நூல்களை முன்வைத்து இத்தொடரை எழுதுவதால் திறனாய்வு என்பதென்ன? ஒரு திறனாய்வாளன் என்பவன் யார்? என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான பதிலை தருவது முகவரிபோல அவசியமாகிறது. படைப்பிலக்கியத் துறையில் படைப்பு சார்ந்து வினையாற்றுபவர்களை மூன்று வகையினராக பிரிக்கலாம்
1. வாசகர்கள் 2. படைப்பாளிகள் 3. விமர்சகர்கள்
1. இரசிகர்கள் - வாசகர்கள்: படைப்பு துறையின் முதற்படியில் இருப்பவர்கள். அறிதலில் ஆர்வம் காட்டுபவர்கள். இரண்டாவது படிநிலையான படைப்பாளியாக உருமாறும் ஆற்றல் இருந்தும் அதனைத் தொழிற்படுத்த விருப்பமின்றி இருப்பவர்கள். வெகு சன ரசனையிலிருந்து மாறுபட்டவர்கள். உயிர் வாழ்க்கையே தேடல்கள் என்ற உந்து சக்தியால் முன் நகர்த்தப்படுகிறது என்பதைக் கிஞ்சித்தும் உணராமல் வாழ்ந்து சாகும் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து மாறுபட்ட சிறுபான்மையினர். படைப்புலகின் பூகோளத்தை புரிந்துகொள்ள கூடியவர்கள், அதன் தட்ப வெப்பத்தில் பயணிக்க அறிந்தவர்கள். இவர்கள் ஞானத்தைக் குறைத்து மதிப்பிடமுடியாது,
2. கலைஞர்கள்- படைப்பாளிகள்: உணர்வுகளால் வழிநடத்தப்படுபவர்கள். வாசிப்பு தந்த உந்துதலால் படைப்பாளியாக உருமாருகிறவர்கள். புத்தக வாசிப்பும், மனித வாசிப்பும், கற்றதும் கேட்டதும், உற்ற அனுபவமும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் அக விழிப்புக்கு ஆளாகிறார்கள். கழுகின் பார்வைலிருந்து தப்பித்து ஓர் அரவம் போல இண்டு இடுக்குகளிலும் புதர்களிலும் ஊர்ந்தும், சுருண்டும் முடங்கியும் கிடப்பவர்கள், பெருமூச்சுக்குச் சொந்தக் காரர்கள். ஏதோஒருவகையில் எல்லாவற்றுடனுமான இவர்களின் முரண்களும், மொழியும், மொழி சார்ந்த அழகியலும் எடுத்துரைப்பிற்கு இவர்களை இழுத்துவருகிறது,
3. கலை விமர்சகர்கள் மற்றும் திறனாய்வாளர்கள்: இவர்கள் கல்வியாளர்கள். உணர்வில் தோய்ந்தபோதும், வேண்டும்போது விலகியிருக்கக்கூடிய தெளிவு கொண்டவர்கள். அறிவில் தெளிவும் அனுபவத்தில் முதிர்ச்சியும், தடுமாறாத மனமும் இவர்களை கலை விமர்சகர்களாகவும் திறனாய்வாளர்களாகவும் செயல்பட ஊக்குவிக்கிறது. திறனாய்வு என்பது வல்லுனர்களின் பணி. கல்வி, அனுபவம், எப்பொருள் குறித்து திறனாய்வு செய்கிறார்களோ அப்பொருள் பற்றிய முழுமையான அறிவுஎன மூன்றும் அமையவேண்டும். திறனாய்வாளர்களுக்கு அவர்களின் எல்லைகள் பிடிபடுவதுபோல தோற்றந்தரினும் பல நேரங்களில் அவர்களைத் திக்குத் தெரியாத காட்டில் அல்லாடவும் செய்யும்.
மேற்கண்ட மூன்று வகைபாட்டில் க. பஞ்சாங்கம் ஐயமின்றி மூன்றாவது பிரிவுக்குள் வருகிறார். கலைஞர்களும் படைப்பாளிகளும் எங்ஙனம் ரசிகர்களாகவும் வாசகர்களாகவும் தொடர்ந்து செயல்படுகிறார்களோ அங்ஙனம் கலைவிமர்சகர்களும், திறனாய்வாளர்களும் மேற்கண்ட இரு பிரிவின் கீழ் தொடர்ந்து செல்படுகிறவர்கள் அதாவது தொடர்ந்து வாசிப்பவர்களாவும், உந்துதல் தலைப்படுகிறபோது படைப்பாளிகளாகவும் செயல்படுகிறவர்கள். கடும் வாசிப்பின்றி திறனாய்வுகளுக்கு சாத்தியமில்லை என்பதால் . வாசிப்பில் தொடர்ந்து கூடுதலாக கவனம் செலுத்துகிறார்கள். க. பஞ்சாங்கம் சோர்வின்றி வாசிப்பவர், வாசிப்புதான் அவரது சுவாசத்தை சீராக வைத்திருப்பதாக நினைக்கிறேன். அவர் கவிஞர், நாவலாசிரியர் என்பதையும் நாம் அறிவோம்.
திறனாய்வு?
இலக்கிய திறனாய்வு என்பது தேடல், வாசிப்பு, ஒப்பீடு, மதிப்பீடு, முடிவெடுத்தல் என்கிற வினைத்திறன்களை உள்ளடக்கியது. எழுத்தூடாக பிறிதொரு பனுவல் பற்றிய தமது வாசிப்பு, உணர்தல் மற்றும் தெளிதலை மூன்றாவது மனிதருடன் பகிர்ந்துகொள்ளல், அடிப்படையில் ஓர் ஒப்பீடு நோக்கு. ஓரு விவாத களம்: ஒரு புறம் திறனாய்வாளன் -திறனாய்வு; எதிர் திசையில் பிரதி - படைப்பாளி. உண்மையில் இவ்விவாதகளத்தில் ஒரு தரப்பில் திறனாய்வாளர் உருவத்தில் அவரைக் கட்டமைத்த அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகக் காரணிகள். தன்னை உருவாக்கிய சமூகம், மனிதர்கள், அவற்றின் இயக்கம் ஆகியவற்றைக் குறித்த அவரது நியாயங்கள் முடிவுகள், தெளிதல் அடிப்படையில் கையளிக்கபட்ட பனுவலின் குறை நிறைகளை அவர் விவாதிக்கிறார். பனுவலின் கலைநேர்த்தி, மொழி, சொல்லாடல்கள், எடுத்துரைப்பு என்றெல்ளாம் தொடர்ந்து அவதானிப்பதும், வியப்பதும் திறனாய்வாளரின் பின் புலத்தைப் பொருத்தது. அவர்கள் ஏற்றுக்கொண்ட சமூக மதிப்பீடுகளைக்கொண்டே பனுவலை அணுகுகிறார்கள் என்பதை ஒரு போதும் தமிழ்ச்சூழலில் நாம் மறக்கக்கூடாது.
க. பஞ்சாங்கம் என்ற திறனாய்வாளர்
மேற்கத்திய உலகில் திறனாய்வில் இருவகையுண்டு:
1. பாராட்டுவதுபோல இகழ்வது (La Critique Péjorative): நேர்மறையான விமர்சனங்களில் ஆரம்பித்து பின்னர் பனுவலை சிறுமை படுத்துவது
2. இகழ்வது போல பாராட்டுவது (La critique méliorative): எதிர்மறையான விமர்சங்களில் ஆரம்பித்து; சிறப்புகளை பேசுவது
தமிழ் திறனாய்வுகளை கீழ்க்கண்டவகையில் வகைபடுத்தலாம்
1. துதிபாடும் விமர்சனங்கள்
2. வசைபாடும் விமர்சனங்கள்
3. தனனை அண்டி இருப்பவர்களை உற்சாகப்படுத்தவும், தன் இருப்பைச் சொல்லவும் எழுதப்படும் விமர்சனங்கள்
4. நடு நிலையான திறனாய்வாளர்கள்.
க. பஞ்சாங்கம் இந்த நான்காம் வகைமைக்குள் வருகிறார் என்பதை அவரது திறனாய்வு கட்டுரைகள் தெரிவிக்கின்றன. பாரதி புத்திரணின் அணிந்துரையில் உபயோகித்துள்ள வார்த்தைகளின் படி "உயர்கல்வி,பேராசிரியர், ஒற்றைப் பரிமானபார்வையில் பன்முகத்தன்மை, சிறு பத்திரிகைகள் அறிமுகமும் உறவும், பார்வை முதிர்ச்சி, தொன்ம இலக்கியங்கள், பின்நவீனத்துவ பார்வை, வாசிப்பில் தெளிவு" எனும் பல்வேறு கூறுகள் அவரது சிறந்ததொரு திறனாய்வாளராக உருவாக்கியிருக்கின்றன. அனைத்துக்கும் மேலாக "இந்தியன் இப்படிபட்டவன், தெலுங்கன் இப்படிபட்டவன், அந்த சாதிக்காரன் இப்படிப்பட்டவனென்று அன்றாடம் உரைக்கப்படும் பொதுவிதிகளைப் புறக்கணித்து மனித மனம் அவற்றையும் கடந்து ஆழமானது என்று மனிதனைப் பற்றிய புதிரிலும் மூழ்கிவிட்டவர் பஞ்சு"
எனவேதான் தமிழ் புதுக்கவிதையின் வரலாறுகள் எழுதமுற்பட்டவர்களில் பலர் எங்ஙனம் குறுக்கு சால் ஓட்டினார்கள். பேரறிஞர்கள் எனசொல்லிக்கொண்டவர்கள் எல்லாம் தமிழின் புதிய வழித்தடத்தை அங்கீகரிப்பதில் காட்டிய தயக்கமென்ன என்பதைச் சொல்ல முடிந்தது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழ்கம் சார்பாக பாரதி பாடல்களின் ஆய்வு ப் பதிப்பினத் தயாரித்த மா. ரா. போ. குருசாமி பாரதியின் காட்சிகவிதைகளை அத்தொகுப்பில் மனமின்றி சேர்த்திருக்கிறார். அது பற்றி எழுதுகிறபோது: " காட்சி என்ற தலைப்பில் இங்கே வெளியாகும் பகுதி கவிதை அன்று. பின் வந்தோர் தாம் எழுதிய ஒது புது வகை எழுத்தோவியத்துக்கு 'வசன கவிதை ' என்று பெயரிட்டுக் கொண்டு, அந்த வகையான இலக்கிய வடிவத்துக்கு முன்னோடி பாரதியாரே என்று சாதிக்க லாயினர்; கவிதை கவிதை தான் வசனம் வசனம் தான்' 'ஒட்டு' வேலை செய்வது சரி எனக்கூற இயலவில்லை" என்று எழுதியதைக் குறிப்பிடும் க.பஞ்சாங்கம், " 30களில் தோன்றிய புதுக்கவிதைக்கு 1987ல் இந்த நிலமை. 1977லேயே "தமிழ்ப் புதுகவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற நூல் வெளிவந்தும் , அந்நூலுக்கு 1978-இல் இந்திய அரசின் சாகித்ய அகாடெமிப் பரிசுவாங்கியதன் மூலம் அங்கீகாரம் இந்திய அள்வில் கிடைத்தும் இந்த நிலைமை " என்று வருந்த க.பஞ்சாங்கத்தால் மட்டுமே இயலும். மா. ரா. போ. குருசாமி மட்டுமல்ல தமிழண்ணல், மு.வ. சி.பாலசுப்பிரமணியமென பலர் வரிசையாகப் பஞ்சாக்கத்திடம் குட்டுப்படுகிறார்கள். "1959ல் முதல் பதிப்பாக சி.பாலசுப்பிரமணியன் "பெயரில்" வந்துள்ள இலக்கிய வரலாற்று நூலிலும் புதுக்கவிதைக் குறித்து குறிப்பில்லை என்கிற திறனாய்வாளர் அதே சி.பாலசுப்பிரமணியன் 1982ல் மறுபதிப்பு கொண்டுவரும்போது "புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்" என்று சேர்த்துள்ளதைக்கூறி "இதுதான் வரலாற்றுக் கட்டாயம் என்பது" என நகைக்கிறார். இவர்களயெல்லாம் கண்டிக்கும் திறானாய்வாளர், புதுக்கவிதையை ஓர் இலக்கிய வகையாக ஏற்றுக்கொண்டு அதன் வரலாற்றை விரிவான முறையில் எழுத முயன்ற மரபான தமிழ் அறிஞர்கள் மது.ச. விமலானதம் (1987) சிலம்பொலி செல்லப்பன் ஆகியோரை பார்ராட்டவும் தவறுவதில்லை. - (தொடரும்) -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.